ஊழ்(8)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

ண்ட்ரியாவிற்கு அவள் நிலையை நினைத்து அழுவதா இல்லை தன்னை ஏமாற்றி விட்டு இப்போது ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் அமுதனுக்காக பரிதாபப்படுவதா என்று தெரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏதோ புரிந்தவள் போல ‘ம்…’ என்றுவிட்டு உதட்டை ஒருபக்கமாக சரித்து புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அவளின் ஒட்டுமொத்த சோகத்தையும் காண்பித்தது.

ஒரு முடிவிற்கு வந்தவளாய் நிமிர்த்து உட்கார்ந்தாள். அமுதனை முதுகில் தட்டினாள். அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“என்னால் கருவைக் கலைக்க முடியாது….” சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். பின் “நீ என்னிடம் பழகியது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உன்னைக் காதலித்தேன். உன் குழந்தையைச் சுமக்கக் கனவு கண்டேன். அதுவாக வாய்த்துவிட்டது. இனிமேல் கண்டிப்பாக என்னால் உன்னைக் காதலிக்க முடியாது. நீ தந்த இந்தப் பரிசைக் காதலிக்கப் போகிறேன்.” ஆங்கிலத்தில் கூறி வயிற்றைத் தடவிக்கொண்டே வேறுபக்கம் பார்த்தாள். அவள் கண்களில் வற்றி இருந்த நீர் மீண்டும் ஊறி கண்களை நிறைத்தது. அவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

சிறு இடைவெளிக்குப் பின் மூச்சை இழுத்துவிட்டு மறுபடி பேசத் தொடங்கினாள். கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. அதைத் துடைப்பதில் எல்லாம் அவள் அக்கறை காட்டவில்லை.

“நான் என் முதலாளியிடம் வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு அடுத்த சில நாள்களில் பிலிப்பைன்ஸ் திரும்புகிறேன். எனக்காக உன்னால் முடியும் என்றால் மாதம் ஒரு இருநூறு வெள்ளி பணம் அனுப்பு அதை வைத்துக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வேன்.” என்று கூறி முடித்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

அந்த சூழ்நிலையில் அவள் சொன்னதில் உடன்படுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. மாதம் இருநூறு வெள்ளி என்பது அவனுக்கு ஒரு பெரிய தொகையில்லை. சாதரணாமாக நண்பர்களுடன் சேர்ந்து டின்னர் சென்றாலே அதைவிட அதிகமாக செலவு செய்வான்.

அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு “தாங்க்ஸ்…. தாங்க்ஸ்…. தாங்க்ஸ்….” என்று பலமுறைக் கூறினான்.

அதை அவள் பொருட்டாக மதிக்காமல். “ஐ வில் டெக்ஸ்ட் யூ லேட்டர்” என்று கூறிவிட்டு. தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு விறுவிறுவென்று சென்றாள்.

அமுதன் தயக்கத்தோடு அவள் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான்.

ன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து அவளை ஊருக்கு அனுப்ப அவள் முதலாளி சம்மதித்தார். அவள் ஊருக்குச் செல்வதற்கு முந்தைய வாரம் அவளை அமுதனே முஸ்தபா அழைத்துச்சென்று தேவையானதை வாங்கிக் கொடுத்தான்.

அவள் அவனிடம் பெரிதாக முகம்கொடுத்துப் பேசவில்லை என்றாலும் அவன் வாங்கித் தருவதை வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. மேலும் தனக்கு வேண்டியதையும் கேட்டு வாங்கிக்கொண்டாள்.

அழுது அழுது அவளுக்குள்ளேயே அவள் உறைந்து போயிருந்தாள். உறைந்த கண்ணீர் இனி அவள் விழிவிட்டு வெளியேறாத அளவிற்கு அவள் தன்னை மாற்றிக்கொண்டிருந்தாள். விமானநிலையம் சென்று வழியனுப்பி வைத்தான்.

ஏதோ பெரிய பாரத்தை மார்பில் இருந்து இறக்கி வைத்ததுபோல் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.

அன்றிலிருந்து அவளிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்திக்கொண்டான் அவளும் அவனைத் தொடர்புகொள்ளவில்லை. மாதமாதம் லக்கி பிளாசா சென்று இருநூறு வெள்ளியை அவள் வங்கிக்கணக்கிற்கு அனுப்புவான். பின் பணம் அனுப்பிவிட்டேன் என்று மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அது சென்று சேர்ந்தவுடன் அதையும் அழித்துவிடுவான். அவனைப் பொறுத்தவரை அவன் பணம் அனுப்புவது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவளும் பணத்தைப் பெற்றுக்கொள்வதோடு சரி எந்தத் தகவலும் அனுப்பமாட்டாள். இது எல்லாமே அவர்களுக்குள் பேசி சம்மதிக்கப்பட்ட ஏற்பாடு தான்.

து நான்கு மாதங்கள் முன்புவரை தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணம் முடிந்து மது அவன் வாழ்க்கைக்குள் வந்தபின் எல்லாம் மாறியது. முதல் இரண்டு மாதங்கள் திருமண வேலை விருந்து என தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டிருந்ததால் அவன் பணம் அனுப்பவில்லை. ஆண்ட்ரியாவிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை. சரி இதற்கு மேல் தேவையில்லை என்று நிறுத்திவிட்டான்.

இரட்டை வாழ்க்கை என்பது எப்போதும் பிரச்சனைக்குரியது அதை மாற்றி சரியான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆண்ட்ரியாவிடம் இருந்து ஏதாவது தகவல் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தான்.

இதோ அவன் கையில் இருக்கும் அந்த உரையாடல் அவன் மொத்த வாழ்க்கையும் கவிழ்த்துப்போட்டு அழிக்கப்போகும் உரையாடல். புதிதாாய்த் திருமணம் முடித்து பல கனவுகளோடு தொடங்கிய வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் செய்யப்போகும் உரையாடல்.

ண்ட்ரியா தான் உரையாடலைத் தொடங்கியிருக்கிறாள்.

“ஹாய் எப்படி இருக்கிறாய்? நான்கைந்து மாதங்களாக உன்னிடமிருந்து எந்த தகவலும் இல்லை நலம் தானே?”

“நான் நலம். நீ எப்படி இருக்கிறாய்?”

“ம்ம்ம் நலம் தான். எப்போதும் நீ அனுப்பும் இருநூறு வெள்ளி கடந்த நான்கு மாதங்களாக வரவில்லை. வேறு எதுவும் பணத்தட்டுப்பாடா? இந்த மாதம் கொஞ்சம் முடிந்தால் அனுப்பு நம் மகள் பள்ளி செல்லப் போகிறாள்”

“அப்படி எல்லாம் இல்லை. மறந்துவிட்டேன். நம் மகளின் படம் இருந்தால் எனக்கு அனுப்புகிறாயா?”

“நீயா கேட்பது? இத்தனை நாளில் ஒருநாள் கூட கேட்டது இல்லையே. இப்போவாவது கேட்டாயே?”

அவளின் சாயலிலேயே அழகான ஒரு மூன்றுவயது குழந்தையின் படம் வந்திருந்தது.

“நன்றி, கண்டிப்பாக உனக்கு பணம் வந்துசேரும். பை.”

ஆண்ட்ரியா “நன்றி” என்று முடித்திருந்தாள்.

மது அமுதனைப் போலவே ஆண்ட்ரியாவுடன் உரையாடியிருக்கிறாள்.

அவன் கைகள் நடுங்கின. ஆண்ட்ரியாவின் மீது உச்சகட்ட வெறுப்பை அடைந்தான்.

“ப்ளடி பிட்ச்… ஒழுக்கங்கெட்டவ… எவனாவது கிடைப்பானான்னு அலைஞ்சுட்டு… இன்னைக்கு என் வாழ்க்கையையே சூனியமாக்கிட்டா? அவளை என்ன பண்றேன் பார்…”

வசதியாக அவளுக்குத் தான் செய்த துரோகத்தை மறந்துவிட்டு இன்றைய அவனின் நிலைக்கு அவள் மட்டுமே காரணம் என்பது போல துடித்தான். பேசியே கொன்றுவிடும் ஆத்திரத்தில் அலைபேசியை எடுத்து ஆண்ட்ரியாவை அழைத்தேன்.

“ஹலோ” அவள் குரல்தான்.

“உனக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா? உன்னோடு சுற்றிய பாவத்திற்கு பணம் அனுப்பினேனே போதாதா? இப்படி என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டியே” வாயில் வந்த சில ஆங்கிலக் கெட்டவார்த்தைகளைக் கொட்டினான்.

“என்ன சொல்கிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லை? நான் உன் வாழ்கையைக் கெடுத்தேனா? நீ எப்போதும் அனுப்பும் பணத்தை தானே அனுப்பச் சொன்னேன். இல்லை என்றால் இல்லை என்று சொல் ஏன் திட்டுகிறாய்?” என்றாள் கோபமாக.

“உன் கிட்ட இல்லை இருக்குன்னு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீ இன்னைக்கு அனுப்புன எல்லா செய்தியையும் என் மனைவிதான் படிச்சு உனக்கு பதில் அனுப்பிருக்கா? உன்னால என் வாழ்க்கையே இப்போ சீரழிஞ்சு போய்டுச்சு”

“என்ன உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எனக்கு எப்படி பதில் அனுப்புறது உன் மனைவின்னு தெரியும்? நான் வேணும்ன்னு எதுவும் பண்ணல. என்னை மன்னிச்சிடு” என்றாள்.

அவளை மன்னிக்கும் நிலையில் எல்லாம் அவன் இல்லை. அவளை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ படுத்தி இன்றோடு அவளை அவன் வாழ்க்கையில் இருந்து தலைமுழுகிவிட நினைத்தான். எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டினான். விபச்சாரி என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் தேடித்தேடி திட்டினான். திட்டிய வார்த்தைகளில் எந்த வார்த்தை அவளை அதிகம் தாக்கியது என்று தெரியவில்லை அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

“ஹலோ…. ஹலோ…” என்று கத்திவிட்டு அலைபேசியைப் பார்த்தான். அவள் இணைப்பில் இல்லை.

‘இந்த ஒரு உரையாடல்தான், இதில் உள்ள பெண்ணை எனக்குத் தெரியும் ஆனால் அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் ஒரு ஏமாற்றுக்காரி, ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவள் ஏதாவது சொல்லி சமாளித்து எப்படியாவது மதுவை அழைத்து வந்துவிடவேண்டும். அவள் கோபம் எனக்குத் தெரியும் கண்டிப்பாக நான் பேசினால் அவளை மாற்ற முடியும். இந்த நான்கு மாதங்களில் அவளும் என்மீது அன்பு கொண்டவளாகத்தான் இருந்தாள். அவள்மீது நான் கொண்ட காதல் உண்மை. என் வாழ்க்கையே இனி அவள்தான் எனப்பல கனவுக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக அவள் என்னை நம்புவாள். நாளையே நானும் இந்தியா சென்று விட வேண்டும். இதை இதற்குமேல் பெரிதாக விடக்கூடாது. கெஞ்சிக் கூத்தாடி அவளை எப்படியாவது சமாதனம் செய்துவிட வேண்டும்’ தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய எதிரே இருந்த கணினியின் அருகில் வந்து கீபோர்டை தட்டினான் கணினித் திரை ஒளிர்ந்தது அதை அவள் ‘ஷட்டவுன்’ செய்யாததால் அதில் கடவுச்சொல்லைத் தட்டி உள்ளே நுழைந்தான்.

அடுத்த அதிர்ச்சி அங்கே காத்துக்கொண்டிருந்தது.

************************************** 

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

************************************** 

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 9

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -