இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
வணக்கம். நான்தான் காலம் பேசுகிறேன். உண்டி அதிகாரத்தில் உங்களுடைய உணவுக்கும் உங்கள் வாகனங்களின் உணவுக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி சென்ற பகுதியில் கூறினேன். சுருக்கமாகக் கூறப்போனால், நீங்கள் எப்படி காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு உணவுடன் சேர்த்து எரித்து சக்தியாக மாற்றுகிறீர்களோ, அது போலவே உங்கள் வாகனங்களும் செய்கிறது என்று கூறியிருந்தேன். இந்த வாகனத்தை வைத்தே உணவைப் பற்றிய பல்வேறு விஷயங்களை இங்கு உங்களுக்கு கூறப் போகிறேன். பார்க்கலாமா?
உணவும் வாகனமும்
ஒரு செல் எப்பொழுது ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகிறதோ அப்பொழுது அதன் ஆயுள் காலமும் நகர்ந்து கொண்டே வருகிறது. ஒரு வகையில் பார்த்தால் உங்கள் உணவு தான் உங்கள் வயதை கூட்டிக்கொண்டு செல்வதற்கு உதவுகிறது. அதற்க்காக சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. அப்படியானால், மனிதர்களும் விலங்கினங்களும் எவ்வளவு சாப்பிட்டால் சரி? மீண்டும் இங்கே மோட்டார் வாகனத்துக்கு வருவோம். பெட்ரோல் போன்ற எரிபொருள் இல்லாமல் வாகனத்தை இயக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் போட்டு இயக்குவதால் வாகனம் தேய்மானம் அடைகிறது என்பதும் உண்மை தானே! உடலும் வாகனமும் இந்த விஷயத்தில் ஒரே போல் தோன்றுகிறதா? இந்த சூழ்நிலையில் உங்கள் வாகனத்தை எப்படி உபயோகப்படுத்துவீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பயன்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டாலும் வாகனம் கெட்டுப்போய்விடும். அதேசமயம் வாகனத்தின் தகுதிக்கு மீறி அதை வேகமாக செலுத்தினாலும் பழுதாகி விடும். வாகனத்தின் எரிபொருளை தவறாக மாற்றினால் முழுவதும் செயலிழந்து விடும். ஒரு பெட்ரோல் வாகனத்தில் பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தி ஓட்ட முடியும். இதே கொள்கைகளை உங்கள் உடலுக்கு பயன்படுத்தினால் உடலில் எந்தவித நோயும் வராது. எப்படித் தெரியுமா?உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இயற்கையாகவே உங்களுக்கு எப்படிப்பட்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்படி தேவையான உணவை இயற்கையாக சாப்பிட்டோமானால் உடல் சரியான முறையிலே இயங்கும். உங்கள் உலகில் வாழும் பல்வேறு விலங்கினங்களும் இந்த அறிவாற்றலைக் கொண்டு தான் எந்த ஒரு மருத்துவரின் உதவியும் இல்லாமல் தன்னுடைய நோய்களை தானே குணப்படுத்திக் கொள்கிறது. நோய்கள் வராமலே கூட காத்துக் கொள்கிறது. ஆனால் மனிதர்களாகிய நீங்கள் இயற்கையாகக் கிடைக்கும் உணவை உங்கள் எண்ணம் போல மாற்றி கலப்படம் செய்து உங்கள் மூளையை நீங்களே குழப்பிக் கொள்கிறீர்கள். உதாரணமாக, உங்கள் உடலில் சக்தி குறையும் பொழுது உங்களுக்கு இனிப்புச்சுவை உள்ள பொருளை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் செயற்கை இனிப்பூட்டப்பட்ட உணவு பண்டங்களை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு தேவைப்பட்ட சக்தியும் கிடைக்காது, மூளையும் இனிப்புச்சுவை பற்றி உள்ள இயற்கையான ஞானத்தை தொலைத்து விடும். இப்போது புரிகிறதா உங்கள் உடலுக்கு தேவையான எரிபொருளை கொடுக்காமல் உங்களையே நீங்கள் எப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று!
வாகனத்தின் தகுதிக்கு ஏற்றார்போல் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினேன் அல்லவா? அதுபோலத்தான் உங்களுக்கு உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் பயன்படுகிறது. உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான செயல்களை செய்வதற்கு எவ்வளவு உடற்பயிற்சி வேண்டுமா, அதுவே உங்களுக்கு இன்றியமையாத தேவையாக இருக்கிறது. அதற்கு மேலும் கடும் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நீங்களே வேகமான வயோதிகத்தை வரவழைத்துக் கொள்ளும் செயல் தான். எது சரியான அளவு உடற்பயிற்சி? உங்களுடைய அன்றாட காரியங்களை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உடற்பயிற்சி தேவைப்படுகிறதோ அதுவே போதுமானது. என்றாவது ஒருநாள் மட்டும் கடுமையான உடல் வலிமை தேவைப்படும் பட்சத்தில் தினமும் தேவை இல்லாமல் கடும் உடற்பயிற்சி செய்தால் உங்கள் வயோதிகத்தை நீங்களே சீக்கிரம் தேடிக் கொள்ள நேரிடும். போர் வீரர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு தொழில் முறையில் மட்டுமே இப்படிப்பட்ட தேவைகள் ஏற்படும். மற்ற அனைவருமே அவர்களது தினசரி செயல்பாட்டினை பொருத்து உடற்பயிற்சி செய்தால் போதுமானது. இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் வாகனங்களை பராமரிக்கும் முறையை மனதில் வைத்து அதேபோல உங்கள் உடலுக்கும் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பந்தய வாகனமா இல்லை தினசரி பயன்படுத்தும் வாகனமா?
ஒரு வாகனத்தை நீங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டேவா இருக்கிறீர்கள்? நடுவில் சற்று இடைவெளி விடவில்லை என்றால் வாகனம் சூடாகி விடும். உங்கள் உடலும் அதுபோலத்தான். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்காமல் இடைவெளி கொடுத்தால் நீண்ட காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ முடியும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது சீரான இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்வது மற்றும் சரியான நேரத்தில் தூங்கி எழுவது தான். நீங்கள் என்ன தான் சரியான முறையில் உணவு சாப்பிட்டாலும் சரியாக ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அனைத்தும் வீணாகி உடல் வலிமை இழந்துவிடும். அதனால் ஓய்வு மற்றும் உறக்கம் கூட உங்கள் உடலுக்கு ஒரு உணவுதான். புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இங்கே நான் வாகனத்தை எடுத்துக்காட்டாக கூறினாலும் உணவு எடுத்துக் கொள்ளும் முறையில் உங்கள் உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் கூறிய பொதுவான விஷயங்களை நீங்கள் எந்த விதமான உணவுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.
பயன்படுத்து இல்லை தொலைத்து விடு
இயற்கையாக உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு கோட்பாடு உள்ளது. அதற்குப் பெயர்தான் “பயன்படுத்து இல்லை தொலைத்து விடு” (Use it or loose it). உதாரணமாக உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பல வருடங்களாக அதை சாப்பிடாமல் பின்பு ஒருநாள் திடீரென்று அவர் சாப்பிட்டால் உங்கள் உடல் அதை ஏற்றுக் கொள்ளாது. அதேபோல ஒவ்வாத ஒரு உணவை தினம் கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டே வந்தால் பல காலம் கழித்து அந்த உணவு உங்களுக்கு பழக்கமாகிவிடும். இந்த விதியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அப்படியானால் நான் மேலே கூறிய உடற்பயிற்சியைப் பற்றிய குறிப்பில் பயன்படுத்தி தொடர்ந்து கடும் உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை அதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியும். ஆனால் அதன் காலக்கணக்கு தான் சற்று குழப்பமானது.
காட்டில் வாழும் மான் போன்ற விலங்கு ஒன்றுக்கு உயர்ந்த மரங்களின் உச்சியில் இருக்கும் இலை தழைகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆசையின் காரணமாக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு வந்தது. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் வாய்ப் பகுதிக்கு மர உச்சி எட்டவே இல்லை. ஒரு தலைமுறையில் நடக்காத இந்த முயற்சி பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தொடர்ந்து வந்த பொழுது ஒருகட்டத்தில் அந்த மிருகத்தின் கழுத்து மற்றும் கால் பகுதி நீளமாகி அதனால் எளிமையாக மர உச்சியை எட்ட முடிந்தது. இப்படித்தான் ஒட்டகச்சிவிங்கி(Giraffe) என்னும் மிருகம் உங்கள் உலகில் உருவானது. பல தலைமுறைகளாக ஒட்டகச்சிவிங்கியின் முன்னோர்கள் செய்த உழைப்பினால், அனைத்து வாரிசுகளும் சுலபமாக மர உச்சியில் உள்ள இலை தழைகளை சாப்பிடுகிறது. உடற்பயிற்சியை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எப்படி ஒட்டகச்சிவிங்கி வந்தது? ஒரு பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதற்காக நான் கூறிய உதாரணம் தான் ஒட்டகச்சிவிங்கி. உங்கள் முன்னோர்கள் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டு வந்த செயல்கள் அனைத்தும் நீங்கள் சிறிது முயற்சி செய்தாலே உங்களுக்கு கைகூடி விடும். அப்படியில்லாமல் நீங்களாக புதிதாக ஏதாவது உருவாக்க வேண்டுமென்றால் அதற்காக பல தலைமுறைகள் தங்களையே தியாகம் செய்து முயற்சி செய்தால்தான் அது கைகூடும். அவ்வாறு கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட ஒரு பழக்கத்தை தொடராமல் விட்டால் சில தலைமுறைகளில் அது முழுவதும் மறைந்து விடும். குரங்காக இருக்கும்பொழுது உங்களுக்கு இருந்த வால் மனிதனாக மாறிய உடன் தொலைந்த காரணம் கூட அதேதான். உங்கள் உணவு உட்கொள்ளும் முறையில் இரண்டே இரண்டு வழிகள் மட்டும்தான் உங்களுக்கு உள்ளது. 1) எளிமையான வழி: உங்கள் உடலுக்கு ஏற்றார்போல சீரான ஒரு இயற்கை உணவை உட்கொள்வது. 2) பல்வேறு கடுமையான உணவு பழக்கங்களை முயற்சி செய்து பரிணாம வளர்ச்சியில் உங்களுடைய சந்ததியை ஒரு புதிய பழக்கத்துக்கு எடுத்து செல்வதற்காக உங்களை தியாகம் செய்வது. முடிவு உங்கள் கையில்.
உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கும் உயிரற்ற பொருள்களுக்கும் தேவையான உணவைப் பற்றி பல விஷயங்களை பார்த்து விட்டோம். இதில் உயிரினங்கள் சற்று விசேஷமானது. உயிர்களுக்கு உடலை மட்டும் பாதுகாக்கும் உணவு பத்தாது. மனதை பாதுகாப்பதற்கு கூட கூட உணவு தேவை. அது என்னவென்று அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.
நல்ல பல சுவாரஸ்யமான அனைவருக்கும் தேவையான தகவல்கள்… நன்று… ???