மேகங்களை விற்பவன்
எதிர்பார்த்திராத
ஒரு மௌன பொழுதில்
மேகங்கள் விற்பவனைக்
காண நேர்ந்தது.
சப்தமின்றி
மேகங்களுக்குள் பெய்யும்
மழையைப் பற்றி
விவரிக்கத் துவங்கினான்.
மேகங்களை வாங்குபவர்களுக்கு
ஒரு கனவும்
அதனுள் சில மழைத்துளிகளும்
இலவச இணைப்பாகக்
கிடைக்கும் என்றான்.
ஈரப்பசையுடன் இருந்த
அவனது கைகளைக் காட்டி
தான் விற்கும் மேகங்கள்
எப்பொழுதும் மழைப் பொழியும்
எனப் பரவசத்துடன் கூறினான்.
தன் கண்களை
விரித்து அதனுள்
மேகங்கள் திரண்டிருப்பதாக
கிசுகிசுத்தான்.
இந்தப் பெருநகர்
இரைச்சலில்
மேகங்களை விற்பவன்
இனி வரப்போவதில்லை என்றும்
தன்னிடம் இருக்கும்
மேகங்கள் வேறெங்கிலும்
இத்துணைக் கழிவில்
கிடைக்காதென்றும் அரற்றிக் கொண்டே
நடக்கத் துவங்கினான்.
மேகங்களை விற்பவன்
இதுவரை மேகங்களை
விற்றதில்லை.
போவோர் வருவோரிடம்
தன் மேகங்கள்
மழைப் பொழியும்
எனச் சொல்லிக் கொண்டே
தொலைவில் தெரியும்
வெயிலில் கரைகிறான்.