பாகிஸ்தானும் புத்தகமும்

அனுபவக் கட்டுரை + புத்தக விமர்சனம்

- Advertisement -

முன்னோட்டம்

புத்தகங்கள் பொதுவாக புனைகதைகள் (Fiction) அல்லது சரிதங்கள் (Non-fiction) என்ற இரு பெரும் கிளைகளாக பிரிந்து உள்ளது. கல்லூரி காலங்களில் புனைகதைகளை எளிதாக படிக்க முடிந்த என்னால் சரிதங்களை அவ்வளவு எளிமையாக படிக்க முடியவில்லை. புனைகதைகளில் கற்பனை கலந்து உள்ளதால் சுவாரஸ்யம் அதிகம் உள்ளது. சரிதங்களில் உண்மை சம்பவத்தை மட்டுமே விவரிக்க வேண்டியுள்ளதால் சுவாரஸ்யம் கொஞ்சம் கூட இல்லை  என்றுதான்  நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் காலப்போக்கில் சரிதங்களில் உள்ள பல்வேறு விசித்திரங்களையும் நான் புரிந்து கொள்ளும்போது புனைகதைகள் வாசிப்பதை மொத்தமாக நிறுத்திக்கொண்டு சரிதங்களை மட்டுமே வாசிக்க ஆரம்பித்தேன். அது எப்படி என் எண்ணம் தலைகீழாக மாறியது?

எனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இணையம்(Internet) மற்றும் கைப்பேசிகள்(Cellphone) அரிதாகவே காணப்பட்டது. ஒரு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் நாம் படிக்கும் முழு கதைக்களமும் அந்தப் புத்தகத்துக்கு உள்ளேயே இருக்க வேண்டும். புனைகதைகளில் கதைக்கு தேவையான மொத்த உலகையும் கூறிவிட்டு கதை சொல்வதால் நமக்கு எளிதாக புரிகிறது. ஆனால் சரிதங்களில் அப்படிக் கூறுவது மிகவும் கடினமான காரியம். ஒருவர் பார்வையில் நடக்கும் சரிதம் மற்றவர் பார்வையில் வேறொரு கதையாக மாறி விடுகிறது. இதனால் சரிதங்களின் முழு கதைக்களத்தை சொல்ல முடியாமலே போய்விடுகிறது. ஆனால் இணையமும் கைபேசியும் பரவலாக வந்த பிறகு அந்த புத்தகத்திற்குள் முழு விபரமும் இல்லை என்றாலும் கூட எளிதாக தேடிப்பிடித்து படிக்க முடியும்.

அப்படி நான் தேடிப்பிடித்து படித்த சில சரிதங்களின் முன்னோட்டம், கதைக்களம், விமர்சனம் மற்றும் உபரி விபரங்களை எனது அனுபவங்களோடு கலந்துகட்டி தொகுப்பாக உங்களுக்கு கொடுக்கலாம் என்று  முடிவு செய்திருக்கிறேன். சரி. நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு செல்வோமா?


பாகிஸ்தான் 

பாகிஸ்தான் ( பாக் – தூய்மையான; கலப்படமற்ற; , ஸ்தான் – இடம்; நாடு). பாரசீக மொழியில் தூய்மையான நாடு என்ற பெயருடைய நம்முடைய சகோதர நாடான பாகிஸ்தானை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். 1947 முதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பல்வேறு போர்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து நடந்து  கொண்டேதான் வருகிறது. ஒரு இந்தியனாக எனக்கு குழந்தைப் பருவம் முதலே பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு என்ற எண்ணம் மனதில் எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வயதாக வயதாக என்னுடைய பயணங்கள் மற்றும் வாசித்தல் மூலமாக நம் இருவருடைய கலாச்சாரங்களும் பின்னிப் பிணைந்து உள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நமக்குள் அவ்வளவு நெருக்கமான உறவோ? ஆம். “பாக்” என்னும் சொல் கூட நாம் அன்றாடம் பயன்படுத்துவதுதான். வீட்டில் பண்டிகை காலங்களில் இனிப்புகள் செய்வதற்கு சர்க்கரைப்பாகு காய்ச்சுவார்கள் ஞாபகமிருக்கிறதா? சுத்தமான சர்க்கரையில் வேறு எதுவுமே கலக்காமல் செய்வதால் தான் இதற்கு சர்க்கரை “பாக்” என்று பெயர் வந்தது. பின்பு பாக்கை நம் பாகு என்று மாற்றி விட்டோம். மைசூர் அரச சமையலறையில் மன்னருக்காக செய்யப்பட்ட கலப்படமற்ற மைசூர் செய்முறையில் உருவாக்கப்பட்ட இனிப்பு தான் “மைசூர்பாக்” எனப்பட்டது. இவ்வாறு மொழிகளுக்கு உள்ளே பல ஒற்றுமை உள்ள நமக்கு வாழ்க்கை முறையிலும் பல்வேறு ஒற்றுமை உள்ளது என்று நான் எப்படி புரிந்து கொண்டேன் தெரியுமா?

அனுபவம்

நான் வேலை செய்யும் நிறுவனம் இந்தியாவில் இருந்தாலும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் பல பேர் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஐக்கிய மாநிலங்களில் (United States – US) அதிகம் உள்ளனர். அதனால் வேலை காரணமாக நான் சில சமயம் USக்கு செல்வது உண்டு. நான் வேலை செய்யும் குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அங்கே எனக்கு ஒரு பாகிஸ்தானிய நண்பரும் உண்டு. வேலை செய்யும் முறை, பழகுவது, நகைச்சுவை உணர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் ஐரோப்பியர்கள் உடன் பழகுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் எனது பாகிஸ்தானிய நண்பருடன் பழகுவதில் எந்த ஒரு சிறிய வேற்றுமையும் எனக்கு தோன்றவில்லை. 

உணவு விஷயத்தில் கூட உப்புச்சப்பில்லாத பிட்சாவையும் பர்க்கரையும் இரண்டு வேளைக்கு மேல் என்னால் தொடர்ந்து சாப்பிட முடியாது. அந்த நேரத்தில் அருகில் இருக்கும் பாகிஸ்தானிய உணவகத்திற்கு சென்று காரமான “வட இந்திய” உணவுகளை ஒரு பிடி பிடித்து விட்டு தான் வருவேன். என்னைப் பொறுத்தவரையில் வட இந்திய உணவுக்கும் பாகிஸ்தானிய உணவிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. 

ஒரு முறை அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக இந்தியா திரும்பிக்கொண்டு இருந்தேன். அமெரிக்காவில் இருந்து துபாய்க்கு சுமார் 15 மணிநேர விமான பயணம். விமானத்தில் படம் பார்ப்பதற்கு மனம் இல்லாததால் என் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவைப் பற்றி சில விஷயங்களை சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து நாங்கள் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்று பேச்சு வரும்போது அவர் பாகிஸ்தானுக்கும் நான் இந்தியாவிற்கும் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதும் இருவருக்கும் தெரிந்தது. இது தெரிந்த உடனேயே அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அடுத்த பல மணி நேரங்கள் நாங்கள் இருவரும் அருகில் உட்கார்ந்து இருந்தால்கூட பேசிக்கொள்ளவில்லை. விமானம் இறங்கும் நேரத்தில் அவருடைய ஐபோன் Earbudsஐ விமானத்திற்குள் தொலைந்து விட்டதாக அருகிலிருந்த மற்றொரு பயணியிடம் கூறிய அவர், அதை நான் திருடி இருப்பேனோ என்று சந்தேகக் கண்ணோடு என்னை பார்த்தார். விமான உதவியாளர்களிடம் அதைக் கூறினால் தேடுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக நான் உடனடியாக கூறிவிட்டேன். Economy class இருக்கை என்பதால் அனைவரும் எழுந்து வெளியேறுவது என்பது பயணத்தின்போது சுலபம் கிடையாது. விமானம் நின்றபின் தேடும் போது அவரது இருக்கைக்கு அடியில் தான் அது இருந்தது என்றாலும் அவர் என்னை ஒரு எதிரி போலவே பார்த்துக் கொண்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

The Nine Lives of Pakistan – Declan Walsh

நம்முள் பல ஒற்றுமைகள் இருந்தாலும் தள்ளி இருக்கும் பல நாடுகளுடன் நாம் பாராட்டும் நட்பு ஏன் பாகிஸ்தானுடன் இல்லை? இதனால்தான் “கிட்ட இருந்தால் முட்டப் பகை” இந்த பழமொழியைக் கூறி வைத்தார்களோ? எனக்கு பாகிஸ்தானைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. பாகிஸ்தானைப் பற்றி அங்கு அங்கு வாழ்ந்து தெரிந்து கொண்ட ஒரு வெளிநாட்டவர் புத்தகம் எழுதினால் அதை படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி நான் படித்த புத்தகம் தான் “The Nine Lives of Pakistan”. பாகிஸ்தானில் 10 ஆண்டுகாலம் பத்திரிக்கையாளராக வேலை செய்த Declan Walsh இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். பாகிஸ்தானின் வரலாறு முதல் நாகரிகங்கள் வரை பல்வேறு கோணங்களில் இந்த புத்தகத்தை இவர் அலசி ஆராய்ந்து உள்ளார். 

புத்தகம் ஆரம்பிக்கும்போதே இவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற்றப்படுகிறார். ஏன் வெளியேற்றப்படுகிறோம் என்ற காரணம் இவருக்கு கூறப்படவில்லை. அவரது பத்து வருட நினைவுகளோடு பாகிஸ்தானை விட்டு கிளம்பும்போது அவருக்குள் படரும் நினைவலைகளை இந்த புத்தகமாக பதித்துள்ளார். 

இந்த புத்தகத்தின் விமர்சனத்தையும் முன் கதைகளையும் கூடிய விரைவில் உங்களுக்கு கூறுகிறேன்.

(விரைவில் சந்திப்போம்)

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. சரளமான நடை. புத்தக அறிமுகத்தில் ஒரு நல்ல புதிய முயற்சி. வாழ்த்துகள்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -