பாகிஸ்தானும் புத்தகமும் – விமர்சனம்

அனுபவக் கட்டுரை + புத்தக விமர்சனம்

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

புத்தக விமர்சனம்

Declan Walsh எழுதிய The Nine lives of Pakistan எனும் புத்தகத்தை படிப்பதற்கான முன் கதையை சென்ற வாரம் உங்களுக்குக் கூறினேன். தற்போது விமர்சனத்துக்கு செல்வோமா? 

புத்தகத்தின் தொடக்கத்திலேயே பத்திரிகையாளரான டெக்லான் வால்ஷ் பாகிஸ்தானை விட்டு எந்த ஒரு காரணமும் சொல்லப்படாமல் பலவந்தமாக வெளியே துரத்த படுகிறார். அவருக்கு நாட்டை விட்டு வெளியேற சில மணி நேரங்கள் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது. இது நடந்து கொண்டிருக்கும் சமயம், பாகிஸ்தானில் தேர்தல் வேறு நடக்கிறது. அதுவும் பாகிஸ்தானில் நடக்கும் ஒரு வரலாற்று முக்கியமான தேர்தல். ஏன் தெரியுமா? பாகிஸ்தானில் 2013 வரை எந்த ஒரு ஆட்சியும் முழுமையான ஐந்து வருடம் இருந்தது கிடையாது. அதற்குள் ராணுவப் புரட்சியோ ஆட்சிக் கவிழ்ப்போ நடந்துவிடும். அப்படி எதுவும் நடக்காமல் முதல் முறையாக ஐந்து வருடம் ஒரு கட்சி ஆட்சி செய்துவிட்டு நடக்கும் தேர்தல் 2013 இல் தான் நடந்தது. இந்த சமயத்தில் எதுவுமே புரியாமல் நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் ஆசிரியர், தனது பத்தாண்டு கால அனுபவங்களை அசை போட ஆரம்பிக்கிறார். அதனை ஒன்பது விதமான கதைகளாக நமக்கு இந்தப் புத்தகத்தில் கூறுகிறார்.

புத்தகத்தில் 9 விதமான கதைகளுக்கு 11 அத்தியாயங்கள். அது எப்படி ஒன்பது கதைக்கு 11 அத்தியாயங்கள்? ஆசிரியர் கூற வந்த 9 கதைகளை முதல் ஒன்பது அத்தியாயங்களில் வைத்துவிட்டு கடைசி இரு அத்தியாயங்களில் வேறு சில சுவாரசியமான விஷயங்களை கூறுகிறார். 

ஒன்பது கதைகள்

கதையின் தொடக்கத்தில் அவர் பாகிஸ்தானுக்கு வந்து இறங்குகிறார். தொடக்கம் முதலே பாகிஸ்தான் ஒரு புதிரான நாடாக விளங்குகிறது. அவர் தங்கும் விடுதி அருகே ஒரு புகழ்பெற்ற சாராய ஆலையின் வாசம் அடிப்பதை உணர்கிறார். மதுவை முழுமையாக தடை செய்த ஒரு இஸ்லாமிய நாடான பாகிஸ்தான், பிரிட்டிஷ் காலத்து சாராய ஆலையை  நடத்துவது அவருக்கு முரணாகத் தெரிகிறது. பத்திரிக்கை வேலைக்காக ஒரு இந்திய தூதரக அதிகாரியை சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்கிறார். அவரது நடமாட்டத்தை கண்காணித்து கொண்டிருக்கும் பாகிஸ்தானிய அதிகாரிகள், இந்திய தூதர் வீட்டு மின்சாரத்தை துண்டித்து விடுகிறார்கள். இந்திய தூதரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நாங்களும் அவர்களுக்கு அப்படித்தான் செய்வோம் என்று கூறுகிறார். பல்வேறு இடங்களில் இவர் கூறும் சம்பவங்களில்,  இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இருக்கும் பிரிவினையை ஆழமாகக் கூறுகிறார். 

இந்தியா பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற சமயம், இரண்டாம் உலகப்போர் முடிந்து குளிர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம்.  பாகிஸ்தான் அமெரிக்காவின் பக்கமும் இந்தியா சோவியத் யூனியனின் பக்கமும் சாயத் தொடங்கியது. 1950களில் பாகிஸ்தானில் கொக்கோ-கோலா முதல் விலையுயர்ந்த வாகனங்கள் வரை அனைத்தும் அமெரிக்க மயமாக இருந்தது. அமெரிக்காவின் அதி நவீன F-16 விமானங்கள் கூட பாகிஸ்தானிடம் பல காலமாக உள்ளது. 1990 இல் சோவியத் ரஷ்யா உடையும் வரை,  சோஷலிசக் கொள்கையை பின்பற்றி வந்த இந்தியா, 1991 முதல் தான்  முதலாளித்துவம் மற்றும் தாராளமயக் கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்தது. இந்த முப்பது வருடங்களிலேயே இந்தியாவால் இவ்வளவு முன்னேற முடிந்தது என்றால் 1950 முதலே அந்தக் கொள்கைகளை பின்பற்றி வரும் பாகிஸ்தான் மிகவும் முன்னேறி இருக்கும் அல்லவா? ஆனால் அப்படி முன்னேற முடியாமல் இருப்பதற்கு உள்ள காரணங்களின் ஆணிவேரை அலசி ஆராய்கிறார் ஆசிரியர்.

பாகிஸ்தான், தீவிரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது என்று நாம் பல இந்திய ஊடகங்களில் கேள்விப்பட்டிருப்போம். அந்த அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்படுவதற்கு முன்பே பாகிஸ்தான் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பது அவர் கூறும் “லால் மஸ்ஜித்” தாக்குதல் மூலமாக வெளிப்படுகிறது. அந்த தாக்குதலை சில தெருக்கள் அருகிலேயே இருந்து பார்த்த ஆசிரியர், இதன் முழு விபரங்களையும் உளவியல் பூர்வமாக பதிவு செய்கிறார். ஒரு மனிதனுக்குள் இவ்வளவு நிறங்களா என்று ஆச்சரியமூட்டும் ஒரு பதிவு. பல்வேறு  உட்பிரிவுகள் கொண்ட மதத்துக்குள் அனேக மக்கள் சமத்துவத்துடன் வாழ்ந்தாலும் ஒரு சில விஷமிகள் செய்யும் காரியங்களால் ஒட்டுமொத்த சமூகமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஆசிரியர் கூறும் “ஷெவான் ஷரிஃப்” சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பாகிஸ்தானில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியர், ஆங்காங்கே இருக்கும் சில அழகியல் சமாச்சாரங்களையும் சுவையாகக் கூறுகிறார். உதாரணமாக, பனிமலை சிகரங்களின் உச்சியில் நடக்கும் ஷாண்டூர் வருடாந்திர போலோ திருவிழா பற்றி படிக்கும்போது அதை நேரில் பார்க்க வேண்டும் என்றும் ஆசை நமக்குள் வருகிறது. அதே சமயத்தில், இவர் கூறும் வரலாற்று பதிவுகளை படிக்கும் போது மனது பதைபதைக்கவும் செய்கிறது. பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா பற்றி இவர் கூறும் விவரங்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம். 

முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் என்னும் தனி நாடு கோரிக்கையை இஸ்லாமியர்களின் உரிமையை இந்தியாவில் நிலைநாட்டும் ஒரு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தினார் என்று ஆசிரியர் கூறுகிறார். பாக்கிஸ்தான் உருவாக்கிய பின்பு கூட பம்பாயில் இருக்கும் தனது இல்லத்தை முகமது அலி ஜின்னா விற்கவில்லை என்பதை சான்றாகக் கூறுகிறார். பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்பு கூட, பாகிஸ்தான் ஒரு மதவாத நாடாக இருக்கும் என்று ஜின்னா அவருடைய பேச்சில் கூறவில்லை. அனைத்து மதங்களும் சமமாக வாழும் உரிமை கொண்டு, இஸ்லாமியர்களின் உரிமையும் பாதிக்காத வண்ணம் உள்ள ஒரு நாடாகத்தான் பாகிஸ்தானைப் பற்றி கூறுகிறார். ஆனால் அடுத்த ஒரே வருடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். தொடக்க காலத்தில், அங்கே மத குருக்களை அரசியலில் நுழைய விடாமல் அழகாக கையாண்ட விதத்தையும் ஆசிரியர் கூறுகிறார்.

புத்தகத்தில் வரும் ரேட்கிளிஃப் பற்றிய செய்தி நம் ரத்தத்தை உறைய வைக்கிறது. இந்தியா பாகிஸ்தான் தனி நாடாக வேண்டும் என்று முடிவு செய்த பின்பு, பிரிட்டிஷ் இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு இங்கிலாந்திலிருந்து ரேட்கிளிஃப் என்பவர் ஜூலை 8 1947 இல் இந்தியாவிற்கு முதன்முறையாக வருகிறார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத அவர், ஒரே மாதகாலத்தில் இந்தியா பாகிஸ்தானை பிரித்து 3300 கிலோமீட்டர் நீளமான எல்லைக்கோட்டை வரைகிறார். ஒரு சில அடி நிலத்துக்காக,  பல வருட நீதிமன்ற போராட்டங்கள் நடக்கும் இந்த காலத்தில், பல்லாயிரம் கிலோ மீட்டர் கொண்ட நாட்டின் எல்லை கோட்டையே ஒரே மாதத்தில் தீர்மானித்ததை நினைத்தாலே தலை சுற்றுகிறது. மக்களைப் புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்ட இந்த எல்லைக்கோடு, பல கோடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடங்களை பறித்து அவர்களைக் கொன்று குவித்தது. மக்கள் கொத்துக் கொத்தாக இந்த எல்லைக்கோட்டினால் மடிவதை பார்த்த ரேட்கிளிஃப், சம்பளம் எதுவும் வாங்காமலே இங்கிலாந்துக்கு மீண்டும் சென்று விட்டார்.  இவர் வரையறுக்காமல் சென்றுவிட்ட காஷ்மீர் பகுதி இன்று வரைக்கும் பிரச்சனைக்கு உள்ளான பகுதியாகவே இருக்கிறது. ரேட்கிளிஃப் மட்டும் இந்த வேலையை தாமதமாக, சுமார் ஒரு வருடம் எடுத்துக்கொண்டு செய்திருந்தால் நம் இருநாடுகளும் இன்றுவரை பிரியாமல் கூட இருந்திருக்கலாம்!

கைபர் பகுதியில் இருக்கும் லக்கி மார்வாத்  மாவட்டத்தில் ஆசிரியர் சில காலங்கள் தங்கி செய்தி சேகரிக்கிறார். அங்கே அவருக்கு நடக்கும் சம்பவங்களை படிக்கும் பொழுது ஒரு போராளிக்கும் தீவிரவாதிக்கும் இடையில் இருக்கும் ஒரு மெல்லிய கோட்டைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. பெண் போராளியான ஆஸ்மா ஜஹாங்கீர் மற்றும் அரசியல்வாதியான பெனாசீர் பூட்டோ ஆகியோருடன் ஆசிரியரின் நேரடியான உரையாடல்கள் மூலமாக அவர்களின் சிந்தனைகளை நாம் ஆழமாக அறிந்து கொள்ள முடிகிறது. 

புத்தகத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானைப் பற்றிய நல்ல விஷயங்களையும் மோசமான விஷயங்களையும் சரிவிகிதத்தில் கூறும் ஆசிரியர், புத்தகத்தின் பிற்பாதியில் பாகிஸ்தானைப் பற்றி எதிர்மறையான விஷயங்களை அதிகமாக பேசுகிறார். என்னதான் இருந்தாலும் ஆசிரியர் தன்னுடைய மேற்கத்திய சிந்தனையை சில இடங்களில் திணிக்க தான் செய்கிறார். பத்து வருடம் கிழக்கில் இருந்தாலும், கிழக்கு உலகின் சித்தாந்தங்களை இவரால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் பல்வேறு சம்பவங்களையும் அதன் விளைவுகளையும் தொய்வில்லாமல் ஆசிரியரால் தெளிவாக பதிவு செய்ய முடிந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இன்றைய பாகிஸ்தானில் மதம் எப்படி வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு சல்மான் தசீர் மற்றும் ஆசியா பீவியின் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பொருளுக்கு மட்டும் அல்லாமல் சித்தாந்தங்களுக்கும் பொருந்தும் போல! ஆசிரியர் கூறும் வாஜிரிஸ்தான் வரலாறு, தாலிபான் தீவிரவாதிகள் மற்றும் பன்னாட்டு உளவு நிறுவனங்களின் முகத்திரையைக் கிழிக்கிறது. அந்த இனக்குழுக்களின் போராட்ட மனப்பான்மையையும் நன்கு விளக்குகிறது.   கராச்சியில் வாழ்ந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அஸ்லாமின் வாழ்க்கையை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தெரிந்து கொண்டால் இன்னும் பல காவல்துறை படங்கள் வெளிவரலாம். ஆசிரியர் கூறுவதை பார்க்கும்பொழுது படங்களை மிஞ்சும் அளவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இறுதியில் பலுசிஸ்தான் மக்களின் போராட்ட வாழ்க்கையையும்  “டேரா புக்தி”யில் அவர் சந்தித்த போராளிகளின் வாழ்க்கை முறையால் விவரிக்கிறார். அவர் கூறும் அனைத்து விஷயங்களுமே அனுபவம் கட்டுரைகளாக விரிவது மிகவும் அழகாக உள்ளது. ஏதோ நமக்கே பாகிஸ்தானில் பல வருடம் பயணிப்பது போல் ஒரு உணர்வு.

கடைசி இரு அத்தியாயங்கள்

புத்தகத்தின் தொடக்கத்தில் இவர் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்று கூறினேன் அல்லவா? பல்வேறு யோசனைகள் உடன் விடை தெரியாமல் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விடும் ஆசிரியர், பல வருடங்கள் கழித்து பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ யிலிருந்து தப்பித்த ஒரு உளவாளியை சந்திக்கிறார். அந்த உளவாளியின் கதையை மொத்தமாக விவரிக்கும் ஆசிரியர், இறுதியாக அவர் ஏன் வெளியேற்றப் பட்டார் என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார். ஒரு உளவாளி தனது பணியில் எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பது இங்கே நமக்குப் புரிகிறது. 

இங்கே ஆசிரியர் கூறிய சில வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

“The first is conflict”. The generals don’t mind if you write about that because it highlights the threat from their enemies. 

“The second is crisis”. That is also fine – it shows the weakness of the politicians.

“But the third one, the contradictions …”. That, they will never tolerate.

மொழிபெயர்ப்பு:

“முதலாவது மோதல்”. நீங்கள் அதைப் பற்றி எழுதினால் ஜெனரல்கள் கவலைப்படுவதில்லை, ஏனெனில் அது அவர்களின் எதிரிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது.

“இரண்டாவது நெருக்கடி”. இதுவும் நல்லது – இது அரசியல்வாதிகளின் பலவீனத்தைக் காட்டுகிறது.

“ஆனால் மூன்றாவது முரண்பாடுகள் …”. அவர்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

புத்தகம் முழுவதும் பாகிஸ்தானைப் பற்றி தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கடைசி அத்தியாயத்தில் ஒரு புதிய திருப்பம் வருகிறது. முகமது அலி ஜின்னாவின் மும்பை இல்லத்தைப் பார்க்க மும்பைக்கு ஆசிரியர் வருகிறார். என்னதான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரும் புதிருமாக நின்றாலும், இரு நாடுகளும் ஒரு இரட்டை குழந்தை போன்று தான், பல்வேறு காலகட்டங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களிலும் இந்த இரு நாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளது. ஜவஹர்லால் நேரு தொடங்கி நரேந்திர மோடி வரை இந்தியாவில் நடந்த ஆட்சி மாற்றங்களைப் பற்றியும் அதுதொடர்பாக பாகிஸ்தானில் நடந்த சம்பவங்கள் பலவற்றையும் உலக அரசியலுடன் கலந்து ஒரு சரவெடி தொகுப்பாக ஆசிரியர் ஒரே மூச்சில் கூறிவிடுகிறார். இதனை புரிந்து கொள்வதற்கு தான் நமக்கு அதிக சக்தி தேவைப்படும் போலிருக்கிறது.

ஆகமொத்தத்தில், இந்தப் புத்தகம் வரலாற்று பிரியர்களுக்கு ஒரு மெய்நிகர் சுற்றுலா சென்று வந்தது போல் இருக்கிறது. வரலாற்றுப் புத்தகம் அதிகமாக படிக்காதவர்களுக்கு சிறிது கஷ்டமான புத்தகமாகவும் தோன்றலாம். இருந்தாலும் நான் இந்த புத்தகத்திற்காக கூறிய முன்கதை, இந்த புத்தகத்தை புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த புத்தகத்தை வாங்கி படிக்க கீழே உள்ள சொடுக்கியைத் தொடரவும்.

முற்றும்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. ஒரு புத்தக விமர்சனத்தையே மூன்று தொடர்களாக பிரித்து அழகாக விவரித்த விதம் சிறப்பு. புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் சிறப்பான விமர்சனம்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -