இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலமெனும் நான் கடந்த நான்கு பகுதிகளாக என்னைப் பற்றி உங்களுக்கு பல விஷயங்களை கூறிக் கொண்டு வருகிறேன். இன்று, நிறைவுப் பகுதியாக பல்வேறு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு ஊழி அதிகாரத்தை நிறைவு செய்யப்போகிறேன். கட்டுரைக்குள் செல்வோமா?
ஒளியின் வேகம் காலமும்
பொருட்கள் மற்றும் உடலின் காலக் கணக்கை சென்ற பகுதிகளில் பார்த்தாகிவிட்டது. உடல் என்பது மற்ற பொருட்களுடன் வேறுபட்டால் கூட அடிப்படையில் அதுவும் ஒரு ஜடப்பொருள் தான். ஒரு பொருளை ஜடப்பொருளா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது? மிகவும் எளிது. எந்த ஒரு பொருள், ஒளியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் நகர முடியுமா அவை அனைத்தும் ஜடப் பொருட்கள் ஆகும். ஒளியை மிஞ்சக்கூடிய வேகத்தில் ஒரு பொருளினால் நகர முடிந்தால் அது ஒரு ஜடப்பொருள் கிடையாது. ஒளியின் வேகத்திற்கு அதிமாகச் செல்லும் அனைத்துப் பொருட்களுக்கும் காலக்கணக்கு ஒருவிதமாகவும் மற்ற பொருட்களுக்கு காலக்கணக்கு வேறு மாதிரி இருக்கும்.
உங்கள் மனம் என்பது ஒளியை விட வேகமாக செல்லக் கூடிய ஒரு விஷயம். சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வருவதற்கு சுமார் 8 நிமிடம் ஆகிறது. ஆனால் உங்கள் மனதால் ஒரே நொடியில் பூமியிலிருந்து சூரியன் போன்ற வேறு எந்த ஒரு இடத்திற்கும் சென்றுவிட முடியும். இப்பொழுது மனம் ஏன் முற்றிலும் வேறுபட்டது என்று புரிகிறதா ?
நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் ஒரு தெருக்கோடியில் நின்றுகொண்டு தெருவின் மறு மூலையில் இருக்கும் இன்னொருவரை பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கும் அந்த மனிதரின் ஒளி, உங்கள் கண்களை அடையும் பொழுதுதான் அவர் நின்று கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதால் உங்களால் அவருக்கும் அவருடைய ஒளிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. இப்பொழுது அந்த மனிதருக்கு ஒளியை விட வேகமாக நகரும் சக்தி வந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் நின்று கொண்டிருக்கும் போது உருவான ஒளி உங்கள் கண்களை அடையும் முன்பாக அவர் வேகமாக நடந்து உங்கள் அருகில் வந்து விடுவார். இப்பொழுது உங்கள் கண்களுக்கு அருகில் நிற்கும் நபர் மற்றும் தள்ளி நிற்கும் நபர் என்று இரண்டு உருவங்கள் தெரியும். ஒளியை விட பன்மடங்கு வேகமாக அந்த நபர் நகர்ந்தார் என்றால் ஒரே நேரத்தில் அவரால் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இதேபோல் நிறைந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட நபர் யார் என்று கேட்கிறீர்களா? அந்த நபர் தான் உங்கள் மனம். மனம் அதி வேகமாக செல்வதால் மனதால் ஒரு இடம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும்.
ஒளியின் வேகத்தினால் உங்கள் உலகில் பல்வேறு விஷயங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இதற்கு உங்கள் விஞ்ஞானிகள் கொடுத்த பெயர்தான் “காரண காரியத் தொடர்பு” (Causality). நீங்கள் நடத்தும் எந்த ஒரு காரியத்திற்கும் இதுதான் அடிப்படை. ஒளியின் வேகத்திற்கும் காரண காரியத்திற்கும் என்ன சம்பந்தம்? அதையும் கூறிவிடுகிறேன். சுலபமாக புரிந்து கொள்வதற்கு, நீங்கள் ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். இந்த காட்சியை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பவர், நீங்கள் எந்த எண்ணை கூறுகிறீர்கள் என்பது உடனே புரிந்து கொள்வார். ஆனால் இந்த காட்சியை பல கிரகங்களுக்கு அப்பால் இருக்கும் வேறு ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவருக்கு நீங்கள் “ஒன்று” என்று சொல்லி முடித்து பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு தான் அந்த நிகழ்வை பார்க்க முடியும். அதற்குள் நீங்கள் “நூறு” வரை சொல்லி முடித்து விடுவீர்கள். அந்த கிரகத்தில் உள்ளவர் பார்ப்பது உங்களது கடந்த காலத்தை ஒழிய நிகழ்காலத்தை இல்லை. இவ்வாறு கடந்தகாலத்தை பார்க்காமல் நீங்கள் “ஒன்று” என்று சொல்லி முடித்து “இரண்டு” என்று சொல்வதற்கு முன்னால் உங்கள் அருகில் இருப்பவர் அதனை புரிந்து கொண்டால் நீங்கள் எண்ணும் முறையை அவர் நிகழ்காலத்தில் உணர்ந்து விடுவார். இப்பொழுது “இரண்டு” என்னும் சொல்லுக்கு “ஒன்று” என்னும் சொல் காரணமாகிவிடும். இதைப் போலவே மூன்று என்னும் சொல்லுக்கு “இரண்டு” காரணமாகவும் “மூன்று” காரியமாகவும் இருக்கும். இவ்வாறு ஒளியின் வேகத்திற்கு உட்பட்டு நிகழ்காலத்தை நேரடியாக பார்க்க முடிந்து உங்கள் முன்னே நடக்கும் காரணகாரிய செயல்கள் அனைத்திற்கும், நாம் சென்ற பகுதிகளில் பார்த்த காலக் கணக்கு தான் அடிப்படை. நான் கூறிய மண்துகள் அதிர்வினால் ஏற்படும் காலக் கணக்கு கூட ஒரு எண்ணிக்கை தானே. ஆகவே அது கூட காரண காரியம் (Causality) தான்.
மனதின் காலக்கணக்கு
காரண காரியம் (Causality) பற்றி நான் கூறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இதற்கும் மனதிற்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது. எந்த ஒரு ஜடப் பொருளும் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாததால் காரணம் முடிந்தவுடன் தான் எப்பொழுதுமே காரியம் நடக்கும். ஆனால் மனமோ எங்கு வேண்டுமானாலும் உடனடியாக சென்று விடும். இங்கு காரணம் இல்லாமல் கூட சில காரியங்கள் நடக்கும். இதனை சுலபமாக பிரிக்க வேண்டும் என்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஜடப் பொருட்கள் அனைத்தும் வேகமாக செல்ல முடியாததால் எப்பொழுதுமே நிகழ்காலத்தில் மட்டும்தான் இருக்கிறது. உங்கள் உடல் கூட எப்பொழுதுமே நிகழ்காலத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் மனம் தொடர்ந்து ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்திற்கு மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
பொருட்கள் அனைத்தும் இயற்கையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அதன் காலக் கணக்கை சரியாக தொடர்ந்து கொண்டே வரும். ஆனால் மனம் தன்னுடைய காலக்கணக்கை அதுவே முடிவு செய்து கொள்ளும். இதைத்தான் உங்கள் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் சார்பு தத்துவம் (Relativity) என்று கூறுகிறார். ஒரு அழகான பெண்ணின் அருகில் உட்கார்ந்தால் சில மணி நேரங்கள் கூட ஒரு நிமிடம் ஆகவும், சுட்டெரிக்கும் நெருப்பின் அருகில் நிமிடம் என்பது பல மணி நேரங்கள் ஆகவும் தோன்றுவதற்கு காரணம் மனம் முடிவு செய்து கொள்ளும் கால கணக்குதான். பிடிக்கிறது என்றால் அது வேகமாகவும் பிடிக்கவில்லை என்றால் மெதுவாகவும் நகரும். இதை அளப்பதற்கு உங்கள் உலகில் எந்த நாட்காட்டியும் கிடையாது. நாட்காட்டி கிடைக்காததால் இதனை எளிமையாகப் பயன்படுத்துவதற்கு நீங்கள் இரண்டு வழிகளை கண்டுபிடித்தீர்கள்.
முதல் வழி, கடந்த காலம் எதிர்காலம் ஆகிய இரண்டையும் புறந்தள்ளிவிட்டு நிகழ் காலம் என்னும் ஒரே காலத்தில் மனதை வைத்துக் கொண்டிருந்தால் உங்கள் உலகத்தில் அளக்க பயன்படுத்தும் வருடம், நாள், நொடி போன்ற அதே காலக் கணக்கை கொண்டே மனதின் காலக் கணக்கை அளந்து விடலாம். இதற்கு மனதை ஒருமுகப்படுத்துதல், Focus, Attention என்று பல பெயர்கள் உண்டு. இரண்டாவது வழி, மனதிற்கு காலத்தை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு என்பதால் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்றையும் தாண்டி காலமற்ற ஒரு நிலையில் மனதை வைத்துக் கொள்ள பழக்கப்படுத்துவது. இதற்கு தவம், தியானம், தொழுகை போன்ற பல்வேறு பெயர்கள் உண்டு. மனதை ஒருநிலைப் படுத்துவதையும், தியானத்தையும் உங்கள் உலகில் பல பேர் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது இரண்டும், சொல்லப்போனால் எதிர் எதிர் துருவங்கள். இதனால்தான் தியானத்தின்போது மனதை ஒருமுகப்படுத்த முயல்பவர்கள் அதிகப்படியாக தோற்றுப் போகிறார்கள். மனதின் காலக்கணக்கு புரிந்தால் இதனை சரி செய்யும் உபாயமும் உங்களுக்கே புரியும். இந்த இரண்டு உபாயங்களையும் பயன்படுத்தாமல் மனதை பல்வேறு கால நிலைகளுக்கு தொடர்ந்து அலைபாய விடுவதனால், உங்கள் உடல், தன்னுடைய பணியை சரிவர செய்ய முடியாமல் போகலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால், பொருள், உடல் மற்றும் மனதின் காலக் கணக்கை நீங்கள் முழுமையாக உணர்ந்து கொண்டால், காலத்தால் ஏற்படுவதாக நீங்கள் நினைக்கும் அனைத்து இன்னல்களையும் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த ஊழி அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.