கொலைக்காதை

ஐந்து கவிதைகள்

- Advertisement -

கொலைக்காதை

வெறுமையைத் தவிர
ஏதுமற்ற இருப்பிடங்களுக்கு
அவர்கள்
திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வெயில் உற்சாகமாய்
வரவேற்கிறது.

நீர்மை தொலைத்த நிலங்கள்
புதிதாய் தோண்டப்பட்ட
சவக்குழிகளின் வெக்கையை
காற்றாய் விசிறியடிக்கின்றன.

கிருமி…?
பட்டினி…?

மரணத்தின் நாவுகள்
திசைகளைத் துளாவிக் கொண்டே.

??????????????????????????

கிருமி பயத்துள்

நடுங்கிக் கொண்டிருக்கிறோம்
அடுத்த நொடி
மிரட்டியபடி நகர்கிறது
பதறும் வீடுகளில்
பதுங்கியிருக்கிறோம்
கொதித்த காற்று
தொட்டுப் போகிறது
பசி சாலைகளுக்குத்
துரத்துகிறது
கூட்டம் கூட்டமாய்
குழந்தைகளுடன் அவர்கள் போகிறார்கள்
அவரவர் வீடுகளை நோக்கி
மரணபீதி படிந்த முகங்களுடன்..
பறவைகளும் மிருகங்களும்
தென்படவில்லை
சுழல் காற்றில்
யாவும் நிலைகுலைகின்றன
வானம் கறுத்துக் கொண்டிருக்கிறது
இடை இடையே மின்னல்
தெறிக்கவும் செய்கிறது.

??????????????????????????

பசித்த  மனசு

அகோரப் பசியுடன்
புரண்டு வரும்
நீர்ப் பாம்பின்
உடலெங்கும்
காட்டுப்பூக்கள்
பூத்திருக்கின்றன.

அலைகள் வீசி
நதிகளை உள்ளிழுக்க
கோடி கைகளில்
வசீகரம் நிரம்பிய
கண்ணாடிகளுடன்
உறக்கமற்ற
கடல்.

??????????????????????????

வேட்கை

முளைத்தெழ
தானியங்கள்
நிலத்தின்
இருதயத்தில்
தியானம் செய்கின்றன.

சூடான கண்ணீரில்
நனைந்த
நிலம்
மழையின்
ஈர முத்தத்திற்கு
ஏங்கியபடி.

??????????????????????????

சொல்வதெல்லாம் உண்மை

பூக்களைக் கொய்தால்
உயிரின் துடிப்பும், வலியின் வாசமும்..

கனவுகளை உடைத்தால்
கற்பனைகளும், ஆவல்களும்..

மனசை அறுத்தால்
எதிர்பார்த்தவைகளும், இழந்து போனவைகளும்..

கண்ணீரைப் பிழிந்தால்
கவலைகளும், கஷ்டங்களும்..

செல்வச் செழிப்பைக் கிளறினால்
அழு குரல்களும், வேதனை புலம்பல்களும்..

ஏழ்மையை உரசினால்
ஏமாற்றங்களும், ஏய்க்கப்பட்ட காலங்களும்..

வரலாற்றைத் தோண்டினால்
துரோகங்களும், காட்டிக் கொடுத்தல்களும்..

தியாகத்தை வெட்டினால்
மனித நேசமும், விடுதலை வேட்கையும்..

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -