குறிஞ்சித் தேன்

நூலாசிரியர்: ராஜம் கிருஷ்ணன்

- Advertisement -

ஆசிரியர்: ராஜம் கிருஷ்ணன்
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்
வருடம் : 2012
விலை: ₹300

இந்நாவல் முதலில் கலைமகள் இதழில் தொடராக வெளிவந்துள்ளது. 1963ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி பூக்கும் வேளையில் வண்டுகள் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் தேன் வைக்குமாம். எங்கெங்கும் பணத்தைக் குறியாக கொண்டு விளைவிக்கப்படும் தேயிலை – காபி மலைகளில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரிவதில்லை. இந்த மாற்றங்களை மனத்தில் கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை முறையாக ஆராய்ந்து ராஜம் இந்நாவலை படைத்துள்ளார். இன்று அந்த நிலைமை மேலும் மோசமாகி தான் உள்ளது என்பது வலிக்கும் உண்மை.

ஒரே இனத்திற்குள் பொருளாதார நிலையிலும் குடும்பச் சூழலிலும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட மூவரின் வாழ்க்கை கூறும் கதை. ஐந்து குறிஞ்சி( அறுபது ) ஆண்டுகள் அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் பேசும் நாவலில் நீலகிரியில் நடக்கும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களும் பின்னணியில் தொடர்கின்றன.

நீலகிரி மலையில் இருக்கும் மரகத மலை ஹட்டியில் அமைதியும் இன்பமும் சூழ வாழும் குடியிருப்பில் ஜோகி, ரங்கா, கிருஷ்ணா மூவரும் வாழ்கின்றனர். வாழ்க்கை சூழலில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் மூவருக்கும் இடையேயான உறவு, பகையாலும் பொறாமையாலும் சிக்கலுக்கு உள்ளாகிறது. அதில் இளைய தலைமுறையைச் சேர்ந்த நஞ்சன் விஜயா காதலும் சிக்கித் தவிக்கின்றது.
கதை நெடுக நெஞ்சத்தை கவ்வும் சோகம் நிறைந்திருந்தாலும் கதையின் முடிவு நம்மை ஆசுவாசம் கொள்ள வைக்கிறது.

மலையில் நடக்கும் கதை என்பதாலோ என்னவோ, கதையோட்டம் மந்தகதியிலேயே நகர்கின்றது. ஆனால் பொறுமையோடு ஆழ்ந்து படிக்கையில் ஒரு முழு மலை வாழ்க்கை வாழ்ந்த திருப்தி கண்டிப்பாய் ஏற்படும். நாவல் முழுவதும் வருகின்ற நிலக்காட்சி வர்ணனைகள் நம்மை பல இடங்களில் மெய்மறக்கச் செய்து, நீலகிரி மலையின் குளுமையையும் பசுமையையும் நுகரச் செய்கின்றன.

இந்தப் படைப்பை ஒரு அருமையான புதினம் என்பதை தாண்டி, படகர் இன மக்கள் பற்றிய ஒரு மகத்தான ஆவணமாகக் கொள்ளலாம். அவர்களது வாழ்வியலை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை அப்படியே படம் பிடிக்கிறது நாவல். மேலும் அவ்வினத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களை ஒரு சிறந்த புதினமாக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் ராஜம் கிருஷ்ணன்.இதற்காக அவர் செய்துள்ள கள ஆய்வு பாரட்டுதற்குறியது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் படிக்கையில் இன்னும் நெருக்கமாக உணர வாய்ப்புள்ளது.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -