பூவுக்குள் புழு

ஐந்து கவிதைகள்

- Advertisement -

பூவுக்குள் புழு

ஆற்று மணலை எண்ணிட..
மரத்தின் இலைகளை அளவிட..
மழைத் துளிகளை நிறை கண்டிட..
மின்னலின் பிரகாசத்தை..
இடியின் முழக்கத்தை..
காற்றின் உருவத்தை..
குளிரின் குரூரத்தை..
வெயிலின் கோரத்தை..
நிழலின் இதத்தை..
கருவிகளைக் கொண்டு
எளிதாய் கண்டுபிடிக்கலாம்.

மனிதனின் மனக்காட்டிற்குள்
ஒளிந்து திரியும்
அதிகார வெறியை..
ஆணவ மமதையை..
மனுச உதிரம் குடிக்கும் தாகத்தை..
இழிவு முழக்கும் குரலை..
உழைப்பை உறிஞ்சும் வஞ்சகத்தை..
அடையாளம்
எப்படி…?
அறியலாம்.

கை கட்டி
ஒருவர் முன்
கூழைக் கும்பிடு போட்டால்
போதும்….
எந்த உபகரண உதவியின்றி
எல்லா…
விகாரமும் வெளிவரும்.

??????????????????????????

இகம் மாறிய கணம்

அணிந்த ஆடை
அழுக்கானது
கறையானது
நைந்து துவண்டது
நிறம் அழிந்தது
அழகு கலைந்தது
பூச்சிகள் அரித்தது
நிலை குலைந்தது
கிழிந்து போனது
தூர எறிந்ததும்
நானற்றுப் போனது.

??????????????????????????

துண்டு துண்டாய் வானம்

சிரிப்பால் தீ மூட்டினாள்
வேகுகிறது என் இதயம்
பசியாறப் பார்க்கிறது காலம்
வலை பின்னிக் காத்திருக்கிறது சிலந்தி
பொறியில் மாட்டுகிறது பட்டாம் பூச்சி
மணப்பலி
வேட்டை நாயாய் வெயில்
தாகத்தால் கருகுகிறேன்
தேன் நிரம்பிய உண்ணிப்பூக்கள்
நிழல் தேடும் சிட்டுக்குருவி
நெடும் பாலை
விழிகளில் நீர்ச் சுனை
அவள் அடங்கா கடல்
மீன்கள் ஆயிரம் துள்ளுகின்றன
கண்ணாடிக் குடுவைக்குள் அலைகள்.

??????????????????????????

துளியில் துடிக்கும் இதயம்

பிணமெரிப்பவன் அருவருக்கவில்லை
சாக்கடை அள்ளுபவன் அசூசைபடவில்லை
வேடிக்கை பார்க்கும் நீயும் நானும் தான் மூக்கை பொத்தித் திரிகிறோம்
வைதேகி காத்திருந்தாள்
ஸ்ரீராமன் இன்னும் வரவில்லை
முதுமை தான் வந்து சேர்ந்தது
பயமாகத் தான் இருக்கிறது
துணை யார்?
தூக்கம் வந்து கொண்டிருக்கிறது
உண்மை தான் என்னிடம்
வார்த்தைகள் குறைவு
மெளனம் அளவற்று குவிந்திருக்கிறது
இதயத்தில் பூப்பது
சக உயிரிக்கு பரிசளிப்பது
பரவசமாய் உடலுள் உயிருள் படர்வது அன்பு
ஏழ்மையை எனக்குத் தெரியும்
என்னை ஏழ்மைக்குத் தெரியும்
எங்கள் இருவரையும் எவருக்கும் தெரியாது.
ஊர்வலம் போவதில் பிரச்சனை இல்லை
கடவுளைக் கும்பிடுவது பிரச்சனை இல்லை
காலிகளாய் வெறிகொண்டு ஆடுவது தான் பிரச்னை
மேகங்களின் தாலாட்டில்
உறங்கட்டும்
வெந்து தணியும் உலகம்
நான் வந்தேன்
நான் இருக்கிறேன்
நான் போவேன்.

??????????????????????????

காதலெனும் வேதனை

வெட்கம் உன் முகத்திரை
நாணத்தைப் பூண்டிருக்கிறாய்
ஆடையெனும் மேகத்துள் ஒளிர்கிறாய்
புன்முறுவலை பூத்துவலையாக்குகிறாய்
என் இதயம் நனைந்து நடுங்குகிறது
மெல்லத் துவட்டிட உன் இதழ்கள் கொண்டு வா
என் சருமம் பனித் தூவல்
உன் தீண்டல் உஷ்ணமூட்டும்
உன் அருகாமை கதகதப்பூட்டும்
நுரை மூடிய குமிழிகள் நகர்கின்றன
தூறல் தூறிக் கொண்டிருக்கிறது
நதி போலக் கலங்குகின்றேன்
மெல்லிய பூங்காற்றாய் வீசுகிறாய்
என் மேனியெல்லாம் புல்லரிக்கிறது
மனதுக்குள் காய்ச்சல் போல குதுகுதுக்கிறது
உதடுகள் உலர்ந்து போகின்றன
உள்ளூர வெப்பம் ஊற்றெடுக்கிறது
உன் இதழ் மயிலிறகால் வருடிவிடு.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -