பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 20

நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி…!!!

- Advertisement -

நம் பாடும் நிலாவுக்குக்  கடந்த கிழமையின் மயக்கம்  தெளிந்துவிட்டதா என்று பார்க்கப்போனால் நிலைமை இன்னும் சீராகவில்லை.. காதல் மயக்கம் இப்போது காதல் பேரேக்கமாக மாறியிருக்கிறது.

வான் நிலா பாடினால் எப்படியிருக்கும்? என்ன இருந்தாலும் நம் பாடும்நிலா பாடுவதைவிட ஒரு மாற்று குறைவாகத்தான் இருக்கும். நிலாவைப்பாடாத கவிஞர்களே இல்லை என்றநிலையில் இங்கு  நிலவே பாடிவருவதாகக் கவிஞர் கூறுகிறார்.

பாடி வரும் வான்மதியே

பார்வைகளின் பூம்பனியே

தேவசுகத் தேன்கனியே

மோகபரிபூரணியே

பாடிவரும் வான்மதியே என்று பாடிக்கொண்டே சரணத்தைத் தொடங்குகிறார் நம் பாடும் நிலா… இதுவொரு தனி மெல்லிசைப்பாடலா என்றால் இல்லை.. மிதமான துள்ளல் கலந்த மெல்லிசைப்பாடல் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆதலால் தனது குரலை மென்மையிலிருந்து மாற்றி ஒரு துள்ளலும் மித அழுத்தமும் குரலிலேற்றிப் பாடியிருப்பார்.. இதுவோர் இணைப்பாட்டு.. வழக்கம்போல இப்பாடலைக் கூட இணைந்து பாடியிருக்கிறார் ஜானகியம்மா. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மிகச்சிறப்பாகப் பாடியிருப்பர். பாடல் முழுவதுமே இருவரும் ஒவ்வொரு சொல்லிலும் ஏக்கத்தைப் பூசித்தான் வெளியனுப்புகின்றனர்.

ஏக்கத்தைத் தழுவிவரும் பாடல் என்பதால் சரணத்தின் தொடக்க வரிகள் ஏகாரத்தில் முடிவதுபோல எழுதியிருக்கிறார் இயக்குநரும் பாடலாசிரியருமான ஆர்.வி.உதயகுமார். அதுதான் அப்பாடலுக்கு ஒரு தனியழகைக் கொடுக்கிறது என்றால் மிகையில்லை.. ஒரு வரியை முழுவதுமாக ஒரே வீச்சில் பாடுவதுபோல இல்லாமல் பாடிவரும் என்றதும் ஒரு இடைவெளி விட்டுப் பின்னர் வான்மதியே என்று பாடுவதுபோல நம் இசைஞானி மெட்டமைத்திருக்கிறார். இரண்டு சரணங்களிலும் முதல் நான்கு வரிகள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன.

அந்த இரண்டு சொற்களுக்கிடையே உள்ள இடைவெளியை ஏக்கத்தால் நிரப்பிப் பாடுகின்றனர் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும். சொற்களில் பூசப்பட்டிருந்த ஏக்கமானது அவ்விடைவெளியில் வழிந்தோடுவதை நன்றாக உணரலாம்.

பூவோடு தான்சேர இளங்காற்று போராடும் போது ..

சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு

முன்னம் வந்த மெட்டுக்கு அப்படியே மாற்றாக இவ்வரிகள் ஒரே இழுப்பில் பாடுவதுபோல அமைந்திருக்கிறது.. அப்படி இழுத்து நீட்டிப்பாடுவதிலேதான் அந்தக் குரலில் எத்தனை எத்தனை ஏக்கம்! அடடா… குரலை வைத்து மாயம் செய்வதில் நம் எஸ்.பி.பியோடு நிகரிணையாக வேண்டுமென்றால் அது ஜானகியம்மா மட்டும்தான் என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. யாரை யார் மிஞ்சுவது என்றுதான் ஒவ்வொரு பாடலிலும் திறனை வெளிப்படுத்துவர் இருவருமே. கேட்கும் நமக்கோ செவிக்கு மாபெரும் விருந்தே கிடைத்துவிடும்.

புது புது விடுகதை தொடதொடத் தொடர்கிறதே..

சரணத்தின் இறுதிவரையில் மெட்டு நீள்கிறதா? இல்லை ஏக்கம்தான் நீள்கிறதா? என்றெண்ணுமளவுக்கு நம் எஸ்.பி.பி அவ்வரியை நீட்டிப் பாடுகிறார். தொடர்கிறதேஎஎஎஎஎ என்று நீட்டுவது இங்கே அளபெடை.. அந்த அளபெடையைப் பாடுகையில் பிசிறு தட்டாமல் கரகரக்காமல் சரியாகப்பாடினால் மட்டுமே கேட்கும்போது காதில் தேன் பாயும். அப்படியில்லையெனில் காதில் குருமணலைக் கொட்டினால்போல கொடூரமாக இருக்கும். அந்தத் தொடர்கிறதே என்று பாடும்நிலா அளபெடுக்கையில் நம் மனமெங்கும் ஏக்கத்தின் இழையானது ஊடுருவித் தைத்து நிற்கும்…

உன்னைச் சேர்ந்தாள் பாவை

இன்னும் அங்கு ஏதோ தேவை

சொல்லு சொல்லு சிங்கார வேலா..

இதே சிங்கார வேலனைப் பக்திமணம் கமழவும் ஜானகியம்மா பாடியிருக்கிறார். சிங்கார வேலனே காதற்கிழவன் அல்லவா? அவனைக் காதலோடும் பாடாவிட்டால் எப்படி?

தேன்கவிதை தூது விடும் நாயகனே மாயவனே

நூலிடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே

என்று இரண்டாவது சரணத்தைத் தொடங்குவது ஜானகியம்மா. முதல்வரியை நாம் கண்ணைமூடிக்கொண்டு நம் பாடும்நிலாவுக்குப் பொருத்திவிடலாம். தேன்கவிதையைத்தானே அவர் எப்போதும் குரல்விடுதூதாக வைத்திருக்கிறார். பாடகர்களில் அவரே நாயகனாகவும் அவர் பாடலால் பலகோடி மக்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாயகனாகவும் இருக்கிறாரே!

நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி

பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ

இவ்வரியைப் பாடும்போது தன் குரலில் கட்டிச் சொற்களை மட்டும் இழுத்துச் செல்லவில்லை, கூடவே நம் மனத்தையும்தான் இழுத்துச் செல்கிறார். இப்பாடல் நினைவினில் வரும்போதெல்லாம் சட்டென்று நான் முணுமுணுக்கும் வரிகள் இவைதான்.. நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி எனும்வரியும் நாம் பாடும்நிலாவைப் பார்த்துச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது. அவர் பாடிய பாடல்களில் பலவரிகள் அவர்க்கே அவர்க்கென்று பொருந்துவதுபோல அமைந்ததெல்லாம் வரமன்றி வேறென்ன!!!

தடைகளைக்  கடந்து நீ மடைகளைத்  திறந்திட வா… 

என்று சரணத்தை ஜானகியம்மா நிறைவுசெய்ததும் நிரம்பிய கிணற்றிலிருந்து நீரை இறைப்பதுபோல ஏக்கத்தை அள்ளிக்கொண்டு பல்லவியை மீண்டும் பாடுகிறார். வேறு எந்த இணை பாடியிருந்தாலும் இப்பாடல் முழுமை பெற்றிருக்கவே பெற்றிருக்காது. அந்தளவுக்கு ஒரு நிறைவை  முழுமையைக் கொடுத்திருப்பர் இருவரும் இப்பாடலுக்கு.

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே…

என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

கைகள் தானாய் கோத்தாய்

கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

இன்பம் இன்பம் சிங்கார லீலா

தனது மொத்த ஏக்கத்தையும் பொடிப்பொடியாக்கி இப்பாடலின் சொற்களில் புகுத்திப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. தனது குரலில் எவ்வித மாற்றமோ வேறுபாடோ காட்டாமல், சிரிப்பு சிணுங்கல் ஏதுமில்லாமல்,  பாடலின் தொடக்கம் முதல் இறுதிவரை ஏக்கத்தை மட்டுமே வழியவிட்டு ஒரு பாட்டைப்பாடி அதை நாம் கேட்கும்போதெல்லாம் பித்துநிலை கொள்ளச் செய்துவிடுகிறார் என்றால் அவரைப் பாட்டுத்தலைவன் என்று மொழிவதில் பிழையேதுமில்லைதானே!

அதிலும் கைகள் தானாய்க் கோத்தாய் எனும்போது கொஞ்சம் அழுத்தமாகவும்  கட்டிமுத்தம் தேனாய் வார்த்தாய் எனும்போது சற்று மென்மையாகவும் பாடியிருப்பதுபோல இருக்கும். முத்தமிடுவதைக் காட்டிலும் கைகளைக் கோக்கும்போது அழுத்தம் கூடுதலாகத்தானே இருக்கும்.. அதை உணர்த்துவதுபோலவே தன் குரலிலும் அதை வெளிக்கொணர்ந்திருப்பார்.. அதனால்தான் அவர் பாடும்நிலா.

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த சிங்காரவேலன் படத்தில், இசைஞானியின் ஈர்ப்பிசையோடு ஒன்றிணைந்து நம் பாடும்நிலாவும் காந்தக்குரலாளும் பாடிய பாடல் இது.. பாட்டைக்கேட்கும்போது தென்றலாய்ப் பரவும் ஏக்கம் போகப்போகப் புயலாய் மாறுமளவுக்கு அமைந்த பாடல் இது. கூடுதல் சிறப்பாக இசைஞானியின் குடும்பத்தின் தயாரிப்பில் வந்த படமென்பதால் துள்ளிவரும் கன்றுக்குட்டியின் தன்மையோடு இசையில் புகுந்து விளையாடியிருப்பார் இசைஞானி.

இத்தனை ஏக்கத்தை தன் பாடல்மூலம் நமக்குக் கடத்திவிட்டு அவர் என்ன செய்யப்போகிறார்? பாட்டு ஒன்னு கேட்குதுனு சொல்றார்.. அதுவும் சிங்காரமான பாட்டு என்றுவேறு சொல்கிறார்… அவர் காதோரம் கேட்கும் அந்தப்பாடல் என்னவென்று அடுத்தவாரம் அவரிடமே கேட்டுவிடுவோம்.. அதுவரையிலும் இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்? என்றே உங்கள் அன்பிணையிடம் பாடிக்கொண்டிருங்கள்.

உதயத்தில் நிலா வீணை மீட்டும்…

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

1 COMMENT

  1. ஒரு பாடலை எப்படியெல்லாம் இரசிக்கலாம் இன்றைய இங்கே கற்றுக்கொள்ளலாம் என்னும் அளவிற்கு உங்களின் எழுத்து உள்ளது சகோ.. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் தவறாமல் படிக்கிறோம்.!

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -