அழைப்புகளின் துயரம்
யாரேனும்
எப்பொழுதாவது
யாரையோ
அழைக்க முயல்கிறார்கள்.
அலுப்பில்லாமல்
அவர்களின் அழைப்புகள்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.
கோபத்துடன்
உரிமையுடன்
அழைக்கும் குரல்களுக்கு
ஒத்திசைந்து கொள்கிறது
தீராப்பகலின் பிடிவாதங்கள்.
வெறுப்புடன்
விரக்தியுடன்
அழைக்கும்
குரல்களுக்கு
தடையில்லாமல்
விரிகின்றன
தீர்வுகளற்ற பொழுதுகள்.
குழந்தைத்தனத்துடன்
அழைக்கும் குரல்களுக்கு
இம்மியளவு இடமளிக்கிறது
வெயிலின் காட்டம்.
தெரியாதது போல
நிகழும்
அனைத்துப் பாவனைக்குள்ளும்
திணறி தொலைகின்றன
அழைப்புகள்.
இப்பொழுதும்
யாரோ
யாரையோ
அழைக்கிறார்கள்.
பொழுது கரைந்து
அழைப்புகளைத்
துளிர்த்துக் கொட்டுகிறது.
மீண்டும்
அழைப்புகள் நிகழ்கின்றன.
-கே.பாலமுருகன்