பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 27

ஆராதனை செய்யட்டுமா? நீரோடையில் நீந்தட்டுமா?...!!!

- Advertisement -

போதை விளைகின்ற இடத்தில் நின்றுகொண்டு நம் பாடும்நிலா என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள். போதையிலேயே இருவகை உண்டு. இயற்கை போதையும் செயற்கை போதையும்தான் அவை. செயற்கையான போதை ஏதேனும் பொருள்களிலிருந்து பெறப்படுகிறது. இயற்கையான போதையென்பது நம் உளத்துக்குள்ளிருந்து ஊற்றெடுத்துப் பீறிட்டுக் கிளம்பும் உணர்வு சார்ந்தது. இப்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும் நம் எஸ்.பி.பி இயற்கையின் பக்கம்தான் இருப்பாரென்று.

எவ்விதமான போதையையும் தன் பாட்டுக்குள் அடக்கிடும் வித்தை அறிந்தவரல்லவா! போதையென்பது மயக்கத்தின் உச்சநிலை என்றும் கொள்ளலாம். அதற்கும் மேலே என்றும் கொள்ளலாம். எதுவெல்லாம் நம் மனத்தை ஈர்க்கிறதோ, ஈர்த்தபின்னும் இழுத்துப்பிடித்து வைத்திருக்கிறதோ, பிடித்த பிடியினை விடாமல் இறுக்கமாகவும் நெகிழ்வாகவும் தன்வயப்படுத்தி வைத்திருக்கிறதோ அவற்றிலெல்லாம் நமக்கு ஒரு மயக்கம் ஏற்படுகிறது. அதுவே கூடிகூடிப் போதையாக மாறுகிறது.. சில போதைகள் நம்மை ஊக்கப்படுத்தி உயர்த்தி மெருகேற்றிச் செப்பனிட்டு நம்மை நல்வழிப்படுத்துபவை.. 

இன்று நாம் பார்க்கப்போகும் பாடல் நம் பாடும்நிலாவின் தனிப்பாடல். தனியாட்சியில் எத்தனை அயர்த்தலாய்க் கோலோச்சுகிறார் என்று பாருங்கள்.

நி ஸ ரி ஸா நி பம கக

பபா பபா பபாபபபப

ஹா தானா னான னான னன

னான னான னனனா –

முதல் சரணம் தொடங்குவதற்கு முன் சில இசைப்பண்களைப் பாடுகிறார். அதிலும் அந்த ” னான னான” என்ற பண்ணினைப் பாடும்போது மெய்மறந்து, காற்றிலாடும் பூங்கிளைப்போல தானும் மயங்கி நம்மையும் மயக்கிவிடுகிறார்… மயக்கத்தின் காரணம் என்னவாக இருக்கும்? அதையும் அவரே சொல்கிறார் கேளுங்கள்.. ஒரு தேவதை தான் காரணமாம்…

தேவதை போல் மயக்கும்

என் ராகம் அவள் அழைப்பு

பூங்காவிரி போல் நெளியும்

என் கீதம் அவள் சிரிப்பு ஹஹ்ஹா ஹஹ்ஹா

அவள் சிரிப்பு என்று சொல்லிவிட்டு இவர் சிரிக்கிறார்.. தெய்வீகச் சிரிப்பு  அது..! ஆகா ஆகா என்று கண்மூடிக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்போல..!

இவ்விடத்தில் பாடலாசிரியரின் கவித்துவத்தைப் பாராட்டாமல் அடுத்த அடி எடுத்து வைக்கவே இயலாது.. தேவதை போல் மயக்கும் என் இராகம் அவள் அழைப்பு என்று படித்தால் குழப்பும். .. இங்கே தேவதைபோல் மயக்கும் என்பது பொதுவான வரி.. அடுத்து வருகின்ற வரியை அப்படியே படிக்காமல் மாற்றிப் படிக்க வேண்டும். அவள் அழைப்பு என் இராகம்.. அதாவது அவள் அழைக்கும் முறையிலிருந்துதான் நான் என் பாடலுக்கான இராகத்தை எடுக்கிறேன், அந்தளவுக்கு இசையோடும் தாளத்தோடும் அவள் அழைக்கிறாள் என்று காதலன் சொல்கிறான்.. இப்போது மீண்டும் படித்துப் பாருங்கள். அவள் அழைப்பும் என் இராகமும் தேவதை போல மயக்கும் என்று கூறுகிறார் பாடலாசிரியர். அதற்கடுத்த வரியையும் இதேமுறையில்தான் பொருள்கொள்ள வேண்டும். அவளின் சிரிப்பிலிருந்துதான் என் கீதம் பிறக்கிறது என்கிறான் காதலன்.. என்னவொரு கற்பனை! என்னவொரு மொழி விளையாட்டு..! மொழிவளம் இல்லாமல் இங்ஙனம் மயக்கும் மொழிகளை எழுதுதல் கடினம். அவரின் மொழித்திறத்திற்கும் கவித்திறத்திற்கும் எம் அன்பும் வணக்கமும் உரித்தாகுக!

விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்

புரியாததோ புதிரானதோ ?!

இவ்வரியைப் பாடுகையில் நேரடியாக ஒரு கேள்வியை நாயகியைப் பார்த்து கேட்பது போலவும் , தன்னைத்தானே வியப்பினில் கேட்டுக்கொள்வது போலவும் பாடுகிறார்.. ழகரமும் லகரமும் அவர் நாவினில் உருண்டு வரும்போது எங்கேனும் பிசகுகிறதா என்றால் வாய்ப்பேயில்லை.. எழுத்துக்களை அவ்வவ்வாறே பிறழாமல் பலுக்குவதில் நம் பாலுவுக்கு இணை பாலுவேதான்…

மாதவள் சிரிப்பினில்

மாதவம் கலைந்தது ஏனோ

பேதையின் விழிகளில்

போதையும் விளைந்தது தானோ —

இரண்டாவது சரணத்தில் காதலன் தனது மாதவம் ஏன் கலைந்தது? என்று கேட்டு அவனே அதற்குக் காரணத்தையும் சொல்கிறான் .. காதலியான அப்பேதையின் விழிகளில் விளைந்திருக்கின்ற போதைதான் என்னைத் தடுமாற வைத்து என் தவத்தைக் கலைத்துவிட்டது என்று காதலில் பிதற்றும் உணர்வினை அப்படியே தன் குரலில் வெளிப்படுத்தி இங்கே பாடுகிறார் நம் எஸ்.பி.பி.

நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போல்

ஒரு மலர் தேடவோ ஆ மகிழ்ந்தாடவோ

அடுத்த வரியில் மலர் தேடவோ மகிழ்ந்தாடவோ என்ற சொற்களுக்கு நடுவே ஒருமுறை  ” ஆ ” சொல்கிறார். இதென்ன பெரிய இதுவா? என்று எண்ணுகிறீர்கள் தானே. ஒரு சொல் ஓகாரத்தில் முடிந்ததும் அடுத்து ஆகாரம் வரும்போது சட்டென்று அதைப்பலுக்குதல் எளிதல்ல. நடுவில் சொல்கின்ற ஆ எனும் பண் முன்பின் வரும் சொற்களைச் சிதைக்காததுபோல பாடவேண்டும்.. வேண்டுமானால் நீங்களும் ஒருமுறை பாடிப்பாருங்கள்.  ஆ சொல்லவே மறந்துபோய்விடும் பலநேரங்களில். ஆனால் நம் எஸ்.பி.பியோ ஆற்றுநீரைப்போல எளிதாய்ப் பாய்ச்சலுடன் பாடிவிடுகிறார்…

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர

இளமை கூடி வர இனிமை தேடி வர

ஆராதனை செய்யட்டுமா ஹஹா

நீரோடையில் நீந்தட்டுமா

ப பா பா தனனனன தனனா

பாபாபாபாபப பபபா

தனனனன பபபா…… —

இதுதான் இப்பாடலின் பல்லவி.. சின்னசின்ன சொற்கள்தாம்.. ஆனால் அடுத்தடுத்து உடனே பாடுவதுபோன்ற இசையமைப்பு. முதலிரண்டு வரிகளையும் மூச்சுவிடாமல் பாடிவிட்டு மூன்றாவது நான்காவது வரிகளை சவ்வுபோல மெல்ல இழுத்துப் பாடவேண்டும். இத்தனையும் ஒருங்கே தாளத்துக்குள் நுழைந்து இசையில் உட்கார்ந்துகொண்டாலும் குரலும் அதன் பாவமும் சிறப்பாக அமைய வேண்டும். இவையெல்லாம் ஒரேநேரத்தில் மிகச்சிறப்பாக நடக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அப்பாடலை நம் எஸ்.பி.பி பாடவேண்டும். மற்றவற்றை அவர் பார்த்துக்கொள்வார். 

பாட்டு முழுவதும் அவர் கோலோச்சுகிறார் என்றாலும் எனக்குப்பிடித்த வரிகள் இவைதான்..

ஆராதனை செய்யட்டுமா ஹஹா

நீரோடையில் நீந்தட்டுமா – ஒட்டுமொத்தப்பாடலிலும் அவர் பாடியிருக்கும்விதத்தை விடவும் இவ்விரண்டு வரிகளில் அவர் குரலில் விளைந்து வழியும் போதையின் அடர்வு மிகுதி. ..

ப பா பா தனனனன தனனா

பாபாபாபாபப பபபா – பாடலில் மூன்றுமுறை இசைப்பண்களைப் பாடுகிறார் பாடும்நிலா… ப பா என்னும் வல்லினத்தை மென்மையாகப் பலுக்கும் அழகினைக் கேட்டுப்பாருங்கள்.. மொத்தத்தில் பாடல்முழுக்க தன் விருப்பத்திற்கு புகுந்து விளையாடியிருக்கிறார். அதற்கு மேலும் அழகூட்டுவதுபோல பாட்டின் வரிகளும் இசையும் ஆகச்சிறந்ததாக அமைந்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு..!

இரயில் பயணங்களில் என்னும் படத்தில் பாடகனாக வரும் நாயகன் ஸ்ரீநாத் நாயகி ஜோதியைப் பார்த்துப் பாடுவதாக அமைந்த பாடல் இது. நாயகன் நாயகி இருவருமே இப்படத்திலேதான் அறிமுகம் ஆனார்கள்… இப்படத்தில் இதே பாடல் பெண்குரலில் தனிப்பாடலாக இடம்பெற்றிருக்கிறது. அதைப் பாடியவர் நம் ஜானகியம்மா. இவ்விரு பாடல்களின் பதிவின்போதும் நம் பாடும் நிலாவும் ஜானகியம்மாவும் போட்டிபோட்டுக்கொண்டு சிறப்பாகப் பாடிவிடவேண்டும் என்ற ஊக்கத்துடன் பாடியிருக்கக்கூடும். அதனால் தான் யார் யாரை மிஞ்சுவது? என்று நம்மால் சொல்லவே இயலவில்லை.

போதையில் மாதவம் இயற்றமுடியாமல் போனதே என்று வருந்தி மீண்டும் தவமியற்ற கிளம்பிய எஸ்.பி.பியை யாரோ தொந்தரவு செய்திருக்கிறார்கள். யாரென்று தெரியவில்லையே.. நான் பத்தியத்தில் இருக்கிறேன், விரதத்தில் இருக்கிறேன் என்னைத் தொல்லை செய்யாதே என்று யாரிடமோ புலம்பிக்கொண்டிருக்கிறார். அது யார் நம் எஸ்.பி.பியையே புலம்பவிட்டது? என்று வரும் செவ்வாயன்று சொல்கிறேன்.. காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள் அதுவரை..!

தேசிங்குராசனின் இசைத்தோப்பினில் பாடும்நிலாவின் விரதம் தோகையிலாடும்..!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

1 COMMENT

  1. அருமை பிரபா… மிகவும் அழகான பாடல். அடுத்த பாடல் என்னவென்று யோசிக்க வச்சிட்டீங்களே ?

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -