சோர்வாக இருக்கிறேன்
மனம் எதையோ தேடிக்கொண்டிருக்கிறது
இந்த இரவைத்
தொட்டுச் செல்லும்
உன்னை நினைத்தால்
உண்மையில் பலமடைவேன்
முகம் பார்க்க வேண்டும்
சுணக்கமாக இருக்கிறேனா
எனக்குள்ளே பேசிக்கொண்டேன்
யாரும் கவனித்திருக்கவில்லை
கண்டும் காணாமலும்
கடந்து செல்லும்
மனிதர்களை அழைத்து
என்ன உரையாடிடமுடியும்
ஒரு தேநீரைக் குடித்து முடித்திருக்கலாம்
ஒரு பாடலைக் கேட்டிருப்பேன்
தேடிக்கொண்டிருக்கும் மனம் நோக்கி
யார்மீதும் வன்மம் இல்லாத
பெரும் கருணையோடு
ஒரு பறவை வரக்கூடும்
ஒரு பூனை வரக்கூடும்
மெய்மறந்த அன்பில்
தலைவருடப் பறந்திடுவேன்
தலைகோதத் தாவிடுவேன்
அலை மோதித் திரும்ப
உன்னைக் கவனமீர்க்கவே
இப்படி அலைந்து திரிந்த
ஒரு கனவின்
நினைவு வருகிறது யமுனா
நேசத்தின் கரம் நீட்டுகிறாய்
பற்றிக்கொண்டு உறங்கிப்போகிறேன்.