முகங்கள்

பதிமூன்றாம் முகம்

- Advertisement -

மாமா சிங்கப்பூரில் இருந்து வாங்கிக் கொடுத்துவிட்ட நைகி ஷூஸ், அண்ணன் சிங்கப்பூரில் இருந்து வரும்போது வாங்கி வந்த தங்கச் சங்கிலி, புதிய பெட்டி, அதற்கு உறை, சமுக்காலத்தால் சுற்றப்பட்ட தலையணை, போர்வை என அத்தனையும் தூக்கிக்கொண்டு முதல் நாள் கல்லூரி விடுதியில் சேர்வதற்காகச் சென்றேன். எனக்கு அறை எண் 126ஐ ஒதுக்கிக்கொடுத்திருந்தார்கள். அது கீழ் தளத்தில் இருந்தது. 

நான் ஆறாம் வகுப்பு படித்த போது விடுதியில் சேர்ந்து முதல் இரண்டு நாள்கள் அழுதுகொண்டே இருந்தேன். அப்போது அங்கே எனக்கு ஆறுதல் சொல்ல ஒரு நண்பன் வந்தான். “அதான் நாங்க எல்லாம் இருக்கோம்ல.” என்று அவன் சொன்ன ஆறுதல் மொழி தான் என்னைத் தேற்றியது. ஆறாம் வகுப்பிற்கு பின் வீட்டில் இருந்துதான் பள்ளி சென்றேன். அதன் பின் இப்போது கல்லூரியில் மீண்டும் விடுதியில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. தினமும் அதிகாலையில் எழுவதே நமக்குச் சிரமமான காரியம் அதிலும் மதுரையில் இருந்து அறுபது கிலோமீட்டர் பயணித்து ஏழரை மணிக்கு கல்லூரி வருவதெல்லாம் நடக்கவே முடியாத காரியம். விடுதி தான் ஒரே வழி.

முதல் நாள் என் பெற்றோர் கல்லூரியில் விட்டுச்சென்ற பின் அறை வாசலில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்கு பள்ளி விடுதியில் முதல் நாள் ஆறுதல் சொன்ன அதே நண்பன் இப்போது கல்லூரியில். “டேய் வாடா… என் கூட வந்து தங்கிக்கோடா..” என்றேன். ஆனால் அவன் ஏற்கனவே அவன் ஊர் நண்பர்கள் சிலருடன் தங்கிக்கொள்ள தக்க ஏற்பாட்டுடன் வந்திருந்தான். அவனுக்கு நான்காவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவன் பெற்றோர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

“ஜெயக்குமாரு நீ அவன் கூட போய் தங்கிக்கோடா… இல்லை நாலாவது மாடில அவன் பக்கத்து ரூம்ல இடம் இருந்தா கூட அங்க போயி தங்கிக்கோ… நீங்க ரெண்டு பேரும் பக்கத்துல இருந்தா எங்களுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றார் அவன் அம்மா. சில நாள்கள் கழித்து மாறிக்கொள்கிறேன் என்று அவரிடம் சொல்லி அனுப்பினேன்.

அவன் வீட்டில் அவன் செல்லப்பிள்ளை. அவனை விடுதியில் விடவே அம்மா, அப்பா, தங்கை, தாத்தா, ஆயா, மாமா என அனைவரும் வந்திருந்தார்கள். இதே போல் தான் பள்ளி விடுதிக்கும் வருவார்கள். பள்ளி விடுதியில் ஞாயிறு மட்டும் தான் பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை அவன் குடும்பம் மொத்தமும் மேற்சொன்ன ஆயா தாத்தா உட்பட அனைவரும் வருவார்கள். திங்கட்கிழமை மாமா மட்டும் வந்து விடுதியின் கதவோரம் நின்று நாங்கள் வெளி வரும்போது பார்த்துவிட்டுச் செல்வார். செவ்வாய் அப்பா வருவார், புதன் தாத்தா வருவார், பின் இடையில் ஒரு நாள் அம்மா தங்கையை அழைத்துக்கொண்டு வருவார். இப்படி அவனைப் பார்க்க ஒவ்வொரு நாளும் யாராவது வந்துகொண்டே தானிருப்பார்கள். 

இப்போது கல்லூரிக்கு அப்படி வருவது சாத்தியமில்லை. மேலூரில் இருந்து தினமும் மதுரை எளிதாக வந்துவிடலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் வருவது சிரமம் தானே? அப்படியும் வாரத்திற்கு ஒருநாளாவது வந்துவிடுவார்கள். 

பள்ளி விடுதியில் படிப்பதில் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் நாம் நினைத்ததை விளையாடலாம். பெரிய விளையாட்டுத் திடல் இருக்கும். கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து என நாம் கேட்டது கிடைக்கும். கிரிக்கெட்டுக்கு அனுமதி கிடையாது அதனால் அவ்வப்போது உடைந்த பெஞ்சு கட்டைகளை வைத்து வார்டனுக்குத் தெரியாமல் விளையாடுவோம். 

நான் கோகோ மற்றும் கால் பந்து விளையாடுவேன். அவன் கால் பந்து சிறப்பாக விளையாடுவான். நான் விடுதியில் இருந்து விலகிய பின் போதிய பயிற்சி இன்றி பள்ளிக்குள் விளையாடுவதோடு நிறுத்திக்கொண்டேன். பயிற்சி பெற ‘பூட்’ அவசியம் நானுறு ரூபாய் வாங்கி வா என்றார்கள். என் அம்மா “மொதல்ல ஒழுங்காப் படி… அப்பறம் விளையாடலாம்” என்று தலையில் தட்டி ஒரு மாரடோனாவை மழுங்கடித்துவிட்டார். சில நேரம் அதுவும் நல்லதுக்குத்தான் என்று தோன்றும். உண்மையில் நான் பார்த்த பல நல்ல விளையாட்டு வீரர்களின் நிலை இன்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவர்கள் படிப்பை விட்டு விளையாட்டு விளையாட்டு என்று பல கோப்பைகளை வென்றார்களே தவிர வாழ்க்கையை வென்றார்களா என்றால்? ஒரு சிலர் வென்றார்கள் எனலாம். என்னோடு ஆறாம் வகுப்பு படித்த ஒரு நண்பன் “சிக்ஸ்த் போர்த் (4th) இயர்” என்பான். பத்தாவது படிக்கவேண்டியவன் அப்போதும் ஆறாவது படித்துக்கொண்டிருந்தான். ஜூனியர்களோடு ஓட்டம் பிடிக்க வேண்டியவன் சப்ஜூனியர்களோடு ஓடி தங்கம் வென்று கொண்டிருந்தான். அவன் நன்கு விளையாடுவதால் தான் அவனை வேண்டுமென்றே தேர்ச்சி பெறவிடாமல் செய்கிறார்கள் என்ற ஒரு வதந்தியும் பள்ளியில் பரவிக்கிடந்தது. இருபத்திநான்கு வயதான நண்பர் எங்களோடு பத்தாம் வகுப்பு படித்தார். அது அவர் சொன்ன உண்மையான வயது. சர்ட்டிபிகேட்டில் இருப்பதெல்லாம் தெரியாது. நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தான் முதலிடம் வருவார். இரண்டாவது வருபனுக்கும் அவருக்கும் குறைந்தது பத்து மீட்டர் இடைவெளியாவது இருக்கும். அவ்வளவு வேகம். 

சரி நம் நாயகனுக்கு வருவோம். பள்ளி நாள்களில் என் நண்பன் அவ்வளவு உயரமில்லை. ஆறாம் வகுப்பில் 125cm பக்கத்தில் இருந்திருப்பான். எனக்கும் அவனுக்கும் உயரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் குச்சியாக இருந்தவன் அடுத்தடுத்த வருடங்களில் பக்கவாட்டில் விரிந்து ஊதத் தொடங்கிவிட்டான். என்ன தான் ஆள் ஊதினாலும் கால்பந்து அணியில் அவனுக்கென்று ஒரு இடம் இருந்தது. முதல் பதினொன்றில் அவன் இல்லாவிட்டாலும், முதலில் இறக்கிவிடப்படும் சப்ஸ்டிட்டியூட் அவனாகத் தானிருப்பான். அவன் உருவத்திற்கும் உருண்டு உருண்டு ஓடி பந்தைக் கால்பற்றி அடிக்கும்போது எதிரணியினர் சிலரே அவனுக்கு இரசிகர்களாகிப்போயிருப்பார்கள். அவன் உயரமும் உடல்வாகும் அவனைப் பார்ப்பவர்க்கு எளிதாகப் பிடிக்கும்படி செய்துவிடும். அவன் காலுக்கு பந்து சென்று அவன் குடுகுடுவென ஓடத்தொடங்கும் போதே ‘ஹே….’ என்று பார்ப்பவர்கள் கூச்சல் போடத் தொடங்கிவிடுவார்கள். கடைசிநேரத்தில் இறக்கிவிடப்பட்டாலும் ஒரு அசத்து அசத்திவிடுவான்.

விளையாட்டில் இருப்பதில் ஒரு சலுகை என்னவென்றால் எந்த வகுப்பை வேண்டுமானாலும் கட் அடித்துக்கொள்ளலாம். வருகைப்பதிவேட்டிலும் வருகை வந்துவிடும். நான் வகுப்பில் இருந்து வெளியேற வேண்டுமானால் அவனிடம் சொல்லி என்னை வகுப்பில் வந்து அழைக்கச் சொல்வேன். அதே போல் என் பள்ளியில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு நாடகம் போடுவது நான் தான். அவன் வகுப்பிற்குச் சென்று “சார், டிராமா பிராக்ட்டீஸ்” என்று கூறி அவனை அழைத்துவந்துவிடுவேன். “அவன் ஏதாவது சிறிய கதாப்பாத்திரம் ஏற்று நடிப்பான். இல்லை அதுவும் முடியாது என்று ஓடிவிடுவான்.” 

என்னதான் வகுப்புகள் பல கட்டடித்து இருந்தாலும். படிக்கும் நேரத்தில் ஓரளவு படித்துவிடுவோம். அதனால் தான் இருவரும் ஒரே கல்லூரிக்கு பொறியியல் வரை வந்துவிட்டோம். அவனுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு வந்ததே இல்லை. அதே போல் எல்லா மருந்தும் கைவசம் வைத்திருப்பான். பள்ளி விடுதியில் படிக்கும் நேரத்தில் ஒன்றுக்கு இரண்டுக்கு எல்லாம் கேட்டால் வார்டன் உதைப்பார். அப்படியான ஒரு தருணத்தில் அடக்க முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு நெளிந்த பொழுது “இந்தாடா இதுல ஒரு மாத்திரைய போட்டுக்கோ நின்றும்” என்று அவன் கொடுத்த அந்த சிறிய வெள்ளை நிற மாத்திரை இன்னும் என் நினைவில் நிற்கிறது. அதே போல் அவனைப் பார்க்க வரும் உறவினர்களும் ரொட்டி, முறுக்கு, மிட்டாய், சீடை என அவன் பெட்டியை நிறைத்துக்கொண்டே இருப்பார்கள். அது அவனுக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்கும் தான்.

கல்லூரியில் வெவ்வேறு அறையில் தங்கியிருந்தாலும் நான் அடிக்கடி அவன் அறைக்குச் சென்றுவிடுவேன். ‘ஸ்டடி அவர்’ (படிக்கும் நேரம்) அந்த நேரத்தில் மட்டும் எங்கும் செல்லக்கூடாது என்று விடுதி வார்டன் அறிக்கை விட்டிருந்தார். அதெல்லாம் யார் மதிப்பது நான் எப்போதும்போல அவன் அறைக்குச் சென்றுவிட்டேன். அங்கே எங்கள் விளையாட்டு தொடங்கிவிட்டது. பாராஷூட் தேங்காய் எண்ணை ஊதா நிற டப்பாவை ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொண்டு அதை மற்றவர் மேல் பிதுக்கி அடித்து விளையாடிக்கொண்டிருந்தோம். பத்தாததற்கு கோகுல் சாண்டல், பாண்ட்ஸ் பவுடர் என எல்லாவற்றையும் வைத்து எங்கள் முகங்களை வெண்மையாக்கிக்கொண்டிருந்தோம். திடீரென என் கையில் இருந்த தேங்காய் எண்ணை டப்பா மூடி பறந்துவிட்டது. விளைவு எதிரே இருந்த என் நண்பன் மூஞ்சி மொத்தமும் தேங்காய் எண்ணையால் அலங்கரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து முடிய வார்டன் அவன் அறைக்கு வெளியே வரவும் சரியாக இருந்தது.

“செத்தோம் டா” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் என் நண்பன் நாடகத்தைத் தொடங்கி இருந்தான். “ஆ… ஊ…” என்று காதைப் பிடித்துக்கொண்டு அரற்றினான். 

“என்னடா? என்னடா? இங்க விளையாட்டு?” என்று வார்டன் கத்தினார்.

“சார்… காது ரொம்ப வலிக்குது சார்…” என்றான்.

“என்னடா ஆச்சு?”

“ரொம்ப நேரமாவே காது ரொம்ப வலிக்கிது சார்… இவன் காதுல கொஞ்சம் தேங்காய் எண்ணை விட்டா சரியாகிடும்ன்னு விட்டான் சார்… மூடி புடுங்கிருச்சு சார்…” என்றான். எனக்கு இப்போது தான் புரிந்தது நாடகம் எதை நோக்கி நகர்கிறது என்று.

என்னை திரும்பிப்பார்த்த வார்டன். “உன் ரூம் கீழ தானேடா? இங்க ஏன்டா வந்த?” என்றார்.

“சார் பிரண்டு சார், காது வலின்னு சொன்னான் அதான் சார் வந்தேன்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறிவிட்டு. தலையைக் கவிழ்ந்துகொண்டேன்.

இந்தச் சம்பவம் நடக்கும் முன்னர் ஒருமுறை இதே வார்டனிடம் விசில் அடித்து மாட்டியிருக்கிறேன். அப்போது என்னிடமிருந்து கல்லூரியில் இருந்து விலகிக்கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டினார். நானும் ஒரு அரைமணிநேரக் கெஞ்சலுக்குப் பின் ஒரு மயக்க நாடகத்தை அரங்கேற்றினேன்.  ஆள் மிரண்டுவிட்டார். இங்கே அங்கே ஓடி தண்ணீர் தெளித்து எழுப்பி ஒன்றும் செய்யமாட்டேன் என்று அனுப்பிவைத்தார். அதிலிருந்து எங்கு பார்த்தாலும் உடல் நலத்தை விசாரிப்பார். மறுபடி மயக்கம் வந்ததா என்று கேட்பார். வந்தால் உடனே அவரிடம் சொல்லும் படியும் அவர் உடன் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுவார்.

இப்போது இங்கே மாட்டி இருக்கிறேன். அவருக்கு என்னை என்ன செய்வது என்றே தெரியாதது போல் நெற்றியில் கைவைத்து தேய்த்துவிட்டு. “போ… போ… நீ முதல்ல உன் ரூமுக்கு போ…” என்று விரட்டினார். நானும் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிவிட்டேன். நண்பன் போட்ட காதுவலி நாடகமும் நன்கு வேலை செய்தது. வார்டன் அவனை நன்கு உறங்கிவிட்டு காலையில் வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார். காலையிலும் வெறும் உடல் நலன் விசாரிப்பு மட்டும் தான்.

எங்கள் கல்லூரி மலைகள் சூழப்பட்டு ஒரு காட்டிற்குள் இருப்பது போல் இருக்கும். ஒன்றுக்கு பதினெட்டு காவலாளிகள் இருந்தாலும் அனைவர் கண்களிலும் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு ஏறிக்குதித்து சினிமா பார்க்கச் சென்றுவிடுவோம். ‘சாமி’ படம் என்று நினைக்கிறேன். ராஜபாளையத்தில் ஜெய் ஆனந் தியட்டரில் பார்த்துவிட்டு வந்து சத்தமில்லாமல் விடுதிக்குள் நுழைந்து தூங்கிவிட்டோம். முந்தைய இரவில் யாராவது வந்து எங்களிடம் நீங்கள் நாளை மாட்டிக்கொள்ளப் போகிறீர்கள் என்று சொல்லியிருந்தால் சிரிக்கத்தான் செய்திருப்போம். எவ்வளவு தான் ஏறிக்குதிப்பதில் நாங்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் விதி வேறு ரூபத்தில் வந்து விளையாடிவிட்டது.

நாங்கள் ஏறிகுதித்து திரைப்படத்திற்கு சென்றது போல் வேறு சிலரும் வந்திருந்தனர். அவர்கள் திரையரங்கில் எங்களோடு சேர்ந்துகொண்டனர். அப்படி வந்த ஒருவன் விடுதியில் அவன் அறைத்தோழன் பணத்தைத் திருடிவிட்டு வந்திருக்கிறான். வார்டனிடம் பிரச்சனை செல்ல அவன்  அப்ருவராகி யாராரெல்லாம் படத்திற்குச் சென்றார்கள் என்று அத்தனை பேரையும் போட்டுக்கொடுத்துவிட்டான். என் நண்பனின் அறையில் இருந்த அத்தனை பேரும் மாட்டிக்கொண்டனர். இந்த ரணகளத்திலும் ஒரு குதுகலம் என்னவென்றால் மாட்டிக்கொண்டவன் என் பெயரை மட்டும் சொல்லவில்லை. இத்தனைக்கும் அவன் திரையரங்கில் என் அருகில் தான் அமர்ந்திருந்தான். அவன் திருட்டுக்காசில் வாங்கிய பாப்கார்னில் நானும் கொஞ்சம் சுவைத்திருந்தேன். ஒருவேளை என் பெயர் அவன் வாய்க்குள் நுழையவில்லையோ என்னவோ. அந்த சில நிமிடங்கள் அவன் என்னை மறந்திருந்ததால் நான் தப்பித்தேன்.

என் நண்பன் மற்றும் அவன் அறைத்தோழர்கள் கல்லூரியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள். விடுதியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இதற்கெல்லாமா இவ்வளவு பெரிய தண்டனை என்கிறீர்களா? எங்கள் கல்லூரியில் அப்படித்தான். அவர்களாகவே “நாங்க  ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு… ஸ்ட்ரிக்ட்டு… ஸ்ட்ரிக்ட்டு…” என்று மூன்று முறை கூறிவிட்டு மாணவர்களை முடிந்த அளவு அடக்கிவைக்கவே செய்வார்கள்.

இப்போது இந்த நற்செய்தியை என் நண்பர்கள் வீடுகளில் எல்லாம் சென்று சொல்ல வேண்டும். தனித்தனியாகச் சென்றால் உதைகிடைக்கும். அதனால் நாங்கள் நான்கு பேர் மொத்தமாக ஒவ்வொருவர் வீட்டிற்காகச் சென்று சமாதானம் கூறுவோம் என்று திட்டமிட்டுச் சென்றோம். முதலில் என் நண்பன் வீட்டிற்குச் சென்றோம்.

“என்னங்கடா? மொத்தமா வந்திருக்கீங்க? எதுவும் ப்ளான் போட்டு எங்கயாவது கிளம்புறீங்களா? காசு வேணுமா” என்று என் நண்பனின் அம்மா கேட்டார்.

நான் தான் மெதுவாக நடந்ததைக் கூறினேன். நான் சொன்ன செய்தி அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கும். கண்கள் எல்லாம் கலங்கிவிட்டன. என்ன தான் வசதிவாய்ப்புகள் இருந்தாலும் எல்லாத் தாயும் தன் மகனை சான்றோன் என கேட்கவே விரும்புவாள்.

“நீ உங்க வீட்ல சொல்லிட்டிய ஜெயக்குமாரு?” என்று என்னிடம் கேட்டார்.

“இல்லம்மா நான் சாஸ்பென்ட் ஆகல” என்றேன். அவருக்கு இன்னும் அதிர்ச்சியும் அவமானமும் கூடியது. கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் ஊற்றியது. 

“பார்ரா அந்தப்புள்ளைய? அவனும் உன் கூட தானே ஸ்கூல் படிச்சான்… அவன் எப்படி நல்லவனா இருக்கான்…” 

நான் இடையில் மறித்து “இல்லம்மா நானும் தான் படத்துக்கு போயிருந்தேன்… ஆனால் மாட்டல என்றேன்”

“பார்ரா… அவன் எப்படி மாட்டாம படத்துக்கு போயிருக்கான்…” என்று மறுபடி அவனைத் திட்டினார். 

“‘சஸ்பென்ட்’ தான் அடுத்த மாசம் காலேஜ் போயிடலாம்… நிறைய பேர் காலேஜுக்கு வெளிய வீடு எடுத்து தங்கி இருக்காங்க… ஒன்னும் பயமில்லை…” அப்படி இப்படி சொல்லி சமாளித்தோம். பின் வாழையிலையில் கறி பரிமாறி சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மற்ற நண்பர்கள் வீட்டில் அவர்கள் தந்தையர்கள் எளிதாக புரிந்துகொண்டார்கள். 

“காலேஜ் பசங்கன்னா கட்டடிச்சுட்டு படத்துக்கு தான் போவாங்க… இதுக்கெல்லாமா சஸ்பெண்ட் பண்ணுவானுக என்ன காலேஜு?” இன்னொரு நண்பனின் அப்பா கூறியது எங்களுக்கு மேலும் ஆறுதலைத் தந்தது.

என் நண்பர்கள் அனைவரும் அதன் பின் வெளியில் வீடு எடுத்து தங்கத் தொடங்கினார்கள். ஏறிக்குதித்து படத்திற்கு சென்று விட்டு இனி நான் விடுதிக்குத் திரும்பத் தேவையில்லை. நண்பனின் அறையில் தூங்கிவிட்டு அதிகாலை கல்லூரிக்கு வருபவர்களுடன் சேர்ந்து வந்துவிடலாம். அதுவும் ஒரு வசதியாகிப் போய்விட்டது. அதுமட்டுமல்ல அவன் தங்கியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாப்பாட்டுக் கடையிலும் கணக்கு வைத்திருந்தான். நான் எங்கு சென்று என்ன சாப்பிட்டாலும் அவன் கணக்கு தான். என் பையில் இருந்து பணம் எடுக்கப்போனால் கூட. “டேய் இந்தக் கடைல எனக்கு அக்கவுன்ட் இருக்கு டா…” என்று அவனே அங்கிருக்கும் நோட்டுப்புத்தகத்தைத் திறந்து எழுதிவிடுவான். அதன் பின் அவனுக்கு எதற்கு சிரமம் என்று அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்து நானே எழுதிவிடுவேன். அவன் கணக்கில் தான்.

ஒருமுறை “மாப்ள ‘பால முருகன்’ கடைல மட்டும் போன மாசம் ஆறாயிரம் வந்துருச்சுடா… வர்றவன் போறவனெல்லாம் என் கணக்குலயே எழுதுறான் ” என்றான்.

“டேய் என்னைய சொல்றியாடா?” என்றேன்

“டேய் மாப்ள உன்னைய போய் சொல்லுவேனாடா…” என்று சமாதானப்படுத்தினான்.

இருந்தாலும் அவன் அவ்வளவு தூரம் சொன்ன பின் எப்படி சும்மா இருப்பது. அன்று இரவு அதே பால முருகன் கடைக்குச் சென்று ஒரு எண்பது ரூபாய்க்குத் தின்றுவிட்டு அவன் கணக்கில் எழுதிவைத்துவிட்டு வந்துவிட்டேன்.

பள்ளியில் கால்பந்தாடியவன் கல்லூரியில் அந்தப் பக்கமே செல்லவில்லை. கள்ளங்கபடமற்றவன் யாரையும் எளிதாக நம்பிவிடுவான். கல்லூரி முடிந்து வெவ்வேறு இடங்களுக்கு வேலை தேடிச் சென்றோம். நான் சென்னையை நோக்கிச் சென்றேன் அவன் சென்னை வந்து பின் பெங்களூரு சென்றுவிட்டான். அதன் பின் தொடர்புகள் வெகுவாக குறைந்து எப்போதாவது பேசிக்கொள்ளும் அந்தக்கால நண்பர்கள் போல் ஆகிவிட்டோம். 

உண்மையில் இன்று வேறு ஒருவனைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து தான் தொடங்கினேன். ஆனால் கல்லூரி ஆரம்ப வாழ்க்கை என்றவுடன் மனம் முழுவதையும் இவன் நிறைத்துக்கொண்டான். எவ்வளவு தான் வெகு தொலைவில் இருந்தாலும் சந்திக்காமலே பல வருடங்கள் கடந்துவிட்டாலும் நீங்காத நினைவுகளில் இன்னுமும் என்னுடனே இருக்கும் நண்பன்…

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -14

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -