புனைவின் ஊற்று
பார்வையில்
தீட்சண்யமும்
தீர்க்கமும்
தனித்துவமும்
மிளிரணும்..
கலை நம்பிக்கையில்
ஆழ்ந்த பிடிமானம்..
அறங்களின் மீது
விடாப்பிடியான பற்று..
லட்சிய வேட்கை..
அழகியல் ஞானம்..
வெளிப்பாட்டில்
மொழியை
லயப்படுத்துதல்..
தெளிந்த நடவடிக்கை..
தீராத கனவுகள் பீறிடும்
விழிப்போடு கூடிய
உண்மையின்
ஓர் ஆதர்ச நிலை.
??????????????????????????
உலகம் இரு விதம்
இரு மனிதர்கள்
இரு இதயங்கள்
இரு கனவுகள்
இரு வாழ்வு காலங்கள்.
மவுனங்களை
பகிர்கிறார் ஒருவர்
கொந்தளிப்புகளை
பறை சாற்றுகிறார் மற்றொருவர்.
அன்பு நிழலில் ஒருவர்
அராஜகத்தின் தணலில் மற்றொருவர்
அழிப்பின் தவிப்பில் ஒருவர்
உயிர்ப்பின் துடிப்பில் மற்றொருவர்.
களிப்பின் சிலிர்ப்பில் ஒருவர்
சலிப்பின் துளிர்ப்பில் மற்றொருவர்
சகிப்பின் சுகிப்பில் ஒருவர்
வெடிப்பின் தகிப்பில் மற்றொருவர்.
இருவருக்கும் நீளுகின்ற இடைவெளி
இரவு பகலுக்கு நடுவிலுள்ள தூரம்
இணைவின் நிகழ்வு என்பதும்
எதிரிடையாகவே எப்போதும் ஈர்க்கும்.
??????????????????????????
தின வலி
ஆற்றுக் கரைகளாய்
நானும்..அவரும்..
கூட்டுக்குள் அடைபட்டு
திக்கு முக்காடுகின்றன..
குழந்தைகள்.
தாமதம்
என் மனதை
ஊதி..ஊதி..
எரிய வைக்கிறது.
வேலைக்குப் போன மனுசன்
வெறுங்கையுடன்
தள்ளாடி வருவாரோ..?
அடுப்பு முழிக்குமா..?
பசித்து..மயங்கிய..
பிள்ளைகள்
புசித்து..தெளிந்து..
சிரிக்குமா..?
சொட்டு சொட்டாய்
நேரம்..
என் தலையில் சொட்டியபடி.
குடைச்சல்
என்னால்…
தாங்க முடியவில்லை.