நம் வாழ்நாளில் இதுவரை எத்தனை முகங்களைச் சந்தித்திருப்போம்? அதில் எத்தனை இன்னும் நம் நினைவுகளில் நிற்கின்றன? சில நேரங்களில் இப்படி என் வாழ்வில் வந்து போன பலரைப் பற்றி நான் நினைத்துப்பார்ப்பதுண்டு. சிலரை நினைக்கும் போதெல்லாம் ஒருவித மகிழ்ச்சி தோன்றி அன்று முழுவதுமே அந்த மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கும். அதுவே இன்னும் சிலரை நினைத்தால் அந்தநாளில் கண்முன் வரும் அனைவரிடத்திலும் எரிந்துவிழுவோம். கோபம், எரிச்சல், சோகம், அன்பு ஏன் இன்னும் சிலர் நம் மனதில் காதலைக் கூட ஊற்றெடுக்கச் செய்வார்கள்.
வெறும் முகங்களைப் பார்த்தாலே இப்படியான எண்ணங்கள் நம் மனதிற்குள் தோன்றிவிடுகிறதா? நிச்சயம் இல்லை. அந்த முகங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் அகங்கள் தான் அவர்களைப் பற்றிய ஒரு உணர்வை எண்ணத்தை நமக்குள் உருவாக்குகின்றன. ஒருவரைப்பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் அந்த முகத்திற்கு எந்த மதிப்புமே இல்லை. கண்டவுடன் காதல் என்பதெல்லாம் வயசுக் கோளாறு. கண்டவுடன் காதல் காணாமலே காதல் எல்லாம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம். கண்டவுன் ஒரு ஆசை வேண்டுமானால் வரலாம் அதன் பின் அது முழுவதும் காதலாக உருவாக இருவருக்கும் குணம் மனம் எல்லாம் ஒத்துப்போக வேண்டும். சில ஒருதலைக் காதலர்கள் பார்வை ஒன்றே போதுமே ரீதியில் குணம் மனம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காதலித்துக்கொண்டே இருப்பார்கள் அவர்கள் வேறு ரகம்.
இப்போது ஏன் நான் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? சரி விசயத்துக்கு வருகிறேன். அப்படி என் வாழ்வில் நான் சந்தித்த முகங்களை குறிப்பாக அந்த முகங்களின் பின்னால் இருக்கும் அகங்களைப் பற்றி எழுதவே இந்தத் தொடரைத் தொடங்கியுள்ளேன். அகம் என்றவுடன் ஒரு மனோதத்துவ மேதை போல் அந்தக் குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் அத்தனை குணநலன்களையும் அலசி ஆராய்வதல்ல அவர்களைப் பற்றிய என் புரிதல் மட்டுமே இங்கு நான் எழுதப்போவது. எவரையும் நல்லவர் கேட்டவர் என்று பகுத்து இந்த உலகத்திற்கு உணர்த்துவதும் என் நோக்கம் அல்ல. அந்தக் கதாப்பத்திரங்களுடனான என்னுடைய சில அனுபங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளப் போகிறேன். சுயநலன் கருதி அந்தக் கதாப்பாத்திரங்களின் பெயர்களை முடிந்த அளவு தவிர்க்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு பதிவிலும் ஒரு முகம்.
நான் பிறந்து முதல் முதலில் முகம் பார்த்த மருத்துவச்சி தொடங்கி என்பது போல் எந்த ஒரு வரிசைப் படுத்தலும் இல்லாமல் நான் வெவ்வேறு காலங்களில் சந்தித்த மனிதர்களை என் எழுத்துகளின் மூலம் மீண்டும் காணப்போகிறேன். வாருங்கள் என்னோடு சேர்ந்து என் கதை மாந்தர்களை நீங்களும் இரசிக்கலாம். இவர்களைப் போன்றே உங்கள் வாழ்விலும் ஒரு நண்பரோ உறவினரோ உடன் பணிபுரிபவரோ என யவராகவும் இருக்கலாம். அப்படி என் எழுத்துகளில் நீங்கள் யாரையோ ஏன் உங்களையே பார்த்தால் கூட அதற்கு நான் பொறுப்பில்லை. அது நீங்களும் இல்லை. முன்பே கூறியது போல் இந்தப் பதிவுகளில் வரும் மாந்தர்கள் பெயரற்ற எனக்குத் தெரிந்த யாரோ ஒருவர் தான். நீங்கள் இல்லை.
ஒருவழியாக பொறுப்பைத் துறந்தாச்சு இனி யாரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்த போது என் மனத்தில் முதலில் தோன்றியது என் நண்பன் ஒருவன் தான். நல்லவனுக்கு கெட்டவனுக்கு கேடுகெட்டவனுக்கு என எல்லோருக்குமே நல்லவனாக மட்டுமே இருந்தவன். இவனால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் இருக்க முடிகிறது என்று நான் பலமுறை வியந்து பார்த்திருக்கிறேன். அந்த மகா நல்லவனுடன் அடுத்த வாரம் வருகிறேன்.
முகங்கள் தொடரில் இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முகத்தை தரிசிக்கலாம்…
முகங்களின் தரிசனம் தொடரும்….
இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்