1820-ம் வருடம். ஏப்ரல் 3-ம் தேதி. காரிக் கிழமை.
ராஜாங்க சித்த வைத்தியரான வல்லவரயன் தாளகத் தைலம் தயாரிக்கும் முறைமையை தனது மாணாக்கர்களுக்கு செயல் விளக்கம் மூலம் கற்பித்துக் கொண்டிருந்தார். இதற்கு முன்பு அவரிடம் மருத்துவம் கற்க வந்த எந்த மாணாக்கருக்கும் கிடைத்திடாத, அரிய வாய்ப்பு, இப்போது இருக்கும் பதினைந்து பேருக்கும் வாய்த்திருந்தது.
அவர்களை தனது சொந்த ஊரான வல்லத்திற்கு அழைத்து வந்திருந்தார். அவரது பூர்வீக வீட்டில் அவரும் மாணாக்கர்களும் இருந்தார்கள். வல்லவரயன், தஞ்சையை விட்டு வந்து இன்றோடு இருபத்தேழு நாள்கள் ஆகிறது. மகாராஜா சரபோஜி போன்ஸ்லே நடைபயணமாக காசிக்கு சென்ற மறுதினமே, வல்லவரயன் தனது சீடர்களுடன் சொந்த ஊருக்கு வந்து விட்டார். மகாராஜா தலைநகர் தஞ்சைக்குத் திரும்புவதற்கு இன்னும் நாற்பது நாள்கள் செல்லும். அதுவரை வல்லத்திலேயே வசிப்பதென வல்லவரயன் முடிவெடுத்திருந்தார். கிட்டதட்ட எழுபது நாள்கள் தொடர்ந்து தனது ஊரில் இருக்கும் சூழல் வருமென அவர் நினைத்துப் பார்த்தது இல்லை. மகாராஜா இல்லாத தஞ்சை மாநகரத்தில், அவர் வரும் வரை வாழ்வதும் வசிப்பதும் மனஉளைச்சலுக்கும் மனசிக்கலுக்கும் தன்னை ஆட்படுத்திவிடும் என்பதை கணித்து மூட்டை, முடிச்சுகளோடு ஊருக்கு புறப்பட்டு விட்டார்.
இரண்டாம் சரபோஜி என்றழைக்கப்பட்ட போன்ஸ்லே, முதன்மை அமைச்சர்கள், தளபதிகள், பாதுகாவலர்கள், தூதுவர்கள், சமையற்கலைஞர்கள், பணிவிடையாளர்கள் என்று மூவாயிரம் பேர்களுடன் காசிக்கு சென்றிருக்கிறார். மன்னரிடம் தனிப் பெரும் செல்வாக்கும் நூறு விழுக்காடு நம்பிக்கையும் பெற்றவரான ஹெல்ட்டனும் உடன் சென்றிருக்கிறார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர். மன்னர், வல்லவரயனை விடவும் ஹெல்ட்டனைத்தான் அதிகம் நம்பினார். இத்தனைக்கும் மன்னருக்கு நீர் பிரிதல் நோய் (நீரிழிவு) இருப்பதை கண்டறிந்ததும் அதிலிருந்து மன்னரை மீட்டெடுக்க, ஆன்மிக முலாம் பூசிய வைத்தியமான காசி யாத்திரைக்கு நடந்து செல்ல திட்டமிட்டுக் கொடுத்தவரும் வல்லவரயன்தான். இது ஹெல்ட்டனுக்கே தெரியாது.
மன்னர் காசிக்குப் புறப்படும் நாளும் கிழமையும் அமைச்சரவையில் உள்ளதான அறிவார்ந்த குழுவால் திட்டமிடப்பட்டது. இப்போதைய கிலோ மீட்டர் கணக்கில் தஞ்சை மாநகரிலிருந்து 2150 தூரத்தில் இருந்த காசி நகருக்கு சென்று வருவதற்கு எத்தனை நாள்கள் செல்லும். காசியில் எத்தனை நாள்கள் தங்குவது. மகாராஜாவுடன் யாரெல்லாம் செல்வது. மன்னருக்கான ராஜ உணவையும் மற்றவர்களுக்கான சாதா உணவையும் தயாரிக்கத் தேவையான பலசரக்கு, காய்கறிகள், இன்னபிற பொருட்கள்…. அவற்றை சுமந்து செல்ல மாட்டுவண்டிகள் என்று மிக நேர்த்தியாக ராஜாங்க குழு திட்டம் வகுத்தது.
அந்தப் பயணத்தின் பட்டியலில் வல்லவரயன் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. அவரும் ஆரம்பத்தில் வருவதாக ஒப்புதல் அளித்திருந்தார். பயணத்துக்காக அமைக்கப்பட்டிருந்த நிதிக்குழு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஊதியம் வழங்குவதென முடிவு செய்து, அதற்கு மகாராஜாவின் அனுமதியையும் பெற்றிருந்தது. அந்த வகையில், ஆங்கில மருத்துவரான ஹெல்ட்டனுக்கு 700 பணமும் சித்த மருத்துவரான வல்லவரயனுக்கு வெறும் 20 பணமும் ஊதியம் வழங்க நிதிக்குழு முடிவு செய்தது. பொன் கணக்கில் சொல்வதென்றால், பத்து பணம் கொண்டது ஒரு பொன். அந்த வகையில் ஹெல்ட்டனுக்கு 70-பொன்னும் வல்லவரயனுக்கு 2-பொன்னும் ஊதியமாக வழங்க உறுதி செய்யப்பட்டது. இதனையறிந்த வல்லவரயன் மிகவும் மனம் உடைந்து போனார். ஊதியம் பெறுவதில் அவருக்கு உடன்பாடில்லை. என்றாலும் அதனை வழங்குவதென முடிவெடுத்து, செயல்படுத்தும் போது, அதில் ஒரு நியாயம் வேண்டாமா? இப்படியா, மலைக்கும் மடுவுக்கும் இருக்கிறதான வேறுபாடுபோல் பாகுபாடு பார்ப்பது என்று சிந்தித்தார். தனது மனவருத்தத்தை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. என்றாலும் பயணம் செல்வதிலிருந்து விலகிக் கொண்டார். அவரின் இந்த முடிவு ஹெல்ட்டனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. வல்லவரயனுக்கு பின் நாள்களில்தான் தெரிந்தது. அவரை பயணத்திலிருந்து அப்புறப்படுத்தி, ஹெல்ட்டனுக்கு முக்கியத்துவம் தருவதற்காக, நிதிக்குழுவில் உள்ள சிலர் செய்த சூழ்ச்சி என்று. இது அவருக்குப் பழக்கமான ஒன்றுதான். தஞ்சை மாநகரில் பெரிய சித்தவைத்திய சாலை ஒன்று தொடங்க வேண்டும் என்பது வல்லவரயனின் லட்சியக் கனவாக இருந்தது. சரபோஜி மனது வைத்தால்தான் அது சாத்தியம். அந்தக் கனவை நிறைவேற்ற விடாமல், ஹெல்ட்டன் வல்லவரயனுக்கு பெருந்தடையாக இருந்தார். இப்போது காசி பயணத்துக்கும் தடையாக இருக்கிறார்.
அதுபற்றி வல்லவரயன் கவலைப்படவும் இல்லை. இதனை மன்னரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் இல்லை. அவரது கவனமெல்லாம் மகாராஜா இந்த ஆன்மீக வைத்திய பாத யாத்திரையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும். அவருக்கு வந்திருக்கும் நீரிழிவுப் பிணி முற்றிலுமாக நீங்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. இப்போதும் கூட, தனது மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போதே, மன்னர் அரண்மனைக்குத் திரும்பியதும் அவருக்குத் தேவையான அதி முக்கியமான சூரணம், பற்பம், தைலம் போன்றவற்றையும் தயாரித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் இன்றைக்கு தாளகத் தைலத்தை தயார் செய்துக் கொண்டிருந்தார்.
தாளகம், மனோசீலை, கந்தகம் இம்மூன்றையும் மூன்று வராகன் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை காடித் தண்ணீர் எனப்படும் புளித்த நீரைக் கொண்டு மை போல அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் இரண்டு மடங்கு பசு வெண்ணெய்யை குழப்பிக் கொள்ள வேண்டும். இதனை மெலிதான துணியில் தடவி, காயவைக்க வேண்டும். காய்ந்த அந்தத் துணியை ஒரு கம்பியில் தொங்கவிட்டு, அதில் தீ மூட்ட வேண்டும். கலவை தடவிய துணி எரிந்து, தைலம் சொட்டுச் சொட்டாக வடியும். அதனை ஒரு மண் கலயத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்து வடிந்த பிறகு, அந்தத் தைலத்தைக் குளிர வைத்து, சீசாவில் சேகரித்துக் கொள்ள வேண்டும். கை, கால் உளைச்சல், நடுக்கம், நடுக்கு வாதம் போன்றவை வந்தால், வெற்றிலை ஒன்றில் ஒரு சொட்டு தைலத்தைத் தடவி கொடுக்க வேண்டும். காலையும் மாலையும் மூன்று நாள்களுக்கு கொடுத்தால், மேற்கண்ட பிணி தீரும். கிட்டதட்ட நான்காயிரத்து முன்னூறு கிலோ மீட்டர் நடந்து சென்று திரும்பும் மன்னருக்கோ, அல்லது வேறு யாருக்கோ அந்த கை, கால்கள் உளைச்சல் நடுக்கம் ஏற்படக் கூடும் என்று கணித்து, தாளகத் தைலத்தை போதிய அளவுக்கு தயார் செய்துக் கொண்டிருந்தார் வைத்தியர் வல்லவரயன்.
அப்போது அவர் வீட்டைத் தேடி, செய்தி சொல்லும் தூதுவனும் இரண்டு படை வீரர்களும் குதிரையில் வந்து இறங்கினார்கள்.
அவர்கள் மூவரும் காசியிலிருந்து வருகிறார்கள் என்ற சேதி, வீட்டின் பின்புறத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தில் இருந்த வல்லவரயனுக்குச் சொல்லப்பட்டது. ‘மகாராஜாவுக்கு ஏதும் ஆயிற்றோ’ என்றதான மனபதற்றத்தில் போட்டது போட்டபடி வைத்தியர் வாசலுக்கு ஓடோடி வந்தார்.
“மருத்துவர் ஹெல்ட்டன் மரணப்படுக்கையில் இருக்கிறார். மகாராஜா உங்களை உடனடியாக புறப்பட்டு வரச் சொன்னார்” என்றார் தூதுவன்.
வல்லவரயனுக்கு ‘திக்’ என்றிருந்தது.
*********
இரண்டாம் சரபோஜி என்று வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் புகழோடு இருக்கும் போன்ஸ்லே சத்ரபதி நிறைய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். என்றாலும் கூட, அவரிடம் மாற்றமுடியாத பரம்பரை பெருமை உணவு பழக்கம் ஒன்று தொற்றிக் கொண்டு இருந்தது. அவர் சரியான சம்பாஜி ஆஹார் பிரியர். மதிய உணவில் கட்டாயம் அது இருந்தே ஆக வேண்டும். சம்பாஜி ஆஹார் என்பது, இன்றைக்கு தென்னிந்திய உணவுகளில் புகழ் பெற்றதாக இருக்கும் சாம்பார்தான்.
இந்த சாம்பாரை கண்டுபிடித்தது தனது மூதாதையர் என்பதில், இரண்டாம் சரபோஜிக்கு தலை கொள்ளாத பெருமை. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தினமும் மதியம் சாம்பார் உணவை வெளுத்துக்கட்டுவார். பஞ்சாபில் விளையும் ‘ராஜபுன்னகை’ என்ற உயர் ரக அரிசியில் சமைக்கப்பட்ட சோறைதான் உண்பார். அந்த ‘ராஜபுன்னகை’ என்பது இன்றைக்கு பாசுமதி என்றழைக்கப்படும் அரிசி வகைதான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் சம்பாஜி ஆஹார் ஊற்றிய, ராஜபுன்னகை சோறை தின்றால், உடல் ஒரு கட்டத்தில் தனது கதறலை வெளிப்படுத்தும்தானே? அரசர் என்றாலும் ஆண்டி என்றாலும் அதுதானே பொது விதி. அதான் நீரிழிவு நோய் அவருக்கு வந்துவிட்டது.
மன்னருக்கு இருக்கும் சாம்பார் உணவின் மீதான எல்லை மீறிய ஆர்வமும் அடங்காத ஆசையும் அவரை இப்படியான பிணியில் தள்ளும் என்பதை வல்லவரயன் முன்பே கணித்திருந்தார். ஆனால், மன்னரின் நாற்பத்து மூன்றாவது வயதிலேயே அது நேரிடும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.
நாடி பிடித்துப் பார்த்ததிலும் அவரது சிறுநீரில் பற்பக் கலவை சேர்த்து ஆய்வு செய்ததிலும் நீரிழிவு உச்ச அளவை எட்டியிருந்ததை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியே விட்டால், சிறுகாயம் காலில் ஏற்பட்டால் கூட, மன்னரின் கால்களை எடுக்க வேண்டியிருக்கும் என்பதும் வல்லவரயனுக்குப் புரிந்தது. இதனை எல்லாம் சொல்லி, மன்னரை பயமுறுத்தவும் விரும்பவில்லை. அவருக்கு தெரியும், தான் தயாரித்துத் தரும் சித்த மருந்துகளை மாத்திரம் கொண்டு இந்தப் பிணியை கட்டுப்படுத்தலாம். முற்றிலுமாக துடைத்தழிக்க வேண்டும் என்றால், மன்னரின் முழு ஈடுபாடும் ஒத்துழைப்பும் வேண்டும்.
அதற்கு, இரண்டு விசயங்களில் மன்னர் கட்டாயமாக, கடும் சிரத்தையாக அவரது உடலை ஒப்புக் கொடுக்க வேண்டும். ஒன்று தீவிர நடைபயிற்சி. அரண்மனையின் நீளமான ரேழிக்களிலோ, காற்றோட்டமும் மலர்களின் மணமும் உள்ள நந்தவனத்திலோ அவரை நடைபயிற்சி செல்வதற்கு மருத்துவன் என்ற வகையில் ஆலோசனை சொல்லலாம்தான். அவரும் சிரத்தைக் கொண்டு அதனை செய்வார்தான். ஆனால், அவருக்கு வந்திருக்கிறதான நோய் பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிடும். அது, மக்கள் மத்தியில் மன்னரின் விரோதிகளால் திரித்துப் பரப்பப்படும். ஆகவே, மன்னரை காசிக்கு ஆன்மீக யாத்திரை என்ற போர்வையில் நடைபயிற்சிக்கு அனுப்புவதென வல்லவரயன் முடிவெடுத்தார்.
இரண்டாவது, அந்த ‘ராஜபுன்னகை’ அரிசியில் சமைக்கப்பட்ட சோறை மன்னர் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலுமாக மறக்கடிக்க செய்ய வேண்டும். நீரிழிவு நோய் தீவிர மடைந்ததற்கு அந்த அரிசிதான் காரணம். மாறாக, சோழ தேசத்தில் எளியவர்களின் கடும் உழைப்பாளிகளின் மூன்று வேளை உணவாக இருக்கும் ‘செவ்வரிசி’யை மன்னருக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அந்த அரிசியில் சமைக்கப்பட்ட சோறு குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிரம்பி விடும். தவிர, காசி வரை நடந்து சென்று திரும்பும் மன்னரின் கால்களுக்கு நல்ல வலுவையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்க வல்லது ‘செவ்வரிசி’.
இவைகளை விட, கூடுதலான காரணியாக, செவ்வரிசி சோறுக்கு நீரிழிவு நோயை அல்லது குறைபாட்டை உருவாக்கும் தன்மையோ, கூடுதலாக்கும் குணமோ இல்லாததும் வல்லவரயன் அந்த அரிசியைத் தேர்தெடுக்கப் போதுமானதாக இருந்தது.
காசி நடைபயணம் அவரது ஆலோசனையின்படி, உறுதி செய்யப்பட்டதும் தலைமை சமையற்காரர் வடுகனை வரவழைத்து மன்னர் முன் நிறுத்தினார். அவர் தான் மன்னருக்கான உணவுகளைத் தயார் செய்பவர். காசிக்கு சென்று தஞ்சைக்குத் திரும்பும் வரை மன்னருக்கு ‘செவ்வரிசி’ சோறு மாத்திரமே பரிமாறப்பட வேண்டும் என்பதை மன்னரின் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தி, ஒப்புதலையும் பெற்றுத்தந்தார்.
வடுகனுக்கு மன்னர் ‘ராஜபுன்னகை; சோறு இல்லாமல் சாப்பிடுவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
“மகிமை வாய்ந்த எங்கள் ஆண்டவரே…. சிறிதளவேவாவது அந்த அரிசியில் சமைக்கப்பட்ட சோறை தங்களுக்கு பரிமாற்ற அனுமதி உண்டா?”
“நிச்சயமாக இல்லை வடுகா. வல்லத்தார் என்ன சொல்கிறாரோ… அதன்படி செய்துவிடுங்கள். அதில் மாற்றம் வேண்டாம்” என்றார் போன்ஸ்லே. மன்னருக்கு இப்படி ஒரு நோக்காடு வந்திருப்பது வடுகனுக்கு மட்டுமல்ல…. அரண்மனை மாடங்களில் வசிக்கும் புறாக்களுக்கும், சுவர்களில் சுற்றித் திரியும் அரண்மனை பல்லிகளுக்குக் கூட தெரியாது.
மன்னரும் வைத்தியருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அது பாதுகாக்கப்பட்டது.
“வல்லத்தாரே….. எனக்கு வந்திருக்கிறதான இப்பிணி குறித்து ஆங்கில மருத்துவர் ஹெல்ட்டனிடம் கூறலாமா?”
இப்படியொரு கேள்வியை சத்ரபதி தன்னிடம் கேட்பார் என்பதை வல்லவரயன் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் துரித நஞ்சு பரவும் வேகம் போல், அவரது மூளை சடுதியில் சிந்தித்தது.
“என் ஆண்டவரே.. உங்களுக்கு இந்த விசயத்தில் ஆலோசனை சொல்லும் அளவுக்கு இந்த எளியவன் பாத்திரன் அல்ல. எனினும் சில விசயங்களை உங்களுக்கு நினைவுபடுத்த மட்டும் விருப்பம் உண்டு.”
“சொல்லுங்கள் வல்லத்தாரே” போன்ஸ்லே எப்போதும் வல்லவரயனை அவரது ஊரை வைத்தே அழைப்பது வழக்கம். அது, அவரது பெயரையும் குறிப்பிடுவதாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு.
“சத்ரபதி அவர்களே…. ஹெல்ட்டன் என்னதான் உங்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவே இருந்தாலும் அவர் ஒரு பிரிட்டீஸ் பிரஜை, உங்களுக்கு இப்படியொரு பிணி வந்திருப்பது தெரிந்தால், சென்னை மாகாண கவர்னரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விடுவார். தான் ஆடவில்லை என்றாலும் தசை ஆடும் என்ற தமிழ் பழமொழி ஹெல்ட்டனுக்கும் பொருந்தும்தானே?”
“புரிகிறது. நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன் எனபது கவர்னருக்கு ஹெல்ட்டன் சொல்வது மூலம் என்ன நிகழ்ந்து விடும்?”
“தாங்கள் அறியாததல்ல. 1798-ல் கவர்னர் நம்மோடு போட்ட ஒப்பந்தம் உங்கள் நினைவில் இருக்குமென கருதுகிறேன். அதன்படி, தஞ்சை நகரமும் எனது ஊரான வல்லமும் மட்டுமே தற்போது உங்களது நேரடி ஆட்சியின் கீழ் இருக்கின்றன. சோழப் பேரரசின் போது பரந்து விரிந்திருந்த தஞ்சையின் ஆட்சிப் பகுதிகள் எல்லாமே சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் தற்போது இருக்கிறது.”
“ஆம். அதற்கென்ன?”
“இப்போது நீங்கள் உடல்நலக் குறைவாக இருப்பது கவர்னருக்குத் தெரிந்தால், தஞ்சைப் பகுதியையும் வல்லத்தையும் அவரது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நூறு விழுக்காடு வாய்ப்பு இருக்கிறது மன்னர் அவர்களே.”
வைத்தியர் சொல்வதில் உள்ள உண்மை சரபோஜிக்கு சட்டென உரைத்தது.
“நீர் சொல்வது சரிதான். பிணி விசயம் எனக்கும் உனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும்” என்றார்.
இப்படி ராஜாங்க பகிர்தலிலும் உணவு கட்டுப்பாட்டிலும் மாமன்னரை வழிக்குக் கொண்டு வர முடிந்த வல்லவரயனால், சாம்பார் விசயத்தில் மட்டும் மன்னரின் நாவை கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்த முடியவில்லை. பரம்பரைப் பெருமைதானே…. இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்.
*********
அந்த மூவருடன் குதிரையில் பயணித்த வல்லவரயன், மூன்றாவது நாள் மதிய நேரத்தில் மிர்சாபூரை நெருங்கிக் கொண்டிருந்தார். மன்னர் தன் பரிவாரங்களுடன் அங்குதான் முகாமிட்டிருத்தார். ஹெல்ட்டன் சற்று தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த தனி கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நலக்குறைவின் காரணத்தால், மன்னரின் காசி யாத்திரை தடைபட்டிருந்தது. வேறு யாராவதாக இருந்தால், ஆள்களை நியமித்துவிட்டு, மன்னர் காசிக்குப் புறப்பட்டிருப்பார். ஹெல்ட்டன் ஆங்கிலேயர். சென்னை மாகாண கவர்னருடன் நெருங்கியத் தொடர்பில் இருப்பவர். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், கவர்னருக்கு பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும். அதன் காரணமாகவே, மன்னரும் அங்கேயே இருந்தார். மிர்சாபூரிலிருந்து ஒரு பகல் நடைபயண தூரத்தில் காசி மாநகரம் இருந்தது.
வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே, ஹெல்ட்டனின் உடல்நிலை குறித்தும் அவர் எந்த நிலையில் இருந்தார், இருக்கிறார் என்றெல்லாம் சில அடிப்படையான கேள்விகளை தூதுவனிடம் வல்லவரயன் கேட்டறிந்தார். அவன் சொன்ன கிரமமான பதில்களை வைத்து, ஹெல்ட்டனுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல் என்பதை கணித்தார். தமிழ் பிரதேசம், தெலுகு பிரதேசம், வட பிரதேசம் என்று வெவ்வேறு பருவநிலை மாற்றங்களைக் கொண்ட நிலப் பகுதிகளைக் கடந்து செல்வது ஹெல்ட்டனின் உடல்நிலையை பலவீனப்படுத்தி, காய்ச்சலில் தள்ளியிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டார். கடந்த இருபது நாள்களாகவே ஹெல்ட்டனின் உடல்நிலை படிப்படியாக சுகவீனம் அடைந்து வருவதாக தூதுவன் சொன்னான்.
“அறிகுறிகள் தென்படுபோதே என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கலாமே?” வல்லவரயன் தூதுவனிடம் கேட்டார்.
“மருத்துவரே…. நீங்கள் அறியாததல்ல. ஹெல்ட்டனும் மருத்துவர் என்பதால், அவரே சுயமருத்துவம் பார்த்துக் கொண்டார்.”
“அதிலொன்றும் தவறில்லை. என்றாலும் நீங்கள் உடனே புறப்பட்டு வந்திருக்கலாம்.”
“உண்மைதான். ஆனால், இவ்வளவு மோசமான நிலைக்கு அவர் போவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தவிரவும் மற்றொரு முக்கியமான காரணமும் இந்த காலதாமதத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது.”
“என்ன காரணம்?”
“நீங்கள் அந்த யாத்திரையில் இல்லை என்பதே மன்னருக்கு மூன்று தினங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. உங்களை ஏன் அழைத்துவரவில்லை என்று கடும் கோபத்தில், இந்தப் பயணத்துக்கான பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைத்து மன்னர் திட்டிவிட்டார். ஹெல்ட்டனை காப்பற்ற வல்லவரயனால்தான் முடியும். உடனே அவரை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் படியே நாங்கள் புறப்பட்டு வந்தோம்” என்றான் தூதுவன்.
வைத்தியர் சில மனக்கணக்குகளைப் போட்டு, துரிதமாக செயல்பட்டார். ஹெல்ட்டனுக்கு கொடுக்க வேண்டிய சித்த மருந்துகளையும் பொடிகளையும் மூலிகை எண்ணெய்களையும் எடுத்துக் கொண்டார். தனது பதினைந்து மாணாக்கர்களையும் தான் எடுத்துக் கொண்ட அத்தனை மருந்துகளையும் அதிக அளவில் எடுத்துக் கொண்டு, காசிக்குப் புறப்பட்டு வருமாறு கூறிவிட்டு, தூதுவனோடு வந்திருந்த வீரர்களில் ஒருவனை, அவர்களுக்கு வழிகாட்டியாக நியமித்து விட்டு, எஞ்சிய இருவரோடும் காசிக்கு தனது குதிரையில் புறப்பட்டார்.
போகிற வழியில் தூதுவன் கேட்டான்.
“மருத்துவரே…. அவ்வளவு மருந்துகளோடு உங்களது மாணாக்கர்களையும் காசிக்கு வரச் சொன்ன காரணத்தை நான் அறிந்துக் கொள்ளலாமா? நீங்கள் எடுத்து வரும் மருந்துகளே ஹெல்ட்டனுக்கு போதுமானதுதானே?”
“ஆமாம். என் மாணாக்கர்கள் எடுத்து வருவது மன்னரோடு வந்திருக்கும் மூவாயிரம் பேர்களுக்கு. உங்களுக்கும் கூட மருந்தும் உண்டு” வல்லவரயன் சொன்னதைக் கேட்டு, தூதுவன் திகைத்தான்.
“ஹெல்ட்டனுக்குதானே காய்ச்சல். மற்ற எல்லோரும் நலமுடன்தானே இருக்கிறார்கள்?”
“அவருக்கு வந்திருப்பது மரணக் காய்ச்சல், மற்றவர்களுக்கும் வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது. மென்மையான உடல்வாகும் நோய் எதிர்ப்பு சக்தி அற்றவருமாக ஹெல்ட்டன் இருப்பதால், அந்தக் காய்ச்சல் அவரை படுக்கையில் தள்ளிவிட்டிருக்கிறது. அந்த நிலைமை எல்லோருக்கும் வரக்கூடும். அப்படி நேர்ந்தால், கொத்துக் கொத்தாக செத்து விடுவார்கள். காசி யாத்திரை மரண யாத்திரையாக மாறக் கூடும். இதில், நமது மன்னரும் தப்ப முடியாது” வல்லவரயன் இப்படி சொல்லவும் தூதுவனுக்கு படபடப்பு அதிகமாகியது. மூவாயிரம் பேரும் விஷக் காய்ச்சலில் மரணிப்பது போன்ற மனக்காட்சியை நினைத்துப் பார்த்து, தலையை சிலுப்பிக் கொண்டான். அவன் மனதில் இப்போது பெரும் கேள்வி ஒன்று எழுந்தது.
“ஆங்கில மருந்துகள் காப்பாற்றாத ஹெல்ட்டனை வல்லவரயனின் சித்த மருந்துகள் காப்பற்றி விடுமா?”
********
வல்லவரயன் மிர்சாபூரை வந்தடைந்தபோது, பின்மதியம் ஆகியிருந்தது. மரியாதை நிமித்தமாக முதலில் மன்னரை சந்திக்க வேண்டும் என்ற விதியை கூட அவர் செயல்படுத்தவில்லை. தான் வந்துவிட்ட தகவலை மன்னரிடத்தில் கூறிவிடும்படி, தூதுவனை அனுப்பிவிட்டு, ஹெல்ட்டன் இருந்த கூடாரத்தை நோக்கி விரைந்தார்.
மன்னரும் பரிவாரங்களும் முகாமிட்டிருந்த இடத்திலிருந்து அரை பர்லாங்கு தொலைவில் ஹெல்ட்டனின் கூடாரம் இருந்தது. உள்ளே நுழைந்த வல்லவரயன், கண்களை மூடி, உணர்வற்ற நிலையில் கட்டிலோடு கட்டிலாக மெலிந்த நிலையில் ஹெல்ட்டன் இருப்பதைப் பார்த்தார் காய்ச்சலின் தீவிரத்தன்மையை புரிந்துக் கொண்டார். ஹெல்ட்டனின் உதவியாளர்கள் அங்கிருந்தார்கள்.
ஹெல்ட்டனின் அருகில் அமர்ந்து அவரது வலது மணிக்கட்டைப் பிடித்து நாடித் துடிப்பைக் கணித்தார். வளி நாடி, அனல் நாடி, நீர் நாடி மூன்றையும் அனுமானித்தவர், ஹெல்ட்டனின் கட்டை விரலையும் சுண்டு விரலையும் தனித்தனியாகப் பிடித்து பூதநாடி நிலையை அறிந்தார். இறுதியாக, கைவிரல்கள் ஐந்தையும் ஒன்று சேர்த்து, அழுத்திப் பிடித்து குரு நாடியைப் பார்த்தார். எல்லா நாடிகளும் ஹெல்ட்டன் இன்னும் சில மணி நேரத்தில் மரணமடையப் போவதை ஒன்று போல் உணர்த்தின. வல்லவரயன் விரல்களை அழுத்திப் பிடித்ததன் நிமித்தமாக ஏற்பட்ட மெல்லிய வலியில் உந்தப்பட்டு, ஹெல்ட்டன் கண்களைத் திறந்தார்.
தனது எதிரே வல்லவரயன் அமர்ந்து இருப்பதைப் பார்த்து, அவரின் கண்களும் உதடும் இலையின் நரம்பின் அளவுக்குப் புன்னகைத்தன. சித்த வைத்தியரும் பதிலுக்கு சிரித்தார்.
“வல்லத்தாரே… நீர் என்னை மன்னியும். நான் இனி பிழைப்பது கடினம். எனக்கொரு உதவியை செய்யும்” என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து, ஹெல்ட்டன் அவரிடம் தனது இறுதி ஆசைக்கான கோரிக்கையை வைத்தார்.
“துரை அவர்களே…. சொல்லுங்கள் கட்டாயம் செய்கிறேன்.”
“நான் இறந்ததும் எனக்கான காரியங்களை நீரே செய்து, என்னை கங்கையில் கரைத்து விடுங்கள்” என்றார். அவரின் கண்கள் பனித்திருந்தன. வல்லவரயனுக்கு என்ன பதில் சொல்வதென திகைப்பு ஏற்பட்டது.
“என்ன வல்லத்தாரே…. அமைதியாக இருக்கிறீர்?” மரணத்தின் நுழைவாசலில் நின்றுகொண்டு, தனது கடைசி கேள்வியைக் கேட்டார்.
“உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன்” என்றார். வல்லவரயனின் பதிலில் ஹெல்ட்டனின் ஆன்மா குளிர்ந்தது. மிகவும் சிரமப்பட்டு, தன் தலையணைக்கு அடியில் இருந்த சுருக்குப் பையை எடுத்து, வல்லவரயனிடம் கொடுத்தார்.
“இதை நீர் தொடங்க இருக்கும் சித்த வைத்திய சாலைக்கு வைத்துக் கொள்ளும். உமது லட்சியக் கனவுக்கு பெரும் தடையாக இருந்துவிட்டேன். நான் சுகவீனமாகத் தொடங்கிய சில நாள்களிலேயே உமது சித்த வைத்திய சாலை பற்றி மன்னரிடம் பேசிவிட்டேன். அவரும் சம்மதித்துவிட்டார்” என்றபடியே கண்களை மீண்டும் மூடினார். வல்லவரயன் அந்தச் சுருக்குப் பையைத் திறந்துப் பார்த்தார்.
அதில், 700 பணம் இருந்தது.
-நிறைவு-