இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
ஒளியைப் பற்றிய பல்வேறு விஷயங்களை காலம் என்னும் நான் உங்களுக்கு தொடர்ந்து கூறிக் கொண்டு வருகிறேன். ஒளியின் தன்மையையும் அதிலிருந்து உருவாகும் நிறங்களின் குணங்களைப் பற்றியும் சென்ற பகுதிகளில் கூறி முடித்து விட்டேன். இந்தப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத வண்ணங்களைப் பற்றியும் நான் இங்கு உங்களுக்குக் கூற போகிறேன். அது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னால் கண்ணுக்குத் தெரிந்த வண்ணங்களின் ஒரு சிறிய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்துகொள்ளலாமா?
வண்ணங்களின் வரலாறு
வண்ணத்திற்கு குணம் உண்டு என்றும், குணங்கள்தான் வண்ணங்கள் ஆகின்றன என்று கூறியிருந்தேன் அல்லவா? ஆனால் சில வகை வண்ணங்களின் உபயோகம் குணங்களின் அடிப்படையில் இல்லாமல் வரலாற்றின் அடிப்படையிலும் உள்ளது? அது எப்படி? உங்கள் உலகில் தற்போதுள்ள விஞ்ஞானத்தின் அடிப்படையில் உங்களால் பார்க்க முடிந்த ஏழு வண்ணங்களையும் எளிதாக உருவாக்க முடியும். ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. மனிதர்கள் செயற்கை வண்ணங்களை உருவாக்க முடியாமல் இயற்கையாக கிடைக்கும் வண்ணங்களை பயன்படுத்தி வந்தனர். இதிலும் வண்ணங்கள் இரண்டு வகைப் பட்டன. முதலாவதாக, மாறும் வண்ணங்கள். பண்டைய காலத்தில் சிவப்பு நிறம் வேண்டுமென்றால் விலங்குகளின் ரத்தத்தை பயன்படுத்தினர். பழங்கால குகைகளில் ரத்தத்தைக் கொண்டு வடிக்கப்பட்ட சில ஓவியங்களை உங்களால் பார்க்க முடியும். அது போலவே பச்சை நிறத்திற்கு செடிகளில் உள்ள இலைகளை கூழாக்கி பயன்படுத்தினர். இதில் என்ன பிரச்சனை என்றால் ரத்தம் இலை போன்றவற்றின் இயற்கை குணம் மாறியவுடன் அதன் நிறமும் மறைந்து கருத்து விடும். இதனால்தான் நீங்கள் பார்க்கும் பல்வேறு குகை ஓவியங்கள் கருமையாக இருக்கின்றன. இப்படி கருமை அடையாமல் மாறா வண்ணம் உடைய பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற தவிப்பு மனிதனுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. இறுதியாக வண்ணக் கற்களை பொடியாக்கி ஓவியம் வரைந்தால் அதன் நிறம் என்றுமே மாறாது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவைதான் நான் இரண்டாவதாக கூறவந்த மாறா வண்ணங்கள். மனிதன் இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்து செயற்கை முறைக்கு மாறியதாக பல காலமாக தொடர்ந்து நீங்கள் கூறிக் கொண்டு வருகிறீர்கள். இந்த மாற்றம் ஒரே தலைமுறையில் நிகழ்வதில்லை. சொல்லப்போனால் வரலாற்றில் மனிதன் செயற்கை முறைக்கு மாறியதற்கான முக்கியமான நிகழ்வு தான் மாறா வண்ணங்களை பயன்படுத்தியது. மாறும் வண்ணங்களை பயன்படுத்திய பொழுது மனிதன் நிகழ்காலம் என்ற ஒரே ஒரு நிலையில் மட்டும்தான் வாழ்ந்தான். ஆனால் நிறம் மாறா வண்ணங்களை பயன்படுத்தத் தொடங்கியது முதல் மனிதனால் கடந்த காலம் மற்றும் வருங்காலத்தை சித்திரமாக வரைந்து பாதுகாக்க முடிந்தது. பின்பு மாறா வண்ணங்களால் பல்வேறு ஆடைகளையும் நெய்து உடுத்தி வந்தான். இந்த வண்ண வித்தியாசங்கள் பிற்காலத்தில் வர்ணம் என்று மனிதனுக்குள் ஏற்படும் ஜாதி வித்தியாசமாகக் கூட மாறியது.
இந்த நிகழ்வுகள் உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிகழவில்லை. பரவலாக அனைத்து இடங்களிலும் நிகழ்ந்தது. உதாரணமாக சீனாவின் ராஜ வம்சத்தில் அதிகப்படியான மஞ்சள் நிறத்தை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. பொதுமக்கள் யாரேனும் மஞ்சள் நிற உடையை அல்லது மஞ்சள் நிற வீடுகளை வைத்திருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த சீன அரண்மனைகளில் தொகுப்பை இன்று கூட நீங்கள் Forbidden City (மறுக்கப்பட்ட நகரம்) என்றுதான் கூறுகிறீர்கள். பொதுமக்களால் இந்த மஞ்சள் நிற அரண்மனைகளின் அருகில் கூட நெருங்க முடியாது. மேற்கு ஐரோப்பாவில் சிவப்பு நிறமும் அதுபோலவே பயன்படுத்தப்பட்டது. அரச வம்சத்தினர் மட்டுமே பயன்படுத்தும் உயர் குணமுள்ள நிறமாக சிவப்பு பயன்படுத்தப்பட்டது. இன்று கூட பிரிட்டன் ராணுவத்தில் சிவப்பு நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அதுதான். கிழக்கு ஐரோப்பா மற்றும் எகிப்தில் பயன்படுத்தப்படும் நீல நிறத்திற்கு இதுபோல வரலாறு உள்ளது. இவ்வாறு கற்களின் மூலமாக நிறம் மாறாத வண்ணங்களை உருவாக்கியதால் பல்வேறு பிரிவினைகளும் மனிதர்களுக்குள் உண்டானது. அதன்பின்பு விஞ்ஞான வளர்ச்சியினால் நீங்கள் ஒருபடி மேலே போய் எந்தவித வண்ணத்தையும் உருவாக்கும் சக்தியை உருவாக்கிக் கொண்டீர்கள். அலுமினியத்தின்(Aluminum) பல்வேறு ரசாயன கலவையால் எளிதாக பச்சை நிறத்தை உருவாக்கமுடியும். அதேபோல குரோமியத்தின்(Chromium) பல்வேறு ரசாயன கலவையால் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தை உருவாக்க முடியும். இப்படி எல்லாவித வண்ணத்தையும் உருவாக்கிக்கொண்டு இயற்கை குணங்களினால் ஏற்படும் வண்ணங்களை மறைத்து செயற்கை வண்ணத்தால் ஒரு போலியான குணத்தைக் கட்டமைக்க முயன்றது தான் உங்கள் உலகில் ஏற்பட்ட அனேகமான பிரச்சனைகளுக்கு மூல வித்தாக இருக்கிறது. உங்களால் பார்க்க முடிந்த வண்ணத்தில் இவ்வளவு கலப்படம் நேர்ந்தாலும் கூட பார்க்க முடியாத வண்ணங்கள் பல்வேறு இருப்பதனால் அதன் துணைகொண்டு பல்வேறு விலங்கினங்களும் பறவைகளும் இயற்கை வாழ்வை இன்றுவரை வாழ்ந்து வருகிறது. அது எப்படி தெரியுமா?
கண்ணுக்குத் தெரியா வண்ணங்கள்
பறவையினங்களில் கழுகு கூர்ந்த பார்வை உடையது என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த பார்வை என்பது உங்கள் கண்ணுக்குத் தெரிந்த வண்ணங்களால் மட்டும் ஏற்படுவது அல்ல. நீல நிறத்தை தாண்டி உங்களால் அதிக அலைவரிசையில் பார்க்க முடியாது. அதனால் நீலத்திற்கு அடுத்த படியாக இருக்கும் பார்க்க முடியாத அலைவரிசைக்கு நீங்கள் புற ஊதாக்(Ultra Violet) கதிர் என்ற பெயர் வைத்தீர்கள். சூரிய ஒளியில் புற ஊதாக் கதிர்களும் நிறைந்துள்ளன. இந்த நிறம் விலங்குகளின் மேல் படும் பொழுது முழுவதுமாக பிரதிபலிக்கப்படுகிறது. மனிதர்களால் இந்த நிறத்தை பார்க்க முடியவில்லை என்றால் கூட கழுகு போன்ற பறவைகளால் புற ஊதா வண்ணத்தை எளிதாக பார்க்க முடியும். ஒரு வயல்வெளியில் நிறைய எலிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வயலின் அடிப்பகுதியில் எலிகள் ஒளிந்து கொண்டால் கூட அதன் புற ஊதா பிரதிபலிப்பை கழுகால் பல அடி உயரத்திலிருந்து பார்க்க முடியும். இப்படி பார்ப்பதால் வயலின் எந்த பகுதியில் அதிகமான எலிகள் உள்ளது என்பதை மிகுந்த உயரத்தில் இருந்து கண்டுபிடித்துவிட முடியும். அந்தப் பகுதியின் அருகில் வரும்பொழுது கழுகு எளிதாக தன்னுடைய உணவை வேட்டையாடி விடுகிறது. இதனால்தான் கூர்ந்து பார்ப்பதை நீங்கள் கழுகுப்பார்வை என்று கூறுகிறீர்கள். கழுகின் கூர்மையான பார்வைக்கு காரணம் புற ஊதாக் கதிரை உணரும் திறமைதான்.
நீல நிறம் போலவே சிவப்பு நிறத்திற்கு அப்பாலிருக்கும் அலையையும் உங்களால் பார்க்க முடியாது. அதனால் சிவப்பு நிறத்திற்கு அப்பால் இருக்கும் ஒளியை நீங்கள் அகச்சிவப்பு (Infra Red) கதிர் என்று கூறுகிறீர்கள். பாம்பு போன்ற உயிரினங்களால் இரவில் பார்க்க முடியும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அதற்கு காரணம் இந்த அகச்சிவப்பு ஒளி தான். நீங்கள் இருளில் பார்க்கும் அறிவியல் சாதனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா? அகச்சிவப்பு ஒளியை முதலில் பரவ விட்டு பின்பு அதனை படம் எடுத்துப் பார்த்தால் உங்களுக்கு இருளில் உள்ள அனைத்தும் நன்றாகவே தெரியும். ஆனால் உண்மையில் அந்த இடம் இருளாக இருப்பது இல்லை. அகச்சிவப்பு ஒளியால் நிறைந்திருக்கிறது. ஆனால் உங்களால் அகச் சிவப்பு நிறத்தை பார்க்க முடியவில்லை என்பதால் அந்த இடம் இருள் போன்ற தோற்றம் அளிக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத வண்ணங்கள் இவை இரண்டு தானா என்றால் இல்லவே இல்லை. கண்ணுக்குத் தெரிந்த ஏழு வண்ணங்களை போல் கண்ணுக்குத் தெரியாத வண்ணங்களை எண்ணில் அடக்கமுடியாது. அந்த வண்ணங்களுக்கு முடிவே இல்லை. அதனைப் பற்றி இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.