கொரோனா நோய் (Covid-19) உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அதற்கான தடுப்பூசியும் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தடுப்பூசியை பற்றிய ஒரு பயம் மக்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது. அதனை தெளிவு படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசியின் வரலாற்றை இங்கே குறிப்பிட்டு கொரோனா நோய் சம்பந்தமாகவும் சில விஷயங்களை கூற போகிறேன். தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி படிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
தடுப்பூசியின் தொடக்கம்
ஆதிகாலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் அதனை சிறிது சிறிதாக புரிந்து கொள்ள ஆரம்பித்தான். அதன்விளைவாக அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. இயற்கையாக கிடைக்கும் எந்த ஒரு விஷயமும் இருவேறு பண்புகள் கொண்டிருந்தன. முதலில் இருந்தது துருவப் பண்பு (Polarized behavior). அதாவது ஒரு பொருளுக்கு உள்ளேயே இருவேறு துருவங்களாக பிரிந்த பண்புகள் கொண்ட பொருட்கள். உதாரணமாக ஒரு காந்தத்தை எடுத்துக்கொண்டால் வடதுருவம் தென்துருவம் என்று இரண்டாக பிரிந்து இருக்கும். உங்களால் வட துருவத்தையும் தென் துருவத்தையும் தனியாக பிரிக்க முடியாது. காந்தத்தை இரண்டாக வெட்டினால் அது இரண்டு புதிய வட துருவம் மற்றும் தென் துருவம் கொண்டதாக மாறிவிடும். இரண்டாவதாக சமச்சீர் அடைந்த பொருட்கள். இந்த பொருட்களுக்கு இரண்டு பண்புகள் இல்லாமல் அனைத்தும் கலந்து ஒரே பண்பாக இருக்கும். நாம் உண்ணக்கூடிய அரிசி பருப்பு போன்ற பெரும்பாலான உணவு இந்த வகைதான். சமச்சீர் அடையாமல் துருவ நிலையை அடைந்த உணவுப் பொருட்கள் விஷம் அமுதம் ஆகிய இரண்டு நிலையில் இருக்கக்கூடும் . உதாரணமாக, மனிதனுக்கு விஷமாக மாறக்கூடியது அரளிவிதை. ஆனால் அப்படி அந்த விஷத்தை சாப்பிட்டு விட்டால், விஷ முறிவுக்கான அமுதமும் அரளிச் செடிக்கு உள்ளே தான் இருக்கிறது.
அப்படியானால் அனைத்துவிதமான துருவப் பண்புகொண்ட விஷயங்களுக்கும் அதற்கு எதிர்மறையான பண்பு அந்த பொருளுக்கு உள்ளே தான் ஒளிந்து உள்ளது என்பது மனிதன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே உணர்ந்த ஒரு உண்மை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த நாகர் இனத்தைச் சேர்ந்த மக்கள், பாம்புகளை வைத்து தங்கள் தொழிலை நடத்தி வந்தனர். பாம்புக் கடிபடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அந்த விஷ முறிவுக்கு அவர்கள் கண்டுபிடித்த மருந்தும் பாம்பு விஷம் தான்! ஒரு பெண் கருவுற்று இருக்கும் பொழுது மிதமான விஷம் கொண்ட ஒரு பாம்பை கடிக்க வைத்து உடனடியாக அதற்கு மருத்துவம் பார்த்துவிட்டால் பிறக்கும் குழந்தைக்கு பாம்பு விஷம் பாதிக்காத குணம் இருந்தது. இந்தப் பழக்கத்தை இன்னும் கூட சில பழங்குடி இனங்கள் பின்பற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட பழங்கால தடுப்பு மருந்து முறையை ஆங்கிலத்தில் Inoculation என்று அழைக்கின்றனர்.
பல்லாயிரம் வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த தடுப்புமருந்து முறைகளை முறைப்படுத்தி அதில் நவீன அறிவியலை புகுத்திய பெருமை Edward Jenner எனும் ஆங்கிலேய மருத்துவரை தான் சேரும். 1700களின் பிற்பகுதியில் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற எட்வர்ட் ஜென்னர் தான் உலகிலேயே அதிக மனித உயிர்களை தடுப்பூசியின் மூலம் காப்பாற்றியவர் என்ற பெருமையும் பெறுகிறார்.
எட்வர்ட் ஜென்னரின் கண்டுபிடிப்பு
எட்வர்ட் ஜென்னர் எட்டு வயது குழந்தையாக இருக்கும் பொழுது அவருக்கு பெரியம்மை நோய்க்கான பழங்கால தடுப்பு முறையைப் பின்பற்றி சிகிச்சை செய்யப்பட்டது. தடுப்பு மருந்து என்றால் இப்போது உள்ளது போல எளிமையான ஊசி என்று நினைத்து விடாதீர்கள். முதலில் ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சிகளை வைத்து உடலின் பல்வேறு பகுதிகளில் கடிக்க விடுவார்கள். போதுமான அளவு ரத்தம் வெளியேறியவுடன் கையை கிழித்து ஒரு வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி சதையை பிளந்து அதற்குள் ஒரு காய்ந்த பெரியம்மை தோல் பகுதியை உள்ளே திணித்து கட்டுப் போட்டு விடுவார்கள். அப்படி செய்யும் பொழுது ரத்தத்துடன் அந்த காய்ந்த பெரியம்மை கிருமியானது உள்ளே சென்று சிறிய அளவில் நோயை ஏற்படுத்தி அதற்குண்டான எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கிவிடும். இந்த முறையில் தடுப்பு மருந்து கொடுத்தால், சரி பாதி பேர் தான் பிழைப்பார்கள். பாதி பேர் இறந்தால் கூட மீதி பாதி பேர் உயிர் வாழ்ந்து சமுதாயத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையால் இதனை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்கள். இந்த தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளவில்லை என்றால் அந்த காலத்தில் 20 வயதிற்கு மேல் வாழ்வதே பெரும் சிரமமான விஷயம். எட்டு வயதில் இந்த தடுப்பு மருந்தை செலுத்தி கொண்ட எட்வர்ட் ஜென்னருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் பின்விளைவுகள் ஏற்பட்டு இறுதியில் எப்படியோ பிழைத்துக் கொண்டார்.
தனக்கு ஏற்பட்ட இந்த துயரம் மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஜென்னர், மருத்துவம் பயில ஆரம்பித்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் செய்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு முக்கியமான விஷயம் அவருக்கு புலப்பட்டது. மாடு மேய்க்கும் இடையர்கள் யாருக்குமே எப்பொழுதுமே பெரியம்மை வருவது கிடையாது. பசு மாட்டின் காம்பில் பசுக்களுக்கு அம்மை நோய் (Cowpox) ஏற்பட்டு பால் கறக்க முடியாத நிலை ஏற்படும். சில சமயம் அந்த கட்டிகள் உடைந்து அதில் வரும் சீழ் மாடு மேய்ப்பவர்கள் மேலும் பட்டுவிடும். அந்த சீழ்தான் பெரியம்மை கான மருந்தாக இருக்குமோ என்று எட்வர்ட் ஜென்னருக்கு தோன்றியது. இதனை ஆராய்ச்சி செய்யும் விதமாக சிறுவர்கள் முதல் பல்வேறு நபர்களுக்கு கையில் ஒரு வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி அதில் பசுவின் காம்பில் ஏற்படும் அம்மை நோய் சீழை வைத்து கட்டி வைத்தார். சில நாட்கள் கழித்து அவர்கள் உடம்பில் பெரியம்மை கிருமியை செலுத்திய போது யாருமே நோய்வாய்ப் படவில்லை.
இதனை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்ட எட்வர்ட் ஜென்னருக்கு கிடைத்ததோ புறக்கணிப்பு மற்றும் அவப்பெயர் மட்டும்தான். யாருமே அவரது கட்டுரையை வெளியிடாததால் தனது கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக தானே வெளியிட்டு, தொடர்ந்து இந்த சிகிச்சை முறையை மக்களுக்கு செய்து கொண்டு வந்தார். இதற்காக தன்னுடைய சொந்த பணத்தில் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பல வருடங்கள் செய்து கொண்டு வந்த பொழுது சிறிது சிறிதாக மக்கள் மற்றும் அறிவியல் சமூகம் இவரது கண்டுபிடிப்பில் உள்ள உண்மையை உணர ஆரம்பித்தது. அதற்கு அடுத்த 40 வருடங்களில் பழைய Inoculation முறையை முற்றிலுமாக தடை செய்துவிட்டு எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்த Vaccination முறையை பின்பற்ற ஆரம்பித்தது.
உயிர் பறிக்கும் ஆபத்தான Inoculation முறையை எட்வர்ட் ஜென்னர் ஒழித்து விட்டாலும், Vaccination முறையிலும் தொடக்கத்தில் சில உபத்திரவங்கள் இருக்கத்தான் செய்தது. ஆரம்பகால தடுப்பூசி முறைகள் சிலவற்றை ஊசியால் செலுத்த முடியாமல் இரும்பை பழுக்க காய்ச்சி அதன் மேல் மருந்து வைத்து உடம்பில் குத்தி விடுவார்கள். சூடு பட்ட இடம் கொப்புளம் ஆக மாறி, அது சரியாகவே பல வாரங்கள் தேவைப்பட்டது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது தொடர்ந்து மெருகேற்றப்பட்டு தற்காலத்தில் கிடைக்கும் தடுப்பு மருந்துகள், ஆபத்து மற்றும் வலி இவை இரண்டும் இல்லாமல் மாறிவிட்டது. ஆனாலும் மாறாத ஒன்றே ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? மக்களுக்கு தடுப்பூசி மேல் இருக்கும் பயம். ஒரு சிறிய ஊசி போட்டுக்கொண்டால் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தால் கூட போதிய விழிப்புணர்வு இல்லாததால் உலக மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவதை இன்றும் கண்கூடாக பார்க்க முடிகிறது. தடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்வதற்கு பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொண்டால் கூட போதும். அந்த அடிப்படை விஷயங்களை படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்.