ஆசிரியர்: ஞாநி
வெளியீடு : விகடன் பதிப்பகம்
மனித சமத்துவத்திற்காக, தங்கள் உரிமைகளுக்காக போராடிய பெண்கள் குறித்து 2005ம் ஆண்டு ‘ அவள் விகடனில் ‘ ஞாநி எழுதிய கட்டுரைத் தொடரின் புத்தக வடிவம் இது.
முன்னுரையில் ஞாநி குறிப்பிடுவது போல history என்பது ‘ his story ‘ என்பதிலிருந்து உருவாகியது. ஆணைப் போல நடந்து கொள்கிற, ஆணின் மதிப்பீடுகளை தனக்குள் உள்வாங்கிக் கொண்ட பெண்களுக்கே ஆண்களின் ஹிஸ்டரியில் இடம் தரப்படுகிறது. அது போன்று சரித்திர ஏடுகளில் இடம் கிடைக்காது மறக்கப்பட்ட சில சாதனைப் பெண்களின் வரலாற்றை ஞாநி இந்தக் கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.
1997 ம் ஆண்டு இந்திய விடுதலையின் பொன் விழா ஆண்டானதால், விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்து தூர்தர்ஷனுக்காக ஒரு தொடர் தயாரித்துள்ளார் ஞாநி. ஆண் போராளிகள் அளவுக்கு பெண் போராளிகள் பற்றிய தகவல்கள் அதிகம் அவருக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்கள் கொண்டு ‘ வேர்கள் ‘ என்ற பெயரில் வெளிவந்த தொடர் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுள்ளது.
1999 ம் ஆண்டு சென்னை கிறித்துவக் கல்லூரியில் இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் பற்றிய நாடகத்திற்கு ‘ சண்டைக்காரிகள் ‘ என்ற பெயரிட்டு உள்ளனர் இவரது குழுவினர். இதற்கு கல்லூரி நிர்வாகம் சம்மதிக்காததால், பின்னர் ‘ பெயர் இல்லாத தமிழ் நாடகம் ‘ என்று தலைப்பிட்டுருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் தான் ஞாநியை சரித்திரம் மறைத்த இந்தப் பெண்கள் குறித்து எழுதத் தூண்டியுள்ளது.
ஞாநி புத்தகத்தில் எழுதியுள்ள பதினொரு பெண்களில், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம் போன்ற வெகு சில பெயர்களே இதற்கு முன்னர் எனக்கு பரிச்சியமானவை. , மற்ற பெயர்கள் எல்லாம் எந்தப் புத்தகத்திலும் ஒரு ஓரத்தில் கூட இதுவரை காணக் கிடைக்காதவை. பிக்காஜியைக் (மேடம் காமா) கூட, தேசியக் கொடியை வடிவமைத்தவர் என்பதைத் தாண்டி வேறு விபரம் தெரியாது. ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அநீதிக்கு எதிராக காட்டிய வீரமும் துணிச்சலும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்பவை.
சுதந்திரப் போரில் துப்பாக்கி ஏந்தி போராடிய பிரீதி, பீனா, தமிழ்நாட்டில் தேவதாசி முறைக்கு சாவு மணி அடித்த மூவலூர் ராமாமிர்தம், குடும்ப வாழ்க்கையில் பெண்களின் உரிமையை நிலைநாட்டிய ருக்மா, சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஆண்களுடன் சம பங்கும் அந்தஸ்தும் பெற இறுதிவரை உழைத்த ரமா பாய், வேட்டி சட்டை அணிந்து ஒரு வேங்கையென ஏழை மக்களுக்காக சீறிய மணியம்மாள், பதினாறு வயதில் புரட்சிப் படைக்கு தலைமை தாங்கிய குடியாலோ என ஒவ்வொருவரும் அவரவர் வரையில் அற்புதமான பெண்மணிகள்.
இவர்கள் தவிர குறிப்பிட்டு இன்னார், என எவர் பெயரும் வெளியே தெரியாமல் நடந்த தோள் சீலை போராட்டம், தெலுங்கானா மற்றும் ஷாஹாதாவில் பெண்கள் முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
ஞாநி நூலின் பின்னுரையில் கூறியிருக்கும் கருத்துகள் மிக முக்கியமானவை.
//நான் (ஆண்) சாப்பிட உட்கார்ந்தால் ஒரு கை தட்டை எடுத்து வைக்கிறது. இன்னொரு கை தட்டிலேயே கை கழுவ நீர் ஊற்றுகிறது. சமயங்களில் சோற்றை குழம்புடன் பிசைந்த வைத்து விடுகிறது. சாப்பிட்டு முடித்து எழும்போது ஒரு கை மறுபடியும் நீர் ஊற்றுகிறது. துடைக்கத் துண்டை நீட்டுகிறது. இத்தனை கைகளும் பெண்களுடையவை.
இப்படித் தனக்குப் பணிவிடை செய்வதேற்கே பெண்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற மனநிலையில் சுமார் 16 ஆண்டுகள் வளர்க்கப்படுகின்ற நான், 17 வது வயதில் பெண்ணை சக மனுஷியாக எப்படி பார்ப்பேன்? ஆண் – பெண் சமத்துவத்தை ஏற்றுக் கொண்டால் , பெண்ணுக்கு அடைவதற்கு ஒரு பொன்னுலகமே காத்திருக்கலாம். ஆனால் ஆணாகிய எனக்கு ஏராளமான சலுகைகள், வசதிகள் எல்லாம் இழக்கப்பட வேண்டியவையாக அல்லவா இருக்கின்றன. கற்கத் தொடங்கும் மழலையிலேயே எனக்கு ஆண் பெண் இருவரும் சம உரிமை உடைய மனிதர்கள் என்பதும் கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கும் இல்லையல்லவா?// என்ற ஆதாரமான கேள்வியை முன்வைக்கிறார் அவர். இது ஆண் பிள்ளைகளை நாம் வளர்க்க வேண்டிய முறை குறித்த பலவித சிந்தனைகளை கிளப்புகிறது.
எளிய நடையில் பல அரிய தகவல்களோடு, வரலாறு இருட்டடிப்புச் செய்த சாகசப் பெண்மணிகள் பெயரை, மிக அழுத்தமாக நம் மனங்களில் பதிக்கிறது இந்நூல்.