எப்போதும்போல அதிகாலை தாமதமாகச் சென்று அலுவகத்தில் என் வேலையைத் தொடங்கினேன். நான் வேலை செய்த அலுவலகங்களிலேயே இது கொஞ்சம் பெரியது. நான் அமர்ந்திருக்கும் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அமர்ந்திருப்பார்கள். அது போக அங்கே சில அறைகள் வேறு கம்பனியில் இருந்து எங்கள் கம்பனிக்காக வேலை செய்பவர்களுக்காக (Vendors) ஒதுக்கப்பட்டிருக்கும். என் இருக்கை சரியாக நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும்.
பெரிய கண்ணாடிக் கதவு, அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே நுழையமுடியும். வேறு கம்பனிகளில் இருந்து வரும் வெண்டார்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டிருக்காது. அவர்கள் தினமும் வரவேண்டிய அவசியம் இருக்காது. எப்போதாவது தான் வருவார்கள். ஆனாலும் இப்படி எப்போதாவது வருபவர்கள் ஒரு நாளில் பத்து பேராவது வந்துவிடுவார்கள். வந்தவர்கள் உள்ளேயே இருந்து வேலையை முடித்துவிட்டு சென்றுவிட்டால் பரவாயில்லை. மதிய உணவு உண்ண, கழிப்பறை, தேநீர் என ஒரு நான்கு முறையாவது வெளியே சென்று வருவார்கள்.
இதில் என் பிரச்சனை என்ன என்கிறீர்களா? இப்படி வரும் ஒவ்வொருவரும் கண்ணாடிக் கதவிற்கு அருகில் வந்து இரண்டு தட்டு தட்டிவிட்டு ஈ… என்று சிரிப்பார்கள். நான் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் எழுந்து ஓடி கதவைத் திறந்துவிட வேண்டும். அது என் கடமை இல்லை என்றாலும் கூட நான் தான் திறந்துவிட வேண்டும். இல்லை என்றால் அங்கேயே ஒரு ஐந்து நிமிடம் என்னை மனதிற்குள் திட்டிக்கொண்டே நிற்பார்கள். அவர்களுக்காக கதவைத் திறக்க தூரத்தில் இருந்து ஓடி வருபவரும் என் நண்பராகத் தான் இருப்பார். இவர் வெளிப்படையாகவே திட்டுவார்.
அப்படி ஒருநாள் நான் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த போது கண்ணாடிக் கதவிற்கு வெளியே நிழலாடியது. யாரென்று பார்க்க விருப்பமில்லாமல் நான் கணினிக்குள் புகுந்துகொண்டேன். டொங்… டொங்… என்று தட்டினார்கள். வேறுவழியில்லாமல் வெளியே பார்த்தேன் ஒரு மலாய் பெண்மணி. முகம் மட்டும் வட்டமாகத் தெரியும்படியான ஆடை. ஐந்தடி உயரம். கொஞ்சம் பருமனான உடல்வாகு. முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் இருக்கும். இடுக்கிய கண்களை பெரிய கண்ணாடி பெரிதாக்கிக் காட்டிக்கொண்டிருந்தது. ஈ… என்று சிரித்துக்கொண்டே ஹாய்… என்று கையசைத்தார். இப்போது நான் என் சவ்க்கிதார் வேலையத் தொடங்கினேன். எழுந்து சென்று யார்? என்ன? என்று விசாரித்தேன். அவர் புதிதாக வந்திருக்கும் ‘வெண்டார்’ என்றார். அவரின் அடையாள அட்டையைக் காண்பித்தார். நான் கதவைத் திறந்துவிட்டேன்.
கதவைத் திறக்க நான் எழுந்த போது, கதவை நான் திறந்த போது, அவரிடம் நான் யார் என்ன என்று விசாரித்த போது என என்னைத் தாண்டி அவர்கள் வேலை செய்யும் அறைக்குச் செல்லும் முன் ஒரு பத்து முறையாவது “நன்றி” “நன்றி” என பல நன்றிகளை வாரி வழங்கிவிட்டுச் சென்றார். எல்லோரும் முதல் முறை இப்படித்தான் இருப்பார்கள் ஆனால் காலப்போக்கில் கதவைத் திறக்க ஒரு பத்து வினாடி தாமதமாகி விட்டால் கூட ‘அஸ்… உஸ்…’ என்று சலித்துவிட்டுச் செல்வார்கள்.
ஆனால் நான் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தப் பெண்மணி அந்த ரகம் இல்லை இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஒவ்வொரு முறையும் பல நன்றிகளைக் கொட்டிவிட்டுத்தான் செல்வார். அவர்கள் அலுவலகத்தில் இருந்து யார் புதிதாக வந்தாலும் என் அருகில் நிறுத்தி மிகவும் நல்லவன்… மிகவும் நல்லவன்… என்று அறிமுகப்படுத்திவிட்டுத் தான் உள்ளே அழைத்துச் செல்வார். சில சமயங்களில் நானே என்னை நல்லவன் என்று நம்பும்படியாக இருக்கும் அவர் புகழ்வது. அதிலும் கொஞ்சநாள் கழித்து அவர்கள் அலுவலகத்திற்கு என்று தனியாக ஒரு அடையாள அட்டை கொடுத்துவிட்டார்கள். அதற்குப் பின் என் உதவி தேவையே இல்லாத போதும் கூட இதே போன்ற அறிமுகங்கள் தொடர்ந்துகொண்டு தானிருந்தன.
அவர் அந்த அலுவகத்தின் ஒரு முக்கியமான ஆளாகத் தோன்றினார். கடுமையான உழைப்பாளி. சில சமையங்களில் எட்டு ஒன்பது மணிவரை நான் வேலை செய்யவேண்டி வரும். அப்போதும் அவர்கள் அறையில் அவர் வேலை செய்துகொண்டுதான் இருப்பார். அவர் எப்போது செல்வார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அலுவலக மீட்டிங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மலர்ந்த முகத்துடனேயே பதிலளிப்பார். வம்பிழுப்பதில் நாலு டிகிரி முடித்தவராக இருந்தாலும் கூட இவரைக் கோபப்படுத்தி விட முடியாது. புன்னகை மாறா முகத்தோடு இவரால் எப்படி இப்படி சமாளிக்க முடிகிறது எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். உண்மையில் அது அவரின் இயல்பாகவே மாறிவிட்டது சமாளிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சமாளிக்க முற்படுவதால் தான் பல முறை நாம் தோற்றுப்போகிறோம். பொறுமை இழந்துவிடுகிறோம்.
எங்கள் அலுவலத்தில் வேலை செய்த நண்பர் ஒருவர் சில பிரச்சனைகள் காரணமாக எங்கள் அலுவலகத்தில் இருந்து விலகி அந்த வெண்டார் அலுவலத்தில் சென்று சேர்ந்துகொண்டார். பின்னாளில் என் நண்பரின் வற்புறுத்தலாலும் ஒரு நூறு டாலர் பஞ்சாயத்தாலும் நானும் அந்த வெண்டார் அலுவகத்திலேயே சேர்ந்துகொண்டேன். இப்போது நான் என் நண்பர் இந்தத் தொடரின் முகமான அந்த மலாய் பெண்மணி அனைவரும் ஓர் அணி.
அவர்கள் அலுவகத்தில் சேர்ந்த பின் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கிடைத்தது. இஸ்லாமியப் பெண்மணி. தன் மதத்தின் மீது பற்றுகொண்டவர். அதே நேரம் மற்றவர்கள் பழக்கவழக்கங்கள் மதங்களை மதிக்கத் தெரிந்தவர். ஒவ்வொரு நாளும் தவறாமல் ஐந்து முறை தொழுவார். வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் ஜிம்மா தொழுகைக்குச் செல்வார். இத்தனைக்கும் அவரின் தாய் ஒரு சீனர். நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த போதும் திருமணம் செய்துகொள்ளாதவர்.
தொடக்கத்தில் மதத்தின் மீது கொண்ட பற்றால் துறவு வாழ்க்கை மேற்கொள்கிறார் என்றே நினைத்திருந்தேன். அவருடன் பேசிப் பழகிய பின் தான் தெரிந்தது அவருக்கும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எல்லா ஆசைகளும் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள கலாச்சாரத்தில் அவரவர் ஜோடியை அவர்கள் தான் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும். அவர் இளம்வயதில் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தாலும் கூச்ச சுபாவத்தாலும் தன் ஜோடியைக் கண்டறியத் தவறிவிட்டார். இப்போது அவரின் வயதிற்கும் இயல்பிற்கும் ஏற்ற ஒரு நபரைக் கண்டடைவது என்பது மிகமிகச் சிரமான காரியம் ஆகிவிட்டது.
இப்படிப்பட்டவர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள் பலர் தனியர்களாகவே வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். இவர்கள் போன்றவர்களைச் சந்திக்கும்போது தான் நம் கலாச்சாரத்தின் அருமை புரிகிறது. இப்படி யாரையும் தனியராக வாழவிடுவதில்லை நம் கலாச்சாரம். எப்படியாவது யாருடனாவது ஜோடி சேர்த்துவிடுவார்கள். குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் அவைகள் காலப்போக்கில் மாறிவிடும் என்றே நம்புகிறேன். தன்னால் தன் துணையை தேடிக்கொள்ள இயலாதவருக்கு பெற்றோர்கள் உதவி செய்வது போன்றே நம் கலாச்சாரத்தைக் காண்கிறேன். அதற்குள் வசதி, அந்தஸ்து, சாதி, மதம் போன்றவை புகும் போது தான் பிரச்சனைகள் எழுகின்றன.
அலுவலக வேலையைத் தவிர சில பொது விசயங்களையும் பகிர்ந்துகொள்வோம். அது நிர்பயா கொலை நடந்து உலகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டிருந்த சமயம். நான் முடிந்த அளவு தென்னிந்தியர்கள் எல்லாரும் மகா நல்லவர்கள் என்று இந்தியாவைப் பாதியாகப் பிரித்து நல்லவனாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். திடீரென்று என்ன நினைத்தேனோ தெரியாது “அதெப்படி அந்த நடு இரவில் அந்தப் பெண் தனியாக அதுவும் டெல்லி போன்ற நகரில் வெளியே போகலாம்? அது ஒன்றும் சிங்கப்பூர் இல்லை” என்றேன். அவ்வளவு தான் எப்போதும் புன்னகை மாற அந்த முகத்தில் அப்படி ஒரு சோகம் அப்பிக்கொண்டது. கண்கள் கலங்கி விழிநீர் ததும்பிக்கொண்டிருந்தது. “உன்கிட்ட இருந்து நான் இப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கவேயில்லை” என்றார்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் சொன்னது சரியாகத் தான் பட்டது. ஏற்கனவே பல பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் டெல்லி போன்ற மாநகரில் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண் நடுநிசியில் வெளியே செல்வது சரியில்லை. அதுவும் யாரென்றே தெரியாதவர்கள் இருக்கும் பேருந்தில் ஏறியது தவறு என்றேன். என்னுடைய வாதங்கள் அவரை மேலும் மேலும் கடுப்பேற்றியது.
உன்னுடையே சிந்தனையே தவறு என்றார். அந்தப் பெண் இறந்து போன பின்னும் மீண்டும் மீண்டும் அவரையே குறைகூறும் உன் எண்ணம் தான் தவறு என்றார். அதன் பின் அமைதியாகிவிட்டார் எதுவும் பேசவில்லை. நான் என் பங்கிற்கு எவ்வளவோ சமாளிப்புகள் செய்து பார்த்தேன் ஒன்றும் பலனில்லை. அடுத்த ஒரு வாரம் என்னிடம் பேசக்கூட இல்லை. உண்மையில் இப்போது வரை அவர் ஏன் என் மீது அவ்வளவு கோபப்பட்டார் என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அந்தச் சமயத்தில் என் கருத்துக்கள் என்னை ஒரு மிகப்பயங்கர ஆணாதிக்கவாதியாகக் காட்டியதோ என்னவோ?
குழுவாக வேலை செய்து கொண்டிருந்த நான் புதிய அலுவகத்தில் தனியாக வேலை செய்யும் சூழல் ஏற்பட்டது. அலைபேசியில் பேசுவது தவிர நேரடியாக மனிதர்களிடம் என்று ஒரு நாளைக்கே பத்து வார்த்தைகள் தான் பேசுவேன். வெளியிலும் தனி அறை எடுத்து தங்கியிருந்தேன். வெறுத்துப்போயிருந்த அந்த மாதிரி சமயங்களில் என் பழைய அலுவக நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து என்னை உற்சாகம் ஊட்டுவார்.
அனைவரிடமும் மிகவும் இயல்பாக அன்பு செலுத்தக்கூடியவர். அவரால் யாரையாவது வெறுக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது என்பதே என் பதில். ஒருவர் முன் எவ்வளவு மரியாதையாக பேசுகிறாரோ அதே மரியாதையோடு தான் அவர் இல்லாத போதும் பேசுவார். அந்த அலுவகத்தில் இருந்து வேலை மாறும்போது எல்லோருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் அவரை என் மூத்த சகோதரி என்று குறிப்பிட்டிருந்தேன். மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார்.
இன்றளவும் ஒரு நல்ல நண்பராக இருந்துவரும் அவரின் நட்பு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்பதே என் ஆசை. வெளிநாட்டு வாழ்க்கையில் நான் சம்பாதித்தவைகளில் குறிப்பிடத்தக்க இப்படிப்பட்ட சில உறவுகளும் அடங்கும்.
முகங்களின் தரிசனம் தொடரும்….
இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்
கடந்த இரண்டு கிழமைகளாக தங்களின் தொடரை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தங்கள் பதிவு வரவில்லை.
இன்றைய முகத்தில் அந்தப் பெண்மணியின் அகத்தையும் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள்
இதுபோன்ற நல்ல நண்பர்கள் அமைவதும்கூட இறைவன்
கொடுத்த வரம்தான் என்று நினைக்கிறேன்.
நிர்பயா விசயத்தில் அவர்கள் கோபப்பட்டது மிகச்சரியே.. நானும் இதுபோன்று என்மீது நம்பிக்கை வைத்துப் பழகிய சில பெண்களிடம் இப்படிப்பேசி அவர்களின் நட்பை இழந்திருக்கிறேன்.
நல்ல மனிதர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் தொடராக முகங்கள் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் படித்துப் பண்படுகிறோம்.
தங்களின் தொடர் ஊக்குவிப்பிற்கு நன்றி மோகன். கடந்த இரு வாரங்களாக இருந்த கடுமையான பணிச்சுமை காரணமாக எழுத இயலவில்லை. இனி வாரவாரம் வரும் படி பார்த்துக்கொள்கிறேன்.
நல்ல மனிதர்கள் என்றில்லை. எல்லா விதமான மனிதர்களைப் பற்றியும் எழுதுவது தான் என் நோக்கம். அடுத்தடுத்த தொடர்களில் இன்னும் சில வித்தியாசமான முகங்களைப் பார்ப்பீர்கள். நன்றி…