(1) எறும்புகள்
செம்புத் துகளாய் மினுங்கி
எல்லா வெளிகளிலும்
மூர்க்கம் கொண்டு அலைகின்றன.
கள்வம் பொங்கும்
அதன் கால்கள்
காற்று புகா திசைகளிலும்
ஊடுருவித் திரியும்.
விதைப்பதுமில்லை…
அறுப்பதுமில்லை…
அதன் களஞ்சியங்கள்
நிரம்பித் தளும்பிக் கொண்டே.
மழைக் காலங்களில்
நீர்படராத
பாதாள அறைகளில்
பதுங்கி…
அவைகள்
கொள்ளைத் திட்டங்கள் வகுக்கும்.
– வசந்ததீபன்
??????????????????????????
(2) கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன
காப்பிப் பூக்கள்
பூத்திருக்கின்றன..
ஒரே கசப்பு மணமாய்
காற்றில்.
முடிவெட்டும் நிலையத்தை
மூடிவிட்டு
முத்துக் கருப்பன்
வறண்டு கிடக்கும் ஆற்றின்
நாறும் கஜகெடங்கில் மீன்பிடிக்கிறான்.
காச நோயில் அவதியுறும் கணவனையும்
விபரமறியா பச்சிளங் குந்தைகளையும் நினைத்து
பஞ்சுப் பேட்டைகாரனின் இச்சைக்கு
அடிபணிகிறாள் செல்வி.
குரங்கு வித்தை காட்டி
செத்துப் போன குரங்கின் ஞாபகத்தில்
பாழடைந்த வீட்டுத் திண்ணையில்
புலம்பிக் கொண்டிருக்கிறான்.
தங்கம் விலை
ஏறிக் கொண்டே போவதாய்
மளிகைக் கடைக்காரர் தொலைக்காட்சிப் பெட்டி
உளறிக் கொண்டிருக்கிறது.
நான்கு பாட்டில் பீர் குடித்ததாய்
வெள்ளையப்பன் கத்திக் கொண்டு
வெறும் அண்டர்வேரோடு
முட்டுசந்து வழியாக ஓடுகிறான்.
வெயிலில் வெந்து வெந்து
வைரங்களாகின்றன கூழாங்கற்கள்.
– வசந்ததீபன்
??????????????????????????
(3) உதிர் சிறகுகள் பாடுகின்றன
காடுகளுக்குள்
நெடுங்காலமாய்
சிறகுகளை சேகரித்தபடி
சிற்றெறும்பாய் திரிகிறேன்.
பல வண்ணங்கள்..
பலவித வடிவங்கள்..
மாமிசப் பட்சினி..
தானியப் பட்சினி..
கோபம் கொண்டவை..
சாது மனம் உள்ளவை..
இனிமையாகப் பாடுபவை..
எரிச்சல் ஊட்டுபவை..
தூங்கிக் கொண்டிருக்கலாம்..
விழித்து
சோம்பல் முடிக்கலாம்..
நீரில் முங்கிக் குளிக்கலாம்..
நனைந்த சிறகுகளை
உலர்த்தலாம்..
அடை காக்கலாம்..
குஞ்சுகளுக்கு
உணவு ஊட்டலாம்..
எதிரிகளோடு போரிடலாம்..
வேட்டைக்காரனின்
அத்துமீறலில்
வீழ்ந்திருக்கலாம்.
கூடு கட்டிக்கொண்டிருக்கலாம்..
ஜோடியோடு சுகித்திருக்கலாம்..
களித்துச் சிறகடித்து
ககனப் பெருவெளியில்
துள்ளிப் பாய்ந்து கொண்டிருக்கலாம்..
இறந்து போயிருக்கலாம்…
அந்தச் சிறகுகள்
வனாந்தரங்களின்
மிகு வலியையும்
தீராத் துயரங்களையும்
ஒலிக்கத் தொடங்கின
இசைக் கோர்வைகளாக.
– வசந்ததீபன்
??????????????????????????