முகங்கள்

எட்டாம் முகம்

- Advertisement -

இந்த ஒரு வருடம்தான், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் வாங்கிவிட்டாலே போதும் வாழ்வில் எங்கோ போய்விடலாம். இப்படிச் சொல்லிச்சொல்லியே ஒரு வருடம் முழுவதும் படி படி என்று கண்ணில் படுவோர் எல்லாம் பாடிக்கொண்டிருந்தனர். நாமும் அவர்கள் சொல்கிறார்களே என்று புத்தகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உர்ர்… என்று முறைத்துப்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். படிக்கிறோமா நடிக்கிறோமா என்பதெல்லாம் முக்கியமில்லை ஆனால் புத்தகத்தை முறைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி முறைத்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் மனதிற்கு ஆறுதல் அளிக்ககூடிய ஒரு விஷயம் என்னவென்றால் நம்மிடம் பாடுவோர் எல்லாம் பதினொன்றாம் வகுப்பு சென்று விட்டால் ‘ஜாலியாக’ இருக்கலாம். படிக்க வேண்டிய அவசியமேயில்லை ஒரு வருடம் சும்மா உட்காந்திருந்தாலே ‘பாஸ்’ போட்டுவிடுவார்கள் என்ற கூடுதல் செய்தியையும் சேர்த்துப் பாடுவார்கள்.

ஒருவழியாக பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு முதல் நாள் பள்ளிக்குச் சென்றோம். வரும் ஒவ்வொரு வாத்தியாரும் மீண்டும் மீண்டும் சொன்ன ஒரே விடயம் “இங்க பாருங்கடா பதினொன்னாம் வகுப்பு ஜாலியா இருக்கலாம்ன்னு எல்லாரும் சொல்லிருப்பானுக அதை நம்பி நீங்க இந்த வருஷம் கோட்டைவிட்டீங்க அடுத்த வருஷம் மார்க் வாங்க முடியாது. பெயில் தான் ஆவிங்க. அடுத்த வருஷத்துக்கான அடித்தளம் இது தான் நல்லா படிக்கணும்.” என்றார்கள்.

என்னது மறுபடி படிக்கனுமா? என்ற அதிர்ச்சி என்னைப் போலவே என் நண்பர்கள் பலருக்கும் இருந்தது. பத்தாததுக்கு சென்ற வருடம் வரை அறிவியல் என்று மட்டும் படித்துக்கொண்டிருந்த ஒரு பாடம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என பிரிந்து வந்து மிரட்டியது. பல ஆசிரியர்கள் தனித்தனியாக ‘டியூசன் சென்டர்’ வைத்து நடத்திக்கொண்டிருந்தார்கள். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அவரவர் டியூசன் சென்டரில் வந்து சேரந்தால் தான் மதிப்பெண் பெற முடியும் சென்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பார்கள். குறிப்பாக வேதியியல் ஆசிரியர். அவரின் ‘டியூசன் சென்டர்’ அப்போது மிகப்பிரபலம். எங்கெங்கிருந்தோ வேறுவேறு பள்ளி மாணவர்கள் எல்லாம் அவரைத் தேடி வந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு இந்த டியூசன் சென்டரில் சேர்ந்து படிப்பதில் பெரிதாக நாட்டம் இல்லை. பள்ளியில் படிப்பதே அதிகம் என்று நினைப்பேன். இதில் வீட்டிற்குச் சென்றால் என் அம்மா வேறு படி படி என்று விரட்டிக்கொண்டிருப்பார். அதிலும் இந்த டியூசன் சென்டர்கள் வசூலிக்கும் கட்டணத்தைக் கேட்டதுமே அடேங்கப்பா என்று பின்வாங்கிவிடுவேன். என் நண்பன் ஒருவன் “டேய் கெமிஸ்ட்ரி ரொம்ப கஷ்ட்டம் டா… எங்க வீட்டுப்பக்கத்துல ஒரு வாத்தியார் சூப்பரா சொல்லிக்கொடுப்பாரு… வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்” என்றான். நானும் அவன் பேச்சைக் கேட்டு முதல் மாதம் பணத்தைக் கட்டிவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பேருந்தைப் பிடித்து அவன் வீட்டிற்குச் சென்று அவனை எழுப்பி டியூசன் சென்றேன்.

முதல் இரண்டு வாரங்கள் எல்லாம் நன்றாகத்தான் சென்றது. பின் அவர் தேர்வு வைத்துவிட்டார். சரி நமக்கு இது ஒத்துவராது என்று அதிகாலை கிளம்பி என் நண்பன் வீட்டிற்கு சென்று அவனுடன் சேர்ந்து தூங்கிவிட்டேன். எங்கள் வீட்டில் தூங்கினால் என் அம்மா “என்ன டா டியூசன் போகலையா?” என்று கேட்பாங்களே. அதற்கு பின் ஒவ்வொரு நாளும் இதே கதை தான். ஒரு நாள் “அந்த வாத்தியாருக்கு பாடமே நடத்தத் தெரியல. எங்க ஸ்கூலயே நல்லா சொல்லித்தராங்க” என்று என் வீட்டில் கூறிவிட்டு மொத்தமாக டியூசனை நிறுத்திவிட்டேன். அதிகாலை எழுந்து நண்பன் வீடுவரை செல்வதால் தூக்கம் கெடுகிறதே.

ஆகா… இன்னும் இந்த வார முகத்தை அறிமுகம் செய்யவேயில்லையே? அவர் வேறுயாருமில்லை என்னுடைய பள்ளி வேதியியல் ஆசிரியர் தான். நுனி மூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய பிரேம் இல்லாத செவ்வகக் கண்ணாடி. குண்டான உருவம் சுருட்டை முடி. எப்போதும் டக்-இன் செய்து நேர்த்தியாக உடுத்தியிருப்பார். நமக்கு பாடம் எடுக்க வரும் ஒவ்வொரு வாத்தியாரைப் பற்றியும் அவர் வரும் முன்னே ஒரு கதை பரவும். அப்படி இவரைப் பற்றி கூறும் போது. “டேய் ஒரு நாள் என்னாச்சுன்னா. எங்க ஏரியா ரவுடி ஒருத்தன் இவரை மார்க்கெட்ல பார்த்திருக்கான். அவன் இவர் கிட்ட படிச்சவனாம். ‘ஏன்யா நான் படிக்கும்போது என்னை எப்படிப் போட்டு அடிச்ச இன்னைக்கு உன்ன நான் வெளுக்கப் போறேன்னு’ சொல்லி அடிக்க வந்தானாம். இவரு அந்த ரவுடிய மார்கெட்ல வச்சு அடி அடின்னு அடிச்சு இவர் கார்லையே தூக்கிப்போட்டு கொண்டு போய் ஆஸ்பத்திரில சேர்த்துட்டாராம். இவர்கிட்டல்லாம் வாலாட்டாம ஒழுங்கா இரு” என்று நண்பன் ஒருவன் எச்சரித்தான். இப்படிப்பட்ட எச்சரிக்கைப் பின் யாராவது அவரிடம் வாலாட்ட முடியுமா?

பதினொன்றாம் வகுப்பு முதல் நாள். வேதியல் ஆசிரியர் உள்ளே நுழைந்து அனைவரும் வணக்கம் வைத்தோம். முதல் நாள் என்றாலே பெயர் கேட்கும் சடங்கு ஒன்று நடக்கும். கூடவே நீ என்னவாகப் போற என்ற கேள்வியும் வரும். ஒவ்வொருவரும் டாக்டர், என்ஜினீர், கலெக்ட்டர் என்று கூறிக்கொண்டே போனார்கள். நானும் என் பங்குக்கு கம்ப்யூட்டர் என்ஜினேரிங் படித்து சிங்கப்பூர் செல்வேன் என்றேன். சின்ன வயதில் இருந்து என் மாமாவைப் பார்த்து வளர்ந்ததால் வந்தது அந்த சிங்கப்பூர் கனவு. நாங்கள் அனைவரும் சொல்லி முடித்தவுடம் எங்கள் வேதியல் ஆசிரியர். “நீங்க எல்லாரும் நல்லாத்தான் சொல்லிருக்கீங்க. ஆனாலும் நான் எதிர்பார்த்தத யாருமே சொல்லல.” என்றார். சில மாணவர்கள் எழுந்து வேறு வேறு சொல்லிப்பார்த்தார்கள். எதுவுமேயில்லை என்றுவிட்டார். பின் அவரே “யாராவது ஒருத்தன் மனுசனாவேன்னு சொன்னீங்களாடா?” என்றார். மனிதத்தன்மையுள்ள ஒரு நல்ல மனிதனை உருவாக்குவது தான் படிப்பதன் நோக்கமே என்றார். அடடா அருமை என்று அனைவரும் கைத்தட்டினோம்.

எங்கள் பள்ளியில் இரண்டு ஜெயக்குமார்கள் சொல்லி வைத்தது போல் இருவரின் இனிசியலும் ஜெ. பள்ளி அலுவலக கிளார்க் ஒருவர் வந்து “தம்பி நீ ‘B’ செக்சன் அந்த ஜெயக்குமார் தான் ‘A'” என்று என்னை ‘B’க்கு அனுப்பிவிட்டார். காலையில் வந்த அதே வேதியியல் ஆசிரியர் மதியம் இங்கு வந்தார். அதே பெயர் கேட்கும் சடங்கு அதே மாதிரியான பதில்கள். இப்போது என் முறை வந்தபோது “மனுசனாகப் போறேன் சார்” என்றேன். மாணவர்கள் சிரித்தார்கள். “அந்தக் கிளாஸ்ல உன் பிரன்ஸ் யாராவது இருக்கானாடா?” என்றார். நான் “இல்லை சார்” என்றேன். என்னை முன்னால் அழைத்து அனைத்து மாணவர்களையும் கைத்தட்ட சொன்னார். எனக்கு ஒரே பெருமிதமாக இருந்தது. இது தான் அவர் என்னைப் பாராட்டிய முதல் சம்பவம்.

பொதுவாக அவரிடமோ அல்லது வேறு யாரிடமோ டியூசன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அவர் டியூசனில் ஏற்கனவே நடத்தி முடித்த பாடத்தைத் தான் பள்ளியில் நடத்துவார். டியூசனில் தெளிவாக நடத்தியபின் இங்கு நடத்துவதால் அவரிடம் டியூசன் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு திருப்பிபார்த்தல் (ரிவிசன்) அவ்வளவு தான். என்ன சந்தேகம் வந்தாலும் அவர்கள் டியூசனிலேயே கேட்டுத் தெளிந்துவிடவார்கள். பள்ளியில் சந்தேகம் எல்லாம் பெரிதாகக் கேட்க முடியாது. யார்? யார்? யாரிடம் டியூசன் செல்கிறார்கள். யார் டியூசனே செல்லவில்லை என்ற தகவல்கள் எல்லாம் அவர்க்கு அத்துபடி. அதற்கென்றே அவரிடம் டியூசன் படிக்கும் ஒற்றர்கள் வேலை செய்துகொண்டிருப்பர்கள். என்னைப் போன்ற யாரிடமும் டியூசன் செல்லாதவர்களை அவர் தண்ணி தெளித்துவிடுவார். எப்போதாவது கொஞ்சம் பரிதாபப்பட்டு சில சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார். அவரிடம் அல்லாமல் மற்றவர்களிடம் டியூசன் செல்பவர்கள் எப்போது சிக்குவார்கள் என்று காத்துக்கொண்டிருப்பார். சிக்கினால் செம அடி தான்.

ஒருநாள் நானும் என் நண்பனும் அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் ‘டிக் டாக்’ உருண்டைகளைப் பரிமாறி வாயில் போட்டு நாக்கிற்கடியில் ஒதுக்கினோம். எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார். “என்னடா அங்க பேச்சு” என்றார். ‘அப்பாடா திங்கிறத கண்டுபிடிக்கல’ என்று நினைத்துக்கொண்டு வாயில் கிடந்த ‘டிக் டாக்’கை லபக் என்று விழுங்கிவிட்டேன்.

“எந்திரங்கடா ரெண்டு பேரும்…”

நானும் என் நண்பனும் எழுந்து நின்றோம்.

“எவளோ முக்கியமான ஈக்குவேசன் நடத்திக்கிட்டு இருக்கேன் தெரியுமா? வெளில வாங்கடா.. இது என்னன்னாவது உனக்குத் தெரியுமா? வந்து சால்வ் பண்ணு பார்க்கலாம்” என்னை நோக்கி சாக்பீஸை விட்டெறிந்தார்.

ஏற்கனவே நடத்தி இருந்தாலே நான் பரீட்சைக்கு முந்தின நாளில் தான் படிப்பேன். இது இதுவரை நடத்தாத பாடம் எனக்கு எப்படித் தெரியும். தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அமைதியாக நின்றேன்.

என் நண்பனைப் பார்த்து “உனக்காவது தெரியுமா? மரமண்டை” என்றார். அவன் சோடாபுட்டி கண்ணாடியோடு காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கீழே கிடந்த சாக்பீஸை எடுத்துக்கொண்டுபோய் முழு சமன்பாட்டையும் சரியாக போட்டுவிட்டு நின்றான்.

அதைப் பார்த்து என் ஆசிரியரை விட நான் தான் அதிக அதிர்ச்சி அடைந்தேன். அப்படியே கரும்பலகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் படித்த டியூசனில் ஏற்கனவே மூன்று ரிவிசன் முடித்துவிட்டார்களாம். பின்னால் அவன்தான் சொன்னான்.

நம்மிடம் டியூசன் படிக்காமல் வேறு ஒருவரிடம் படிக்கும் ஒருவன் இவ்வளவு எளிதாகச் செய்துவிட்டானே என்ற கோபம் அவருக்கு. “நீ எங்கயோ போய் டியூசன்ல எல்லாம் படிச்சுட்டு. இங்க வந்து மத்தவனை கெடுக்குரியா?” என்று நாலு சாத்து சாத்தி அனுப்பி வைத்தார். அவன் என் அருகில் வந்து நின்றுகொண்டான்.

“பாரு உன்னை மாதிரி ஆளுங்களுக்குக்காகத் தான் நான் இங்க வந்து காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன். அவனைப் பாரு வெளில படிச்சுட்டு வந்து உன்னை கெடுக்குறான்.” என்று எனக்காக பேசிக்கொண்டிருந்தார். என் நண்பன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னடா மொறைக்கிற? என்ன?” என்று அவரை அதட்டினார். அவன் தலையை கவிழ்ந்துகொண்டான். என் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி. “நான் பார்க்குறதே இவருக்கு மொறைக்கிற மாதிரி இருந்தா நான் மொறைச்சா என்ன ஆவாரு?” என்றான்.

நான் எவ்வளவு அடக்கியும் முடியவில்லை உதடுகள் லேசாக பிரிந்து காட்டிக்கொடுத்துவிட்டன. “நான் உனக்காக இங்க காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன். அங்க என்னடா உனக்கு இளிப்பு? வெளில வாடா…” என்று அழைத்து முதுகில் டின்னு கட்டிவிட்டார்.

ஒவ்வொரு பரிட்சை வரும்போதும் மற்ற பாடங்களில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று தேறிவிட்டாலும் வேதியியலில் மட்டும் முட்டி மோதிக்கொண்டிருந்தேன். தேர்ச்சி பெறுவதே பெரும்பாடாக இருந்தது. அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் கொடுத்தார்கள். வேதியியலில் நான் 69 மதிப்பெண்கள். இருநூறுக்கு 70 தான் பாஸ். ஒரு மதிப்பெண் குறைவாக இருந்தது. அந்த முறை என் வேதியியல் ஆசிரியர் பென்சிலில் திருத்தி இருந்ததால் என் நண்பர்கள் சிலர் அதை அழித்து சில மதிப்பெண்களை மாற்றி “சார் டோட்டல் மிஸ்டேக்…” “சார் டோட்டல் மிஸ்டேக்…” என்று கூறி தேர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஒரேயொரு மதிப்பெண் தான் தேவை. இதற்காக எதற்கு ஏமாற்ற வேண்டும் என்று நேராக அவரிடம் சென்று “சார் ஒரு மார்க் போட்டா பாஸ் சார்..” என்றேன். யார் மீது என்ன கடுப்பாக இருந்தாரோ தெரியவில்லை அத்தனையும் என் கன்னத்தில் காண்பித்துவிட்டார்.

“சார் இங்க மார்க் இருக்கு நீங்க போடாம விட்டுட்டீங்க… இதுக்கு கம்மியா போட்டு இருக்கீங்கன்னு கேளு. அது என்னடா ஒரு மார்க் பிச்சை? பிச்சைகாரனாடா நீ?” என்றார்.

வாங்கிய அறையும். அவரின் வார்த்தையும் எனக்கு கொஞ்சம் ரோசத்தை கிளப்பிவிட்டது. விடைத்தாளைத் தூக்கிக்கொண்டு என் இடத்தில் வந்து அமர்ந்துவிட்டேன்.

“சார் டோட்டல் மிஸ்டேக்…” “சார் டோட்டல் மிஸ்டேக்…” என்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் அவர் சந்தேகம் அடைந்து அத்தனை பேரையும் மறுபடி அழைத்து அவர்களின் விடைத்தாளைச் சோதித்து அவர்கள் செய்த கோல்மாலை கண்டறிந்துவிட்டார்.

ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி அடையாவிட்டாலும் வீட்டில் இருந்து பெற்றோரைக் கூட்டி வர வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்புத் தொடங்கியது. இயற்பியல் ஆசிரியர் தான் என் வகுப்பாசிரியர். அவரில் தொடங்கி தமிழ் ஐயா முதல் அனைவரும் “நல்லா படிக்கிறவன்… சேட்டைய குறைச்சா உருப்பட்டுருவான்” என்ற தாரக மந்திரத்தை மாற்றி மாற்றி என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். “சேட்டை பண்ணறான்” என்று ஒவ்வொரு ஆசிரியரும் சொல்லச்சொல்ல என் அம்மாவிற்கு கோபம் ஏறிக்கொண்டே வந்ததது.

வேதியியல் ஆசிரியரின் முறை வந்தது. பலர் மதிப்பெண் மாற்றி மோசடி செய்திருந்ததால் படுகடுப்பாக இருந்தார் அவர். அவருக்கு அருகில் மோசடி செய்து மாட்டிய என் நண்பன் ஒருவனின் அப்பாவும் நின்றுகொண்டிருந்தார். அவர் ஒரு காவல்துறை அதிகாரி. என்னைப் பார்த்தவுடன் என் ஆசிரியர்,

“ஓ இவனா? இவன் பெரிய ரவுடி ஆச்சே… எப்பப்பார்த்தாலும் பஸ்டாப் பக்குதுல இருக்க ஆட்டோலையே தான் உட்காந்திருக்கான். வீட்டுக்கு சாயங்காலம் எத்தனை மணிக்கு வர்றான்”

“ஏழு மணிக்கு வருவான் சார்” என்றார் என் அம்மா.

“நாலு மணிக்கு ஸ்கூல் விடுது ஏழு மணி வரை இவனுக்கு பஸ்டாப்ல என்ன வேலை? அந்த ஆட்டோக்காரன் பூராம் கஞ்சா இழுக்குறவன். இவனும் அவனுக கூட சேர்ந்து கஞ்சா இழுக்குறான்னு நினைக்கிறேன்”

ஏற்கனவே கோபத்தில் இருந்த என் அம்மாவை அவர் சொன்ன அந்தச்செய்தி (பொய் செய்தி) என்னவோ செய்துவிட்டது. அழுதேவிட்டார்.

இப்போது காவல்துறை அதிகாரியான என் நண்பனின் அப்பாவும் சேர்ந்துகொண்டார். “அவன் முழிய பாருங்க சார்… திருட்டு முழி… இவன்லாம் பின்னால பெரிய திருட்டுப் பயலாத் தான் வருவான்” என்றார்.

என் அம்மாவின் அழுகை அதிகமானது.

என் கன்னத்தில் ‘சப்’ என்று வேதியியல் ஆசிரியரின் கை பதிந்தது. “பாருடா அந்தம்மா எப்படி அழுறாங்கன்னு… இனிமேலாவது உருப்படியா படி” என்று தொடர்ந்து அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு அறிவுரைக்கும் மூக்கைப் பிடித்து ஒரு ஆட்டு. கன்னத்தில் ஒரு அறை. மொத்தம் பதினைந்து அறை கிடைத்தது. இத்தனை அறைக்கும், என் அம்மாவை அழவைத்துவிட்டார்கள் என்று கோபம் தான் வந்ததே தவிர அழுகை வரவில்லை.

அதன் பின் கணித ஆசிரியரைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும் வழியில் இவர் நின்று கொண்டிருந்தார். என்னை அடி வெளுத்ததில் என் அம்மாவிற்கு என் வேதியியல் ஆசிரியர் மீது புது நம்பிக்கைப் பிறந்துவிட்டது. “இருடா அவர் கிட்டப் போய் சொல்லிட்டு வந்துறேன்” என்று அவரிடம் சென்று “சார் போயிட்டு வரேன் சார். கொஞ்சம் பார்த்துகோங்க” என்றார்.

“ஏன் அவன் வந்து சொல்ல மாட்டானோ? இங்க வாடா” என்று பதினாறாவது அறையைக் கொடுத்தார்.

என் அம்மா “கொஞ்சம் அடிக்காம சொல்லிக்கொடுங்க சார்” என்றார். இதுநாள் வரை என் அம்மா எந்த வாத்தியாரிடமும் சொல்லாத வார்த்தை. “இவனைப் போட்டு அடி வெளுங்க சார்” என்று தான் பொதுவாகக் கூறுவார். அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளும் முன். பதினேழாவது அறை கன்னத்தில் விழுந்தது. “இவன் சொல்லச் சொன்னானா அப்படி” என்றார் என் வேதியியல் ஆசிரியர்.

அப்போது வடிவேலு மீம்ஸ் எல்லாம் இல்லை. இருந்திருந்தால் நான் அவர்களிடமே “என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே” என்று கேட்டிருப்பேன்.

அன்றைக்கு முடிவெடுத்தேன். “இந்தாளு மூக்குக் கண்ணாடிய உடைக்க முடியாது. ஆனால் பள்ளிகூடத்தை முடிச்சு கிளம்புறதுக்கு முன்னாடி இவர் கார் கண்ணாடிய உடைச்சிறனும்” என்று.

பதினொன்றாம் வகுப்பு முடித்தோம். பன்னிரண்டாம் வகுப்பு இறுதியாண்டுப் தேர்வு நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பர்கள் பலர் இவரிடம் டியூசன் படிக்காவிட்டால் பிராக்டிக்கல்ஸில் மதிப்பெண் குறைத்து விடுவார் என்றார்கள். சிலருக்கு குறைத்தார். அவர்கள் எல்லாம் வேறு யாரிடமோ டியூசன் படித்தவர்கள். எனக்கு முழு மதிப்பெண் போட்டுவிட்டார்.

பள்ளியில் பல மேடை நாடகங்களில் நடித்திருந்தாலும் நடனம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்தது. ஒவ்வொரு முறை “டேய் என்னையும் சேர்த்துகோங்க டா…” என்று நடனமாடும் நண்பர்களிடம் கேட்கும்போதும். “சும்மா காமடி பண்ணாத மாப்ள… உனக்கு ஒரு ஸ்டெப் கூட வராது” என்று விரட்டியடித்துவிடுவார்கள். ஆனாலும் எனக்கு ஆசை விடவில்லை. பள்ளி இறுதியாண்டு பிரியாவிடை நிகழ்ச்சியில் நண்பர்கள் நால்வரை சேர்த்துக்கொண்டு “சரக்கு வச்சிருக்கேன்… இறக்கி வச்சிருக்கேன்… கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்…” என்ற கருத்தாழம் மிக்க பாடலுக்கு ஒரு குத்து குத்தினேன்.

என்ன தான் என் நண்பர்கள் அனைவரும் என் நடனத்தைக் காறித்துப்பினாலும். என் வேதியியல் ஆசிரியர் தனியாக அழைத்துப் பாராட்டினார். அவர் தந்த இரண்டாவது பாராட்டு. அதன் பின் நாங்கள் ஒவ்வொரு ஆசிரியருடனும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வேதியியல் ஆசிரியருடன் எடுக்கும்போது அவர் என்னை அழைத்து தோள் மீது கைப் போட்டுக்கொண்டார். அந்த தருணத்தில் அவர் மீது பிறந்த அந்த அன்பு அவர் கார் கண்ணாடியைக் காப்பாற்றி விட்டது.

என்ன தான் அவரை அன்றே மன்னித்துவிட்டாலும் அந்தப் பதினேழு அறையை நினைக்கும் போதெல்லாம் அவர் கார் கண்ணாடியை விட்டுவிட்டோமே என்ற ஒரு ஆதங்கம் வரத்தான் செய்கிறது.

நான் பள்ளி முடித்து கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது, இவரிடம் படித்த ஒரு மாணவன் தன் மரணத்திற்கு இவர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாதாகவும் அதன் பின் இவர் சில காலம் ஆசிரியர் பணியில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும் கேள்விப்பட்டேன். அதன் பின் அவரின் டியூசன் சென்டர்கள் கூட பெரும் பின்னடைவைச் சந்தித்துவிட்டன.

நல்ல மனிதர் தான். ஆனால் தான் மட்டுமே சிறந்தவர் என்ற நினைப்பும் கண்டிப்பு என்ற பெயரில் அதீதமாக நடந்துகொள்ளும் குணமும் தான் இவரின் வீழ்ச்சிக்கு காரணமோ என்று தோன்றும்.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -9

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -