ஓம் சாய்ராம்,
சென்ற வாரம் ஒரே நாளில் எனக்கு வேலை கிடைத்த அதிசயத்தையும் என் அப்பாய்ன்மென்ட் ஆர்டரில் ‘சாய் சுதாகர்’ என்ற முதலாளியின் பெயரைப் பார்த்து மெய்சிலிர்த்துவிட்டதையும் கூறியிருந்தேன். இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு பாபாவை முதலில் அறிமுகம் செய்து என்னை பாபா கோவிலுக்குச் செல்லவைத்த நண்பர் பெயர் சுதர்சன். அவரை சுதா என்றழைப்பது வழக்கம். அதே பெயருடன் சாயும் சேர்ந்து வந்த அந்த நொடி உண்மையில் நான் ஏதோ ஒரு பரவசநிலையில் தானிருந்தேன்.
கையெழுத்தைப் போட்டுவிட்டு பாபாவை நோக்கி ஓடினேன். சிரங்கூன் ரோட்டில் இருந்த அந்தக் கோவிலை ஒன்பது மணிக்கு அடைத்துவிடுவார்கள். நான் அங்கு சென்றபோது ஒன்பதைத் தாண்டியிருந்தது. படியில் ஏறி ஓடினேன். கோவில் பூட்டியிருந்தது. வெளியில் நின்று கண்களை மூடி வேண்டினேன். பாபாவின் தரிசனம் என் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தது.
கீழே இறங்கி வந்தேன். பிரசாத வரிசை கோவிலைச் சுற்றிக்கொண்டிருந்தது. வரிசையில் இணைந்து அன்றைய என்னுடைய முதல் உணவை உண்டேன். காலையில் இருந்து காய்ந்த வயிறு. தெர்மாகோல் தட்டு நிறைய இரண்டு வகை கேசரி, மீ ஹூன் கோரிங் (தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள், சோயா, எல்லாம் போட்டு எண்ணெய் ஊற்றிக் கிண்டிய இடியாப்பம், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கிடைக்கும் உணவு), கொஞ்சம் பாபாவின் பிரசாத தோசை, வடை. ஒரு பிடி பிடித்தேன்.
உண்மையில் ஆச்சரியம்தான். காலையில் கண்ணீர் மல்க பாபாவை வேண்டுகிறேன். இரவில் புதிய நிறுவனத்தின் வேலையோடு வீட்டிற்குள் நுழைகிறேன். அதுவும் பெரிய மென்பொருள் நிறுவனம் (ATOS). இதுவரை நான் வேலை பார்த்த அத்தனை நிறுவனங்களிலும் இது தான் பெரியது. இப்போது நான் இங்கு வேலை செய்யவில்லை மாறிவிட்டேன்.
ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரே நாளில் ஒருவரை தேர்ந்தெடுத்து விடுவார்களா? வாய்ப்பே இல்லையே? நம்மை நேர்முகத் தேர்வு செய்த உடன் ஆகா அருமை இவன் தான் எங்களுக்கு வேண்டும் என்று நினைத்துவிட்டார்களா? அப்படி ஒன்றும் நான் பெரிதாக செய்யவில்லையே? இதைவிட சிறப்பாக செய்து தோற்றுப்போன நேர்முகத் தேர்வுகள் எத்தனையோ இருக்கின்றன. அப்படியென்றால் இது எப்படி நடந்தது? நான் வேலையில் சேர்ந்த சில நாள்களில் விடை கிடைத்தது.
அந்த நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு நபரை வேலைக்குத் தேர்ந்தெடுத்து அவர் அடுத்த வாரம் கிளைன்ட் பிளேஸ் சென்று வேலையைத் தொடங்க வேண்டும். ஆனால் அந்த நபர் கடைசி நேரத்தில் ஓடிவிட்டதால் அவர்களுக்கும் அன்றே ஒருவனை தேர்ந்தெடுக்கும் அவசரம் இருந்தது. பாபாவின் அருளால் அன்று வந்த சிலரில் நான் மட்டும் தான் தேறியிருந்திருக்கிறேன்.
நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் நடைபெறுகிறது என்று நம்புபவன் நான். அப்படி நான் பேருந்தில் சந்தித்த அந்த நபரிடம் கிடைத்த பாடம், வேலை பறிபோன பின் உடனடியாக என் அலுவலகத்தில் நான் இரண்டு முழு மாதங்கள் வேலை செய்யமாட்டேன் வேலை கிடைத்த உடனே சென்றுவிடுவேன் என்று கூறி அவர்களின் உறுதியைப் பெற்றது என எல்லாம் நன்மைக்கே.
ஒருவேளை நான் அந்த உறுதியைப் பெறாமல், எனக்கு இன்னும் ஒரு மாதம் நோட்டீஸ் இருக்கிறது என்று கூறியிருந்தால் கூட இந்த வேலை கிடைக்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்திருப்பேன்.
என்னோடு சேர்ந்து வேலையிழந்த இன்னொரு தமிழ் நண்பரிடம் நடந்தவற்றைக் கூறினேன். அவர் பொறுமை இழந்தவராக அன்றே கோவிலுக்குப் போகவேண்டும் என்றார். அன்று செவ்வாய்க்கிழமை, சரி வாங்க என்று அழைத்துச்சென்றேன். அடுத்து வியாழக்கிழமையும் என்னோடு வந்தார். அதன் பின் நான் அலுவலகம் மாறிவிட்டேன். அவருக்கும் விரைவிலேயே வேறு வேலை கிடைத்தது. இப்போதும் சில நேரங்களில் அவரை பாபா கோவிலில் சந்திக்கிறேன்.
வேலை கிடைத்த அந்த நாளிற்குப் பின் பாபாவின் நாமம் உச்சரிக்காத ஒரு நாள் என் வாழ்க்கையில் இல்லை. அடுத்து வந்த பல வியாழக்கிழமைகள் என் வாழ்க்கையில் எனக்கு மறக்க முடியாதவைகளாக இருந்தன. எனக்கு வேலை கிடைத்த நாள், அந்த வேலைக்குச் சென்ற முதல் நாள், என் நிச்சயதார்த்தம், திருமணம் உட்பட பல விசேஷங்கள் வியாழக்கிழமையிலேயே நடந்தேறின. எந்த விசேஷத்திற்கும் நான் நாள் குறிக்கவில்லை. வியாழக்கிழமை தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் இல்லை. அது தானாகவே அப்படித் தான் நடந்தது. ஒரு கட்டத்தில் நானே வியாழக்கிழமை என்றால் அன்று ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பத் தொடங்கிவிட்டேன்.
என்னால் மறக்கமுடியாத இன்னொரு அனுபவம் என்றால் அது நான் தந்தையான அனுபவம் தான். மனைவியின் வாயிலிருந்து முதல் முதலாக அவள் கருவுற்றிருக்கும் செய்தி அறியும் போது இருக்கும் ஒரு பேரானந்தம் இருக்கிறதே அதை எப்படித்தான் சொல்வது. அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் அந்த உணர்வை எந்த நாளும் மறக்கமாட்டார்கள். வாய்விட்டு சத்தமாகச் சிரிக்கவில்லை ஆனால் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு செல்லும் சிரிக்கும். இரத்தம் தோலின் மேற்பகுதியை உரசிக்கொண்டு ஓடுவதைப் போல ஒரு மயிலிறகுக் கூச்சம். ஆனந்த அனுபவம் அது.
சிங்கப்பூர் புக்கிட் தீமா சாலையில் உள்ள கே.கே.மருத்துவமனையில் மாதந்தோறும் செக்கப்புக்குச் சென்றோம். மருத்துவர் சோதனைகளுக்குப் பின் தேவையான சத்து மாத்திரைகளை மட்டுமே எழுதிக்கொடுப்பார். கருவுண்டான மூன்றாவது மாதத்திலேயே “வாழ்த்துகள் உங்களுக்கு பெண் குழந்தை” என்று அறிவித்தார் ஒரு மருத்துவர். அடுத்தடுத்த மாதங்களிலும் செக்கப்புகள் தொடர்ந்தன. நம்மூர் போல இல்லாமல் முதல் செக்கப்பின் போது தந்தையும் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவசியம் தேவையான மருத்தவ சோதனைகளை மட்டுமே செய்துகொண்டோம் மற்றவற்றை தேவையில்லை என்று மறுத்துவிட்டோம். எங்களுக்கு ஜாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் எல்லாம் குறித்து சரியான நேரத்தில் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுப்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. எந்த ஒரு குழந்தையும் சுகப்பிரசவம் மூலம் முறையாக பிறந்து வருவதே அந்தத் தாய் சேய் இருவருக்கும் நன்மை பெயர்க்கும். பாபாவிடம் என் வேண்டுதல் எல்லாம் பிரசவம் சுகப்பிரசவமாக வேண்டும் என்பது மட்டுமே.
தலைபிரசவத்திற்கு வளைகாப்பு முடிந்து தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டாள் என் மனைவி. அதன் பின்னான பரிசோதனைகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தன. வலியைத் தாங்கி ஒரு மனைவி பிரசவித்து குழந்தையின் அலறல் கேட்கும் வரை அவள் கணவன் மனம் முழுவதும் ஒருவித வலியைத் தாங்கித் தான் திரிவான். பெண்களின் பிரசவ வலியைக் குறைத்துக் கூறுவதோ இல்லை ஆண்கள் பெரும் வலியைத் தாங்குகிறார்கள் என்று சொல்வதோ என் நோக்கமல்ல.
என் இரண்டு குழந்தைகள் பிறக்கும்போதும் என் பி.பி. எகிறித்தான் இருந்தது. அடுத்து வரும் வாரங்களில் நான் தந்தையான அந்த மறக்கமுடியாத மருத்துவமனைப் பொழுதுகளையும் என்னோடு இருந்து என்னையும் என் குடும்பத்தையும் நாள்தோறும் காத்து அருளும் பாபாவையும் உங்களின் தரிசனத்திற்கு அழைத்து வருகிறேன்.
ஓம் சாய்ராம்
-சாயி நாமம் ஒலிக்கும்
அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்
Hi Jeya, beautifully written. You convey your feelings with so much ease on your writing! Keep writing and enlighten us!
Cheers.
Thanks da babu… 🙂