மன்மதராசா

சிறுகதை

- Advertisement -

யாருக்கெல்லாம் நாம பேரு வெப்போம்?

பெத்த பிள்ளைங்களுக்கு ஆசையா தேடி பார்த்து பேரு வெப்போம். இல்ல, நாம வளர்க்குற நாய்குட்டியையோ, பூனைக்குட்டியையோ செல்லமாக் கூப்பிடுறதுக்காகப் பேர் வெப்போம். அதுவுமில்லன்னா, நமக்குத் தெரிஞ்சவங்கள கிண்டலா கூப்பிடுறதுக்காக `பட்ட பேரு’ கூட வெப்போம். அப்புறம், நாம கஷ்டப்பட்டுக் கட்டுன வீட்டுக்கு கூடப் பேர் வெப்போம். ஆனா யாராவது, அந்த வீட்டுல இருக்கிற ‘கழிவறைக்கு’ பேர் வெப்பாங்களா?. ஆனா என் புருஷன் வெச்சிருக்காருங்க? என்னன்னு கேக்குறீங்களா? “நிம்மதி நிலையம்”ன்னு. ஏன்னா ஒரு நாளைக்குத் தூங்கிற நேரம் தவிர, அவரு நிம்மதியா இருக்கிற ஒரே இடம் அது மட்டும்தானாம். காலைலே செய்தித்தாளைக் கையில எடுத்துகிட்டு உள்ளே போனாருன்னா, எல்லாத்தையும் முடிச்சுகிட்டு, கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழிச்சுதான் வெளியவே வருவாரு. அதுவரைக்கும் பூகம்பமே வந்தாலும் வர மாட்டாரு.

எங்களுக்குக் கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆகுது. மறுவீடு, விருந்து இப்படி எல்லா உபச்சாரமும் முடிஞ்சி, இவரு கூடச் சிங்கப்பூருக்குத் தனிக்குடித்தனம் வந்த மறுநாள்தான் எனக்கு இந்தச் சமாச்சாரமே தெரிஞ்சது. எங்க வீட்டுல ஒரே கழிவறைதான். அதனால காலைலே இவரு பழக்கம் தெரியாம, நானும் வயித்தை புடிச்சுகிட்டு, இந்த மனுஷன் இந்தா வந்துடுவாரு, கதவு இப்போ தொறந்துடும்ன்னு எட்டி, எட்டிப் பார்த்து அசந்து போயி கடைசில, கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு, கெஞ்சி கேட்ட பிறகுதான் வெளியவே வந்தாரு.

வெளியே வந்து, “அம்மு, உனக்காக எதை வேணாலும் மாத்திப்பேன், விட்டுக் கொடுப்பேன். ஆனா, இந்த நிம்மதி நிலையத்துல (மொதல்ல எனக்குப் புரியல) இருக்கிற நேரத்தை மட்டும் விட்டு கொடுக்கவே மாட்டேன். ஒண்ணு, நான் வெளிய வர்ற வரைக்கும், தொந்தரவு பண்ணாம காத்திரு இல்ல, நான் உள்ள போறதுக்கு முன்னாடி உன்னோட வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்திடுன்னு” சொன்னவருக்குப் பதில் சொல்ல தானா எனக்கு நேரம் இருக்கு?.

எல்லாரும் காலைலே, தூங்கி எந்திரிச்சவுடனே, இறைவா! இந்த நாளு நல்லபடியா இருக்கனும்னு’ வேண்டிக்கிட்டே எந்திரிப்பாங்க. ஆனா நானோ, இவரு பக்கத்துல தூங்குறாரா? இல்ல எந்திரிச்சு போயிட்டாரா? தான் பார்ப்பேன். தூங்கிட்டு இருந்தாருன்னா,அப்பாடா தப்பிச்சேன்னு’ தோணும். இல்லைன்னா, என்ன? வயித்தை புடிச்சுகிட்டு நடனம் ஆட வேண்டியதுதான். இந்தப் பத்து மாசத்துல பல தடவை இப்படி ஆடி, ஆடி இப்பெல்லாம், எந்தப் பாட்டுப் போட்டாலும் ஓரளவு நடனம் ஆடுறேனா, அந்தப் புண்ணியமெல்லாம் நிச்சியமா அவரைத்தான் சேரும்.

கல்யாணம் ஆகி சிங்கப்பூருக்கு பொண்ண அனுப்பி வச்சோமே தனிக்குடித்தனம் பண்ணுற பொண்ணும், மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்கன்னு பார்க்குறதுக்காக என்னைப் பெத்தவங்க சிங்கப்பூருக்கு வந்தாங்க. பேச்சு சுவாரஸ்யத்துல, இவரோட ‘நிம்மதி நிலையம்’ விஷயம் எனக்கு மறந்து போச்சு. காலைலே, எந்திரிச்சவுடனேதான் புத்திக்கு உரைச்சது. ஆனா, ஐயா! அதுக்குள்ளே எந்தரிச்சுப் போயாச்சு. நமக்கு, நடனம் ஆடி பழகிப் போச்சு. ஆனா, அவங்க பாவம் வயசானவங்க முடியுமா? பார்த்தாங்க. நீ விரும்பி கட்டுன பாவத்துக்கு நீ வேணா அனுபவி. எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு பத்து நாளுலயே கிளம்பி போயிட்டாங்க.

காதலிக்கும் போதே இவரைத் திருத்த முடியல. இனிமேலா இந்த மனுஷன் திருந்த போறாரு. ஆமாங்க, எங்க கல்யாணம் காதல் கல்யாணம். நான் பல்கலைக்கழகத்துல தாவிரவியல் துறையில இளங்கலை மூன்றாம் ஆண்டுப் படிச்சுகிட்டுயிருந்தப்போ, இவரு அப்போ வேதியியல்ல ஆய்வு பட்டத்துக்காகப் படிச்சுகிட்டு இருந்தாரு. மொத மொதல்ல, அவரை நான் கல்லூரி கலாச்சார விழாவுலதான் பார்த்தேன். அங்க நடந்த நகைச்சுவை போட்டில, இவரு பண்ணுன நகைச்சுவைக்குதான் மொத பரிசு கெடச்சது. அப்பவே, இவருக்கு நான் `விசிறி’ ஆயிட்டேன். ஏன்னா, எனக்குச் சீரியஸா இருக்கிறவங்களைப் பார்த்தாலே புடிக்காது. அதனால, கல்யாணம் பண்ணுனா இந்த மாதிரி நகைச்சுவை தன்மை இருக்கிறவரத்தான் கல்யாணம் பண்ணனும்னு நெனச்சகிட்டுயிருந்தேனா, அதனால இவுரு மேல அப்படியே காதல் ஆயிட்டேன்.. ஆனா, பொறவுதான் தெரிஞ்சது அவர் நடிக்கவேயில்லை, எப்பவுமே அப்படிதான்னு.

அதுக்குப் பொறவு எங்க காதலும், கல்யாணமும் நகைச்சுவையோ நகைச்சுவைதான். அப்போ, நான் கல்லூரி விடுதியிலே தங்கி படிச்சிகிட்டுயிருந்தேன். இந்தப் பெண்கள் விடுதியிலே, புள்ளங்களுக்குள்ள உடையை மாத்தி வாங்கிப் போட்டுட்டுப் போறது, சாதாரணமா நடக்குற விஷயம். அப்படி ஒரு நாளு, என்னோட தோழி லதா, என்னோட பச்சைக் கலர்’ சுடிதாரை வாங்கிப் போடுட்டு கல்லூரிக்குப் போனா. அன்னைக்குப் பார்த்து எங்க வகுப்பைகள ஆய்வு’க்காகப் பேராசிரியர் வெளியே கூட்டிக்கிட்டு போயிருந்தாரு. எல்லாம் முடிஞ்சு, சாயந்தரம் விடுதிக்கு வந்தா, என் தோழி லதா என் அறை வாசல்ல, நான் கொடுத்த சுடிதாரைக் கையில வெச்சுகிட்டுப் பத்ரகாளி மாதிரி நிக்குறா.

“ஏய் என்னடி ஆச்சு?, வாசல்ல நின்னுகிட்டுயிருக்கே, இப்ப என்ன அவசரம் சுடிதாரை திருப்பித் தர்றதுக்குன்னு கேட்டேன்?”

“போதுண்டியம்மா, உன் சுடிதாரை வாங்கிப் போட்டுகிட்டுப் போனதும் போதும், நான் பட்டதும் போதும். இனிமே சத்தியமா உங்கிட்ட எதையும் வாங்க மாட்டேன்னு சொன்னா”.

“எனக்கு ஒண்ணும் புரியலை. ‘ஏண்டி! என்னாச்சு? என்ன நடந்ததுன்னு சொல்லு”

“அந்த லூசு இருக்கானே எல்லாம் அவனாலதான்”

“யாரைடி சொல்ற நீ?”

“ம்ம்.. எல்லாம் நீ தேடி கண்டுபுடிச்சு சுத்திகிட்டு இருக்கியே, அந்த மன்மதராசனை பத்திதான்”.

“ஏன்? அவருக்கென்ன அவரு உன்ன என்னடி பண்ணுனாரு?”

“என்ன பண்ணுனாரா?. இன்னைக்கு நான் உன் சுடிதாரை போட்டு போனேன் இல்லையா. நான்தான் நீன்னு நெனச்சு…..”

“ஐய்யய்யோ! நான்தான் நீன்னு நெனச்சு? என்ன ஆச்சுடி? என்னை டென்ஷன் ஆக்காம சீக்கிரமா சொல்லு..’

“நான் மத்தியானம், நம்ம ராதாவுக்காகக் உணவகத்துல காத்துகிட்டு இருந்தேனா. அப்போ.. ஏய்! அம்மு ஏன் இங்க நின்னுகிட்டுயிருக்கேன்னு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா.. உன் ஆளு அங்க நின்னுகிட்டு என்ன பார்த்து என்ன சொன்னான்னு தெரியுமா?.

“என்னடி சொன்னாரு? நீட்டி மொழக்காம சீக்கிரமா சொல்லுடி”..

“ப்ப்பா…….என்ன அம்மு இது! இப்படிப் பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு வந்திருக்க! அப்படின்னு கேக்குறான்டி அந்த லூசு’

“ஏண்டி! தெரியாம தான் கேக்குறேன்? உன் சுடிதாரைப் போட்டுயிருந்தா உனக்கும் எனக்கும் கூடவா அந்த ஆளுக்கு வித்தியாசம் தெரியாம போகும். என்னைப் பார்த்து பேய் மாதிரி இருக்கேன்னு சொல்றான். அவன் தான்டி பிசாசு மாதிரி, பூதம் மாதிரி இருக்கான். இவனையெல்லாம் போய் எப்படித்தான் காதலிக்கிறியோன்னு சொல்லிட்டு, என் கையில சுடிதாரைக் கொடுத்திட்டுப் போனவதான், அதுக்குப் பொறவு அவ பேசவேயில்லை. அது மட்டுமில்ல, இந்த விஷயம் விடுதி பூரா பரவி அதுக்கப்புறம் எவளுமே, என்கிட்ட எதுவும் கேக்குறதேயில்லன்னா, பார்த்துக்கோங்களேன்.

இப்படியே காலம் ஓடிப்போச்சு. அவரும் படிப்பு முடிச்சு வேலைக்குச் சேர்ந்துட்டாரு. எனக்கும் வீட்டுல, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. நானும், என்னோட காதலைப் பத்தி அப்பா, அம்மாகிட்ட சொன்னேன். அவங்களும், சரி, பையனை வரச் சொல்லு. பார்த்து பேசி, என்னான்னு முடிவு பண்ணலாம்ன்னு சொன்னாங்க..

இதுல, என்ன ஆச்சரியம்ன்னா! என் அம்மாவும் இவரப் பார்த்தவுடனேயே, இந்த ஆளையா காதலிக்கிற. எதுக்கும் கொஞ்சம் யோசனை பண்ணிக்கோன்னாங்க ..ம்ஹூம்..நான் மசியவேயில்லையே.

அப்புறம், ஒரு வழியா எல்லாம் பேசி முடிவு பண்ணி கல்யாணத்துக்கு நாள் குறிச்சாங்க. கல்யாணத்தன்னைக்கு, காலைலே எல்லாரும் பரபரப்பா இருக்குப் போது, திடீர்ன்னு .”மாப்பள்ளைய காணோம் மாப்பள்ளைய காணோம்ன்னு” ஒரே சத்தம். என்ன ஆச்சுன்னு விசாரிச்சப்ப, என் மாமனார் அவரைச் சீக்கிரமா தயார் ஆகச் சொல்லலாம்னு அவரோட அறைக்குப் போயிருக்காரு. ஐயா! அங்கே இல்லை. தேடிப் பார்த்திருக்காரு. எங்கேயும் காணோம். கைத்தொலைப்பேசிக்கு அழைச்சா தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறாருன்னு வருது. அவ்வளவுதான். வந்த சொந்தக்காரங்கெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அலசி ஆராய்ஞ்சதுல, அவரோட வண்டிய எடுத்துகிட்டு விடிய காலைலே வெளியே போனாருங்கற தகவல் அந்தக் கல்யாண மண்டபம் காவலாளி மூலமா தெரிஞ்சது.

உடனே நான் என் அப்பாகிட்ட, “அப்பா, அவரு எங்கே போனாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா கண்டிப்பா வண்டி கோளாறு ஆகி தள்ளிகிட்டு வந்துட்டுயிருப்பாருனு மட்டும் தோணுது. எதுக்கும் போய்த் தேடிப் பாருங்கன்னு” சொன்னேன். ஏன்னா, அந்த வண்டியோட நிலைமை அப்படி. அதுல, உட்காரந்து போன நாள விட, அது கூட நடந்து வந்த நாளு தான் அதிகம்.

தேடிப் போய்ப் பார்த்ததுல, நான் சொன்ன மாதிரியே ரெண்டு தெரு தாண்டி வண்டிய தள்ளிகிட்டு வந்துகிட்டு இருந்திருக்காரு.

கல்யாணத்துக்குத் தயாராகாம, எங்கே போனீங்கன்னு? கேட்டதுக்கு, கல்யாணத்துக்குக் கட்ட வேண்டிய பட்டு வேஷ்டி, சட்டைய வீட்டுலேயே வெச்சிட்டு வந்துட்டாராம். காலைலேதான் பார்த்திருக்காரு. சரி, நண்பனை யாரையாவது அனுப்பி வீட்டுல இருந்து எடுத்துட்டு வரலாமன்னு பார்த்தா, ராத்திரி போட்ட மப்புல, எல்லாம் கவுந்து கெடந்ததால ஐயாவே வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பி போயிட்டாரு.

அப்படி எடுத்துட்டு திரும்பி வர்ற வழியிலே, வண்டி மக்கராயிடுச்சி, கைத்தொலைபேசிலையும் ஜார்ஜ் இல்லைன்னு சொல்லி அசடு வழிய சிரிச்சாரு பாருங்கோ, அப்ப என் அம்மா என்னைப் பார்த்தப் பார்வை இருக்கே! அடிப்பாவி நீயே உன் தலைல மண்ணை வாரி போட்டுகிட்டியே… அப்பிடிங்கற மாதிரி இருந்தது..

அப்புறம், ஒரு வழியா கல்யாணம் எல்லம் நல்லபடியா முடிஞ்சு தேனிலவுக்குக் கொடைக்கானலுக்குப் போனோம். போகும் போதே சொன்னேன், எனக்கு இந்த உயரம்னாலே பயம். உங்களுக்காகத்தான் கொடைக்கானலுக்கு வர்றேன். அதனால, அங்க நாம பூங்கா, படகுசவாரி, ஷாப்பங் மட்டும் போகலம்ன்னு. ஆனா, நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம ‘சூசய்ட் பாய்ண்ட்’க்கு கைய புடிச்சு இழுத்துகிட்டு போயி, மேகத்தைப் பாரு, பாறையைப் பாரு, இயற்கையைப்பாருன்னு சொல்லி காட்டுனது மட்டும் தாங்க ஞாபகத்துல இருக்கு. அதுக்குப் பொறவு என்ன நடந்துச்சினு எனக்கு ஞாபகம் இல்லை.

கண்ணு முழிச்சுப் பார்த்தா, தலைக்கு மேலே மின்விசிறி சுத்துது. சரி, எங்கேயோ படுத்துக்கிட்டு இருக்கோங்கிறது மட்டும் புரிஞ்சது. இவரு எங்கே இருக்காரு? இவருகிட்டயாவது கேப்போம்ன்னு திரும்பி பார்த்தா, கட்டிலுக்குப் பக்கத்துல ஓர் அம்மா என்னையே மொறச்சுப் பார்த்து உட்கார்ந்துகிட்டு இருக்காங்க..

நான் பார்க்கிறதை தெரிஞ்சவுடனே பக்கத்துல வந்து,

“என்ன தாயி முழிச்சுகிட்டயா.. இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு?. குடிக்கக் காபி தண்ணி எதுவும் வேணுமா”

“இல்ல அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வேணாம். நான் இப்போ எங்கே இருக்கேன்? அவரு எங்கே? நீங்க யாரு?

“இது மருத்துவமனைம்மா. நான் இங்கே வேலை செய்றேன். அந்தத் தம்பி இப்பதான் சாப்பிட வெளியே போயிருக்கு. நேத்து நீ பாட்டுக்கு மயக்கம் போட்டு விழுந்திட்ட. பாவம் அந்தப் புள்ள துடிச்சு போச்சு. மருத்துவர், ஒண்ணுமில்ல சாதாரண மயக்கம் தான், தூங்கி எழுந்தா சரியாப்போயிடும்னு சொல்லியும் அந்தப் புள்ளைக்கு மனசே ஆகல. ராத்திரி பூரா தூங்காம உன் பக்கத்துலயேதான் உட்கார்ந்து இருந்துச்சு. நான் கூடத் நீங்க தூங்குங்க நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொன்னேன். தம்பி கேக்கவேயில்லை”.

“பொறவு அந்தத் தம்பி சொல்லிச்சு.. சின்ன வயசுல அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனையில சேர்த்துயிருந்தாங்களாம். ராத்திரி தூங்குறதுக்காக வீட்டுக்குப் போயிட்டு காலையில வர்றதுக்குள்ள அவங்க அம்மாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாகி இறந்துட்டாங்களாம். அது அப்புடியே அந்தப் புள்ள மனசுல பதிஞ்சிடுச்சு. எங்கே அது மாதிரி உனக்கும் ஆயிடுமோங்கிற பயத்துல ஒரு நிமிஷம் கூட இந்தாண்ட, அந்தாண்டை நகரல. உன்மேல அந்தப் புள்ளைக்கு அம்புட்டுப் பாசம்.

அது உன்னைத் தன் அம்மா மாதிரியே நெனைக்குது. அம்மா இல்லாம வளர்ந்த பையன் பொண்டாட்டிய நல்லா வெச்சப்பான்னு சொல்லுவாங்க. நீ குடுத்து வெச்சவ. மவராசன் உன்னை நல்லா பாத்துப்பான். இப்படிப் பொசுக்கு, பொசுக்குன்னு மயக்கம் போட்டு விழாம உடம்பை நல்லா பார்த்துக்க. அதோ! தம்பி வந்துடுச்சு நா வர்றேன்னு” சொல்லட்டு அந்த அம்மா போயிட்டாங்க..

அதுக்கப்பறம் என்ன? இவரு மேல இருந்த காதல் எனக்கு இன்னும் கூடிப்போச்சு. மத்தவங்களுக்கு இவரு எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். ஆனா என்ன பொறுத்தவரைக்கும் இவரு “மன்மதராசா”தான். அதனால, அப்பப்ப இவர் பண்ணுற கோணாங்கித்தனமும், `நிம்மதி நிலையம்’ங்கிற பேருல இவர் பண்ணுற அலம்பலும் ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும், இவ்வளவு அன்பா இருக்கிறவருக்காக இதையெல்லாம் பொறுத்துக்கலாம். இப்போ வாழ்க்கை நான் நெனச்ச மாதிரியே ரொம்ப மகிழ்ச்சியா போயிட்டு இருக்கு. என்ன கொஞ்சம் நகைச்சுவை மட்டும் அதிகமா இருக்கு

அப்புறம், என் வீட்டுல வேலை செய்யுற அக்கா ரொம்ப நல்லவங்க எந்தப் பிரச்சனையும் கொடுக்காம வீட்டு வேலைகளையெல்லாம் ஒழுங்கா செய்வாங்க. என்னோட பழைய புடவை, சுடிதார் எல்லாம் இருந்தா கொடுங்கன்னு கேட்பாங்க. ஆனா நான் கொடுக்க மாட்டேன். அதனால அவங்களுக்கு என் மேல ரொம்ப ஆதங்கம். சிங்கப்பூர்ல வீட்டு வேலைக்குப் பொறுப்பான ஆள் கெடைக்குறதே குதிரைக்கொம்பா இருக்குற இந்தக் காலத்தல, காசு போனாலும் பரவாயில்லைன்னு நான் புதுப் பொடவையே வாங்கி கொடுத்துடுவேன். என் பிரச்சனை என்னன்னு அவங்ககிட்ட சொல்ல முடியுமா? என்னங்க நான் சொல்றது?.

பிரதீபா
பிரதீபாhttps://minkirukkal.com/author/pradeebhav/
நான் தற்பொழுது தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். கதை, கட்டுரை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -