பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி -2

மண்ணில் இந்தப் பாடலின்றி...!

- Advertisement -

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

நம்மோடு பாடலாய்ப் பயணம் செய்கின்ற எஸ்.பி.பி அவர்களுடன் பயணம் செய்த பாடலாசிரியர்கள் நிறையபேர் இருக்கின்றனர். எல்லாரும் அறிந்த முதன்மையான பாடலாசிரியர்கள் விடுத்து புகழொளி வட்டத்திற்குள் அடைபடாத சில பாடலாசியர்களுடன் நம் பாடும்நிலா எவ்வாறெல்லாம் வானம்பாடியாய் பாடி மகிழ்ந்திருக்கிறார், நம்மையும் மகிழ்விக்கிறார் என்பதைப்பற்றிய பதிவுதான் இது. நாற்பதாயிரம் பாடல்களுக்குமேல் பாடிய பாடும்நிலாவுக்கு முன்னே ஒவ்வொரு முறையும் வீற்றிருந்த ஒலிவாங்கிகள்தாம் எத்துணைப் பேறு பெற்றவை! தேன்குரல் பாய்ந்து பாய்ந்து ஒலிவாங்கிகள் எல்லாம் தேன்வாங்கிகளாக மாறிடும் விந்தை அங்கே அரங்கேயிருக்கும் அன்றோ! 

எஸ்.பி.பி என்றாலே கூடவே அவருடன் கைகோத்து நம் நினைவில் வருபவர் இசைஞானி இளையராஜா. இசைஞானி இளையராஜாவுக்கும் பாடும்நிலா பாலுவுக்கும் இடையேயான நட்பு எல்லாராலும் எல்லாநேரத்திலும் பேசப்படுகின்ற ஒன்றுதான்.. இசைஞானியின் அண்ணன் பாவலர், தம்பி அமர்சிங் என்னும் கங்கைஅமரன், இயக்குநர் பாரதிராஜா இவர்கள் அனைவருடனும் நட்புடன் உறவாடியவர் எஸ்.பி.பி. இருந்தாலும் கங்கைஅமரனின் தமிழுக்கும் எஸ்.பி.பியின் குரலுக்குமிடையே பிணைந்திருந்த காதலைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

1970 ஆண்டு முதல் 2000 ஆண்டு  வரையிலான திரைப்பாடல்களில், நாம் கேட்கும் பெரும்பான்மையான பாடல்களை எழுதியவர் யாரென்றால் சட்டென்று கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்கள் மூவரில் ஒருவரைத்தான் மனம் நினைக்கும். ஏதோ ஓர் ஆர்வத்தில் பாடலை எழுதியவர் யாரென்று தேடும்போதுதான் மற்ற பாடலாசியர்களின் பெயர்களே நம் மனத்தினில் புகும். அப்படி வெளியில் அதிகம் அறியப்படாத பாடலாசியராய் இருந்தவர்களில் ஒருவர் கங்கைஅமரன். அட, இந்தப்பாட்டு இவர் எழுதியதா! என்று வியக்குமளவுக்குப் பல பாடல்களை எழுதியிருப்பவர் கங்கைஅமரன். 

கங்கைஅமரனின் விரல்கள் பெற்றெடுத்த முத்துத்தமிழ் எஸ்.பி.பியின் குரல்வளை வழியே பாட்டாக வெளிவரும்போது செந்தமிழ்த்தேன் செழிப்பாய் வந்து பாயத்தான் செய்யும் நம் காதுகளில். எஸ்.பி.பி என்றதும் பெருத்த உடலுடன் கைகளில் ஒரு தாளைப்பிடித்துக்கொண்டு கடற்கரையில் நடந்துகொண்டே  பாடிவரும் அந்தத்தோற்றம்தான் சட்டென நினைவில் வந்து நிற்கும். 
” மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
 எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ? “
என்று அவர் பாடும்போது இல்லவேயில்லை என்று நாம் பதிலுரைக்கத்தானே வேண்டும். அத்தனை அருமையான பாடல் அது! அதையெழுதியவர் கங்கைஅமரன்தான். மூச்சுவிடாமல் பாடுவதுபோன்று காட்சியாக்கப்பட்ட பாடல் அது… பாடல்வரிகளிலேயே அத்தனை காதலைக் குழைத்து கங்கைஅமரன் எழுதியிருக்கும்போது பாடும்நிலாவுக்குச் சொல்லவா வேண்டும்? எஸ்.பி.பி பாடும்போது ஒவ்வொரு சொல்லிலும் காதல் தேனாய்ச் சொட்டுவதை நாம் உணரலாம்.

மற்ற கதாநாயகர்களுக்காகப் பாடும்போதே அவர் குரலில் காதல் ஊற்றெடுக்கும்போது, அவரே கதாநாயகனாக நடித்து அவர்க்காகப் பாடும்போது காதல் ஊற்று பொங்கிப் பீய்ச்சியடித்திருக்கும் அவர் குரலில்.  “எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி? இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி..” என்று அவர் பாடும்போது இந்தப்பிறவியே நாம் பாடல்களைக் கேட்டு இன்புறத்தான், இல்லையெனில் இப்பிறப்பே நமக்கொரு பாரம்தான் என்று எண்ணத்தோன்றும். எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத ஒருபாடல் இது. கேளடி கண்மணி என்று படத்திற்குச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கின்றனர். மீண்டும் மீண்டும் நம்மைக் கேட்கத்தூண்டுகின்ற ஒருபாடல் இந்த ” மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ? ” பாடல். மூச்சுவிடாமல் எஸ்.பி.பி பாடியிருப்பாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அந்த ஆராய்ச்சிக்கே நான் போக விரும்பவில்லை.. ஆனால் நம் மூச்சு இருக்கும்வரை அப்பாடல் நம்மோடு கூடவே வரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. காதலில் பல பரிமாணங்களில், பல படிநிலைகளில் இருப்பவர்கள் எல்லாராலும் விரும்பப்படுகின்ற ஒருபாடல். காதலர்களின் தனித்தேசத்தில் காதலர்களுக்கான ஒரு நாட்டுப்பண்ணாக இப்பாடல் இருக்கும் என்றென்றும்…

மண்ணில் இந்தப் பாடலன்றி என்னால் வாழ்தல் கூடுமோ? என்று வாழ்ந்து காட்டிய மாபெரும் பாடகன் எஸ்பிபி. அந்தப் பாடும்நிலாவும் பன்முகக்கலைஞன் கங்கையமரனும் இணைந்து மாயங்கள் செய்த சிலபாடல்களை நாம் தொடர்ந்து இங்கே பார்க்கலாம். பாட்டுத்தான் மூச்சு என்று வாழ்ந்த எஸ்.பி.பி ஒருமுறை ” பாட்டை நிப்பாட்டு” என்று சொல்லிவிட்டார்.. அப்படிச்சொல்ல யார் காரணமென்றால் நம் கங்கைஅமரன்தான்.. ஏனென்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.


கங்கையில் நிலா நீந்தும் இன்னும்…! 

பாடு நிலாவே.. தேன்கவிதை! – பகுதி 3

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

6 COMMENTS

  1. அருமை.. ? இன்னும் உங்கள் எழுத்தென்னும் பெருவெள்ளத்தில் நீந்தக் காத்திருக்கிறோம்.. தொடரட்டும்..

      • மண்ணில் மட்டுமா உன்னிலும் காதல் வழிந்தேடுகிறது ❤️ தொடர்க.

        • அன்பே… ?? கங்கையாய்ப் பாய்ந்து குளிர்த்தட்டும் நம் அன்பு ??

  2. அருமையான வார்த்தை நடை! ஆதர்சனமான கருத்துக்கள் மற்றும் தகவல்கள் படிக்க படிக்க சுவாரசியமான வகையில் பிகிர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துகள்!

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -