இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலம் என்னும் நான் இருமை அதிகாரத்தில் உங்கள் வாழ்வின் அனைத்து படிநிலைகளில் இருமை கலந்துள்ளது என்று சென்ற பகுதியில் கூறினேன். அது எப்படி என்பதை விரிவாக இந்த பகுதியில் கூறுகிறேன் கேளுங்கள்.
இருமையின் அடையாளம்
நீங்கள் எந்த ஒரு பொருளை அடையாளம் காண வேண்டும் என்றாலும் அதற்கென்று தனிப்பட்ட ஒரு வடிவம் அல்லது பாங்கு இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அப்படியானால் அந்த வடிவம் அல்லது பாங்கு எப்படி உங்கள் மனதில் பதிகிறது? இதற்கு ஒரே விளக்கம் இருமை தான். எடுத்துக்காட்டாக, ஒளி என்னும் குணத்தை புரிந்து கொள்வதற்கு இருட்டை அனுபவித்து இருந்தால் மட்டும்தான் முடியும். ஒரு இருட்டான அறையில் தொடர்ச்சியாக பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டு பின்பு சற்று வெளிச்சம் உள்ள அறைக்கு நகர்ந்தால் கூட உங்கள் கண்கள் கூசும். ஏனென்றால் இருட்டில் தொடர்ச்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் கண்கள் இருட்டுக்கு நன்கு பழகிவிடும். அதன்பிறகு மிகவும் சொற்ப அளவில் வெளிச்சம் வந்தால் கூட உங்கள் கண்கள் அதனை மிகவும் எளிதாக இனம் கண்டு கொண்டு விடும். அதுபோலவே நீங்கள் இருளை அடையாளம் கண்டு கொள்வதற்கு கூட வெளிச்சத்தின் உதவி தேவைப்படும். இந்த மொத்த அண்டத்தில் இருள் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலைமையில் ஒளியின் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு புரியாமலே போய்விடும். திருடன் என்ற ஒருவன் இல்லை என்றால் காவல்துறைக்கு எந்த ஒரு வேலையும் இல்லாமல் போய்விடும் தானே. இங்கே ஒளி-இருள், காவலர்-திருடன் ஆகிய இரு துருவங்களும் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருப்பதால்தான் அவை இரண்டுக்குமே ஒரு அர்த்தம் கிடைக்கிறது. ஆகவே இருமை உங்கள் வாழ்நாள் முழுவதும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அனைத்து பொருட்களுக்கும் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
உலகில் ஒவ்வொரு பொருளும் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது இந்த இருமை தான். சூரியனில் அபரிமிதமான ஈர்ப்பு விசை உள்ளது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பூமிப்பந்தில் 50 கிலோ மட்டுமே இருக்கும் ஒரு நபர் சூரியனில் தன்னுடைய எடையைப் பார்த்தால் 1000 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும். அங்கே இருக்கும் ஈர்ப்புவிசை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அவ்வளவு சக்தி வாய்ந்த சூரியனிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட ஒரு சிறிய துகள் தான் பூமிப்பந்து என்னும் ஒரு கோளாக மாறி உங்கள் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அடிப்படைப் பொருளாக மாறியது. இங்கே ஈர்ப்பு, எதிர்ப்பு என்னும் இருவேறு சக்திகள் பூமிப்பந்தை உருவாக்கின. பின்பு பூமி தனியாக சுழல் ஆரம்பித்தவுடன் பூமி பந்துக்கும் தனியாக ஈர்ப்பு விசை உண்டானது. இந்த ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி வளரும் பொருட்கள்தான் தாவரங்கள் என்னும் பெயர் பெற்று உயிர் எனப்படும் அடிப்படைக் கோட்பாட்டை பூமியில் உண்டாக்கியது. எந்த ஒரு செடியின் இலையை நீங்கள் எடுத்துப் பாருங்கள். அதனுடைய இரண்டு பக்கங்களில் ஒரு பக்கத்தில் அதிக பச்சை நிறத்துடனும் அதனுடைய மற்றொரு பக்கத்தில் குறைந்த பச்சை நிறமும் காணப்படும். இங்கு கூட ஒரு இருமை ஒளிந்துள்ளது. அதன் அதிக பச்சை நிறம் இருக்கும் பகுதி சூரியனை நேரடியாக பார்த்து அதன் சக்தியை கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்தது. அதேசமயத்தில் அதனுடைய மற்றொரு பகுதி தன்னுடைய துளைகள் மூலமாக தான் சேகரித்த சக்தி மற்றும் ஈரப்பதத்தை காற்றின் வழியாக வெளியில் விட்டு விடும். ஒருபக்கம் சக்தியை சேகரித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் அதனை வெளி விட்டுவிடுவதால் தான் இதற்கு உயிர் என்று ஒன்று உள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஒரு செடி எப்பொழுது இந்த நிகழ்வை நிறுத்துகிறதோ அப்பொழுதே அந்த செடி மரணம் அடைந்து விடுகிறது.
நான் மேற்கூறிய விஷயம் ஒரு செடிக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. அனைத்து உயிருக்கும் இது பொதுவானது. உங்கள் உடலில் செயல்படும் அனைத்து அங்கங்களும் சக்தியை சேகரிக்க ஒருபக்கம் செயல்பட்டுக்கொண்டு மற்றொரு வகையில் அதனை செலவழித்துக் கொண்டும் இருக்கின்றது. இதனை செய்யாத எந்த ஊரு அங்கமும் செயல் இழந்து விடுவதாக கருதப்படுகிறது. அங்கங்களுக்கு மட்டுமல்லாமல் நீங்கள் செய்யும் செயலில் கூட இந்த இருமையை காணமுடியும். உதாரணமாக மனிதன் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தின் மொத்த பயன்பாடும் அதனை செலவழிப்பதற்கு மட்டும்தானே! இப்படி உயிர் என்னும் சொல்லுக்கே அடிப்படையாக விளங்கும் இருமை தன்னுள்ளே பல்வேறுவிதமான முரண்பாடுகளையும் கொண்டுள்ளது. அது என்ன என்பதை விளக்கமாக அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.