முன்னுரை
‘சில நேரத்தில் வரலாற்றுக்கும் ஒரு உந்துதல் தேவை’ என்னும் மாபெரும் தலைவரும் புரட்சியாளருமான லெனினின் கூற்றாகும். அக்கூற்றுக்கேற்ப மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் சினிமாத்தனமின்றி நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இத்திரைக்காவியமான மேற்கு தொடர்ச்சி மலை! . சில நிகழ்வுகளைச் சித்தரித்து மாபெரும் புரட்சி எழுப்பிய உன்னத சக்தி சினிமாவிற்கு உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
இது ஒரு வழக்கமான சினிமா அல்ல. ஒரு வாழ்வியல் பதிவு. தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்குப் பொருட்களைச் சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) படத்தின் நாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களைச் சுமந்துச் சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளைக் கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் இவரின் வாழ்க்கை வழியே, அந்த மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்கிறது படம்.
இயக்குநரி லெனின் பாரதியின் கைவண்ணம்
சினிமா என்னும் ஊடகத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். இயக்குனர் லெனின் பாரதியின் நிலைப்பாடு, ‘சொல்லப்படாத கவனிக்கப்படாத வாழ்வை, அந்த வாழ்வில் விளையாடும் அரசியலை, அதிகம் பேசாமல், அப்படியே காட்டுவது’ என்பது தெரிகிறது. இந்த நிலைப்பாட்டினால் படம் பார்ப்பவர்களை அதிகமாக சோதிக்கவுமில்லை என்பது அவரது பலம். கண்டிப்பாகத் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவு லெனின் பாரதி.
கதைச்சுருக்கம்
ரங்கசாமிக்குச் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான் வாழ்நாள் கனவு. அதற்காகச் சிறுகசிறுக பணம் சேர்க்கிறார். இதனிடையே அவரது மாமன் மகள் ஈஸ்வரியை (‘ஜோக்கர்’ காயத்திரி) திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மகனும் பிறந்துவிடுகிறான். வாழ்க்கை இப்படியே நகர்ந்து கொண்டிருக்க, மலையடிவாரத்தில் ஒரு நிலம் விலைக்கு வருகிறது. அதை வாங்க கணவனும், மனைவியும் முயற்சி மேற்கொள்ளும்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரங்கசாமி நிலம் வாங்கி விவசாயம் செய்தாரா இல்லையா என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது மீதிக்கதை. ஆனால், படத்தில் இது மட்டும் கதையல்ல.
அந்த மலையில் நடைபாதையிலும், சுமை தூக்கும் மனிதர்கள், கழுதைகள் வழியாக தமிழ் – மலையாள மக்களிடையேயான உறவு, அந்தத் தொழிலாளர்களின் வாழ்வை தொழில் சங்கம் காக்கும் விதம், முதலாளித்துவம் எடுக்கும் தந்திர ஆயுதம், உற்பத்தி செய்தவர்கள் உளைந்துப் போக பிழைக்க வந்த இடைத்தரகர்கள் வளர்ந்து நிலத்தை வளைப்பது… இப்படி சத்தம் போடாமல் படம் பேசும் அரசியல் நிறைய. ‘நாளைக்குதானப்பா பத்திரம், நீயும் உள்ளூர்க்காரன், நானும் உள்ளூர்க்காரன்’ என முன்பணம் வாங்க மறுக்கும் நிலவுரிமையாளர், ‘உங்க அப்பன்தான் என்னைக் கடன்காரனா வச்சிருந்தான், நீயும் அப்படி பண்ணாத’ என உரிமையுடன் உதவும் பாய், ‘இவனை யூனியன் மெம்பராக்கிவிட்டா பொண்டாட்டியோட நல்லா பொழச்சுக்குவான்’ என பரிந்துரைக்கும் கங்காணி. இப்படி மலை நெடுகிலும் ஈரமான மனிதர்களைக் காட்டுகிறது ஒளிப்பதிவாளரின் புகைப்படக் கருவி.
திரைக்கதைக்குள் பொதிந்திருக்கும் முக்கிய செய்தி
படத்தில் வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. முதலாளித்துவ அரசியலில் உழன்றுகொண்டிருக்கும் கார்ப்ரேட் ( Corporate) வாழ்க்கை பற்றி அறியாத அந்த எளிய மனிதர்களுக்குப் பின்னால் நடக்கும் அரசியலைப் பற்றியும் படம் பேசுகிறது. விறுவிறு திரைக்கதை, சண்டைக்காட்சிகள் திருப்பங்கள், வெளிநாட்டு நடனம், பாடல், கொண்டாட்டம் என எவ்வித சினிமாதனமும் இல்லாமல், போகிற போக்கில் நாட்டுப்புறப் பாடலை போல கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்காகவே இயக்குனர் லெனின் பாரதிக்கும், படத்தைத் தயாரித்த விஜய் சேதுபதிக்கும் மனமார வாழ்த்துகள். அதிலும் அந்த மலைமக்களையே நாயகர்களாக உலவவிட்டிருப்பதற்கு மீண்டும் ஒரு கைதட்டல். ஒரு தொழிலாளியின் வாழ்க்கை வழியாக, மேற்கு தொடர்ச்சி மலைக்குப் பார்வையாளர்களை மலையேறச் செய்திருக்கிறார்கள்; அழைத்துச் செல்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.
மலைவாழ்த் தொழிலாளிகளின் உண்மை நிலை
ஏலக்காய்த் தோட்டம், அங்கு வேலை செய்யும் மக்கள், தொழிலாளர்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சும் முதலாளி, அவரிடம் இருந்து மக்களை காக்கும் கம்யூனிஸ்ட் தோழர் என முழு படமுமே யதார்த்தத்தின் உச்சம். எங்கிருந்தோ வந்து இங்குக் குடியேருபவர்கள், நம்மையே எப்படி ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை உரக்கடைக்காரர் கதாபாத்திரம் அமைதியாக்க் கடத்திப்போகிறது. உலகமயமாக்களின் தாக்கத்தால், கிராமங்களைவிட்டு விரட்டப்படும் மக்கள், நிலமற்றவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது படம்.
ரங்கசாமி, ஈஸ்வரி, இருவேறுபட்ட ஏலக்காய் தோட்ட முதலாளிகள், நேர்மையான கம்யூனிஸ்ட் தோழர், மக்களை நேசிக்கும் கங்கானி, கிறுக்கு கிழவி, வீராப்புக்கிழவன் வனகாளி என அத்தனை பாத்திரங்களும், நாம் பார்த்திராத உண்மை மனிதர்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்களா, இல்லை அவர்கள் பாட்டுக்கு வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் படம்பிடித்துவிட்டார்களா என்பதே தெரியவில்லை.
மலையின் மேல் அமைந்திருக்கும் சின்ன டீக்கடை, டிபன் கடை என அனைத்துமே உண்மையாகத் தெரிகிறது ஜெயச்சந்திரனின் கலை வேலைபாடுகளில்.
உலகமெங்கும் விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்தப் படத்தை சமர்ப்பனம் செய்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. காடு, மலை, மேடு, எலக்காய் தோட்டம், யதார்த்த மனிதர்கள் என இயற்கையின் அழகை வெள்ளித்திரையில் காண போய்வாருங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு!
ஏழைத் தொழிலாளிகளின் உணர்வுகளுக்குப் பக்கபலமான இசை
படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை. அவரது பாடல்களும், பின்னணி இசையும் எப்படி இருக்கும் என புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ‘கேட்காத பாட்டு ஒண்ணு கேட்குது ஊரான ஊருக்குள்ள’ பாட்டுக்கு தியேட்டரே தாளம் போடுகிறது. ‘அந்தரத்தில் தொங்குதம்மா’ பாடல் படத்தில் உயிர் நாடி. மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலாய் மனதுக்கு இதமளிக்கிறது இசைஞானியின் இசை.
மனத்தை மயக்கிக் கிழிக்கும் ஒளிப்பதிவு
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், அங்கு வாழும் மக்களின் வாழ்வையும் அப்படியே தன் ஒளிக்காட்சிக் கருவியில் பதிவு செய்திருக்கிறார். அதுவும் எந்தவித கூடுதல் ஒளிசாதனமும் இல்லாமல் இயற்கை ஒளியைக்கொண்டே பல காட்சிகளைப் படம்பிடித்திருப்பது அற்புதம். பருந்து பார்வையில் அந்த மலையைப் பார்க்கும் போது, இதில் இப்படி இவர்கள் தினமும் ஏறி இறங்கி வாழ்கிறார்கள் என்ற பிரம்மிப்பு நம்முள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல, வசனங்களால் சொல்ல வேண்டிய பல செய்திகளைக்கூட தனது ஒளிப்பதிவுக் கருவி மூலமே பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார் சபாஷ் ஈஸ்வர்.
பொதுவுடைமைச் செய்திகள்
‘ஊருக்குள்ள ரோடு வந்தா மெஷின் வரும், மெஷின் வந்தா நம்ம மக்கள் வேலை போகும்’ எனத் தொழிலாளர்களுக்காகவே வாழும் சகாவு சாக்கோ, நிகழ்கால வளர்ச்சியின் பலத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் அதே நேரம் மக்கள் அதற்கு இரையாக விடக்கூடாது என்ற தவிப்போடு வாழும் பொதுவுடைமை அரசியலின் குறியீடாக இருக்கிறார். நிலமில்லாதவர்களின் துயரை சொல்லியிருப்பதோடு, நிலமிருப்பவர்களும்கூட இயற்கையாலும் பிறராலும் விவசாயத்தில் அடையும் இழப்புகளையும் பேசியிருப்பது நலம். மொத்தத்தில் ஒரு நில அமைப்பின் வாழ்வியலை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார் இயக்குனர்.
முடிவுரை
இறுதிக் காட்சி பெரும் கோரமெல்லாம் இல்லை, ஆனால் மனதில் பெரும் கனம். நகரம், வளர்ச்சி, முதலீடு போன்ற சுயநலங்கள், சூட்சமங்கள் தெரியாத எத்தனை உயிர்கள் இப்படி வாழ்கின்றன என்ற உண்மை ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றது. இப்படம் பலருக்கும் விழிப்புணர்வையைத் தந்து அந்த மக்களுக்கு எப்படி உதவலாம் என்பதை நினைக்க வைத்திருந்தாலே அது இப்படத்தின் மாபெரும் வெற்றியாகும்.