யமுனாவீடு -49

தொடர் கவிதை

- Advertisement -

எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு
யாரோ ஒருவனாக
நிறையப்பேசியிருந்தான்
எந்த ஒன்றையும் தவறென்று சொன்னதில்லை

எந்த நேரமும் உடைந்து அழுதுவிடக்கூடியவனை
எல்லோருமே அறிந்துகொள்ள வேண்டியதில்லை
எந்த ஒன்றையும் கேட்டறிதல் இல்லாது
உணரவேண்டும்

என்மீது மட்டும்தான் அக்கறை
என்னைப்பற்றித்தான் நினைக்கிறேன்
என்னுடைய துயரம்
என் நோய்மைக்காலம்
என் வலி உணர்ந்த நாள்கள்
என் பாதுகாப்பு

வாகனத்தை சற்றே வேகமாக அழுத்தியவனின் கைகள்
நடுங்கியிருக்கவில்லை
இந்த ஒரு கணத்தில்
என்ன வேண்டுமானலும் நடந்திருக்கலாம்

ஒலி 96.8 இன் பாடலை
பைத்தியக்காரனாக அலறவிட்டு
கவனத்தோடு ஓட்டிக்கொண்டிருந்தான்
ஈரக் கண்களில்
கருணை ஒன்றுதான் சுரந்துகொண்டிருந்தது

நடுங்கியபடி படுத்துக்கிடந்தவன்
மழை உச்சியில் ஏறிச்செல்லும்
ஒரு கனவில் விழித்தெழுந்தான்
மழை விடாது பெய்துகொண்டிருந்தது
சாரலடிக்கும் சன்னலை சாற்றத் தோன்றவில்லை

சற்றுநேரம் மௌனமாக இருந்தான்
அவ்வளவு எளிதில்
இனி உறங்கிவிடமுடியாது
ஒரு சிறுவனாக கண்களை மூடிக்கொள்ள
யமுனா அழைத்துச்செல்கிறாள்

இந்தப் பிரார்த்தனைகள் உனக்கானவை
உன்னோடுதான் இருக்கிறேன்
சூரியனை நோக்கி
மண்டியிட்டிருந்த யமுனா
வா என்று அணைத்துக்கொண்டாள்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

1 COMMENT

  1. அருமை நண்பா தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் நானும் சிவகங்கை தான் நண்பா படைப்புகள் பல படைத்து படைப்பாளியாய் வளர்ந்திடுவீர்…..

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -