முகங்கள்

முதல் முகம்

- Advertisement -

கல்லூரி முடிந்து விடுதி மெஸ்சுக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு அறைக்குத் திரும்பினோம். நாங்கள் முன்னமே வந்து நோட்டு புத்தகங்களை வைத்துச் சென்றிருந்ததால் அறை திறந்தே இருந்தது. எங்கள் அறையில் நண்பர்கள் நால்வருமே பெரிதாகப் பெட்டியை பூட்டி சாவியை இடுப்பில் தொங்கவிட்டுச் செல்பவர்கள் அல்ல. பெரும்பாலும் அது திறந்தே கிடக்கும். ஆனால் அதுநாள் வரை எதுவும் தொலைந்தது இல்லை. புதிதாக வாங்கப்படும் சட்டைகள் மட்டும் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் பெட்டி வந்து சேர்ந்துவிடும்.

ஆனால் அன்று என் நண்பனின் பெட்டிக்குள் இருந்த ரூபாய் 500 திருடுபோயிருந்தது. கல்லூரி நாள்களில் ஐநூறு என்பது பெரிய தொகை. அதுவும் நாங்கள் விடுதியில் தங்கி இருப்பதால் அந்தப் பெரிய தொகையை எங்கள் வீடுகளில் கொடுத்து அனுப்புவார்கள். வீட்டில் இருந்து சென்றிருந்தால் பேருந்துக் கட்டணம் போக பத்திருபது தான் கிடைக்கும். 

சரி பணம் பறிபோய்விட்டது இப்போது இதை எடுத்தவன் யார் என கண்டுபிடிக்க வேண்டும். விசாரித்த போது என்னைத் தேடி நண்பன் என்று சொல்லிக்கொண்டு ‘களவாணிப்பய’ ஒருத்தன் வந்து சென்றதாகவும் நான் அறையில் இல்லாததால் “தம் அடிக்க அஞ்சு ரூபா குடு. ஜெயக்குமார் வந்தா நான் வந்தேன்னு சொல்லி வாங்கிக்க” என்று கூறி வாங்கிவிட்டு என் அறைக்குள் சென்று சில நிமிடங்களில் திரும்பிவிட்டதாக பக்கத்தறை நண்பன் கூறினான். இந்தக் ‘களவாணிப்பய’, கல்லூரியில் மிகவும் பெயர் பெற்ற ‘களவாணிப்பய’. இவனைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம். இவன் வந்து சென்றான் என்றவுடன் அவன்தான் நிச்சயம் எடுத்திருப்பான் என்று உறுதியானது.

அவனிடமிருந்து பணத்தை வசூல் செய்ய வேண்டும் என்றால் கல்லூரியில் புகார் அளிக்க வேண்டும். அவன் நிச்சயம் இல்லை என்று சாதித்துவிடுவான். ஆக அது சாத்தியமில்லை. சரி அவன் வீட்டில் சொல்லலாம் என்றால் அந்தத் தறுதலையைத் தான் தலைமுழுகி பல வருடம் ஆகிவிட்டது என்பார் அவன் அப்பா. மூன்றாவது வழி நிச்சயம் பலனளிக்ககூடிய வழி. அவன் மூக்கில் இருந்து கொஞ்சம் தக்காளிச் சட்டினியை வெளியே எடுத்தால் பணம் வந்துவிடும். குறைந்த பட்சம் உண்மையாவது வந்துவிடும். இதை என் நண்பனிடம் கூறிய போது “ஏன்டா காசுக்காகப் போய் ஒருத்தனை அடிக்கனுமா… விடு போனா போகட்டும்” என்று எனக்கு அறிவுரை வழங்கத் தொடங்கினான்.

“அடே என்னடா இப்படி இருக்க… வாடா போய் வார்டன்கிட்டயாவது கம்ப்ளைன்ட் பண்ணுவோம்” என்றேன். அதற்கும் அவன் “டேய் ஒருவேளை அவன் எடுக்கலைன்னா அவன் மனசு கஷ்டப்படும்ல” என்றான். அந்தக் களவாணிபயலிடம் சென்று ‘ஏன்டா காச எடுத்தியா?” என்று கேட்க கூட இல்லை. நிச்சயம் அவன்தான் எடுத்திருப்பான். பிற்காலத்தில் ஒருநாள் அவனே அதை என்னிடம் பேச்சுவாக்கில் கூறினான்.

என்னால் அந்த நிகழ்வை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவேயில்லை. அது எப்படி இவன்தான் திருடன் என்று தெரிந்த பின்னும் ஒருவனை ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாமல் மன்னித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல முடியும்? 

ஒல்லியான உருவம் ஐந்தரை அடிக்கு மேல் இருப்பான். சாதுவான பார்த்தவுடன் நம்பக்கூடிய முகம். ஆள் தான் ஒல்லியே தவிர அரைக்கும் தீனிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆந்திரா மெஸ்ஸிற்குள் நுழைந்தால் பொடியில் ஆரம்பித்து தயிர் வரை ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று சுற்றுகளாவது செல்வான். கல்லூரி முடிந்து சென்னையில் சிலகாலம் ஒன்றாக இருந்தோம். தேநீர் கடைக்குச் சென்றால் கூட சர்க்கரை இல்லாத பால் தான் ஐயா குடிப்பார். பெப்சி கோக் எல்லாம் அவன் அருந்திப் பார்த்தது மிக ஆபூர்வம்.

இரண்டு வருட சென்னை வாழ்க்கைக்குப் பின் நான் சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தேன். அவன் சென்னையிலேயே வேலை செய்தான். நாள்கள் வேகவேகமாக ஓடின. ஐந்தாறு வருடத்திற்கு பின் ஒருநாள் அவனை அலைபேசியில் அழைத்துப் பேசிய போது அவன் குரல் குழறியது. அவனால் எந்த ஒரு சொல்லையும் சரியாகச் சொல்லமுடியாமல் திணறினான். அவனுக்கு அடிக்கடி வரும் வாய்ப்புண் என்று நினைத்து அவனிடம் கேட்டேன். “ஆமாடா ரெண்டு பல்லை புடுங்கிட்டேன்” என்று சிரித்தான். ஆனால் அதன் பின் வேறு ஒரு நண்பனிடம் பேசும்போது தான் தெரிந்தது அவனுக்கு வாயில் புற்றுநோய் வந்து அதற்கான அறுவைசிகிச்சை செய்திருக்கிறான் என்று. “ஏன்டா இதைக்கூட சொல்ல மாட்டியா” என்று அலைபேசியில் அழைத்துக் கத்தினேன். “இல்லை சொல்லி உன் மனசை கஷ்டப்படுத்த வேண்டாம்னு சொல்லல டா” என்றான். 

“இதுல   என்னடா கஷ்டம் இருக்கு” என்றால் “அப்போ எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா நீ வருத்தப்பட மாட்டியா” என்றான். ஒரு சிறு தலைவலி என்றால் கூட நண்பர்கள் உறவினர்கள் அனைவர்க்கும் அலைபேசியில் அழைத்து கதறி பின் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கூப்பாடு போட்டு சுய பச்சாதாபம் தேடிக்கொள்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருத்தன்!

பின் அவனிடம் அடிக்கடி பேசத் தொடங்கினேன். அவன் குரலில் மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் தெளிவாகப் பேசினான். அவன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டான். திடீரென்று தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டான். பலமுறை அழைத்தும் பலனில்லை. 

என் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அதை அவனிடம் சொல்ல அழைத்தேன் அவன் தந்தை எடுத்து “அவன் தூங்குறான்பா அப்பறம் கூப்பிடு” என்றார். நான் தொடர்ந்து ஒருவாரமாக காலை மாலை என பல நேரங்களில் அழைத்தேன் “அவன் தூங்குறான்பா. அப்பறம் கூப்பிடு”  என்பதைத் தவிர வேறு பதில் கிடைக்கவில்லை. நான் கடுப்பாகி “என்னப்பா எப்பக் கூப்பிட்டாலும் இதே தான் சொல்றீங்க அவனுக்கு என்னதான் ஆச்சு?” என்றேன். “நீ அவனுக்கு மெசேஜ் அனுப்புப்பா” என்றார். 

“என்னடா மாமா மறுபடி உடம்பு சரியில்லையா? என்ன போன்ல புடிக்கவே முடியல” என்று செய்தி அனுப்பினான். அவன் ஒரு நான்கு மணி நேரம் கழித்து “ஆமா மாமா கொஞ்சம் கஷ்டமா தான் போய்கிட்டு இருக்கு.” என்றான் மேலும் அவன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் கூறினான். எனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதைக் கூறினேன். “சூப்பர்டா” என்று வாழ்த்தி செய்தி அனுப்பினான். அது தான் அவன் எனக்கு அனுப்பிய கடைசிச் செய்தி. அவனை வந்து பார்க்க முகவரி கேட்டிருந்தேன் அதற்கு கூட பதில் அனுப்பவில்லை. 

அதன் பின் ஒரு வாரத்திலேயே அவன் இறைவனடி சேர்ந்துவிட்டான். பின் சென்னையில் இருந்த மற்ற நண்பர்களிடம் விசாரித்த போது தான் தெரிந்தது அவன் இனி எந்த மருத்துவமும் பலனளிக்காது கடைசிநாள்களைச் சொந்த ஊரில் கழிப்போம் என்று முடிவு செய்துதான் கிளம்பிச் சென்றிருக்கிறான். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தன் உயிரே போகப்போகும் சூழ்நிலையில் கூட யார் மனத்தையும் வருத்தப்படச் செய்யாமல் வாழ்ந்த அந்த நண்பனின் ஆத்மா உண்மையில் மகா ஆத்மா தான்.

இந்தத் தொடரில் முதலில் யாரைப்பற்றி எழுதுவது என்று நான் நினைத்த போது அவன் முகம் தான் தோன்றியது. “என்னடா மாமா ஆப்ரேசன் பண்ணிருக்கியாமே?” என்று கேட்ட போது “ஆமாடா ரெண்டு ஞானப்பல்லை புடுங்கிட்டேன்” என்று அவன் அனுப்பிய அந்தப் பதிலை நினைக்கும்போதெல்லாம் கண்கள் கலங்குவதை என்னால் தடுக்கவே முடிவதில்லை.

ஒருநாளும் அவன் யாரையும் மோசமாகவோ மரியாதைக் குறைவாகவோ  பேசிக் கேட்டதில்லை. தனக்கென ஒரு ஒழுக்கமான வழியை வகுத்துக் கொண்டு அதன் படியே வாழ்ந்தவன். காந்தி பிறந்த அதே தேதியில் அவனும் பிறந்தது தற்செயல் தானா?

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் – 2

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

7 COMMENTS

  1. நேரிலேயே கேட்ட ஒன்றுதான் என்றாலும் எழுத்துகளாய்ப் படிக்கையில் சோகம் இன்னும் அடர்கின்றது. அவர் ஆன்ம அமைதிக்கு இறையருள் உதவட்டும்.

    அடுத்த முகம் யாராகயிருக்கும்? என்று காத்திருக்கிறோம்.

  2. நல்ல நண்பர்.. எனக்கும் இதேபோல் சில நண்பர்களுண்டு அவர்களெல்லாம் இப்போது எங்கிருக்கிறார்களோ தெரியவில்லை. நிறைய நற்பண்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். நண்பரகள் அமைவதும் இறைவன்கொடுத்த வரம்தான்

    புனைவுகளைவிட இதுபோன்ற உண்மை நிகழ்வுகளைப்பற்றிப் படிப்பதில்தான் எனக்கு விருப்பம் நிறைய.. தொடருங்கள் சகோ

    வாழ்த்துகள்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -