சூல் – வாசிப்பனுபவம்

நூலாசிரியர் - சோ.தர்மன்

- Advertisement -

உருளைக்குடி கிராம மக்களின் கதையாகத் தொடங்குகிறது சோ.தர்மன் எழுதிய சூல். நாவலைத் தொடங்கும்போது இருந்த ஒரு வேகமும் ஆர்வமும் அதை முடிக்கும்போது எனக்கில்லை. ஒரு நல்ல காரணத்தை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் அதைச் சரியாகச் செய்யாமல் எங்கோ சறுக்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. நாவலில் சொல்லிக்கொள்ளும்படி பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் என்று ஒரு ஆனால் முடிவில் தொக்கி நிற்கிறது.

கதை அழகான உருளைக்குடி கிராமத்தில் தொடங்குகிறது. பனை மரங்களில் ஆண் மரம், பெண் மரம் கண்டறிவது, அதில் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டும் முறை, அதை வைத்து இந்த வருடம் வடகிழக்கு பருவமழை வருமா தென் கிழக்குப் பருவமழை வருமா என கணிப்பது, கண்மாய்க்குள் வளர்ந்து நிற்கும் நாட்டுக் கருவேலை மரங்களில் எவ்வளவு உயரத்தில் குருவி கூடுகட்டுகிறதோ அந்த அளவிற்குள் தான் மழை பெய்யும் என்று அவர்கள் கணித்து சொல்வது என பல சின்னச்சின்ன நிகழ்வுகள் மூலம் கிராம மக்களின் பேரறிவை அவர்கள் மொழியிலேயே நமக்குச் சொல்கிறது இந்த நாவல்.

இது தான் கதை. இது இங்கு ஆரம்பித்து அங்கு முடியும் எனும்படி ஒரு கதையையோ கதாப்பாத்திரத்தையோ சுற்றி எழுதப்படவில்லை. ஒட்டுமொத்த கிராம வாழ்க்கை அதைச் சார்ந்த சின்னச்சின்னக் கதைகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களுடன் இந்த நாவல் நம்மை பயணிக்கவைக்கிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒரு இடத்தில் தொடங்கி அதன் வேலையை முடித்துவிட்டு அடுத்த கதாப்பாத்திரங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் சென்றுவிடுகிறது. நாவல் முழுவதிலும் வரும் ஒவ்வொருவரின் கதையும் தொலைந்துபோன இயற்கை அறிவையும் கிராம மக்களின் நற்பண்புகளையும் கூறிக்கொண்டே செல்கிறது. 

“நீரின்றி அமையாது உலகு” – இந்த உலகம் இயங்க உயிரினங்கள் வாழ இன்றியமையாதது நீர். ஒவ்வொரு நாளும் மழை பெய்து நம் வீட்டு பானைகள் நிரம்புவதில்லை. வருடந்தோறும் பருவத்தில் பெய்த மழையைப் பாதுகாத்து விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு நாம் தான் அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் அப்படி நீரைச் சேமிக்க இருக்கும் கண்மாய்களே அட்சயப்பாத்திரங்கள். அந்த அட்சயப்பாத்திரத்தில் நீர் குறையாமல் இருந்தால் தான் அந்தக் கிராமமும் அதனைச் சார்ந்த உயிர்களும் வாழ முடியும். இப்படி ஒரு முழு கிராமத்தின் மொத்த உயிர்களையும் தன்னுள்ளே தாங்கித் ததும்பி நிற்கும் கண்மாய்களை நிறைசூலியான தாய்க்கு ஒப்பிட்டு இந்த நாவளுக்கு சூல் என்று பெயர் சூட்டியுள்ளார் சோ.தர்மன்.

கிட்டத்தட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் கதை தொடங்குகிறது. ஆனால் அதற்கான குறிப்புகளை பாதிக் கதைக்கு மேல் தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கிராமத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களால் இந்த நாவல் நிறைந்து கிடப்பதால் கதைச் சுருக்கம் என்று ஒன்றை என்னால் தெளிவாகக் கூறமுடியவில்லை.

உருளைக்குடியில் பல சாதி மக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையோ பாகுபாடோ இல்லாமல் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டு அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ்கிறார்கள். கலப்பை செய்ய ஆசாரி, விவசாயம் செய்ய சம்சாரிகள், பெரிய அளவு விவசாய நிலங்களை வைத்திருக்கும் ரெட்டியார்கள், நாயக்கர்கள், கள்ளுக் கடை நடத்தும் தேவர், சக்கிலியர்கள் செருப்புத் தைக்கிறார்கள், வியாபாரம் செய்ய நாடார் வருகிறார், நீர்ப்பாய்ச்சியாக பள்ளர்களின் வம்சாவழியினர், சரியாக ஜோசியம் சொல்லும் ஐயர், வெத்தலை விளைய வைக்கும் பிள்ளை என கிட்டத்தட்ட அத்தனை சாதியும் அந்த கிராமத்திலும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் வாழ்ந்தாலும் ஓரிரு பிரச்சனைகுரியவர்களைத் தவிர மற்ற அனைவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்கிறார்கள். 

ஒவ்வொரு வருடமும் கண்மாயில் நீர் வற்றிச் சுருங்கும் போதும் அழிமீன் பிடிப்பதற்காக ஊர் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் அப்போது ஊரே கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிக்கொண்டு தங்கள் வீட்டுக்குச் செல்கிறார்கள். நாவலில் வரும் இந்தப் பழக்கம் இன்னுமும் மதுரையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் இருக்கிறது. அந்த மீன்களை அவர்கள் பிடித்து முடித்து கண்மாயில் தண்ணீர் முழுவதும் வற்றிய பின் அந்த ஊரில் உள்ளவர்களே கூடி கண்மாயைத் தூர்வாரி அவரவர் தோட்டங்களிலும் வயல்களிலும் அந்த மண்ணைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நான் முன்பே சொன்னது போல இது ஒரு கதையல்ல சிறு சிறுகதைகளாகக் கூடி பழைய காலத்தையும் இப்போதிருக்கும் நவீன காலத்தையும் ஒப்பிட்டு நாம் எதை இழந்திருக்கிறோம் என்பதைச் சொல்வதே இந்த நாவலின் நோக்கமாகப் படுகிறது. இந்த நாவலில் வரும் சில சுவாரசியமான கதைகளின் சுருக்கங்களை சொல்லிவிட்டு விமர்சனத்திற்குள் நுழைகிறேன்.

கள்ளின் மனத்தை வைத்தே இது தன் ஊர் கள் என்று கண்டறிந்த சக்கிலியக்குடியைச் சேர்ந்த ஒருவரின் திறமையைக் கண்டு வியந்த கள்ளுக்கடை நடத்தும் தேவர் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவசக் கள் அறிவிக்கிறார். அவருக்குப்பின் அவரின் மகனும் தந்தை தந்த வாக்கைக் காக்கிறார்.

ஒருவனால் கெடுக்கப்பட்டு ஏமாற்றப்படும் பெண் நிறைசூலியாக இறந்து அந்த ஊருக்கே கடவுளாகிப் போகிறாள். 

பிள்ளையில்லாத கொப்புளாயி தன் தங்கையை கணவனுக்கு கட்டிவைத்துவிட்டு எருமை மாடுகளை மேய்த்து வாழ்கிறாள். அந்த ஊர் வழியே பாதயாத்திரை போகும் பக்தர்களுக்கு இலவச மோர் தருகிறாள். உண்மையில் அந்த ஊர் மக்களுக்கு பணம் என்றால் என்னவென்றே தெரியாது. இந்த கொப்புளாயி ஒருவனை வளர்க்கிறாள். அவன் வெளியூருக்கு அவ்வப்போது கோபித்துக்கொண்டு ஓடி திரும்பி வருகிறான். 

“இப்படி வெளியூருக்கு ஓடிப் போறியே சோத்துக்கு என்னடா பண்ணுவ” என்று கொப்புளாயி அவனிடம் கேட்கும்போது. வேலைசெய்து பணம் சம்பாதித்து ஹோட்டலில் பணம் கொடுத்து சாப்பிடுவேன் என்பான். அதைக் கேட்ட கொப்புளாயியால் அவன் சொல்வதை நம்பவும் முடியாது. தாங்கிக்கொள்ளவும் முடியாது. வருவோர் போவரிடமெல்லாம்,

“இங்கபாரு டவுனல சோத்தப் போயி காசுக்கு விப்பாய்ங்கலாம். இதெல்லாம் ஞாயமா? யாராவது சோத்த காசுக்கு விப்பாங்களா?” என்று புலம்பும்போது அவளைக் கிராமத்தாள் ஒன்றும் தெரியாதவள் என்று சொல்வதா? இல்லை சாப்பாடு என்பதை பணத்திற்கு விற்கக் கூடாது. இருந்தால் இல்லாதவர்களுக்கு இலவசமாகத் தான் தரவேண்டும் என்ற அந்த உயர்ந்த பண்பாட்டைப் பாராட்டுவதா?

சிந்தித்துப்பார்த்தால் பணத்தின் பின் ஓடும் இப்போதைய இந்த வாழ்க்கையில் இப்படிப் பல நற்பண்புகளை இழந்துவிட்டு அனைத்தும் பணமாகப் பார்க்கும் ஒரு சமூகமாகத் தான் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். 

எட்டயபுர அரண்மனையில் வேலை செய்யும் சக்கிலியர் ஒருவர் மாமிசத்துக்கு ஆசைப்பட்டு பசுக்களை நூதனமாகக் கொலை செய்து அரண்மனையில் பிடிபடுகிறார். ராஜா அவரை விட்டாலும் செய்த பாவம் விடாமல் துரத்துகிறது. கொப்புளாயியின் அறிவுத்தலில் ஐயரைப் பார்த்து பாவ விமோட்சனம் அடைவது ஒரு கதை.

பட்டாளத்தில் இருந்து ஊர் வந்த திமிர்பிடித்த ரெட்டியார் ஒருவர் அவர் தோட்டத்தில் மேய்ந்த ஆட்டுக்குட்டியைச் சுட்டுக்கொல்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த இரு ஊர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், அது கடைசியாக எப்படித் தீர்ந்தது என்பது இன்னொரு கதை.

அடுத்த கதை பனையேறி எலியன் மற்றும் பிச்சை ஆசாரியுடையது. வெள்ளைக்கார்களிடமிருந்து தப்பி வரும் கட்டபொம்மனுக்கு இருவரும் உதவி செய்கிறார்கள். சில நாட்களில் கட்டபொம்மனிடமிருந்து இருவருக்கும் சில தங்க நகைகள் பரிசாக வருகின்றன. இருவரும் வசிப்பது எட்டயபுரத்தில் நகைகளை எடுத்துப்போட்டுக்கொண்டு வெளியில் நடமாடினாலோ அல்லது விற்றாலோ எட்டயபுர அரசரிடம் மாட்டிக்கொள்வார்கள். அரண்மனைக்குத் தெரிந்தால் மரணம் தான். அதைப் புதையல் போல் புதைத்து வைக்கிறார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையர்களிடம் சிக்கி தூக்கிலேறிய பின்னும் அவர்களால் புதையலை வெளியில் எடுக்க முடியவில்லை. காத்திருந்து காத்திருந்து தலைமுறைகள் ஓடுகின்றன. கட்டபொம்மன் எந்தப் பரிசும் கொடுக்காமல் இருந்திருதால் கூட பரவாயில்லை. மடியில் கணம் ஏறியபின் அவர்கள் நிம்மதி மொத்தமாக குலைகிறது. அந்த நகையைப் பாதுகாக்க அவர்கள் படும் பாடுகள் நகைச்சுவை கூட்டுகிறது. அந்த புதையலை யாரும் எடுத்தார்களா இல்லையா என்கிற விஷயம் கிட்டத்தட்ட நாவலின் முடிவில் தான் தெரிகிறது.

இடையில் இன்னொரு அனுமன்முனி கதை வருகிறது. கடலில் சேட்டை செய்யும் இந்த முனிக்கு ஒரு முன் கதை வருகிறது. பின் மீனவர்களுக்குத் தொந்தரவு செய்யும் அந்த முனியை ஒரு மலையாள மாந்திரீகர் பிடித்துக்கொண்டு எட்டயபுரம் வழியில் செல்லும்போது முனி தப்பி விடுகிறது. அது எட்டயபுர அரண்மனையில் பல சேட்டைகள் செய்கிறது. இந்த முனியை எப்படிக் கட்டுப்படுத்தினார்கள் என்பது ஒரு கதை. இதன் இடையில் இருளப்ப சாமி கதை, அத்தர் பாய் கதை என பல குட்டிக் கதைகளும் வரும்.

அனுமன் முனி கதை முடிந்தவுடன் கதையின் இறுதிப் பாகம் வந்துவிடும் சுபிட்சமாக வாழ்ந்த கிராமங்களை சுதந்திரத்திற்குப் பின்னான அரசியல்வாதிகள் எப்படிக் கெடுத்தார்கள் என்று பேசுகிறது இந்தப் பகுதி. அதிலும் குறிப்பாக திலோப்பியா (சிலேபி மீன்) மீன் குஞ்சுகள் மற்றும் சீமைக் கருவேலை மரவிதைகளை இலவசமாக அரசாங்கமே கொடுத்து கிராமங்களைப் பாழ்படுத்தியது மட்டுமல்லாமல் PWD டிபார்ட்மெண்ட் போன்றவற்றை உருவாக்கி நிறைசூலியாய் இருந்த கண்மாயையும் பாழ்படுத்திவிட்டார்கள் என்கிறது நாவல். அரசாங்கத்தின் கைகளில் கண்மாய்கள் செல்லும் முன் ராஜாவோ ஜாமீன்தாரோ இருந்தார்கள். அவர்களிடம் எளிதாக அனுமதி வாங்கி கிராம மக்களே கண்மாய்களைத் தூர்வாரினார்கள். அது அரசாங்கத்தின் கைகளில் சென்ற பின் கண்மாய்க்குள் இறங்கி ஒருபிடி மண் அள்ளினாலே குற்றமாக்கப்பட்டுவிட்டது என்ற சூழலில் இப்போது யாரும் கண்மாய்க்குள் இறங்கித் தூர்வாருவதில்லை அரசாங்கமும் அதன் வேலையைச் செய்வதில்லை. அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதிலும் பெண்கள் பின் சுற்றுவதிலும் காலம் கழித்து நாட்டைச் சீரழிக்கிறார்கள். இப்படி முடிகிறது நாவல்.

நாவலில் உள்ள நல்ல விடயங்களை ஒரு மாதிரியாக தொகுத்துக் கூறிவிட்டேன். இனி என் விமர்சனத்திற்கு வருகிறேன். பொதுவாக கிராமங்களில் கெட்ட வார்த்தைகள் புழங்குவது சகஜம் தான். ஆனால் இந்த நாவலில் வரும் உருளைக்குடியில், ஒரு அளவிற்கு மேல் கெட்டவார்த்தைகள் புழங்குகின்றனவோ என்று எண்ணத் தோன்றியது. கெட்டவார்த்தைகள் சொல்லித் திட்டுவது ஒருபுறம் என்றால் கேலி பேசுகிறேன் என்ற பெயரில் நாவல் முழுவதிலும் ஆபாசங்களை அள்ளித் தெளித்திருப்பது சில இடங்களில் முகம் சுளிக்கவும் அருவருக்கவும் வைக்கிறது. 

சிவனும் பார்வதியும் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் போது பார்வதியின் மார்பைக் கொத்திய காக்கைக்கு கோணக்கண்ணாகப் போகட்டும் என்று சாபமிட்டதைக் கூட நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாம். வானில் கடலைக் கடக்கும் அனுமனின் வியர்வைத்துளி ஒன்று கடலின் மேற்பரப்பில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கடற்கன்னியின் பிறப்புறுப்பில் பட்டு அனுமன் முனி பிறந்தார் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? 

சரி இதுகூட புனைவுக் கதை கிராமங்களில் சொல்லப்படும் பல கதைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு அதை புனைந்திருக்கிறார் என்று கொள்ளலாம். ஆனால் கிராமங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் பெரும்பான்மையான மக்கள் ஆபாசமாகவும் இரட்டை அர்த்தங்களுடனும் தான் பேசிக்கொள்வார்களா? நான் பார்த்த கிராமங்களில் யாரும் அப்படிப் பேசுவதில்லை. ஒருவேளை உருளைக்குடி மக்கள் அப்படிப் பேசுவார்கள் என்று புரிந்துகொள்கிறேன்.

இந்த நாவலில் இங்கு எடுத்து எழுதுவதற்கு கூட கூசும் பல ஆபாச பேச்சுகள் நிறைந்து கிடக்கின்றன. அடுத்து இறுதி பாகத்திற்கு வருவோம்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. இத்தனை நாள்கள் ஜமீன்தார்களாலும் ராஜாக்களாலும் மகிழ்ச்சியாக இருந்த கிராமம் மூன்று முக்கிய அரசியல்வாதிகளால் மகிழ்ச்சியிழக்கிறது. நிறைசூலியாய் இருந்த கண்மாய் மலடாகிறது. 

அந்த அரசியவாதிகளில் மூத்தவர் சுச்சி நாயக்கர். அவரின் இரண்டு எடுப்புகள் சின்னாத்துரை மற்றும் மூக்காண்டி. இதில் சுச்சி நாயக்கரின் இயற்பெயர் ராமசாமி நாயக்கர். சின்னாத்துரையை எல்லோரும் சின்னா என்றும் மூக்காண்டியை மூக்கா என்றும் அழைப்பார்கள். சுச்சி நாயக்கர் சொல்லும் வேலைகளை இளைஞர்கள் சுச்சு போட்டவுடன் லைட் எறிவது போல் செய்வதால் அவருக்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. 

ஊர் தலைவராக சின்னாவும் துணைத்தலைவராக மூக்காவும் பொறுப்பேற்பார்கள். இந்த சுச்சி நாயக்கரின் அறிவுத்தலில் தான் நாடு முழுவதும் சிலேபி மீன் குஞ்சுகளும் சீமை கருவேலை விதைகளும் சின்னா மற்றும் மூக்காவால் விநியோகிக்கப்படும். இதனால் நாட்டுமீன்கள் அனைத்தும் அழிந்துவிடும். சீமைக் கருவேலைகள் நாட்டையே அழித்துவிடும். இந்த சின்னாவும் மூக்காவும் யாரைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஊர் புறம்போக்கு நிலத்தைத் தங்கள் பெயரில் பட்டாப்போடுவது பெண்கள் பின் சுற்றுவது போன்று சுகபோகங்களில் திளைப்பார்கள்.

சின்னா திடீரென்று கழுத்தில் ஏற்படும் கட்டியால் பயங்கர துன்பம் அனுபவித்து இரத்த இரத்தமாக வாந்தியெடுத்து இறந்துவிடுவான். ஏதோ பண்ணிய பாவங்களுக்கு தண்டனை போல். ஆனால் மூக்கா அப்படி இறக்காமல் அடுத்த தலைவர் ஆகிவிடுவான் நாட்டிய மங்கை சாரதாவை சேர்த்துக்கொண்டு அவர்கள் இருவருக்கும் தேன்மொழி என்ற மகளும் பிறப்பாள்.

இந்த நாவலின் இறுதியில் வரும் முக்கிய வில்லன்களான இராமசாமி நாயக்கர் (சுச்சி நாயக்கர்), சின்னாத்துரை, மூக்கா எல்லாம் குறியீடுகளாம். யாரைக் குறிக்கின்றன என நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நாவலை படிக்கவே படிக்காத ஒரு கும்பல் கலைஞர் டிவியில் சோ.தர்மனை வைத்து ஒரு பேட்டி எடுக்கிறது. அதில் இந்த நாவலின் அருமை பெருமைகளை அவரிடமே கேட்கிறார். பேட்டி எடுப்பவரே இந்த நாவலின் மெயின் வில்லனே உங்க தலைவர் தான்யா என்று அவரிடம்  எப்படிச் சொல்லுவேன். ஐயா சோ.தர்மன் திராவிட ஆட்சியால் தான் நாடு நாசமாய் போனது என்பதைப் போல ஒரு பிம்பத்தை நாவலில் கட்டமைத்துவிட்டு கலைஞர் டிவியிலேயே அந்த நாவலுக்கு விளம்பரமும் தேடிக்கொண்டிருக்கிறார். இதனால் தான் புத்தக வாசிப்பு அவசியம் என்கிறேன். 

அதிலும் ஒரு கட்டத்தில் சோ.தர்மன் அவர்கள் கொஞ்சமும் கூச்சப்படாமல் “நாட்டு மீன்களை அழிச்ச சிலேபி மீன் குஞ்சுகளை அரங்காங்கம் தான் கொடுத்துச்சு நான் கூட வாங்கிருக்கேன். காமராஜ் பீரிட்ல கொடுத்தாங்க” என்று அந்தப் பேட்டியிலயே கூறுகிறார். இந்த நாவலில் அவர் முழுக்க முழுக்க தி.மு.க.வை மட்டுமே சாடியிருக்கிறார். சுதந்திரம் வாங்கிய உடனே ஆட்சிக்கு வந்த காங்கிரசைப் பற்றி ஓர் எழுத்துக்கூட இல்லை. ஆனால் கலைஞர் டிவி பேட்டியில்ல காமராஜ் கொடுத்தார் என்கிறார். ஒன்றும் சொல்வதற்கில்லை. 

இந்தக் கதையின் இடைல திமுக்கன் என்று ஒருவன் வருகிறான் அவன் மனைவியின் பெயர் பொய்யாளி. என்ன குறியீடா இருக்கும்? தெரிந்தவர்கள் கமன்ட்டில் கூறுங்கள்.

புத்தகத்தின் பல பகுதிகள் ஏன் எதற்கு என்றே தெரியவில்லை. எப்படியும் ஐநூறு பக்கங்கள் எழுதியே ஆக வேண்டும் என்று நிறைத்தது போல் இருந்தன. கதைக்கு சூல் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ நிறைசூலி, சூலாடு என பல இடங்களில் சூல் வருகிறது.

இது இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அக்காடமி விருது பெற்ற நாவல். இவ்வளவு பெரிய விருது வாங்கிருக்கும் இந்த நாவல் சொல்ல வருகிற மையக் கருத்து என்னவென்றால் அந்தக் காலத்தில் இருந்த மாதிரி ஜாதி அமைப்புகள் குலத் தொழில்கள் எல்லாம் இருக்கணும். அப்படி இருந்தால் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 
குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீர்பாய்ச்சியாக சிறப்பா செயல்பட முடியும் என்கிற நாவலின் கருத்தை சரி என்று எடுத்துக்கொண்டால் மற்ற குலத்தொழில்களையும் அப்படித்தான் எடுத்துக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. மக்களாட்சி முறையில் ஆயிரம் குறைகள் இருக்கலாம் அதைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஒரு எழுத்தாளரின் கடமை அதற்காக ஜமீன்தார், ராஜாக்கள் நல்லாட்சி புரிந்தார்கள் என்பது போல அடிமைத்தனத்தை ஞாயப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் புரிதலில் பிழை இருக்கலாம் இருந்தால் உங்கள் விளக்கங்களைக் காமன்ட்டில் கூறுங்கள். கேட்டுகிறேன்.

எனக்கு இதில் வருத்தம் என்னவென்றால் இந்த நாவலின் பின்புற அட்டையில் ஜெயமோகன் ஒரு வாழ்த்துரை மாதிரி எழுதி இருக்கிறார். அவர் நிச்சயம் நாவலைப் படிக்காமல் எழுதிருக்க மாட்டார். அவருக்கு இந்த நாவல் பற்றி ஒரு விமர்சனம் கூட இல்லையா? எஸ்.ராமகிருஷ்ணன் இதைப் படித்திருப்பாரா? சாரு?

ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் ஒரு கொள்கை இருக்கும். அதை அவர்கள் பேஸ்புக்கில் எழுதிக்கொள்ளலாம். இப்படி இலக்கியத்திற்குள் திணிப்பது நன்றாகவா இருக்கிறது? இது இப்போ ஒரு டிரண்டு போல ஒரு எழுத்தாளர் இப்படித்தான் மோடியை மோனி என்று மாற்றி கேவலமாக ஒரு சிறுகதை எழுதியிருந்தார். அடுத்து ஆட்சிமாற்றம் வந்தால் அவருக்கும் விருது கிடைக்கலாம்.

இலக்கிய அரசியல் கேள்விப்பட்டிருக்கிறேன் இது அரசியல் இலக்கியம் போல. தி.மு.கவை விமர்சித்தால் விருது கிடைக்கும் என்றால் என் பேஸ்புக் பதிவுகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகப் போடலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நாவலைப் பொறுத்தவரை நான் முன்பே கூறியது தான். ஒரு நல்ல கருத்தைச் சொல்ல வருகிறது ஆனால்…. அந்த ஆனால் அதிகமாகி சொல்ல வேண்டியதை சொல்லாமலே போகிறது 

வாங்கிப் படித்து வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் வேண்டாததை ஒதுக்கிவிடுங்கள்.

நன்றி.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -