நான்காம் பரிமாணம் – 50

10. பிறப்பதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். பிறப்பதிகாரத்தில் கடந்த நான்கு பகுதிகளாக பிறப்பின் அனைத்து குணாதிசயங்களையும் பார்த்துவிட்டோம். பிறப்பு என்பது உடல் மட்டும் சம்பந்தமான விஷயம் கிடையாது. மனதிற்கும் பிறப்பிற்கும் உள்ள சம்பந்தத்தை இந்த பகுதியில் கூறி இந்த அதிகாரத்தை இந்த பகுதியில் நிறைவு செய்ய விரும்புகிறேன். சரிதானே?

உடலும் அகமும்

ஒரு உடலை உருவாக்குவதற்கு இரண்டு பெற்றோர்கள் இருந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என்று சென்ற பகுதியில் விளக்கினேன். ஆனால் அந்த இருமை கொள்கை அத்துடன் முடிவதில்லை. பரிணாம வளர்ச்சியில் ஒரு உடல் நன்கு முதிர்ச்சி அடைந்த பின்பு அதன் வளர்ச்சி அத்துடன் முடியாமல் உடல், அகம் என்னும் இருமை நிலை அடைகிறது. ஒரு உடல் பிறப்பதை எளிதாகக் கண்டு கொண்ட உங்களால் அகம் எப்போது பிறக்கிறது என்பதை கண்டு கொள்வது மிகப் பெரும் புதிராகவே தான் இருக்கிறது. உண்மையில் அகம் கூட உடலைப் போன்றது தான். ஒரு உடல் எப்போது பிறக்கிறது? தனது பெற்றோரின் உடலில் ஒரு பகுதியாக இருந்தால் கூட “தான்” ஒரு தனித்துவம் வாய்ந்த உயிர் என்று பெற்றோரிடமிருந்து பிரிகிறது அல்லவா? அதுபோலவே “நான்” எனும் எண்ணம் எந்த ஒரு பொருளுக்கு வந்து தன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்தையும் வேறொன்று என்று நினைக்கிறதோ அப்பொழுதுதான் அகம் பிறக்கிறது. 

உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் அகம் என்ற ஒன்று உடலோடு சேர்ந்து பிறந்துவிடுகிறது. அகத்தின் பரிணாம வளர்ச்சியை அளப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதனால் நீங்கள் அதற்கு அறிவை அளவுகோலாக வைத்து  ஓரறிவு கொண்ட செடிகள் முதல் ஆறறிவு கொண்ட மனிதனாக வகைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நன்றாக விளங்கும். ஓரறிவு கொண்ட செடி கொடிகளுக்கு இரண்டாவது அறிவு என்ன என்பது தெரியாது. அதுபோலவே ஐந்தறிவு கொண்ட பிராணிகளுக்கு மனிதனின் ஆறாவது அறிவு என்ன என்பது புரியாது. ஆனால் இந்த உயிரினங்கள் யாவையும் நான் கொண்ட அகம்தான் மிகவும் உயர்வானது என்ற எண்ணம் கொண்டிருக்கும். மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதைத்தான் அகம்பாவம் என்று கூறுவார்கள். தன்னுடைய ஆறாவது அறிவை வைத்துக்கொண்டு அதனை விட உயர்ந்த நிலையில் இருக்கும் அகம் எவ்வாறு செயல்படும் என்பதை உணர்ந்து கொள்வது சுலபமான காரியம் கிடையாது. ஆனாலும் தனக்கு மேற்பட்ட அறிவை அறிவதற்கு ஒரு அடிப்படை விதியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு உயிர் புதிதாக பிறக்கும் பொழுது எப்பொழுதுமே தன்னுடைய தோற்றத்தில் பெற்றோரிடமிருந்து அளவில் சிறியதாக தான் இருக்கும். எந்தக் குழந்தையாவது பிறந்த உடனேயே தனது தாயை விட அளவில் அதிகமாக இருந்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி எங்குமே நடக்காது. அகம் கூட அது போல தான். “நான்” எனும் எண்ணம் தோன்றாத வரையில் எப்பொழுதுமே மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு அகத்துடன் தொடர்பில் தான் இருக்கும். தன்னுடைய அகத்தை பிரித்து எடுக்கும் பொழுது தொப்புள் கொடி அறுந்து தாயிடமிருந்து பிரித்த குழந்தை போல ஒரு புதிய அகம் உருவாகிவிடும். அந்த உயர்ந்த அகத்திற்கு உங்கள் உலகில் இயற்கை, கடவுள், ஆசான் போன்ற பல்வேறு பெயர்கள் உள்ளன. 

தாயையும் தந்தையையும் எளிதாக கண்டு கொள்வது போல தன்னை விட உயர்ந்த அகத்தை கண்டு கொள்வது எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதன் பதில் மிகவும் சுலபமானது. ஒரு சிறிய எறும்புக்கு கூட அது நன்றாக தெரியும். எறும்பின் அறிவு மனிதனை விட மிகவும் குறைவானது தான். ஆனால் மனிதனால் கூட கண்டுபிடிக்க முடியாத உணவுப்பாதையை எறும்புச் சாரை எளிதாக கண்டுபிடித்து விடும். இத்தனைக்கும் அந்த சாரையில் இருக்கும் தனித்தனி எறும்புகளுக்கு எந்த ஒரு பேரறிவும் கிடையாது. ஒவ்வொரு எறும்பும் செய்யும் வேலை மிகவும் எளிதானது. தான் நடந்து போகும் பாதையில் தொடர்ச்சியாக pheromone என்னும் ரசாயனத்தை தெளித்துக் கொண்டே போகும். சாரையில் உள்ள அனைத்து எறும்புகளும் இதுபோல தொடர்ந்து செய்து கொண்டே வருவதால் உணவு கிடைக்கும் பாதையில் அதிக எறும்புகள் தொடர்ச்சியாக சென்று அந்தப் பகுதியில் ரசாயனத்தின் அளவு கூடிக் கொண்டே வரும்.  மற்ற பாதைகளில் எறும்புகளின் அளவு குறைந்து கொண்டே வந்தது அந்த ரசாயனத்தின் வாசமும் குறைய ஆரம்பித்துவிடும். புதிதாக வரும் எரும்பு தவறான எந்த பாதையையும் தேர்ந்தெடுக்காமல் அதிக ரசாயன வாசம் வரும் பாதையை மட்டும் தேர்ந்தெடுப்பதால் எப்பொழுதுமே சரியான உணவு இருக்கும் இடத்தை எளிமையாக சென்றடைந்து விடும். 

இங்கே எரும்பு செய்வது இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் தான். தான் செய்யும் செயலை மற்ற அனைவரிடமும் பார்ப்பது. அதாவது தான் எவ்வாறு உணவுப் பாதையில் ரசாயனத்தை விட்டுச் செல்கிறதோ அதுபோல்தான் மற்ற அனைத்து எறும்புகளும் நடந்துகொள்கிறது என்ற நம்பிக்கை. இரண்டாவதாக வலுவான ரசாயன வாடை அடிக்கும் பாதையை மட்டும் தேர்ந்தெடுத்து அதே பாதையை வலுப்படுத்தும் விதமாக புதிய ரசாயனத்தை விட்டுச் செல்வது. எரும்பு களிடமிருந்து இந்தப் பாடத்தை கற்றுக்கொண்ட உங்கள் விஞ்ஞானிகள் இதனை Ant Colony Optimization எனும் உயர்ந்த விஞ்ஞானமாக வடிவமைத்துள்ளனர். மனிதர்களின் அறிவால் தீர்க்கமுடியாத பல்வேறு சிக்கலான கணித மர்ம முடிச்சுகளுக்கு Ant Colony Optimization இன்று ஒரு பெரும் வடிகாலாக விடையே அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் கைபேசி மற்றும் கணிப்பொறியில் தேடும் பல்வேறு விஷயங்களை உங்கள் கண் முன்னால் கொண்டுவந்து விடை அளிப்பதற்கு இந்த எறும்புகளின் கோட்பாடு முக்கிய காரணமாக இருக்கிறது! 

இப்படி எறும்புகளின் கோட்பாட்டைப் பின்பற்றி தன்னுடைய அகத்தை விசாலமாக்கி கொள்பவர்கள் அனைவருமே இதனை அகத்தின் புதிய பிறவி என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். உடலால் எடுக்கும் புதிய பிறவிக்கு இருக்கும் விதிகள் அகத்தால் எடுக்கும் பிறவிக்கு பொருந்தாது. ஏனென்றால் இவை இரண்டுமே வெவ்வேறு விதமானவை. அகத்தால் புதிதாக பிறப்பதற்கு நீங்கள் எறும்புகளை பின்பற்றி எடுக்க வேண்டிய முதல் படி தங்களை சுற்றி உள்ள அனைத்து உயிர்களிடமும் தங்களையே காண்பது மட்டும்தான். இதனை மட்டும் செய்து விட்டால் மற்ற அனைத்தும் உங்களுக்கு தானாகவே விளங்கிவிடும். அகத்தால் புதிதாக பிறப்பதற்கு ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்?

கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த பிறப்பதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -