பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 10

வானம்பூமி யாவுமே வாழ்த்து பாடலாம்..!

- Advertisement -

பாடும்நிலா நீந்தப்போகிறாரா? உண்மையான நிலாவினை வானில் மட்டுமல்ல, நீங்கள் நீர்நிலைகளில் பார்த்தால் கூட அது நீந்துவதுபோலத்தான் இருக்கும். அதுபோலத்தான் பாடல்களைக் கேட்கும்போதும் அப்பாடல்களிலேயே நீந்தலாம். அதற்கு மாபெரும் துணையாய் இருப்பது இசை. நீந்துகின்ற பருப்பொருள் பாட்டு என்றால் அந்த பருப்பொருள் நீந்துகின்ற நீர்நிலைதான் இசை.

கடந்தகிழமை வரையிலும் கங்கையின் நீர்த்தன்மையினில் நிலா எவ்வாறு பாடுகிறது என்று பார்த்தோம். இன்று நாம் கங்கையின் நீரோட்டத்தில் நிலா எங்ஙனம் பாடி நீந்துகிறது என்று பார்க்கலாம். 

நம் கங்கைஅமரனுக்கு முத்துமுத்தாகப் பாடல் வரிகளை எழுதவும் தெரியும்.. அப்பாடல் முத்துகளைக் கோக்க இசையென்னும் அழகான பட்டுநூலை நெய்யவும் தெரியும். அழகான உறுதியான பட்டுநூலில் கோக்கப்பட்ட முத்துமாலைதான் சிறந்ததாக இருக்கும்.  அப்படியொரு அழகான முத்துமாலைதான் இப்பாடலும்… இங்கே பட்டுநூல் நெய்தது மட்டும்தான் நம் கங்கைஅமரன். முத்துக்களை உருவாக்கியது நம் காவியக்கவிஞர் வாலி.

காளிதாசன் பாடினான்  மேகதூதமே

தேவிதாசன் பாடுவான்  காதல்கீதமே என்று சரணத்தைப் பாடத் தொடங்குகிறார் எஸ்.பி.பி.  அடுத்தவரி அவருக்காகவே எழுதியது போல இருக்கின்றது..

இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி

நீயில்லையேல் நானில்லையே…

நம் எஸ்.பி.பியோ எப்போதுமே இதழ்களில் தேன்துளியை ஏந்தித்தான் ஒவ்வொரு பாடலையும் பாடுகிறார். பாட்டுக்கிளியொன்று பைங்கிளி என்று சொல்லும் அழகை அவ்வரியில் கேட்கலாம்.  நீயில்லையேல் நானில்லையே என்று அவர் பாட்டுப்பெண்ணிடம் சொல்வதைப்போலவே இருக்கிறது.

இந்தப்பாடல் முழுவதுமே சீரான சமதளத்தில் பாயும் நதியின் ஓசைபோலவே பாடியிருப்பார் எஸ்.பி.பி. வழக்கமாய் அவர் செய்யும் குரல்குறும்புகள் எதுவும் இதில் இருக்காது. வேறு ஏதும் வண்டிகளே வராத தடையில்லாத தங்கநாற்கரச்சாலையில் பூங்காற்று வீசும் அழகிய இரவில் நெடும்பயணம் செய்யும் புத்தம்புதிய மகிழுந்துபோல வழுக்கிக்கொண்டு வந்துவிழுகிறது ஒவ்வொரு சொல்லும். வாலியின் வரிகளில் அடைக்கப்பட்டிருந்த காதலைக் கொஞ்சமும் குறைக்காது குரல்வளையில் அடைத்துக்கொண்டு பாடியிருப்பார் எஸ்.பி.பி.

எப்போதுமே காதலில் அடர்ந்தது ஒருதலைக்காதல்தான். அதிலிருக்கும் முனைப்பும் ஊக்கமும் மகிழ்வும் கனவுகளும் காதல் கனிந்தபின் சற்றேனும் குறைந்துவிடுவதுதான் இயற்கை. கிடைக்காத ஒன்றின்மீதுதான் மனிதன் பேரேக்கம் வைத்துக் கொண்டாடிக் காத்திருக்கிறான். கிடைத்துவிட்டால்,  உரிமையாகிவிட்டால் ஒருவித மெத்தனம் வந்துவிடுகிறது. நம்மிடம் வந்துவிட்டதே .. எங்கே போய்விடப்போகிறது? என்னும் மேலோட்டமான மிதப்பு எண்ணத்தில் துளிர்விடுகிறது. பெரும்பான்மையான மனிதர் வாழ்வில் இதுவே நடக்கிறது.

இப்பாடலும் ஒருதலைக்காதலில் பாடப்படுவதுதான். அதனால்தான் அக்காதலின் நிறை மிகுந்து இருக்கிறது. சும்மாவே சதிராட்டம் ஆடும் நம் எஸ்.பி.பியின் குரல், காதற்சலங்கையைக் கட்டிவிட்டுவிட்டால் கொண்டாட்டமாக அல்லவா ஆடும்!

முதல் சரணத்தில் காதல் கீதம் பாடத் தொடங்கியவர் அடுத்த சரணத்தில் கனவுக்கோட்டைக்குள் நுழைகிறார்.

நானும் நீயும் நாளைதான் மாலைசூடலாம்..

வானம் பூமி யாவுமே வாழ்த்து பாடலாம் – என்ற வரிகளில் மகிழ்வுமுலாம் பூசிய ஏக்கத்தை வெளிப்படுத்திப் பாடுகிறார். அதுவும் அந்த ” நாளைதான்” என்று பாடும்போது கூர்ந்து கவனித்தால்  குரலோடு வெளிவரும் சிரிப்பானது சொற்களோடு பிணைத்திருப்பதைக் கேட்கலாம்.

விழியில் ஏன் கோபமோ?

விரகமோ? தாபமோ? – என்று பாடும்போது வெறும் கேள்விகளைக் கேட்கும் வரிகளாக அவை தோன்றுவதில்லை. கோபமோ? என்று உரிமையுடனும் காதலுடனும் கேட்டுவிட்டு, அதற்கு எதிர்பக்கத்திலிருந்து பிடிக்காத பதில் வந்துவிட்டால் பெருங்குழப்பமாகிவிடும் என்று அறிவுக்கூர்மையுடன் எண்ணி , அதற்கும் தானே பதிலையும் சொல்லி இதுதானா? என்று கேட்டுவிட்டால் பிரச்சனை இல்லாது போய்விடும் என்பதால் உன் கோபத்திற்குக் காரணம் விரகமா? தாபமா? இரண்டில் ஒன்றுதானே? அல்லது  இரண்டும் சேர்ந்ததா? என்று ஊடலுடனும் உவகையுடனும் பாடவேண்டிய வரிகள் இவை. ஆசிரியர் கேள்விகேட்கும் குரலில் பாடிவிட்டால் சொதப்பல்தான் … வேறெப்படி பாடவேண்டும்? மீண்டும் அவ்வரிகளை எஸ்.பி.பி பாடுவதைக் கேளுங்கள். அப்படித்தான் பாட வேண்டும்.

பாடலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தன் ஒட்டுமொத்த காதலையும் திணித்து ஒரு காதல் விண்ணப்படிவத்தைக் காதலியிடம் சொல்வதுபோல எஸ்.பி.பி பாடுவதைக் கேட்கும்போது, வேண்டாம் வேண்டாம் என்று உண்ண மறுக்கும் தன் குழந்தைக்கு  ஓர் அம்மா ஏதாவது கதைகளைச்சொல்லி ஒவ்வொரு உருண்டையையும் ஊட்டிவிடுவதுபோலவே தோன்றுகிறது… அதுவும் ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான் என்ற வரியைப் பாடும்போது கேளுங்கள்.. சோறுண்ணும் குழந்தையானது பெரும்பாலும் கடைசிவாய்ச் சோற்றினை உண்பதற்குள் அம்மாவை ஒருவழி பண்ணிவிடும். தலையை இங்கும் அங்குமாய் ஆட்டி முடிந்தவரை அம்மாவின் சோறிருக்கும் கையானது தன் வாய்க்கருகே வரவிடாமல் தடுக்க முயன்று கொண்டிருக்கும். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன்போல அந்தக் கடைசி உருண்டையைத் திணித்துவிடும் அம்மாவின் செயலினை ஒப்பிடும் வகையில் பாடியிருப்பார் எஸ்.பி.பி. இதற்கு மேலும் இந்தப் பெண்ணாவது காதலை மறுக்க முடியுமா என்ன?  என்று கேட்பவர்கள் எண்ணும் வகையான பாடல் இது. 

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்று பல்லவியில் தொடங்கிப் பாடும்போதே நம் மனத்தைக் கட்டியிழுத்துக் கயிற்றைக் கையில் வைத்து கொள்கிறார். நாமென்ன செய்ய முடியும் அவர் பின்னாலேயே மகிழ்வுடன்  செல்வதைத் தவிர ..! 

நான் வரைந்த பாடல்கள் நீலம்பூத்த கண்ணிலா ..

வராமல் வந்த என் தேவி … என்று நம் எஸ்.பி.பி தனது குரலில் காதலைக் குழைத்துப்  பாடும்போது வாழைத்தண்டில் மேலிருந்து கீழே வரும் பனிக்கட்டியானது தானும் உருகி வாழைத்தண்டையும் நனைத்துக் குளிர்வித்து வழுக்கிக்கொண்டு கீழிறங்குவதுபோல பாடியிருப்பார். அப்பெண் காதலை ஏற்றுக்கொள்கிறாளோ இல்லையோ , பாட்டைக்கேட்கும் நாமெல்லோரும் எஸ்.பி.பியின் பாட்டுப்புலத்திற்குள் ஈர்க்கப்பட்டுவிடுவோம்.

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்னும் வரிகள் காதலியின் அழகைக் குறிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டிருக்குமா? ஏனெனில் அப்படத்தில் கதாநாயகியை வானூர்தியில் பணிபுரியும் பெண்ணாகக் காட்டியிருப்பார்கள். அவள் வானத்திலே பறந்துகொண்டிருப்பாள் பெரும்பாலும். அதற்காகவும் எழுதப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதைப் பாடியவர் எல்லோராலும் அன்புடன் பாடும் நிலா என்றழைக்கப்படும் நம் எஸ்.பி.பி.

இத்தனை பொருத்தங்களும் ஒன்றிணைந்து வருமாறு இப்பாடலை எழுதியிருப்பது , அவ்வானிலவைப்போலவே என்றும் இளமையாய் எழுதிய நம் காவியக் கவிஞர் வாலி. பேரிலேயே வாலி என்றிருப்பதால் வாலிபம் வழியும் இளமை கொஞ்சும் வரிகளை எழுதுவது வரமாய்க் கிடைத்திருக்கிறது அவர்க்கு.

கமல் ஸ்ரீதேவி இணைந்து நடித்த வாழ்வே மாயம் என்னும் படத்தின் பாடலைத்தான் இவ்வளவு  நேரம் பார்த்தோம். கடந்த எட்டுக் கிழமைகளாக கங்கைஅமரனின் பாடல்வரிகளை நம் பாடும்நிலா எவ்வாறெல்லாம் பாடுகிறார் என்றுதானே பார்த்தோம்.. இப்போது ஏன் கங்கைஅமரனின் இசையில் பாடும்நிலாவின் பாடலைப்பற்றிப் பார்க்க வேண்டும்? தனக்கு மிகவும் பிடித்த பாடலென்று கூறித் தன்னுடைய மேடைநிகழ்வுகளில் எல்லாம் ஏறத்தாழ இப்பாடலைப் பாடிவிடுவார் எஸ்.பி.பி. அந்த அளவுக்கு நம் பாடும்நிலாவே வியந்து சுவைத்து விரும்பிய பாடலை நாமும் பார்க்காவிட்டால் எப்படி! அதனால்தான் இப்பாடலைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று எழுதினேன். 

கங்கையில் நிலவின் பயணம் என்பது நம்மால் சுவைக்கச் சுவைக்கத் தீராத ஒன்று.. இன்னும் என்னவெல்லாம் நிலா கங்கையோடு இணைந்து களித்திருக்கிறது என்று பார்ப்போம்..!

கங்கையில் நிலா இன்னும் நனையும்…!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

6 COMMENTS

 1. வாலி,கங்கை அமரன் பாடும்நிலா இந்த மூவரில் யார் இந்தப் பதிவைப் படித்திருந்தாலும் அவர்கள் மூவரும் சேர்ந்து இந்தப் பாடலை உருவாக்கியதற்கான பலனை தற்போதுதான் உணர்ந்திருப்பார்கள்.. மேலும் பாடல் உருவானபோது அடைந்த மகிழ்ச்சியைவிட இப்போது கூடுதலாக மகிழ்ந்திருப்பார்கள்..

  ஏனென்றால் பாடலைப் பற்றித் தாங்கள் விவரித்த வகை அஎவ்வளவு இனிமையாக உள்ளது

  அதிலும் அந்த ஒருதலைக் காதல் பற்றிய விளக்கமெல்லாம் வேற அளவு(லெவல்)

  வாழைத் தண்டில் வழுக்கி வரும் பனிக்கட்டி
  புத்தம் புதிய மகிழுந்தின் நெடுஞ்சாலைப் பயணம்.. அடடா எப்படித்தான் இப்படி உவமைகளையெல்லாம் கையாள்கிறீர்களோ..

  கங்கையிலும் நீலவானிலும் நீந்திய பாடும் நிலாவை தங்களின் தண்ணெழுத்தில் நீந்த வைத்துப்.. படிக்கும் எங்களையும் குளிர்விக்கிறீர்கள்..

  அருமை தொடருங்கள்..

  பேரன்பும் வாழ்த்துகளும் ? ?

  • மகிழ்வும் அன்பும் மோகன். தொடர்ந்து எழுதுவதற்கான பெரும்பலமாய் நிற்கின்றன தங்களின் பின்னூட்டங்கள். மகிழ்ச்சி ??????????

 2. சிறப்பு

  நீங்கள் ஒவ்வொரு பாடல்களையும் இவ்வளவு அற்புதமாய் விளக்கிய பிறகு அந்த பாடல்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.. வாழ்த்துகள் ??

 3. மகிழ்வும் அன்பும் அண்ணா. பின்னூட்டங்கள் எவ்வளவுக்குப் பேரூக்கம் தருமென்பது தங்களுக்குத் தெரிந்ததுதான். தாங்கள் தரும் பேரூக்கத்தில் மகிழ்கிறேன். ?????????

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -