கதை சொல்லச்சொல்லி கேட்கும் அவள்
வானம் தொடும் பறவையானாள்
ஒரு வண்ணத்தை ரசிக்கிறாள்
மலரைப் பறித்துச் சூடிப்பார்ப்பாள்
அழகாக மலர்பறித்த செடியோடு
பேசிக்கொண்டிருப்பாள்
சட்டென்று இசைக்கருவியை வாசிப்பவள்
இப்படித்தான் என துள்ளிக்குதிப்பாள்
மழைக்காற்றாய் பரவி
இரையைக் கொத்தித் தின்னும்
பறவையின் காலடியோசையாக ஆடுவாள்
மெல்ல மெல்ல வரும் பூனையைப்போல
நடந்து பார்ப்பாள்
பின்தொடரும் நிழலை
பிடிக்க விளையாடுவாள்
அழகாய்தானிருக்கும்
சித்திரங்களை வரைபவள்
பட்டாம்பூச்சியைப்போல
கண்களைச்சிமிட்டி
கருணையோடு
உங்களின் கண்களைப் பார்ப்பாள்
சற்றுநேரம் மௌனமாக இருப்பாள்
பெருநகர வெளிச்சத்தில்
அன்றாடம் யமுனாவை
இப்படித்தான் பார்க்கத்தோன்றும்
ஒரு குழந்தை
வீட்டை நிரப்புவதைப்போலத்தான்
யமுனாவும்…
யமுனாவீடு – 40
தொடர் கவிதைகள்