பூக்கட்டும் காதல் பூ

கவிதை

- Advertisement -

தேனிருக்கும் குவளையை
எறும்புகள் ருசிக்கத் தவறுவதில்லை.
அவை உள்விழுந்து பருகி பரவசமடைந்து
கரை சேர்வதால் தான்
காதல் தித்திப்பாகிவிட்டதோ!

குருடாய் செவிடாய்
வாய்பேசாமல் உறைந்திருந்தாலும்,
மனதோடு மனம்
உரையாடிக்கொள்வதால் தான்
காதல் மாயையாகிவிட்டதோ!

அந்திக்காவலன்,ஆதவன்
யாரையும் கண்டுகொள்ளாமல்
கடிகார சட்டத்திற்குள்ளேயே
கூடுகட்டி கூடி வாழமுடிவதால் தான்
காதல் சுயநலமாகிவிட்டதோ!

விழிகள் பேசும் வார்த்தைக்கு
அகராதி ஏதுமில்லையெனினும்,
அன்றும் இன்றுமாய்
தொன்மையாகிவிட்டதால் தான்
காதல் மொழியாகிவிட்டதோ!

காதல் மூச்சை சுவாசிக்க
காதல் உணவை யாசிக்க
காதல் உணர்வை நேசிக்க
காதல் நிறத்தை பூசிக்க
காதலோடு பூத்திருப்போம்!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -