அந்த ரெட்டைக்குதிரைகள் பூட்டிய ரதம் எதிரே நின்று வளைத்துக் கொண்ட வீரர்களால் குலுங்கி நின்றது. ரதத்தினுள்ளேயிருந்தவளின் கையிலிருந்த தலைக்கோல் எகிறி எதிர்புறமாய் அமர்ந்திருந்தவளின் மடியில் விழுந்தது .
“மல்லண்ணா!என்ன ஆயிற்று “
ரதசாரதி விடையேதும் பகரவில்லை ஆனால் புரவிகளின் குளம்படியோசை நெருக்கமாய்க்கேட்டது.
“ஏய்! கீழேயிறங்கு”
யார் யாரை அதட்டுகிறார்கள்? குரல் மிக அருகில் கேட்டது கூடவே மல்லண்ணா குதிப்பதும் குதிரைகள் கனைப்பதும் …
“அம்மா! இருங்கள்! என்னவென்று பார்க்கிறேன்.”
என்று ரதத்திலிருந்த ஒருத்தி மூடுதிரையில் கைவைக்கவும் வாளின் முனையொன்று அதை விலக்கவும் சரியாகவே இருந்தது.
” ராமத்தேவா! அந்த ஆடலரசி இங்கேதானிருக்கிறாள் “
அடுத்தவன் கொக்கரிக்க வெகுவேகமாய் ஒரு வேலொன்று பாய்ந்து வந்தது. மல்லன் கழுத்தைப் பிடித்திருந்தவனின் கரத்தினை பிளந்து ஊடுருவி மூடுதிரையைப் பற்றிக்கொண்டு
பேசியவனின் தோளைக் கிழித்துக் கொண்டு நின்று அதிர்ந்து ஆடியது.
“ஹா”
“ஆ…அம்மா “
“அய்யோ”
இந்தக் கூக்குரல்களடங்குமுன்னே மேலும் இரு குறு வாட்கள் சுற்றி நின்ற இருவர் மீது பாய்ந்து குருதியாற்றுக்கு வழி வகுத்தன.
“ஏ…ஏய்! யாரது? ஒளிந்து நின்று சண்டை போடுகிறாயா பேடி “
“பெண்ணை வளைத்து நிற்கிற உங்களைவிடவா நான் பேடி”
குரலோடு குளம்போசையும் நெருங்கியது.
செம்பழுப்பு நிற புரவியின் மீது வாலிபன் ஒருவன் அமர்ந்திருந்தான். இருளில் சரியாகப் புலப்படவில்லையெனினும் அந்த உயரமும் தோள்களும் அமர்ந்திருந்த தோரணையும் தேசல் நிலவொளியில் வரிவடிவமாய் புலப்பட்டது. தலைக்குழல்களை காற்றிலாடி அலைந்தன.
நால்வர் பலத்த காயத்துடன் துடிக்க எஞ்சிய நால்வரை அந்த இளைஞனின் நீண்டவாள் பதம் பார்த்தது.
மல்லண்ணாவின் உதவியோடு சாலையோரக் காட்டுக் கொடிகளை அறுத்து மரத்தோடு கட்டிப்போட்டான்.
அதற்குள்ளாக பெண்களிருவரும் ரதத்தை விட்டிறங்கியிருக்க நிலவொளி இப்போது பூரணமாக அடையாளம் காட்டியது.
சந்திரனைப்பழிப்பது போல சந்தனத்தில் தோய்த்தெடுத்து வடித்த முகம்.செண்பக மலர் புனைந்த கரிய குழல் அதில் ஒளிரும் ஆபரணங்கள்.செவ்வாழைத்தண்டாய் கழுத்து. அதையொட்டிய கழுத்தணிகள். சீவி வளைத்த இளங்குருத்து மூங்கிலாய் தோள்கள் . விம்மித் தணியும் செங்கமலமொக்குகளாய் நெஞ்சகம். சரிந்து துவளும் மாதவிக்கொடியாய் சிற்றிடை . சிற்றிடையில் தவழும் மேகலை. கூம்பிக் குவிந்த வாழையாய் செம்பஞ்சு பூசிய பாதங்கள் அதில் சப்திக்கும் நூபுரங்கள்…
இளைஞனின் பார்வை மீண்டும் அவளின் கருவண்டு விழிகளைத் தீண்டியது.அஞ்சனமிட்ட நயனங்களும் அதற்கு குடைபிடித்த இமைகளும் சின்னஞ்சிறு எள்ளுப்பூவாய் நாசியும் இருப்பதே தெரியாமல் வடிவாய் அமைந்திருந்த நீரோட்டமான இதழ்களும்…. இளைஞனின் மனதில் பெரும் போராட்டம். இவளின் விழிகளில் காணும் ஈரம் அதிகமா ? இதழ்களிலா…?
மல்லண்ணா தொண்டையை கனைத்துக் கொண்டார். சுயநினைவு வந்தவனாய்…
“யார் நீங்கள்? “
“என் பெயர் மல்லண்ணா. ரதசாரதி. இவர்கள் சித்ராங்கதா தேவி. “
“சித்ராங்கதா தேவி”அவன் மீண்டும் சொல்லிப்பார்த்து யோசித்தான் அதற்குள் மற்றொரு பெண்ணான பூமணி
“இன்று அரசரிடமிருந்து தலைக்கோலை பெற்ற ஆடலரசி “
“ஆ…நினைவுக்கு வந்து விட்டது.இந்நேரத்துக்கு எங்கே பயணம்.? “
“இன்று மாலையில் தான் தலைக்கோல் பெறும் விழா முடிவடைந்தது. இரவு தஞ்சையில் தங்கி விட்டுத்தான் திருவாரூர் பயணிக்க இருந்தோம். ஆனால் இவருடைய சிற்றன்னை மிருதை க்கு ஆரோக்கியம் குறைவாகி ஆதூரசாலை*யிலிப்பதாக சேதிவரவே இரவேயானாலும் புறப்பட்டோம். அதற்குள்ளே இப்படியாகி விட்டது.
இப்போதெல்லாம்
சோழநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பின்றி போய் விட்டது.”
“மன்னிக்க வேண்டும் பெண்ணே! இவர்கள் சோழ படைவீரர் போர்வையில் உள்ள புல்லுருவிகள்.சாளுக்கியர்கள்.
ராஜேந்திர சோழன் சளுக்கிய சத்யாச்சிரயனை வென்று நாடு திரும்பியது முதல் ஆங்காங்கே இப்படி குழப்பத்தை விளைவிக்கின்றனர். சோழ அரசாங்கமும் விழித்துக் கொண்டு பல்வேறு விஷயங்களை கவனத்தில் வைத்து பாதுகாப்பை இறுக்குகிறது.ஆனாலும்…இவ்வாறு விரும்பத்தகாதவை நடந்து விடுகின்றன.”
“தாங்கள் யார்? தங்களின் ஊர் பெயர் எதுவும் கூறவில்லையே”
“சொல்லிக் கொள்ளும் படியேதுமில்லை. சாளுக்கியப் போரில் இளவரசரின் அருகில் நின்று போரிடும் பாக்யம் கிடைத்தது.சோழ வீரன்.பெயர் விஜயவிடங்கன்”
“சரி நாழிகையாகிறது.புறப்படுங்கள். நானும் உடன் வருகிறேன்.”
“அய்யா! இவர்கள்.?”
“கவலை வேண்டாம்.போகும் வழியில் யாரேனும் தென்பட்டால் விவரம் கூறிவிட்டுப் போவோம். இல்லையெனில் அரைக்காத தூரத்தில் அதிகாரிச்சி* ஒருவரின் இல்லமொன்று உள்ளது அங்கே சொல்லலாம். வீரர்கள் கவனித்துக் கொள்வார்கள்.”
இத்தனை சம்பாஷணைக்கும் அந்தச் சித்ராங்கதா இதழ் பிரித்தாளில்லை.மூவரும் தேரிலேற ஒரு நொடி அந்த வாலிபனை ஏறிட்டு பார்த்தாள் பதுமை. அவனுடைய பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் அமைய சட்டென்று இமைக்குடைகளை தழைத்துக் கொண்டாள் ஆடலழகி.
அவ்விளைஞன் குதிரையில் தொடர்ந்து வர ரதம் முன்னேறியது.
அமர்ந்த சித்ராங்கதாவின் மனமோ பின்னால் பாய அவன் இதயமோ முன்னால் ஓடியது.
விடிய இரு நாழிகையிருக்கையில் ஊர் வந்து சேர்ந்தனர்.
பூமணி “சற்று ஓய்வெடுத்து செல்லலாம் வீரரே “
எனவும் அவன் தயங்க சித்ராங்கதாவின் நயனங்கள் அவனிடம் இறைஞ்சின.
மறு நொடியே தன் புரவியை மல்லண்ணாவிடம் ஒப்படைத்தவன் பூமணியைத் தொட.ர்ந்தான்.
பொழுது நன்கு விடிந்தும் கூட உறங்குபவனை இடையூறு செய்யாமல் சித்ராங்கதாவும் பூமணியும் மிருதையை நலமறிந்து வந்தனர்.
மிருதையிடம் தலைக்கோலை தந்து புன்னகையோடும் பெருமிதத்துடனும் ஆசி பெற்றாள்.
“சித்ராம்மா…எப்படியோ உன் தாயின் கனவை நிறைவேற்றி விட்டாய்”
“சிறியதாயே! தாயின் கனவா?அதென்ன? “
“ஆம் சித்ரா! நம் போன்றோர்களுக்கு தலைக்கோல் என்பது மிகப் பெரிய கௌரவம்.அது தனக்கு கிடைக்காமற் போகவும் என்னை…நானேனும் பெறுவேன் என்று மிகவும் எதிர்பார்த்தாள் அக்கை. ஆனால் நானோ காதல் வசப்பட்டு என்னவரை மணம் செய்து கொண்டு அவர் இல்லத்தரசியாகி இந்த வாழ்விலிருந்தே ஒதுங்கி விட்டேன்.அவள் கனவு உன் மூலம் நிறைவேறி விட்டது.”
கையிலிருந்த தலைக்கோலை நோக்கின அஞ்சனவிழிகள்.
“இது குறித்து அறிவாயா மகளே? “
தெரியாது என்பது போல் தலையசைத்தவளின் கேசத்தை வருடிய மிருதை
“வெற்றி கொண்ட மாற்று அரசர்களின் வெண்கொற்றக் குடையின் காம்பை ஏழுசாண் வெட்டியெடுத்து தங்கத்தகட்டில் இதனை மூடுவர்.மேலே நவமணிகளும் அலங்காரமாய் பதித்து பட்டுக்குஞ்சலம் கட்டி அரண்மனையில் வைத்து பூசை செய்வர்.
அரங்கேற்ற நாளன்று இதை புனித நீரில் அபிஷேகம் செய்வித்து மந்திரிபிரதானியர் சேனாபதிகள் முக்கியப் பிரமுகர்கள் உடன்வர பட்டத்து யானை மீது வைத்து தலைக்கோல் நகர்வலம் வரும். இது எதிர்புறமாக அழகிய இருக்கையில் நடுநாயகமாக வைக்கப்பட்டிருக்க எதிர் முகமாக அரங்கேற்றம் நிகழும். பின்னர் அதை மாலை மரியாதை பரிசில்களோடு ஆயிரம் பொன் வைத்து அந்தப் பெண்ணிற்கு தருவார்.
இது மிக உயரிய விருது. ஆனால்…..
நம் ஆடுமகளிர் அந்த மாலையை கடைவீதியில் விற்று யார் அதிகம் பொன் தருகிறார்களோ அவனுடன் கூடுவர்.
ஆமாம் அக்கை……..”
“இன்னும் தாயிடம் போகவில்லை. நேரே இங்கு தான் வந்தேன். அவரால் என்னை விலைக்கு விற்க முடியாது. என் உள்ளமும் உடலும் ஒருவருக்கே சொந்தமாகும். தங்களைப்போலவே நானும் வாழ விரும்புகிறேன் சிறிய தாயே “
“ஆகட்டும் குழந்தாய்! நம் எண்ணங்களே வாழ்வை வடிவமைப்பவை! எண்ணம் போல் வாழ்வாயாக. நான் வணங்கும் மாதொருபாகன் என்றென்றும் உன்னோடிருப்பான்.”
மிருதை சற்று நேரத்திலேயே ஆயாசப் பட இவர்கள் புறப்பட்டு விட்டனர்.
அவர்கள் வந்தபின்பு உணவருந்தி விட்டு அவளின் சிற்றன்னை நலம் விசாரித்தவன் விடைபெற முனைந்தான்.
சித்ராங்கதா அந்த அறையின் யவனப்பதுமையருகே நின்று
“மிக்க நன்றி வீரரே! எம் மானம் காத்தீர் “
“இதற்கு எதற்காக நன்றி? இது சோணாட்டு வீரனின் கடமை! “
“ஆனாலும்….”
“இல்லை தேவி! அரசரிடம் தலைக்கோல் விருது பெற்ற ஆடலரசியை துன்பத்தினின்றும் காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நான்தான் நன்றி பகர வேண்டும். ஆட லரசியை கண்ணால் காண்பதே பாக்யமல்லவா “
சித்ராங்கதா புன்னகைத்தாள்.
“நீங்கள் என் நடனத்தைப்பார்த்தீர்களா? “
“இல்லை தேவி நான் ஒரு காரியமாக வெளியூர் போயிருந்தேன் இரவு ஏறிய வேளையில்தான் தஞ்சைக்குத் திரும்பினேன். தங்கள் நடனத்தை காணும் அதிருஷ்டத்தை தவற விட்டு விட்டேன். .தாங்கள் தேவாரப் பதிகத்தை நடனமாக்கி அரங்கேற்றப் போவதாக மக்கள் பேசுவதைக் கேட்டேன். அதற்கு வருவேன். அழைப்பீர்கள்தானே! “
அவள் தலையசைக்க அவன் விடைபெற்று
மாலையே புறப்பட்டு விட்டான்.
சித்ராங்கதாவுக்குத்தான் மனம் ஒரு நிலையில் இல்லை . உணவிலோ உறக்கத்திலோ ஒப்பனையிலோ ஏன் நடன அப்பியாசம் கூட பிடிக்காமல் போய்விட்டது.
முப்பொழுதும் விஜயவிடங்கனின் வீரம் தவழும் வதனமே நினைவிலெழுந்து படுத்தியது..வெற்றித்திருமகள் எப்போதும் அவனுடனே வாசம் புரிகிறாள் என்று உணர்ந்து பெருமூச்செறிந்தாள். ‘இத்தகு வீரர்களால்தான் சோழம் புகழுச்சியில் நிற்கிறது போலும்.
பூமணிக்கு தலைவியின் மனம் புரிந்தது. ஆனாலும் நிதர்சனத்தை உணர்த்தி விட வேண்டுமல்லவா
“அம்மா! தாங்கள் சரியாக உண்ணுவதுமில்லை. உறக்கம் கொள்வதுமில்லை. தேவாரப்பதிகங்களை நாட்டிய நாடகமாக்கி இளவரசர் ராஜேந்திர சோழரின் ஜென்ம நட்சத்திர நாளில் மேடையேற்றப் போவதாகக் கூறி பலநாட்களாகி விட்டன.நீங்கள் ஒத்திகை பார்க்கவுமில்லை.தாயே! நாம் தளிச்சேரி பெண்கள்.இதை மறக்கலாகுமா? அந்த இளைஞரை எண்ணி உருகுவதும் தகுமா? உங்கள் கனவு நிறைவேறுமா “
“பூமணி! நான் என் செய்வேன். என் மனது அவரிடமே நதியலை ஒதுக்கும் சருகிலையாய் நகர்ந்து ஒதுங்குகிறது.அவரிடம் என் மனம் அபயம் கொள்ளவே ஏங்குகிறது. அவரை வரித்து விட்டேன் மனதால். அவரைத் தவிர யாரையும் வேண்டேன். தளிச்சேரி பெண்தான். கற்பிலும் காதலிலும் நானொன்றும் குறைந்தவள் இல்லை என் சிற்றன்னை மிருதையைப் போல கற்பை போற்றி காதலனோடு காலம் முழுதும் வாழ்வேன். மனதில் நினைத்தவனையே வரித்து மணமுடிப்பேனடி. இது என் காற்சதங்கையின் மீது சத்தியம்.”
“அம்மா உங்கள் மனம் போல நடைபெறட்டும் இப்போது உணவருந்த வாருங்கள்”
“பூமணி! அவர் மீண்டும் வருவார் தானே? என்னை மறந்து விட மாட்டார்தானே “
“நிச்சயம் வருவாரம்மா “என்று பதிலிருத்தவள் தியாகேசப் பெருமானுக்கு அவசர வேண்டுதலையும் வைத்தாள்.
தஞ்சையிலிருந்து செய்தி வந்தது. தலைக்கோல் பெற்ற ஆடலரசி எப்போது தஞ்சை வந்து தேவாரப் பதிகத்திற்கு அபிநயிக்கப்போகிறாள் என?
பெண்ணவளோ ஆட்டத்தையே நிறுத்தி விட்டாளே. ஒரு சந்நியாசினி போலன்றோ வாழ்கிறாள்.
அன்று தஞ்சைக்கு மறுபடி* அனுப்பியே தீர வேண்டும் சித்ராங்கதா ஆலயத்திற்கு புறப்பட்டாள்.
சுவாமியை வணங்கியபின்பு நந்தவனம் புகுந்து மகிழமரத்தடியில் அமர்ந்தாள். ஏதேதோ எண்ணங்கள்.
“தேவி”
அவள் செவிகளில் எட்டவில்லை
“சித்ராதேவி”
அழுத்தமாய் அருகினில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு ஏறிட்டாள்.
“தாங்களா?”
“நானேதான்”
“ப்ரபோ”
“தேவி! ஏனிப்படி மெலிந்து வதங்கிக் கிடக்கிறாய்.என்னாயிற்று”
“ப்ரபோ “என்று உடலும் இதழும் நடுங்க அழைத்தவள் கதறினாள். அவளை தன்னோடு சேர்த்தாற் போல் அணைத்துக் கொண்டவன் முதுகைத் தடவித்தர விம்மல் வெடித்தெழுந்தது.
ஆசுவாசப்படுத்தி இயல்புக்கு கொண்டு வந்தவன் அவள் முகாத்தை நிமிர்த்தினான்.
“தேவி! ஒரு வீரனின் மனைவி அழலாமா ?”
“இந்தத்தளிச்சேரிப் பெண்ணுக்கு அத்தனை பாக்யமா “
“தளிச்சேரி பெண் என்றெல்லாம் பேசலாமா? தவறல்லவா “
“உலகம் ஏற்குமா “
“உன்னை நானும் என்னை நீயும் ஏற்றால் போதாதா”
அவனை ஏறிட்டு ப் பார்க்க அவளை கைத்தாங்கலாய் சந்திக்குள் அழைத்து வந்தவன்
“இதோ இந்த தியாகேசரே சாட்சி “என்றவன் தன் கழுத்திலிருந்து ரத்னம் பதித்த ஆரத்தை கழற்றி அவள் கழுத்திலணிவித்தான்.
“இப்போது மகிழ்ச்சி தானே! இனி ஒருபோதும் கவலை படவே கூடாது. உன் சிற்றன்னை நலம்தானே? இனியேனும் தேவாரத்திற்கான ஒத்திகை நடக்கட்டும். ஞானசம்பந்தர் பதிகங்களுடன் திருவாசகத்தையும் இணைத்து கொள்.திருவாசகத்திற்கு உருகாதோர் யாரும் உண்டோ? அந்த நாட்டிய நாடக முடிவில் உனக்கொரு சந்தோஷ ஆச்சர்யம் காத்திருக்கிறது.”
“…..????”
“சரி நாழிகையாகிறது .வா போகலாம். பூமணி …!பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறக்கவே உள்ளன தாமே “
“ஆம் வீரரே. வீரர்கள் மட்டுமின்றி அதிகாரிச்சி சிவநங்கையும் அவ்வப்போது வருகிறார். “
“ஏதும் தேவைப்படின் சிவநங்கைக்கு செய்தி அனுப்பி விடு. வருகிறேன்.”
புரவி பறந்து விட்டது. நடந்ததெல்லாம் உண்மையே என்பது போல் ரத்தினஹாரம் ஒளிர்ந்தது.
சிலநாழிகை சமயமும் உறங்கும் நேரமும் தவிர சித்ராங்கதா நடன ஒத்திகையிலேயே மனதை செலுத்தினாள். மனங்கவர்ந்தவன் சொல்லை மீற முடியுமா?
இனி அவனுடையை இதய அரங்கில் மட்டுமே தன் நாட்டியமென முடிவு செய்தாள் சித்ராங்கதா.
பெருவுடையார் கோயில் அரங்கம் மாவிலைத்தோரணங்களோடு மங்கல அலங்காரங்களுடன் பேரரசரை வரவேற்க தயாராக இருந்தது. மன்னன் கோயிலில் வைத்து பூரண கும்பத்துடன் மாலைமரியாதை செய்து தன்னை வரவேற்பதை விரும்புவதில்லை. சாயங்கால பூசைக்கு வந்து வணங்கிவிட்டு சித்ராங்கதாவின் நாட்டிய நாடகத்தை காண வருவதால் கூட்டம் அலைமோதியது.
இன்று
இளவரசர் ராஜேந்திர சோழனின் ஜென்ம நட்சத்திரம். விடியலிலிருந்தே பிரத்யேக பூஜைகள் நடந்த வண்ணமிருந்தன.
அழகுக்கே அழகு செய்வது போல் நடன ஒப்பனையில் பௌர்ணமியாய் ஒளிர்ந்தவளின் நயனங்கள் தன்னவனுக்காக ஏங்கித் தவித்தன.
திரை உயர்த்தப்பட்டு சித்ராங்கதா ஆட்டத்தைத் துவங்கி விட்டாள். வினாயகர் துதி முடிந்து ஞான சம்பந்தரின்
“தோடுடைய செவியனை“ஆரம்பித்து அபிநயம் பிடிக்க கூட்டம் உருகியது.ராஜராஜ சோழனின் கண்களும் பூத்து வந்த கண்ணீரை அணை கட்டின.
அடுத்து
நாவுக்கரசரின்
“மாசில் வீணையும் மாலைமதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்“
என்பதைத் தொடர்ந்து
“பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம் என்றெடுத்து‘
எனப் பாடலைத்துவங்க உருகாத மனமும் உருகத் துவங்கியது.
அவளின் மனமோ மலர்ந்தது. ஆம். அவளின் மனங்கவர்ந்த கள்வன் ராஜராஜர் இருக்கையின் பின்னே நின்றிருந்தான் குறும்புப் புன்னகையோடு.
விழிகள் நான்கும் சங்கமித்துப் பின்னர் விலகின.
பாடல் முடிந்து அடுத்தது துவங்கும் வேளையில் “இளவரசே! “
இளவரசர் வந்து விட்டார்”
“இளவரசர் வாழ்க”
“ராஜகேசரி அருண்மொழிவர்மன் கேரளாந்தகன் திருமுறைகண்ட சோழன் பேரரசர் ராஜராஜர் திருபுவனமாதேவியாரின் அருந்தவப்புதல்வர் ராஜேந்திர சோழர் வாழ்க வாழ்கவே! “
என்ற கட்டியக்காரனின் கூற்று செவியில் விழ ஆவலோடு இளவரசரைப்பார்க்க திரும்பியவளின் நயனங்கள் இமைகொட்டாது சமைந்தன.
அங்கே ஆலயபட்டர் தந்த மாலையை ஏற்றுக் கொண்டது விஜய விடங்கனின் கழுத்து. பரிவட்டமும் சூட்டப்பட சித்ராங்கதா சிற்பமாகிப் போனாள்.
தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி உடை மாற்றும் மறைவுக்குள் ஓடி சுவரோடு சாய்ந்தாள்.
“அவர் இளவரசரா? “வாய் வழியே வெளிவரத் துடித்த இதயத்தை அழுத்திக் கொண்டவளாய் கண் செருகி நின்றாள். எத்தனை நேரம் நின்றாளோ…யுகங்களோ? கணங்களோ? வானத்துச் சூரியனை அணைக்கத் துடித்த தன் அறியாமையை நினைத்து ஊமையாய் அழுதாள். அதற்குள்ளாகவே பூமணியும் மற்றொரு சேடிப் பெண்ணும் தேடிக் கொண்டு வந்துவிட உணர்வுகளை மறைத்துக் கொண்டாள்.
யாழும் முழவும் பஞ்சமுக வாத்யமும்
மத்தளம் கிடுகட்டி துடியும் தப்பும் கூட முழங்க ஆரம்பித்தன.
“”முன்னம் அவன் நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆருர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே! “
பாடல் முடிய கண்ணீர் சொரிய கைகூப்பி சபையை வணங்கி நகர்ந்தாள்.
கூட்டம் தன்னிலை மறந்து கரகோஷம் துறந்து மயங்கிப்போய்க் கிடந்தது. சில நொடிகளின் பின்னே கைத்தட்டல் வானைப் பிளந்தது.
யாரையுமே அவள் சந்திக்கும் மனநிலையில் இல்லை வேகமாக ஒரு சால்வையை தலையோடு போர்த்திக் கொண்டு வெளியேறி விட்டாள். மனம் ஒரு நிலையில் இல்லை.
ஆலய மதில்சுவரையொட்டினாற் போல் அமர்ந்து விட்டாள். பாதம் அடியெடுத்து வைக்கவே மறந்துபோய் பின்னிக் கொண்டது.இருளாயிருந்தது இந்தப்பக்கம்.
ஆடலரங்கமும் மேடையும் ஒளி வெள்ளத்திலிருக்க அதற்கு எதிர்ப்புற பகுதியான இங்கோ இருள் கவிந்திருந்தது.
யாரோ பேசுகிற சப்தம் கேட்டது. இவளுக்கு சிந்தையில் சுற்றுப்புறமேதும் பதியவில்லை. எப்படி ஆடி முடித்தாளோ…அந்த ஆடவல்லானுக்கே தெரியும்.
“குட்டிப்புலியைச் சாய்த்து விட வேண்டுமடா இன்று. குட்டிப்புலியை கொன்று விட்டால் கிழப்புலி ராஜராஜனுக்கு நெஞ்சுவலியே வந்துவிடும். திம்மா! நாட்டியக்காரியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கிறான் ராஜேந்திரன். அவனுக்கு அந்த நடனக்காரியிடம் மோஹம். அவளை தனியே சந்திக்க நிச்சயம் வருவான் அங்கே வைத்து அவன் கதையை முடிப்போம். அல்லது கூட்டத்தின் நடுவே ஊடுருவி குழப்பம் விளைவித்து நெருங்கிநின்று முடிப்போம்.அவன் பிறந்த நாளே இறந்த நாளாகட்டும். கிழவனுக்கு வேளக்காரப்படை காவல் வரும். ராஜேந்திரன் தனியேயிருப்பான். முடித்திடுவோம் இன்று “
அவர்கள் வேகமாக அரங்கை நோக்கி நடக்க
முதலில் கவனிக்காதவள் பிறகு தான்கவனித்தாள். அட பாதகர்களா…கொலைகார பாவிகளா …என்றெண்ணியவள்
தன்னவனைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவளாய் வேகமாய் ஓடி வந்தாள்.
எதிரே வந்த பூமணி தாங்கிப் பிடித்தாள்.”எங்கே போய் விட்டீர்கள் அம்மா! அரசர் தங்களைகாண விரும்பினார்.
இளவரசரும் தேடினார்”
“என்னாயிற்று. ஒரு மாதிரியாக இருந்தது. காற்றாட வெளியே நிற்க வந்தேன். இளவரசர் எங்கே? அவரிடம் ஒரு எச்சரிக்கை தர வேண்டும்”
“என்னோடுதான் வந்தார்.அரசருக்கு அவசர அழைப்பு வரவே புறப்பட்டு விட்டார். நாளை அரசவைக்கு வரும்படி கூறினார்.”
“இருக்கட்டும் இளவரசர் எங்கே? அவரும் புறப்பட்டு விட்டார்தானே? “
“இல்லை அம்மா அவரை இங்கிருந்து நம்மை மரியாதையோடு வழியனுப்பும் படி அரசர் கூறிச் சென்றார்.நம்மை காப்பாற்றியவர் தாம்அம்மா இளவரசர் அம்மா. நான் வேறு அதிகப் பிரசங்கித் தனமாகப்பேசிவிட்டேன். ஆயினும் பொறுமையாக விடைதந்தார் இல்லையாம்மா “
“பூமணி! வாயை மூடிக்கொண்டு என்னை அவரிடம் அழைத்துச் செல் “
“சரி அம்மா! இதோ …அவரே….”
” நீ எங்கே போய்விட்டாய்”
“ஐயனே! அதிருக்கட்டும் . நீங்க. புறப்பட்டு செல்லுங்கள். கவனமாகவுமிருங்கள்”
“சித்ரா “
“ஐயனே! உங்களைச் சுற்றி சதிகாரர்கள் சூழ்ந்துள்ளனர். ஜாக்ரதையாக அரண்மனைக்கு சென்று பாதுகாப்பாயிருங்கள். “
“சித்ராங்கதா தேவி! அரச குடும்பத்தில் பிறந்த எனக்கு சதிகளும் சதிகாரர்களும் என்ன புதிதா? என்ன சொன்னாய்? நான் அரண்மனைக்குள்ளிருக்க வேண்டுமா? பெண்ணே உன் அன்பனின் வீரத்தையே சந்தேகப்படுகிறாயா “
“அதல்ல ப்ரபோ! வீரத்தோடு விவேகமும் வேண்டும் அரண்மனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமிருக்கும்.இது வெட்டவெளி கூட்டம் வேறு. எதிரிகள் ஊடுருவுவது சுலபம்.நான் என் காதால்கேட்டேன். “
“சரி சரி …உன்னை வழியனுப்பி வைத்…..”
“வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். தயைகூர்ந்து நான் சொல்வதை”
கூட்டமாய் ஏழெட்டு பேர் நெருக்கி வர பெண்ணுக்கு மனம் தடதடத்தது. ஆபத்து நெருங்குகிறது என்று உள்ளுணர்வு கூக்குரலிட்டது.சுற்றுமுற்றுமாய் விழிகளையோட்டினாள்.ஏதும் புலப்படவில்லை.
அவன் கைகளை இறுகப் பிடித்திருந்தாள். செவியோரம் விஷ்க் கென்ற ஒலி உணரவும் அனிச்சையாக அவனை இழுத்து பின்னால் விட்டது கைகள்.உடல் அவனோடு இழைந்து மறைத்தபடி முன்னால் வந்தது. பளபளவென்ற கட்டாரியொன்று அவளின் மார்பகத்தில் பாய்ந்து குருதி கொட்டியது. இளவரசன் இதைசிறிதும் எதிர்பார்க்கவில்லை.
“வீல் ‘என்ற பூமணியின் அலறலும்
“அம்மா”என்ற ஓலமும்
தடதடவென காலடிகளின் ஓசையும் “பிடிபிடி”
“விடாதே”
“கொல் அவனை “என்ற சப்தங்களுமெழ கட்டாரி வந்த திசை நோக்கி ஓட யத்தனித்தவனை அவளின் வளைக்கரம் பற்றிக் கொண்டது.
“தேவி…ஒன்று மில்லை! வைத்தியரிடம் போய் விடலாம்.”
“ப்ரபோ! உங்கள் உயிரைக்காக்கிற முயற்சியில் என் உயிர் போனாலும் சந்தோஷமே! “
“அப்படிச் சொல்லாதே “
“அதிலும் உங்கள் அன்புக்குரியவளாய் உங்களின் மனையாட்டியாய் ..இந்த க்ஷணம் உங்கள் மடியில் என் உயிர் பிரிந்தாலும் கவலையில்லை. ..”
அவளின் இமைகள் மூடிக் கொள்ள இளவரசன் கன்னங்களில் அடத்து அவளை ஸ்மரணைக்கு வரச் செய்தபடியே கட்டாரியைப் பிடுங்கியெடுக்க வலியில் முகம் சுருக்கினாள்.கட்டாரியை எடுத்ததுமே பொங்கிய குருதியை சால்வையால் இறுக அழுத்திப்பிடித்தான்.
“இ. ள..வரசே…! போய் வருகிறேன். அடுத்த ஜென்மம் …ஒ..ஒ. ஒன்றிருப்பின் மீண்டும் பிறவி ….யெ…யெடுப்பேன். மா….மா..மாலை சூ…ட்டு…வேன் எப்போதுமே உ….ங்களோடும் இந்த சோ…சோழதேசத்திலும் கலந்….தேயி…”
அவள் தலை தொய்ந்தது.
இளவரசன் அவன் முகம் பார்த்திருந்த விழிகளை மூடினான். நெற்றியில் முத்தமிட்டான்.
சோழதேசத்தின் அரியணை இப்பேர்ப்பட்ட தியாகத்தினால் தான் நிலைத்து நிற்கிறது என்றென்றும் ….
அந்த மாவீரனின் கண்கள் கலங்கின. அந்த வீரமிகு விழிகளின்றும் ஒரு துளி நீர் அவளின் அதரங்களை முத்தமிட்டது.
**************
இந்த சிறுகதையை புனைய உதவிய நூல்கள்
அணுக்கன் வாயில்”
எழுதியவர்
திரு ரெங்கநாதன் ஞானசேகரன்அவர்கள்
சோழர்கால இசைக்கருவிகள்”
எழுதியவர்
மு. கயல்விழி அவர்கள்.
தமிழ்த்துறை
உதவி பேராசிரியை
“யாவரும் கேளிர்”
எழுதியவர் இரா. நாகசாமி அவர்கள்
@!@!@!@!@!@!@
*ஆதூர சாலை:
மருத்துவ மனை
*மறுபடி:
பதிலாக அனுப்பும் மறு ஓலை
*அதிகாரிச்சி:
ராஜராஜசோழன் அரசாங்கத்தில் பெண்களும் படைகளில் இணைந்திருந்தனர். அவர்களுக்கும் படைக்கலன் பயிற்சி தரப்பட்டது. அரண்மனையிலும் நாட்டைச்சுற்றியிருக்கும் பகுதிகளிலும் வலம் வந்து ஒற்று வேலையும் செய்தனர். ஒரு அதிகாரிச்சியின் கீழே சிறுசிறு பிரிவுகளாய் பெண்கள் படைப்பிரிவு பணி புரிந்தது.
*தலைக்கோல் : ராஜராஜசோழன் காலத்தில் இந்த தலைக்கோல் பூஜையும் கௌரவமும் தளிச்சேரிப் பெண்களிலேயே அழகும் திறமையவளுக்கு வழங்கப்பட்டது.பெரிய கோயில் கட்டத்துவங்கும் போதே தஞ்சையைச் சுற்றியிருந்த பல ஊர்களிலிருந்தும் நடனப்பெண்களை தஞ்சையில் குடியேற்றினான்.
@!@!@!@!@!@