தராசை சரி பார்க்கணும்
கதவு
கழற்றப்பட்டது.
பாத்திர,பண்டங்கள்
அகற்றப்பட்டன.
ஆடு, மாடுகள்
அவிழ்க்கப்பட்டன.
வண்டி
ஓட்டப்பட்டது.
முகத்தில்
கண்ணீர் விளையாட..
தார் பாச்சிய
வேட்டி தளர..
கையிலிருந்து
துண்டு நழுவ..
இந்த காட்சிகளை கண்டபடி
இடுங்கிய மனிதன்.
கோழியானது
சிறகால்
தன் குஞ்சுகளை
தழுவுவது போல
சாம்பல் வர்ண குழந்தைகளை
அணைத்திருக்கும்
அவனின்
அரையுடம்பாய்..
அவள்.
தாம்..தூம்..
என்று
தவ்வியபடி
சீருடையாளர்கள்.
கடமையைக்
கவனிக்கிறார்களாம்.
காவலில்லாத
கொய்யாத் தோப்பில்
குரங்குகள்
கொட்டமடிப்பது மாதிரி…
அவர்களின் சேட்டைகள்.
எதற்கு
இந்த ஆர்ப்பாட்டம்…?
நிலத்துக்கும் வீட்டுக்கும்
இந்த வருடம்
இவன்
கப்பம் கட்டவில்லை.
இவர்கள்
வெள்ளையர்களல்ல…
ஆனாலும்_
பாஞ்சாலங்குறிச்சிப் போர்
நடந்து கொண்டிருந்தது.
??????????????????????????
வண்ணஜாலம்
தங்கம் மஞ்சள் பிசாசு
மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது
கறுப்பு மேகம் கருணையின் வடிவம்
உயிர்களை குளிர்மைக்குள் ஆழ்த்துகிறது
பச்சை தாவரங்கள் உயிர்த்துடிப்பு
வாழ்வின் தீராத பசியைத் தீர்க்கிறது
வெண்மைக்குள்
தீராத அன்பு ததும்புகிறது
ஆகாயம் கடல் நீலம்
எல்லையில்லாக் கனவுகள் திரளும்
பரந்த எண்ணங்களின் உருவம்
சிவப்பு உக்கிரம் தூய்மையின் நெருப்பு
நீதியின் பாதையை செப்பனிடுகிறது
வயலட் தேவதைகளின் புன்சிரிப்பு
நிலமெங்கும் பூக்களை வர்ஷிக்கிறது
வண்ணங்கள் ஆராதனைக்குரியவை
பஞ்சபூதங்களை வாழ்விக்கிறது
வர்ணங்கள் அழிப்பிற்கு உகந்தவை
வையகத்தின் ஆணிவேரை
நஞ்சூட்டிக் கொல்ல
முயன்று கொண்டிருக்கிறது.
??????????????????????????
உலர்ந்த காலம்
தொலைவுகளைத்
துழாவித் திரியும் பறவையின் முன்னே
வானம்
கறுத்துக் கொண்டிருக்கிறது.
தட்டுத் தடுமாறியபடி சரீரம்..
திரை படரும் விழிகள்..
நீண்ட ஆசுவாசம்..
நொண்டியடிக்கும் இருதயம்..
கனவுகள்
புற்றெடுக்க
நெளிந்து நெளிந்து
நுழைகிறது…
நாறியபடி
அதனுள்
நிஜம்.
அடைகாத்த பொற்கலசம்
ஆழப் புதைய
இன்றின் விஷம்
நாளை இறுகி ஒளிரும்.
நிராசைகளின் பின்னே
அலைந்தவனின்
வாழ்வில்
யாவும் நிர்மூலமாகி
தீராத வலிகளாகிப் போயின.