யமுனாவீடு – 91

தொடர் கவிதை

- Advertisement -

ஒவ்வொருவர் மனதுக்குள்ளும்
வனம் போலப் படர்ந்திருக்கிறது
யாரிடம் எதைச்சொல்கிறோமோ
தினமும் நீ புன்னகைத்துவிடு
காதல் உன்னுடையாதாக இருக்கட்டும்

கனத்த வாழ்வில்
தடதடவென உன் மனது வேகமெடுக்கும்
மௌனமாக இரு
நேசிக்க ஆரம்பித்துவிட்டால்
மௌனம் உன்னுடையாதாக இருக்கட்டும்

இப்போது உனக்கு ஒரு விருப்பமிருக்கலாம்
சத்தமின்றிப் பின்தொடர்ந்து செல்
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்
உன்னுடைய கனவு அழகாக இருக்கட்டும்

பிச்சைக்காரனாய் இருக்கும்
உன்னை நினைவுபடுத்த வேண்டாம்
பயணம் போகத்தெரிந்தால்
வேர்களைத்தேடி நடந்து செல்
நடக்கத் துவங்கியவனுக்குத்தான்
பாதைகள் தெரியும்

உன்னுடைய அனுபவத்தில்
அடுத்தும் தோற்கப்போவது நீதான்
நம்பிக்கையாய் எங்கோ மின்னிச்செல்ல
ஈர விழிகளில்
பேரன்பு பெருகட்டும்

வெய்யிலில் அலைந்து திரியும் உனக்குள்
ஒவ்வொரு நாளும் கனவில்
வருவது யமுனாதான்
கனவின் தடத்தைத் தொடர்ந்து செல்

ஒவ்வொரு நாளிலும் சேர்ந்துவிட
நேரில் காண்பாய் யமுனாவை
எதுவென மெல்லத்தெரியட்டும்
அவளும் நீயும்  அப்போது
விடாது சிரித்துக்கொண்டிருப்பீர்கள்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -