புத்தம் புது காலை – விமர்சனம்

- Advertisement -

புத்தம் புது காலை – அமேசான் பிரைம் இல் 16 Oct வெளிவந்த ஒரு anthology வகைப் படம். சமீபகாலமாக தமிழில் இந்த மாதிரி படங்களை பார்க்க முடிகிறது. Anthology என்றால் என்ன? பல்வேறு சிறிய கலைப்படைப்புகளை இணைத்து கட்டப்பட்ட ஒரு கதம்பம் என்று கூறலாம். திரைப்படம் என்று மட்டுமல்ல, கதை, கவிதை போன்ற எந்த கலை வடிவத்தையும் இணைத்து ஒரு புத்தகமாக (இல்லை மின்கிறுக்கல் போன்ற இணையதளத்தில் தொகுப்பாக) வெளியிட்டால் அதுவும் ஒரு anthology தான். அந்தவகையில் பல்வேறு சிறிய திரைப்படங்களை ஒன்றிணைத்து கட்டப்பட்ட இதனை திரைப்படம் என்பதைவிட திரை கதம்பம் என்று கூறுவதே சரியாக இருக்கும்.

Anthology படங்களில் சில நன்மைகள் உள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமென்ற தேவை இல்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில்(Genre) இருக்கலாம் என்பதால் அதில் உள்ள ஏதேனும் ஒரு படம் உங்களுக்கு பிடிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு படத்தின் கால அளவும் குறைவாக இருப்பதால் தேவையில்லாத காட்சிகள், பாடல்கள் படத்தில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. 

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த படத்தில் மொத்தம் 5 குறும்படங்கள். ஒவ்வொரு குறும்படமும் சுமார் 20-25 நிமிடங்கள் மட்டுமே. மொத்தமாக இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்து விடும். ஒரே ஒரு குறும்படத்தை தவிர மிச்ச நான்கிலும் எந்த ஒரு பெரிய திருப்பமும் இல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு அழகியல் கலந்து எடுத்துள்ளனர். இந்த ஐந்து படத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் லாக் டவுனில் அனைத்து சம்பவங்களும் நடப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இதிலுள்ள ஒவ்வொரு படமாக பார்ப்போமா?

இளமை இதோ இதோ – வயதாகி துணையை இழந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதலை கவிதையாக கூறுவதுதான் இந்த படம். வயதானவர்கள் மனதிலிருக்கும் வாலிபத்தை அடையாளம் காட்டும் விதமாக சில காட்சிகளுக்கு மட்டும் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் காளிதாஸ் ஆக வருபவர்கள் முதிர்ச்சியான காட்சிகளில் ஊர்வசி மற்றும் ஜெயராம் ஆக வருகிறார்கள். இந்த முயற்சிக்கே இயக்குனருக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம். சில காட்சிகளிலேயே பாசம், சண்டை, பயம், சிரிப்பு என்று ஒரு வாழ்க்கை பயணத்தையே நம் கண்முன் கொண்டு வருகிறார்கள். இளவயது காதலர்கள் பெற்றோர்களைப் பார்த்து பயப்படுவது போல வயதான காதலர்கள் பெற்ற குழந்தைகளை பார்த்து பயப்படுவதை கலகலப்பாக காட்டியுள்ளார்கள். நீங்கள் மென்மையான காதல் கதைகளை ரசிப்பவராக இருந்தால் இந்தக் குறும்படம் உங்களுக்கு பிடிக்கும்.

அவரும் நானும் – கொரோனா லாக்டவுனில் வேறு வழி இல்லாமல் தாத்தா வீட்டில் தங்க நேரும் பேத்தியை பற்றிய படம்தான் இது. அணு விஞ்ஞானியான தாத்தா தனியாக ஒரு இல்லத்தில் வசிக்கிறார். சிறுவயது முதலே அவரை தவறாக புரிந்து கொண்ட பேத்தி, இந்த 21 நாளில் அவரைப் புரிந்து கொண்டு அவர்களுக்குள் மலரும் பாசம் தான் கதையின் கரு. பேத்தியின் அலுவலக கான்பரன்ஸ் காலில்  வந்து அதகளம் செய்கிறார் தாத்தாவான எம்எஸ் பாஸ்கர். ரைட்டூ என்ற ஒரே டயலாக்கிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார் மனிதர். அருமையான நடிப்பு. பேத்தியாக நடிக்கும் ரிது வர்மா டயலாக்கில் கதையின் மொத்த ஃப்ளாஷ்பேக்கையும் வைத்துள்ளார்கள். செண்டிமெண்ட் பிரியர்களுக்கு இந்த குறும்படம் ஒரு பரிசாக இருக்கும்.

காபி எனி ஒன்? – சுகாசினி மணிரத்தினம் நடித்து இயக்கிய இந்த குறும்படத்தில் ஹாசன் குடும்பத்தினர் மொத்தமாக அணி வகுத்துள்ளனர். அனுஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் சுகாசினி ஆகிய 3 அக்கா தங்கைகள் உள்ள குடும்பத்தில் அவர்களது தாய் கோமா நிலைக்கு சென்று விடுகிறார். அப்பாவான காத்தாடி ராமமூர்த்தி மகள்களுடன் சேர்ந்து தாயை மீட்டார்களா இல்லையா என்பதே கதை. தனித்தனி காட்சிகளாக அழகாக தெரியும் படம், நாடகத்தனமான கதையால் ஒன்றுசேர மறுக்கிறது. இருந்தாலும் பாசிட்டிவான விஷயங்களைக் கூறுவதால் ஒருமுறை பார்க்கலாம்.

ரியூனியன் – வாழ்க்கைக்காக தனது இசை பயணத்தை பாதியில் விட்டு டாக்டராகும் சிக்கில் குருச்சரண் (இவர் உண்மையிலேயே கர்நாடக இசை வித்தகர்), இசைக்காக தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் பள்ளி நண்பர்கள். இருவரும் லாக்டவுன் காலத்தில் எதிர்பாராதவிதமாக சந்தித்துக் கொள்ள, தனது தொலைந்த பயணத்தை எப்படி மீட்கிறார்கள் என்பதே கதை. போதை பழக்கம், கும்பத்தோடு மது அருந்துவது போன்ற மேல்தட்டு கலாச்சாரங்கள் அதிகம் இருப்பதால் படம் மனதோடு ஒட்டவில்லை. குறும்படம் முழுவதும் rich look உடன் பணக்கார மக்களின் வாழ்க்கை முறையை காட்ட முயல்கிறது. படத்தின் இறுதியில் ஒரு feel good effect கொடுத்ததற்காக பாராட்டுகள்.

மிராக்கிள் – இந்த Anthologyயில் அதிக திருப்பங்கள் கொண்ட படமாக இது ஒன்று மட்டும் உள்ளது. கொஞ்சம் Dark Humor என்று கூட சொல்லலாம். அற்புதங்களைப் பற்றி பேசும் ஒரு சாமியார், படம் எடுக்க முயன்று தோற்ற ஒரு டைரக்டர், இரண்டு பிக்பாக்கெட் திருடர்கள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் லாக் டவுன் எப்படி விளையாடுகிறது என்பதை பட்டர்ஃப்ளை எஃபெக்ட் பாணியில் இயக்குனர் கூற முயற்சித்திருக்கிறார். முக்கால்வாசி வசனங்கள், இது சிரிப்பா சீரியஸா என்று கண்டுபிடிக்க முடியாதபடி குழப்பமாக எழுதியுள்ளார்கள். பாபி சிம்ஹாவுக்கு நன்கு பழக்கப்பட்ட கதாப்பாத்திரம் என்பதால் அருமையாக நடித்துள்ளார். திரைக்கதையில் காட்டிய அக்கறையை கொஞ்சம் வசனத்திலும் காட்டியிருக்கலாம். இருந்தாலும் கதைக்காக இந்த குறும்படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம். 

உங்கள் வார விடுமுறையை பாசிட்டிவாக தொடங்குவதற்கு  புத்தம் புது காலையை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -