துயரத்தின் குழந்தை
துயரத்தைப் பற்றிய
உரையாடலில்
சற்றும் இரக்கமில்லாமல்
உறைகின்றன சிரிப்பொலிகள்.
துன்பப்படுவோர் வாக்குமூலங்களில்
கவனக்குறைவுடன்
சிதறுகின்றது கேலிச்சத்தம்.
துயரத்தைப் பாடுபவனின்
பாடலின் கடைசி வரியில்
சட்டெனத் துள்ளி எழுகிறது
கைத்தட்டல்.
நாளெல்லாம்
அழுத்துப் புழுங்கி
சாய்பவனின் கனவில்
புழுவென நெளிகிறது
புன்முறுவல்.
துயரத்தின் முகத்தில்
கோமாளிகளின் சாயங்கள்.
-கே.பாலமுருகன்