யமுனா வீடு -52

தொடர் கவிதை

- Advertisement -

நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு
அலாரமாக மணி அடிக்கிறது
விழித்துக்கொள்கிறேன்

இன்னமும் இருக்கிறது உறக்கம்
நடக்கப் பழகுபவனாக
எழுந்துகொண்டேன்

இந்தக் கடல் நகரத்தின்
தனிமையை
இசையால் அலறவிட்டு
வேகமெடுக்கிறேன்

இந்தப்பொழுதில்
என்ன சேகரிக்கப்போகிறேன்
நேற்றையப் பொழுதில்
எழுதிய குறிப்புகளுக்குள்
தேடிக்கொண்டிருந்தேன்

உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்
இரண்டாவது முறையாக யாரோ அழைக்கிறார்கள்
திரும்பிப் பார்த்தவனை
யாரோதான் அழைத்திருக்க வேண்டும்

தேநீரைப் பருகச்சொல்கிறவர்களுக்கு
ஏதோ ஒன்றை
மறந்துவிட்டுத்தான்
அங்கு இருக்கிறேன்

அகலக் கண்களை விரித்து
கொஞ்சம் தாடையை மேல உயர்த்தி
பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு
அங்கே நீதான் தெரிந்திருக்க வேண்டும்

எத்தனை விதமான
அழுத்தங்கள் இருந்தாலும்
இடையில் உன் குரல் கேட்டுவிடுகிறது

யதேச்சையான மழையைப்போல
மனதின் தூரத்தில் நீ தெரிவாய்

எண்ணிக்கொள் என்று
உனது பிரியங்கள்
வானத்தின் மேல்
நட்சத்திரங்களாகத் தெரியும்

பரிசுத்தமான அன்பினை
மின்னலைப்போல அருளிச்செல்லும்
யமுனா
நீ எப்போதும்
என்னுடன்தான் இருக்கிறாய்

பணி முடித்து
ஒரு பறவையாக வீடடைகிறேன்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -