மோகனம்

குறுங்கதை

- Advertisement -

நேரம் நள்ளிரவு பதினொன்றை நெருங்க இன்னும் ஓரிரு வினாடித் துளிகள் மிஞ்சியிருந்த வேளையது.உமாவின் மனம் படபடத்துக் கொண்டிருந்தது.கடிகார பெரிய முள் அடுத்த நகர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.அப்போதய சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள் உமா

”படார்’ என்று ஒரே அடியில் கண்ணாடி உடைப்படும் சத்தம்..இரவின் அமைதித்தன்மைக்கு இடிமின்னல் ஒருசேர வந்த ஒலியைப் போல

அமைந்தது.அக்கம் பக்கத்தில் சில சலசலப்புக்குப் பின்னர் மீண்டும் இரவு தன் பாதையில் அமைதியானது.

ஒரு இஞ்சிலான கண்ணாடி,துகல்களாக தெறித்ததில் பளிங்குக் தரையில் கண்ணுக்குப் புலப்படவில்லை.உடைப்பட துணைப் போன கட்டையும் ஒரு மூலையில் வீசப்பட்டிருந்தது.கோபதாபத்தின் உச்சம் கொஞ்சமும் தணியவில்லை.மாறனின் கால்கள் வேலியைத் தாண்டும் வரை உமாவின் உடல் சிறிதளவும் அசையாமல் காதுகளை மூடியவாறு சுவரோடு சாய்ந்திருந்தாள்.அவளது கண்களில் ததும்பிய நீர் இமைகளில் வழிந்தோடிட இன்னமும் தயாராகவில்லை.வியர்வையில் நனைந்திருந்த உடல் அசைவுற்றுக் கிடந்தது.

அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு தன் திரும்பினாள் உமா. குழந்தைகள் கண்களைக் கசக்கியவாறு நின்றிருந்தனர்.படுத்துறங்குமாறு உமாவின் கண் சாடை அவர்களை அங்கிருந்து நகர்த்தியது.

கோப்பையிலிருந்து வலிந்த தேநீர் நூலினை ஈரமாக்குவதைக் கண்ட உமா சட்டென நகர்ந்து தான் அணிந்திருந்த ஆடையினால் துடைத்தாள்.ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் கறைகளாகிப் போயின.விரைந்த வேகத்தில் தரையிலிருந்து கண்ணாடித் துண்டு ஒன்று அவளது பாகத்தைப் பதம் பார்த்ததைக் கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் பிடுங்கி ஒரு முலையில் வைத்து விட்டு மடிக்கணினி பக்கம் திரும்பினாள்.

கண்ணாடி எகிறிய வேளையில் மடிக்கணினி அருகிலிருந்த குட்டையான நாற்காலியில் விழுந்தும் சேதாரம் எதுவுமில்லாமல் போனதில் உமாவிற்கு மகிழ்ச்சி.

நேரம் பதினொன்றைக் காட்டியது.அவளது மனத்தில் படபடப்பு அதிகரிக்கத் தொடங்கியது.மடிக்கணினியோடு அமர்ந்து தட்டச்சு செய்யத் தொடங்கினாள்.அவ்வப்போது கடிகார முள் நகர்தலையும் கவனித்துக் கொண்டாள்.

அனுப்பப்பட வேண்டிய அனைத்து தகவல்களையும் ஒரு முறை உறுதி செய்துக் கொண்டாள்.பாதத்தில் கண்ணாடித் துண்டின் கீறல் வலியைக் தந்தது.கைக்குட்டை ஒன்றை எடுத்து பாதத்தில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இறுதிக் கட்ட வேளையில் மும்முரமானாள்.தொலைநகல் அனுப்பப்பட்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் “நன்றி.கிடைக்கப்பெற்றோம்”,என்ற பதிவைக் கண்டவுடன் நிம்மதியானாள்.

காலங்கடந்து விட்டதாக கூறப்படும் மாறனின் குற்றச்சாட்டுக்கு ஒரு போதும் இசையாது தன் இலக்கிய முயற்சியைத் தொடரும் உமாவிற்கு இன்றைய சம்பவம் புதிதல்ல என்றாலும் அவளது ஆத்மார்த்தமான புரிதல் இலக்கியத்தை நாட வைக்கிறது.போராடவும் வைக்கிறது.

வேலிக் கதவு திறக்கப்டும் ஓசைக் கேட்டு விரைவாக எழுந்த வேகத்தில் அடுத்த கண்ணாடித் துண்டின் மீது பாதம்பட்டது.

காந்தி முருகன்
காந்தி முருகன்https://minkirukkal.com/author/kanthimurugan/
மலேசியாவில் வளர்ந்து வரும் புதிய படைப்பாளர்.இயல் பதிப்பகத்தின் வெண்பலகை சிறுகதை பயிலரங்கில் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வழிக்காட்டுதலில் பயிற்சி பெறும் மாணவி. சிறுகதை,கவிதை,விமர்சனப் பார்வை என தனது எழுத்தாற்றலை விரிவாக்கி கொண்டிருக்கிறார்.தமிழ் நாட்டின் பைந்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் தி.ரா. விருது பெற்றிருக்கிறார். மலேசிய வானொலி மின்னல் பன்பலையில் அமுதே தமிழே நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -