ஜூம் கலாட்டா

ஜூம் தாண்டி வருவாளா

- Advertisement -

“டேய் ரமேஷ் என்னடா இது கன்றாவி, குர்தா சட்டை போட்டுக்குனு கீழே லுங்கி கட்டியிருக்க?” என்ற அபிராமியின் கேள்விக்கு உடனே பதில்வந்தது “அம்மா, இதெல்லாம் சகஜம்.”

“டேய், இப்படி சொல்லி சொல்லியே 32 வயசாகியும் உனக்கு கல்யாணம் ஆகல. ஏதாவது சீன பொண்ணை காதலிச்சி கல்யாணம் செஞ்சாலும் பரவாயில்லைனு பார்த்தா அதுக்கு உனக்கு திறமையில்லை” அபிராமி அங்கலாயித்தாள்.

“அபிராமி, சீக்கிரம் வா. 10 மணிக்கு பொண்ணு பார்க்க வருவோம்னு சொல்லியிருந்தோம். இன்னும் 1 நிமிஷம் தான் இருக்கு”. கணவர் குணா துரிதப்படுத்தினார்.

அடுத்த சில வினாடிகளில் மடிகணினி திரையில் ஜூம் மின்னியது. சிரித்தவாறே ஜூமில் நுழைந்த அபிராமியின் முகம் உடனே சுருங்கியது. அவளது நாத்தனார் ஏற்கனவே பெண் வீட்டாரோடு ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார். இவளை திரையில் பார்த்தவுடன் சட்டென பேச்சை நிறுத்திவிட்டனர். ஜூம் திரையின் ஓரத்தில் ரெக்காடிங் என்ற வார்த்தையை பார்த்தவுடன் எப்படியாவது அந்த காணொளியை பெற்று அவர்கள் பேசியதை கண்டுபிடிக்கவேண்டும் என்று தீர்மாணித்தாள்.

“வாங்க அண்ணி, இப்ப தான் உங்களை பற்றி பெருமையா பேசிட்டு இருந்தேன்.” என்று வழிந்த நாத்தனாரை கண்டுகொள்ளாமல் “வணக்கங்க, நான் அபிராமி, இவரு என் கணவர் குணா, இது என் பையன் ரமேஷ்” என்று அறிமுக படலத்தை ஆரம்பித்தாள்.

பெண்ணின் மாமா என்ற ஜூம் பெயரில் இருந்த நபர் முதலில் பேசத்துவங்கினார். “உங்களுக்கு எளிதில் புரியனும்னு பெண்வீட்டார் எல்லாம் அவர்களது பெயரையும் உறவுமுறையையும் ஜூம் பெயராக பதிவிட்டுள்ளோம். அதுமட்டுமில்லை, இந்த காணொளி பின்னர் உங்களுக்கு பகிரப்படும்.” என்று தான் அறிவாளி என்பதுபோல பேசினார்.
அபிராமியின் நாத்தனார் “என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, எங்க அண்ணி 6 மணிநேரம் மத்தவங்க பேச்சை ஒட்டுக்கேட்டாலும் அதை ஒரு வார்த்தைக்கூட மறக்காம ஞாபகம்வெச்சிக்கும் திறமையானவங்க” என்பதை பாராட்டாக எடுத்துக்கொள்ளலாமா என்ற சந்தேகத்தோடு சிரித்து ஆமோதித்தாள் அபிராமி.

பெண்ணின் தந்தை, பெண்ணின் தாய், பெண்ணின் தம்பி என்ற ஜூம் பெயரில் இருந்த அனைவரும் தங்களது காணொளி துவக்கியிருந்தனர். ஆனால் “பெண்” என்ற பெயரில் மட்டும் காணொளி துவக்கப்படவில்லை.

அம்மா, பொண்ணை காமிக்க சொல்லுமா என்று குணா அம்மாவின் காதில் ரகசியமாக சொன்னது அனைவருக்கும் கேட்டது.

“இருடா அலையாதே. என்னங்க பெருமாள் கோயில் பி.ஜி.பி ஹால்ல தான் கல்யாணம். விருந்து ஆனந்தபவன்ல வெச்சிடனும். இதையெல்லாம் பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடியே பேசிடுவோம்.” என்று தன் முதல் கண்டிசன் போட்டாள் அபிராமி.

“தப்பா நினைச்சிக்காதீங்க. எங்களோட திட்டத்தை இப்ப திரையில் பகிருகிறேன். அதைப்பார்த்துட்டு சொல்லுங்க” என்ற குரல் வந்தது பெண் இணைப்பாளர் என்ற ஜூம் பெயர் கொண்டவரிடமிருந்து.

திரையில் சில பதாகைகள் பகிரப்பட்டன.
1) திருமணம் ஜூமில் நடைபெறும்.
2) நேரலை முகநூலில் பகிரப்படும்.
3) ஜூமில் கலந்து கொள்பவர்களுக்கு 20$ grab உணவு பற்றுசீட்டு வழங்கப்படும்
4) மொய் paylah மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்
5) பெண் வீட்டார் 50 பேரும், பையன் சார்பாக 45 பேரும் ஜூமில் அனுமதிக்கப்படுவர். மிச்சம் 5 தொழிற்நுட்ப உதவி செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும்.
6) ஜூமில் காணொளி, ஒலிவாங்கியை எப்படி இயக்குவது எனும் இலவச வகுப்பு பெண் வீட்டார் ஏற்பாடு செய்வர்.
7) திருமணம் முடிந்து குழு புகைப்படம் எடுக்கும்போது மட்டுமே விருந்தினர் காணொளி துவக்க வேண்டும்

ரமேஷுக்கு ஜூமில் தனியாக பெண்ணிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததால் அவன் திரையில் காமிக்கப்பட்ட விதிமுறைகளை கவனிக்கவில்லை.

அபிராமி “என்னங்க, ஜூம்ல 500 பேரு வரமாதிரி பெரிய அக்கவுண்ட் வாங்கிக்குங்க, 20$ பற்றுசீட்டு பத்தாது. 30$ எங்க ஆளுங்களுக்கு ஒதுக்கிடுங்க. அப்புறம் என்னுடைய முகநூலில் தான் கல்யாணம் நேரலை செய்யனும், ஜூம் பாஸ்வேர்ட் நான் சொல்லுறதுதான் வைக்கனும்”. என்று தன் பட்டியலை கொடுத்தாள்.

பெண் ஒருங்கிணைப்பாளர் குறிக்கீடு செய்து “இன்னும் 10 நிமிடத்தில் ஜூம் இலவச இணைப்பு முடிந்திடும். அதுக்குள்ள சட்டுனு பெண்ணை பார்த்திடுங்க. நான் இப்ப அவங்களுக்கு ஸ்பாட்லைட் போடப்போறேன்” என்று அறிவித்தார்.

பெண்ணின் காணொளி துவங்கியவுடன் ரமேஷ் “எனக்கு பெண்ணை பிடித்திருக்கிறது என வழக்கமாக 90ஸ் கிட் போல சொன்னான்”.

பெண்ணிடமிருந்து சிரிப்புக்கான முத்திரை ஜூமில் தோன்றியது. மற்றவர்களிடமிருந்து கைதட்டல் / பூங்கொத்து போன்ற முத்திரை வந்தது.
பெண்ணோடு தனியாக பேச ஒரு ஜூம் அறையை சில நிமிடம் ஒதுக்கச்சொல்லி ரமேஷ் கெஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் அபிராமி வாட்சாப்பில் “என் கணவருக்கு கல்யாண ஜூம் இணைப்பை தனியாக அனுப்பவில்லையென்றால் உன் ஜூமிலே முழிக்க மாட்டேன்” என்று வந்த நாத்தனாரின் மிரட்டலை சமாளிக்க தயாரானாள்.

– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….

ஜூம்-கலாட்டா-2 (19/10/2021 வெளியிடப்படும்)

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

ஜூம் கலாட்டா

உமா சங்கர்
உமா சங்கர்https://minkirukkal.com/author/umasanker/
நகைச்சுவை பேச்சாளராக வளர விரும்புபவர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர். Life Is Beautiful என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்த நினைப்பவர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -