உரையாடலுக்கான சொற்களோடு
பின் அந்திப்பொழுதில்
சிறு புன்னகையைப்போன்று
இந்தக் கடற்கரையில்
அவள் மட்டும் இருக்கிறாள்
அமைதியாக நீளப்போகும் இரவின்
கடல்தொடும் ஆகாயம் பார்க்கும் அவள்
பைத்தியமாக இருக்கலாம்
அவளிருப்பைச் சுற்றியே ஒளிரப்போகும் பொழுது
செய்வதறியாத பொழுதில்
கடல் பார்க்கலாம்
மனதிற்குள் ஒலித்துச்சென்றது
அவளைச்சூழ்ந்த முகங்களையெல்லாம்
ஒருமித்துப்பார்த்தாள்
அவள் மறக்கவில்லை எதையும்
நினைவுகளின் வழியே
இந்தக் கடற்கரையில் நடந்தாள்
கால் தொடும்
ஒவ்வொரு அலையும்
இதயத்தை கரைத்து
அவளுள் துளிர்த்த கண்ணீரை
துடைத்துச் சென்றது
இந்த வாழ்வின்
பூரணத்துவத்தை பெற
யமுனா கடல் பார்த்து
நின்றுகொண்டிருக்கிறாள்
அவளன்பு உயிர்கொண்ட
வலுத்த அலையொன்று வருகிறது
யமுனா கடலை கடந்துவிடுவாள்
யமுனா வீடு – 38
தொடர் கவிதை