நான்காம் பரிமாணம் – 34

7. சுவை அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

காலம் என்னும் நான் சுவை அதிகாரத்தில் அறுசுவைகள் பற்றி சென்ற பகுதிகளில் கூறிவிட்டேன். சுவை என்பது ருசிக்கும் இன்பத்திற்காக மட்டும் செயல்படும் உணர்வு இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். அப்படியானால் சுவையின் உண்மையான பயன்பாடு தான் என்ன? அதனைப் புரிந்துகொள்ள சில விலங்குகளின் சுவைக்கும் பண்புகளை புரிந்து கொள்ள வேண்டும். பார்க்கலாமா?

விலங்குகளின் சுவை

எந்த ஒரு உயிரினத்தின் சுவை அறியும் பண்பையும் அதன் உடலில் உள்ள சுவை உணரும் செல்களின் எண்ணிக்கையை வைத்து எளிதாக அளந்து விடலாம். ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனுக்கு தோராயமாக உடலில் பத்தாயிரம் சுவை அறியும் செல்கள் உள்ளன. இந்த பத்தாயிரத்தில் கூட எல்லா செல்களுக்கும் அனைத்து சுவையையும் உணரும் திறமை கிடையாது. உதாரணமாக உங்கள் நுனி நாக்கில் உள்ள செல்களால் மட்டும்தான் இனிப்புச் சுவையை முழுமையாக உணர முடியும். அதேபோல் அடி நாக்கால் மட்டும்தான் கசப்புச்சுவை நன்றாக உணரமுடியும். இதன் காரணமாகத்தான் நீங்கள் நுனிநாக்கில் இனிப்பையும் அடி நாக்கில் கசப்பையும் உண்ணும் போது தெரிந்து கொள்கிறீர்கள். அதே சமயத்தில் சிங்கம், புலி போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு சில நூறு சுவை உணரும் செல்கள் மட்டும்தான் உள்ளன! இந்த விலங்குகளால் இனிப்பை கூட சரியாக உணர முடியாது. காரணம் மிக எளிமையானது. மாமிசம் உண்ணும் பிராணிகளுக்கு தான் சாப்பிடும் மாமிசம் புதிதாக உள்ளதா இல்லை கெட்டுப் போனதா என்று உணரும் ஒரே ஒரு உணர்வு இருந்தால் போதுமானது. அதைத்தவிர அதற்கு உயிர் வாழ வேறு எதுவும் தேவையில்லை. இதனால் மாமிசம் கெட்டுப்போனால் வரும் புளிப்புச் சுவையை மட்டும் உணரும் சிலநூறு செல்கள் மட்டும் தான் இதற்கு உள்ளது. இங்கே தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சுவை என்பது எந்த ஒரு உயிரினத்தையும் காப்பதற்காக மட்டுமே இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒரு சக்தியாகும். சுவைக்கு அடிமையாகி அதற்காகவே தேவையில்லாமல் உண்ணும் பழக்கம் எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நடைமுறை.

அப்படியானால் அதிகமான சுவை உணரும் செல்களை கொண்ட மிருகங்களால் மனிதனை விட எளிமையாக தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? இந்த இடத்தில்தான் இயற்கை தன்னுடைய விந்தையை காண்பிக்கிறது. மனிதனை விட சுமார் பதினைந்து மடங்கு அதிகமாக சுவை உணரும் திறமை கொண்டது சேற்றில் வாழும் கெளுத்தி மீன்(Cat fish)!   மனிதனுக்கு நாவால் சுவையை உணர முடியும் என்ற நிலையில் கெளுத்தி மீன் தன்னுடைய உடலின் மேற்பகுதியில் உள்ள எந்த இடத்திலும் சுவையை உணர்ந்து விடுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் இதன் மொத்த உடலுமே இதற்கு நாக்குதான். சேறும் சகதியும் அதிகமாக இருக்கும் நிலப்பரப்பில் சுவாசிக்கும் பிராணவாயு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். மேலும் சேற்றுக்குள் வாழும் உயிரினங்கள் எதற்குமே சரியாக எதிரியை பார்க்க முடியாது. இது இரண்டையுமே சமாளிக்க வேண்டுமென்றால் அதற்கு மிகவும் அதிகமான உணர்வு திறன் தேவை.  மொத்த உடலாலும் சுவைக்க முடிந்ததால் தன்னை சுற்றி இருக்கும் சகதியின் சுவையைக் கொண்டே இவற்றால் அங்கு வாழ முடியுமா  என்றும் அங்கு ஏதேனும் உணவு கிடைக்குமா என்பதையும் தெரிந்து கொண்டு விடும். இந்த வகை மீன்களுக்கு அதிக சூரிய வெளிச்சம் மற்றும் பார்வை தேவையே இல்லை. அதனால்தான் இவை ஆற்றின் அடிப்பகுதியில் வாழ்கின்றன. இதிலிருந்து ஒன்றை உங்களால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். உயிரினங்களுக்கு உயிர் வாழ்வதற்கு போதுமான சக்திகளை மட்டும்தான் இயற்கை படைத்திருக்கிறது. எந்த ஒரு உயிரினத்திற்கும் அதிகப்படியான சக்தி என்பது கிடையாது. சுவைக்கும் திறன் மிகவும் குறைவாகக் கொண்ட சிங்கத்திற்கு எதிரிகளை தாக்கும் பலம் மிகவும் அதிகமாக உள்ளது. அதே சமயத்தில் கண்கள் கூட ஒழுங்காக தெரியாத கெளுத்தி மீனுக்கு வாழ்வதற்கு தேவையாக அதிகப்படியான சுவைக்கும் திறன் உள்ளது. 

ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதனுக்கு உடல்நலத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிப்படுத்திக் கொள்வதற்கு தேவையான சுவையுடைய உணவை தானாகவே சாப்பிட்டு வந்தான். இந்தப் பண்பை இப்பொழுது கூட சிம்பன்சி குரங்குகளிடம் பார்க்க முடியும். மனிதன் எப்போது தன்னுடைய ஆறாம் அறிவை வைத்துக்கொண்டு உணவை வகைப்படுத்தி அதை உண்பதற்கான விதிமுறைகள், அதனை நெறிப் படுத்துவதற்கான மருத்துவர்களையும் உருவாக்கியபொழுது அவனுடைய இயற்கையான சுவை உணரும் திறன் என்பது மாறுபட்டு அடிப்படை செயல்பாட்டிலிருந்து விலகிவிட்டது. எந்த ஒரு உயிரினமும் தன்னுடைய இயற்கையான திறமையை பயன்படுத்தவில்லை என்றாலும் இயற்கை அந்த சக்தியை காலப்போக்கில் பரித்துவிடுகிறது. இருந்தாலும் மிருகங்களுக்கு இருக்கும் சுவை உணரும் திறனை வைத்துக் கொண்டு மனிதன் பல்வேறு புத்திசாலித்தனமான செயல்களையும் ஆதிகாலத்திலிருந்தே செய்து கொண்டு வருகிறான். சில பழங்குடி இனத்து மக்கள் காட்டில் தண்ணீரை கண்டுபிடிப்பதற்காக கரடிகளுக்கு உப்பு பண்டங்களை கொடுக்கின்றனர். உப்பு சாப்பிட்டவுடன் தாகம் எடுக்கும் கரடிகள் எப்படியோ தரையில் குழி பறித்து தண்ணீரைத் தேடி கண்டுபிடித்து விடும். இந்தக் கரடிகளை பின்தொடரும் பழங்குடியினர் தண்ணீரை எளிதாக அடைந்துவிடுவர்.

எந்த ஒரு உயிரினத்துக்கும் சுவை எவ்வளவு இன்றியமையாதது என்பதை பார்த்தாகிவிட்டது. சுவையை நாக்கு உணர்ந்தால்கூட அதனை முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு மூளை தான் உதவுகிறது என்று முன்னமே சொல்லிருந்தேன் அல்லவா? சுவைக்கு மூளையையும் தாண்டி மனதோடு கூட நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனை அடுத்த பகுதியில் கூறும்வரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -