பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 7

நான் போறேன் முன்னால.. நீ வாடி பின்னால .!

- Advertisement -

தாகத்தில் தவித்துக்கொண்டிருந்த எஸ்.பி.பி என்ன ஆனார்? தண்ணீர் கிடைத்ததா? வாங்க வாங்க என்னவென்று போய்ப் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட எல்லா நடிகர்களுக்குமே எஸ்.பி.பி பாடியிருப்பார்.. விடுபட்டவர்கள் ஒரு பத்து விழுக்காடுதான் இருக்கும். ஈராயிரத்துப் பத்துக்கு முன்னால் வந்த திரைப்படங்களில் பாடல்களின் பங்கு இன்றியமையாதது. அதனால்தான் முத்துமுத்தான பாடல்கள் நமக்கு கிடைத்தன.

ஒரு நடிகர் வெளிப்படையாகவே ,” என்னுடைய படத்தில் பாடல்களை எஸ்.பி.பி பாடியதாலேயே  அவை பெரும் வெற்றி பெற்றன ” என்று சொல்கிறார். ஆம்.. ஆழ்கடல்போல் நின்று திரையுலகைத் தாங்கியிருக்கிறார் .. ஆனால் ஒருபோதும் அதை அவர் பீற்றிக்கொண்டதேயில்லை. சிற்றோடைகளின் சலசலப்புகள் எஸ்.பி.பி எனும் பேராழிக்குத் தேவையில்லையே. பெயர் ஒன்றே போதுமல்லவா!

அவரே ஒரு கடல் எனினும் அவர்க்கு எப்போதுமே தீராத்தாகம் இருந்துகொண்டே இருக்கும். ஆம். பாட்டுத்தாகம் தான் அது. மென்மையான காதல் பாடல்களில் பட்டையைக் கிளப்பும் நம் எஸ்.பி.பி துள்ளிசைப் பாடல்களை விட்டுவைப்பாரா? பாட மட்டுமா செய்வார்? நம்மையும் ஆடச் செய்துவிடுவார். அம்மாதிரியான பாடல்கள் எல்லாமே அவர்க்கு ” கண்ணா ! ரெண்டாவது லட்டு திங்கிறியா? ” வகைதான்… சும்மா புகுந்து விளையாடுவார்.

இந்தப்பாட்டில் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். இங்கும் காதலியிடம் தான் சீண்டுகிறார். இப்பாடலில் கட்டாயமாக நம் இசைஞானியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இல்லையென்றால் தெய்வக்குற்றமாகி விடும். மெல்லிய இசையுடன் தொடங்கும் இப்பாடல் பதினாறாவது நொடியில் அடித்து ஆடும் துள்ளிசைக்கு மாறுகிறது. பதினாறு என்றாலே இனிக்கும் இளமையல்லவா!

இப்பாடல் வரிகள் மிகவும் எளிமையான வரிகள்தான். காட்சியமைப்பிலும்கூட பெரிதாக ஈர்ப்பு இல்லை. ஆனால் அதை அக்காலத்தில் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்குமளவுக்கு, இளைஞர்கள் மனத்தில் நீங்கா அரியணை போட்டு உட்காரும்படி மாபெரும் புகழ்மிக்கதொரு பாடலாக மாற்றியவர் இசைஞானியும் எஸ்.பி.பியும் மட்டுமே. விரல் வித்தைக்காரரும் குரல் வித்தைக்காரரும் இணைந்தால் கொண்டாட்டமும் கும்மாளமும் குறைவாகவா இருக்கும்!

ஆவாரம்பூவாக அள்ளாம கிள்ளாம

அணைக்கத் துடிச்சிருக்கேன்

அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..

தனிச்சுத் தவிச்சிருக்கேன் .

ஆவாரம்பூவை அள்ளாமலும் கிள்ளாமலும் அணைக்க முடியுமா? ( காதலில் முடியும்…) அணைக்கத் துடிச்சிருக்கேன் என்று ஆவாரம்பூவிடம் சொல்லிவிடுகிறார். ஆவாரம்பூவாக என்று தொடங்கி தனிச்சு என்பதுவரையிலும் குரல் இயல்பாகத்தான் இருக்கிறது. இறுதி வார்த்தையான தவிச்சிருக்கேன் என்று சொல்லும்போது மட்டும் அந்தக் குரலில் அத்தனை தவிப்பு.. ஏக்கத் தவிப்பு. சட்டென்று சொல்லுக்குச் சொல் குரலின் தன்மையை மாற்ற முடியுமா என்று வியந்து வியந்து மாய்ந்து போகிறேன்.

தவிச்ச மனசுக்குத்

தண்ணி தர வேண்டாமா

தளும்பும் நெனப்புக்கு

அள்ளிக்கிறேன் நீ வாம்மா… இதில் பாருங்கள்.. என் தவிப்பைக் கொஞ்சம் அடக்கக்கூடாதா என்று கெஞ்சுவதுபோலவும் இருக்கக்கூடாது, என் தவிப்பை அடக்குகிறாயா இல்லையா? என்று மிஞ்சுவதுபோலவும் இருக்கக்கூடாது. இரண்டையும் கலந்ததுபோலவும் இருக்கக்கூடாது. தனித்த உணர்வினைக் குழைத்து உரிமையுடன் கொஞ்சுவதுபோலப் பாடினால்தான் அவ்வரிகளுக்குச் சரியான மதிப்பளித்ததாக இருக்க முடியும் என்று எஸ்.பி.பிக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உரிமைக்குரலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடுத்த வரிகளைப்பாடும்போது அவர் குரல் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாயும் நீரைப்போல் அப்படியே இறங்குகிறது.. சிற்றாறு ஒன்று மலையிலிருந்து சீராகக்  கீழே இறங்கி வருகையில் அதன் வழியில் ஒரு நடுத்தர அளவில் ஒரு பாறை இருந்தால் அந்த ஆறு அவ்விடத்தில் சட்டென்று துள்ளிகுத்தித்து அப்பாறையைத் தாண்டி மீண்டும் தன் பயணத்தைக் தொடருமல்லவா! அதுபோலவே பாடியிருப்பார்…

மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா

தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க …. என்ற வரிகளைக் கேட்டுப்பாருங்கள்.. அதேபோலத்தான் இருக்கும் எஸ்.பி.பி குரலின் ஆற்றொழுக்கும். கட்டிப்புடிச்சிக்க என்பதுவரை கீழிறங்கும் அவரது குரல் அடுத்து ஒரு துள்ளல் போட்டு  ” ஏய் ” என்று குதிக்கிறது. அந்தத் துள்ளலை விரும்பாதவரும் அத்துள்ளலுக்கு ஆடாதவரும் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் மனம் இரும்பைப்போல இறுகியிருக்கிறது என்றே பொருள்.

காதலியைத் தொடவேண்டுமென்றால் சொற்களில் சொக்குப்பொடி கலக்கவேண்டும்.. இல்லையெனில் சொற்களிலேயே கொக்கிப்பிடி  போடவேண்டும். சொக்குப்பொடியோ, கொக்கிப்பிடியோ எதுவென்றாலும் எஸ்.பி.பிக்கு அத்துப்படிதானே..!

பேசாதே கண்ணால என்னாடி அம்மாளே

வாடுற வாட்டத்துக்கு – எத்தனை வசமான கொக்கி இருக்கிறது தெரியுமா இவ்வரியில்..! காதலர்கள் கண்ணாலே பேசுவதில் மகா வல்லவர்கள். ஆனால் இதில் அதையும் தாண்டி ” நான் வாடிப்போய் இருக்கும் வாட்டத்திற்கு நீ கண்ணால் பேசுவதெல்லாம் சரிப்பட்டு வராது.. இப்போதைக்கு என் வாட்டம் தீர்க்காது உன் விழிமொழி.. மெய்யும் மெய்யும் சேர்ந்தால்தான் மெய்யாகவே என் வாட்டம் தீரும் ” என்று காதலன் சொல்வதுபோல எழுதியிருக்கிறார் கங்கைஅமரன். கண்ணதாசனும் வாலியும் அவரை மனத்தாரப் பாராட்டியிருக்கிறார்கள் என்றால் சும்மாவா? கற்பனை கங்கைபோலப் பாய்ந்து கொண்டே இருந்திருக்கின்றது.

சிரிச்ச சிரிப்பில

சில்லரையும் செதறுது

செவந்த மொகங்கண்டு

எம்மனசு பதறுது… என்ற வரிகளில் செதறுது பதறுது என்ற சொற்களை எஸ்.பி.பி பாடுவதைக் கவனியுங்கள். வல்லின றகரத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதை அழகாக உணர்த்தியிருப்பார்.

பவள வாயில தெரியுற அழகப்

பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது… என்ற வரிகள் வரும்போது கதாநாயகன் முன்னின்று பின்னால் நிற்கும் கதாநாயகிமேல் கிறக்கமாகச் சாய்வதுபோலக் காட்சிப் படுத்தியிருப்பர். எனக்கென்னவோ கதாநாயகன் எஸ்.பி.பியின் குரலைக் கேட்டுத்தான் கிறங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. அத்தனை கிறக்கம் அவ்வரிகளில் புகுத்திப் பாடியிருப்பார் பாடும்நிலா. இவ்வரியின் முடிவிலும் ஒரு துள்ளல் இருக்கும் அதன்பின்னர் அவர் சொல்லும் அந்த “ஏய்” இருக்கிறதே .. அட அட அட..! காதலர்களோ , கணவன் மனைவியோ அவர்களுக்குள் சொல்லிக்கொள்ளும்போது மட்டும்தான் அந்த ஏய் என்னும் சொல் ஏகாந்தமாக ஒலிக்கும்.. மற்றவர் யார் சொன்னாலும்  காதுக்குள் காந்தத்தான் செய்யும்.

ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியாஅஅஅஅ

நான் பார்த்தா பார்க்காமலே போறியா

அட அக்கம் பக்கம் யாருமில்லே

அள்ளிக்கலாம் வா புள்ள — அந்த அள்ளிக்கலாம் என்ற வார்த்தையை மட்டும் இழுத்துப் பாடும்போது  நம் இதயமும் கூடவே இழுபடும். வா புள்ள என்று சொல்லும்போதெல்லாம் அது எஸ்.பி.பியின் குரல்தானா என்று ஐயப்படும் அளவுக்குக் குரலைச் சற்றே அழுத்திப் பாடியிருப்பார்.

பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தில் வரும் பாடல்தான் இது.. மோகனும் பூர்ணிமாவும் நடித்திருப்பர். மிகவும் சோகமான முடிவைக்கொண்ட இப்படத்தில் இப்படியொரு துள்ளிசைப்பாடல்.. 1982-இல் இப்படம் வெளிவந்தது.. அன்றிலிருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளாவது கல்லூரி மாணவர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட ஒரு பாடல் இது.  எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இப்பாடல் இல்லாத கல்லூரி விழாக்கள் இருந்திருக்காது.. மேடைகளில் மட்டுமல்ல , வகுப்பறைகளில் ஆசிரியர் இல்லாத நேரங்களில் கண்டிப்பாக இப்பாடலைப்பாடி ஆடி மகிழ்ந்திருப்பர் மாணவர். அப்படியொரு இசை.. சோர்ந்து கிடந்தாலும் இப்பாடலைக் கேட்டால் தலையை மட்டுமாவது அசைக்க வைத்துவிடும்.

அமர்ந்தநிலையில் இதைப்படித்தவர்கள் ” நானொரு தவம் இயற்றுவதைப்போல உட்கார்ந்து கொண்டுதான் இதைப் படித்தேன் ” என்றும்… நின்ற நிலையில் இதைப் படித்தவர்கள் ” நாட்டுப்பண் பாடும்போது நிற்பதைப்போல நின்று படித்தேன்” என்றும் சொல்பவர் யாரேனும் இருக்கின்றீரா? அப்படி யாராவது இருந்தால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது உங்கள் மனத்தை இலகுவாக்கும் வேலையைத்தான்..

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்..  துள்ளலிசைப்பாடலில் ஆடியதும் களைத்துவிடுவார் என்று நினைத்தால் நம் எஸ்.பி.பியோ களைப்புக்கே ஓய்வு கொடுத்து உட்காரவைத்துவிட்டு மீண்டும் ஆடத்  தொடங்கிவிடுகிறார். கேட்டால் இந்திரனைப்போல எனக்கும் மச்சம் இருக்கிறது .. அதனால்தான் இப்படி ஆடிப்பாடி மகிழ்கிறேன் என்கிறார். நிற்காமல் ஆடும் ஆட்டத்தின் மறைபொருள் தான் என்ன? எண்ணிக்கொண்டே இருங்கள்.. இன்றிலிருந்து எண்ணி ஏழாவதுநாள் வந்து சொல்லிவிடுகிறேன்.

கங்கைக்கரைத் தோட்டத்தில் நிலாவின் ஆட்டம்பாட்டம்  தொடரும்..!

https://www.youtube.com/watch?v=FkTJXOAuld4

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

4 COMMENTS

 1. மாருல குளிருது சேர்த்தென்னை அணைச்சா
  தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சா

  இந்த வரிகளை எஸ்பி.பி பாடும் அழகை மலையிலிருந்து இறங்கும் சிற்றாறு இடையிலுள்ள பாறையில் மோதிக் குதிப்பதற்கு நிகராக ஒப்புமைப் படுத்தி எழுதிய விதம் ..செம்ம ?

  இந்தப் பதிவில் எஸ்பிபி பாடும் அழகை நேர்த்தியாக விளக்கியிருக்கிறீர்கள் அருமை..

  தங்கள் எழுத்துவானில் தொடரட்டும் பாடும் நிலாவின் உலா.. பார்த்து(படித்து) மகிழ்கிறோம்

  • போன பதிவில் அது கொஞ்சம் குறைந்துவிட்டதால் இப்பதிவை மிகக்கவனத்துடன் எழுதினேன்.

   தொடர்ந்து நீங்கள் சொல்லும் கருத்துகளை எல்லாம் கவனித்தில் வைத்தே எழுதுகிறேன்.

   தொடரூக்கத்தில் மகிழ்கிறேன்.??

 2. ஒரு துள்ளல் இசை பாடலை மிகவும் துள்ளலோடு எங்களோடு பகிர்ந்து கொண்டு எங்களையும் துள்ளல் உணர்வுக்ஊகுள் கொண்டு வந்த உங்கள் எழுத்துக்கு மிக்க நன்றி.
  ஏ ஆத்தா ஆத்தோரமா… அதாவது பெரும்பாலும் கிராமங்களில் இருக்கின்ற அந்த வார்த்தையிலேயே பாடல் உடைய முதல் அடியாக கவிஞர் பயன்படுத்துகிறார் என்று எனக்கு தோன்றுகிறது.. தொடர்ந்து கங்கை அமரன் பாலசுப்ரமணியம் இளையராஜா அவர்களுடைய தொடர்ந்த பயணத்தை மிக சிறப்பாக உங்கள் எழுத்து மூலம் எல்லோரையும் சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்… பாராட்டுக்களும்.?.??

  • ஒவ்வொரு பதிவுக்கும் தாங்கள் கருத்துரைப்பது மிகுந்த ஊக்கமளிக்கிறது அண்ணா ?? இம்மாதிரியான அக்கறையிலேயே கூடுதல் திடம் வந்து எழுதத் தூண்டுகிறது.

   மகிழ்ச்சிங்கண்ணா ??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -