மெய்நிகர் உலகம் – 14

- Advertisement -

வணக்கம். இணையம் என்னும் மெய்நிகர் இணைப்பு வந்தவுடன் அதனால் உலகின் எந்த மூலைக்கும் நீங்கள் செல்லாமலேயே உங்களுக்கு உண்டான வேலையை செய்து கொள்ள முடிந்தது. ஆனால் இதனால் விளையாட்டு துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா? இன்று அதனை பற்றி பார்க்கலாம்.

உடல் உழைப்பையும் மூளையையும் ஒருங்கே பயன்படுத்தி விளையாடக்கூடிய விளையாட்டுகளை பட்டிமன்றம் தான் நாம் இதுவரை பார்த்தோம். மூளை என்றவுடன் உங்கள் தலைக்குள் இருக்கும் ஒரே ஒரு பகுதியை மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அனைத்து விதமான உயிரினங்களுக்கும் உடலின் அனைத்து பகுதியிலும் மூளையின் ஒரு சிறிய பங்களிப்பு உள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் சிறுவயதில் இருசக்கர வாகனம் கற்றுக் கொண்டதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இருசக்கர வாகனம் ஓட்டுவதை யாராலும் 5 நிமிடத்தில் விளக்கி கூறி விட முடியும். ஆனால் ஐந்து நிமிடத்தில் யாராலுமே இருசக்கர வாகனத்தை முதல் முறை கற்றுக் கொண்டு ஓட்ட முடியாது. அதற்கு காரணம் வெறும் மூளையின் செயல் திறன் மற்றும் புரிதல் எந்த ஒரு செயலுக்கும் பத்தாது. மூளை அதனை நன்கு புரிந்து கொண்டவுடன் உங்கள் உடம்பில் உள்ள ஒவ்வொரு நியூரான்களும் அதனை புரிந்து கொண்டு தன்னை அதற்கு பழகிக் கொண்டால் மட்டும் தான் மூளையால் செயல்பட முடியும், இந்த நியூரான்கள் உங்கள் உடல் முழுவதும் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு நரம்பும் இதன் கட்டளைக்கு ஏற்ப தான் செயல்படும். இது நன்கு பழகிய உடன் உங்களுக்கு மூளையின் முழு கட்டளை இல்லாமலேயே அந்த செயல் பழகிவிடும். நீங்கள் வேறு யாருடன் பேசிக்கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடிகிறது அல்லவா? இதற்கு காரணம் அது உங்கள் நியூரான்களில் உள்ள பழக்கம் தான். 

நியூரான்களின் விதியை பற்றி நான் இங்கே கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. விளையாட்டு ஏன் முக்கியமாக கருதப்படுகிறது என்பதற்கு அடிப்படையே இது தான். யுத்தம் போன்ற நிகழ்வுகளை தினமும் எதிர்பார்த்து விட முடியாது. ஆதலால் யுத்தம் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து நியூரான்களையும் பழக்கப்படுத்துவதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமானது. பல்லாயிரம் ஆண்டுகளாக இதே முறையில் விளையாட்டு வளர்ந்து வந்தாலும் திடீரென்று கணிப்பொறியும் இணையமும் வந்த பின்பு அதன் முழு வடிவமும் மாறியது. ஒருவர் மைதானத்திற்கு சென்று டென்னிஸ் விளையாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி விளையாடும் பொழுது உடலில் உள்ள அனைத்து தசைகளும் வேலை செய்து அதன் ஒருங்கிணைப்பு மற்றும் மூளையின் கட்டுப்பாடு அனைத்தும் ஒரு விதமான பழக்கத்திற்கு வரும். இதன் மூலமாக உங்கள் உடலை நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வீர்கள். ஆனால் இதே விளையாட்டை கணிப்பொறியில் விளையாடும் போது அதிகபட்சமாக இரண்டு விரல்கள் மட்டுமே இருந்தால் போதும். இதில் மூளையின் செயல்பாடு ஓரளவுக்கு இருந்தால் கூட எலும்பு தசை போன்ற மற்ற உடல் பாகங்கள் எதுவுமே பயன்படுவதில்லை. முதலில் நேரடியாக விளையாடும் விளையாட்டுக்களுக்கு மட்டும் தான் போட்டி இருந்தது என்ற நிலை மாறி கணிப்பொறியில் விளையாடும் விளையாட்டுகளுக்கு கூட போட்டிகள் வந்துவிட்டது. சுருக்கமாக சொல்லப்போனால் விளையாட்டின் அடிப்படை நோக்கத்தையே தகர்த்தெறிந்து அதனை முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் கணிப்பொறி மாற்றியது. இந்த பிரச்சனைக்கான முடிவை கூட கணிப்பொறி தொழில்நுட்பம் மிகவும் சமீபமாக நமக்கு கொண்டு வந்துள்ளது. அதற்குப் பெயர்தான் விர்ச்சுவல் ரியாலிட்டி. இந்த மெய்நிகர் உண்மையை நீங்கள் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.

நான் ஆரம்பத்தில் கூறிய டென்னிஸ் விளையாட்டை நீங்கள் கணிப்பொறியில் விளையாடும் போது உங்கள் உடல் அதிகமாக நகர்வதில்லை அல்லவா? இப்பொழுது கண்களில் ஒரு சாதனத்தை கட்டிக் கொண்டால் நீங்கள் ஒரு மைதானத்தில் நின்று கொண்டிருப்பது போலவே ஒரு போலி பிம்பம் கட்டமைக்கப்படும். பின்பு நீங்கள் விரல்களால் விளையாடாமல் உண்மையிலேயே டென்னிஸ் எவ்வாறு விளையாடுகிறார்களோ அதுபோல கை காலை அசைத்து விளையாட வேண்டும். நீங்கள் கை கால் அசைப்பதை ஒரு கணிப்பொறி சாதனம் துல்லியமாக அளந்து அதற்கு ஏற்றார் போல உங்களது விளையாட்டை கொண்டு செல்லும். இப்பொழுது நீங்கள் உங்கள் நண்பருடன் விளையாட வேண்டும் என்றால் நீங்கள் இருவரும் ஒன்றாக ஒரு பொதுவான இடத்திற்கு சென்று அங்கு விளையாட வேண்டும். ஆனால் இந்த மெயின் நகர் விளையாட்டில் நீங்கள் இருவரும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவரவர் இடத்தில் இருந்து கொண்டு ஒரு மெய்நிகர் மைதானத்தில் விளையாட முடியும். குத்துச்சண்டை, கத்தி சண்டை போன்ற பல்வேறு விளையாட்டுகளும் இந்த மெயின் நிகர் கருவிகளில் குவிந்து கிடக்கின்றன. இவ்வளவு நன்மைகளை மெய்நிகர் விளையாட்டுகள் மூலம் அடையலாம் என்று இருந்தால் அது மிகவும் அருமையான கண்டுபிடிப்பாக தான் இருக்க முடியும். இங்கேதான் ஒரு முக்கியமான பிரச்சனை வெடிக்கிறது. அது என்ன என்பதை அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன். அதுவரை நன்றி.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -