பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 28

உன்னை பாக்காது மனசு தூங்காது…!!!!!!!!!!!!

- Advertisement -

விரதத்தில் இருக்கிறேன் என்று சொன்ன நம் பாடும்நிலா விரதத்தை முடித்துவிட்டாரா? என்ன விரதாமாயிருக்கும்? வாருங்கள் அவரிடமே போய்க் கேட்டுவிடுவோம்…

காதல் பூக்காத மனித மனங்களே இருக்க முடியாது.. அப்படி யாருக்கேனும் பூக்கவில்லையெனில் அவர்யாரும் மனிதனாகவே இருக்க முடியாது. இவ்வுலகை இயக்கி ஆள்கின்ற ஐம்பேரியற்கையுடன் ஆறாம் பேரியற்கையாய் இணைந்திருப்பது காதல்… பரிணாம வளர்ச்சியிலும் பரிமாண வளர்ச்சியிலும் என்றும் தன் தனித்தன்மையை இழக்காமல் இவ்வுலகில் நிறைந்திருந்து நம்மை ஆள்கின்றது காதல். காதல் இயல்பானதுதான்.. ஆனால் அந்தக் காதலைத் தாம் காதலிக்கும் ஆளிடம் சொல்லவேண்டும் எனும்போதுதான் அது இயல்பானது என்ற நிலையைக் கடந்து செயற்கரிய செயலாகிவிடுகின்றது.

பெரும்பாலும் ஆண்கள் தம் காதலை எப்படியேனும் சொல்லிவிடுவதில் முனைப்பாய் இருப்பர். பெண்கள் தாமாகவே ஒரு நாணத்திரையைப் போட்டுக்கொண்டு, தம் காதலையும் சொல்லாமல், தம்மிடம் சொன்ன காதலை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொல்லாமல் தவித்துக்கொண்டே காலத்தைக் கடத்துவர்…

அத்தி பூத்தாற்போல , ஆமை ஓடினாற்போல சில நேரங்களில் பெண்கள் முதன்முதலில் தம் காதலைச் சொல்வதுண்டு.. சொல்லி வெற்றியாக்கியதும் உண்டு. அப்படியான சூழலில் கெஞ்சுதல், கொஞ்சுதல், விஞ்சுதல் என்னும் பண்புகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது மூன்றையுமே கலந்தோ தமது கோரிக்கைகளை ஆண்களிடம் சொல்லி அதை வெற்றியாக்குவதுண்டு. இரண்டாவது முறையான மூன்றும் கலந்த கோரிக்கைகளில் எப்போதுமே ஒரு துள்ளல், எள்ளல் கலந்த மகிழ்வு இருக்கும்.

இதோ ..இன்று நாம் பார்க்கப்போகும் பாடலும் அவ்வகையான ஒன்றுதான்.  பெண் காதலைச் சொல்கிறாள். ஆண் அதை மறுக்கிறான்.. அவன் மறுப்பதை அவளும் மறுக்கிறாள். ஆனாலும் அந்த மறுப்பினில் துளியும் வெறுப்பு இல்லை என்பதை நாம் உணரலாம். சீண்டல் வகைமைப்பாட்டு இது.. அதற்கான சரியான தேர்வு என்றால் அது நம் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும்தான். வேறு நிலைக்கு அப்பாட்டை எடுத்துச் சென்றுவிடுவர் இருவரும். 

இந்தப்பாட்டில் ஒரு சின்ன பண்ணிசையோடு ஜானகியம்மா தொடங்கியதால் முதல் சரணம் அவர்க்குத்தான்.

நான்தான் அம்மாளு நீதான் நம்மாளு

உன்னை பாக்காது மனசு தூங்காது

நான்தான் அம்மாளு நீதான் நம்மாளு

உன்னை பாக்காது மனசு தூங்காது

டூரிங் கொட்டாய் போயி வந்தா உன் நெனப்பு

டூயட் ஒண்ணு பாடணுன்னு என் தவிப்பு ….

பலமுறை நான் சொல்லியிருக்கிறேன் இருவரும் இணைந்து பாடும் பாடல்களில் இருவர்க்கும் பயங்கரமான போட்டி இருக்கும். யாரை யார் விஞ்சுவது? என்றே பாடுவர் இருவரும்.. அதனால் விளைவது என்ன? அப்பாடல்கள் தலைசிறந்த பாடல்களாகிவிடும். இதுவும் அப்படித்தான்.. வழக்கமான தனது தேன்குரலில் துள்ளலோடு கேலியாய்ப் பாடுகிறார் ஜானகியம்மா.  எத்தனை தொலைவினில் கேட்டாலும் பாடுவது ஜானகியம்மா என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு தனக்கே உரித்தான தேனினுமினிய குரலால் நம்மை மயக்குகிறார்.

மேனகை போல் வந்திருக்கேன் மயங்கேன்..யா
முனிவன போல் ஓடுறியே நில்லேன்..யா
ஹேய்..மேனகை போல் வந்திருக்கேன் மயங்கேன்..யா
முனிவன போல் ஓடுறியே நில்லேன்..யா 

அடுத்தடுத்து இருவரும் பாடாமல் ஒரு சரணம் எஸ்.பி.பிக்கு , ஒரு சரணம் ஜானகியம்மாவுக்கு என்று அமைத்திருக்கிறார் நம் டி.ஆர்… மேற்சொன்ன வரிகளை பாடி முடித்ததும் ,

சுவாமி இப்படி கண்டும் காணாமல் போவதின்

மர்மம் தான் என்ன?

என்று பாடாமல் ஆனால் தாளத்துடன் இழுத்துக் கேட்கிறார்.. அருமை அருமை..! அதற்குப் பதிலாக நம் எஸ்.பி.பி ” அது சரி ” என்று தாளத்துடன் சொல்வதைக் கேளுங்கள். அதுதான் எஸ்.பி.பி தொடுகை. கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அது எஸ்.பி.பியின் குரல் என்று. ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் இப்பாடலில் வேறெங்கும் அவ்வளவு எளிதாக அது எஸ்.பி.பியின் குரல் என்று கண்டுபிடித்துவிட முடியாது. டி.ஆர் தான் பாடுகிறாரோ என்றுதான் எல்லோர்க்கும் தோன்றும். அந்தளவுக்குத்  தன் குரலை மாற்றிப் பாடியிருப்பார் பாடும் நிலா..!

முதல் சரணம் தொடங்கும்முன் வரும் இடையிசையில் ஓரிடத்தில் படிக்கட்டிலிருந்து டி.ஆர் இறங்கிவருவார்.. அது அப்படியே அவர் மகனார் சிம்புவை நினைவூட்டியது. அதற்கு சற்றுமுன்னே தனது தலையை கீழிருந்து மேலாக சிலுப்புவார்.. அதுதான் டி.ஆர் சிறப்பு உடல்மொழி.. மறக்காமல் இப்பதிவைப் படித்ததும் பாட்டையும் பார்த்துவிடுங்கள். டி.ஆரின் மாறுபட்ட அதேநேரம் கண்ணை உறுத்தாத துள்ளல் நடனத்தைக் கண்டுகளியுங்கள்.

காதல் செய்யாதே கற்பை கேக்காதே

தேவி தொடாதே தேடி வராதே

காதல் செய்யாதே கற்பை கேக்காதே

தேவி தொடாதே தேடி வராதே –

என்று காதலை மறுக்கும் ஆணாக எஸ்.பி.பி பாடுகிறார். எஸ்.பி.பியின் விசிறிகளால் கூட சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத்  தன்  குரலில் அடர்வினைக்கூட்டிப் பாடியிருக்கிறார். ஒரே சீரான அடர்வினைப் பாடல் முழுவதும் எவ்வாறு பாடமுடியும்? என்று நான் வியந்துகொண்டே இருக்கிறேன். இப்பாடலில் ஆங்காங்கே சிறு சிறு பண்ணொலிகளை எழுப்பிப் பாடுகிறார் ஜானகியம்மா.. அத்துணை இனிமையும் அழகும் வழிகிறது அவற்றில்.. ஆனாலும் ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் ஒரு மாறுபட்ட குரலில் பாடிப் பாட்டின் நாயகனாக வென்றுவிடுகிறார் நம் எஸ்.பி.பி 

பத்தியமா நான் இருக்கேன் தெரிஞ்சிக்கோடி

பைத்தியமா திரியாதே தெளிஞ்சிப்போடி

ஹ.. ஹஹ ஹ

மன்மதன் போல் நானில்லை புரிஞ்சிக்கோடி

ரதிய போல் நீயிருக்க பொருத்தம் ஏதுடி

அடி மன்மதன் போல் நானில்ல புரிஞ்சிக்கோடி

ரதிய போல் நீயிருக்க பொருத்தம் ஏதுடி

இப்படியொரு காந்தக்குரலில் “காதல் செய்யாதே, பைத்தியமாத் திரியாதே தெளிஞ்சிப்போடி ” என்று பாடினால் என்ன நடக்கும்? அந்தப்பெண்ணுக்கு இன்னும் கூடுதலாய்க் காதல் வரும்.. இன்னும் உச்சமாக அவன்மேல் பைத்தியம் ஆகத்தோன்றும். இக்கட்டான நிலைதான் எஸ்.பி.பியின் குரலில் காதலை மறுப்பது என்பது..!

இப்போது நாம் பாட்டின் தொடக்கத்துக்குச் செல்வோம் வாருங்கள்…

விரதத்தில் நானோ வாழ்ந்திருக்க….

விரகத்தில் இவளும் வந்திருக்க….

என்று நீட்டிமுழக்கிப் பாடுபவர் அடுத்தவரியில் ,

தோப்புக்குள்ள போவணுன்னு

தோகை இவ சொல்லயில

என்னான்னு நான் செய்யுவேன்…

இதை எங்கத்தான் போய் சொல்லுவேன் ஹொய்..

என்று மெதுவாய்க் கிறங்கிய குரலில் மேலோட்டமான சலிப்போடு கேள்வியைக் கேட்பதுபோல் பாடுகிறார்… இப்படியொரு குரலில் பாடினால் மெய்யாக மேனகைக்கே காதல் வந்துவிடும்போல..அதிலும் அந்த ” செய்யுவேன்” என்ற சொல்லைப் பலுக்கும் அழகெல்லாம் வேறு நிலை..!

பல்ல இளிக்கிறவ…தொல்லை கொடுக்குறவ

பல்ல இளிக்கிறவ தொல்லை கொடுக்குறவ

என்ன அரிக்கிறவ எல்லை கடக்குறவ

ஆத்தா நீயும் பாத்தா நானும் நைசா ஓடும் ராசா

அடி ஆத்தா நீயும் பாத்தா நானும் நைசா ஓடும் ராசா

இந்த புள்ளப்பூச்சி வந்துவிட்டா நானும் தொலைஞ்சேன்

இவ புள்ள பெக்க ஆசப்பட்டா நானா கிடைச்சேன்

இந்த புள்ளப்பூச்சி வந்துவிட்டா நானும் தொலைஞ்சேன்

இவ புள்ள பெக்க ஆசப்பட்டா நானா கிடைச்சேன்

பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே எழுதப்பட்ட சொற்கள். அதன் சுவை கொஞ்சமும் குறையாமல் கூடுதல் மெருகேற்றிப் பாடி நம்மையும் ஆட வைத்துவிடுகிறார். அதிலும்  ” இவ புள்ள பெக்க ஆசப்பட்டா நானா கிடைச்சேன் ” என்ற வரியெல்லாம் நாட்டுப்புற வழக்கிலேயே ஊறிப்போனவர்போலப் பாடி அயர்த்தியிருக்கிறார்… செம்மையான துள்ளலும் எள்ளலும் கலந்து வேறொரு குரலில் பாடல் முழுவதையும் பாடிப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

என் தங்கை கல்யாணி என்ற படத்தில் வரும் பாடல்தான் இது. அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று மூலைமுடுக்கெல்லாம் ஒலித்த துள்ளலிசைப்பாட்டு இது..! இப்பாடலைக் கேட்கும் யாவரும் ஆடாமல் அசையாமல் முழுதாய்க் கேட்டு முடித்துவிட்டால் அவர் பெயரைக் கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துவிடலாம். வழக்கம்போல சிறப்பானதொரு பாடலுக்கு வரிகளையும் எழுதி அதற்கு துள்ளலான இசையையும் அமைத்திருக்கிறார் நம் தேசிங்கு இராஜேந்தர்.

துள்ளலாய்ப்பாடி ஆட்டம் போட்ட எஸ்.பி.பி அடுத்து என்ன செய்யப்போகிறார்?  மேளம் தாலி கொண்டாட்டம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகிறார். யார்க்குக் கல்யாணமாக இருக்கும்? கல்யாணக் கொண்டாட்டத்தில் எஸ்.பி.பி பாடினால் அது உச்சகட்ட கொண்டாட்டமாக மாறிவிடும்.. என்னதான் நடக்கிறது என்று அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.

தேசிங்குராசாவின் கொண்டாட்டத்தில் பாடும்நிலா மேளம் தட்டும்..!!!!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

 1. ஆகா! அருமை.
  நேர்த்தியான தொடர். வாழ்த்துகள் பிரபா. காதல் சொல்லப்படுவதை, நிராகரிக்கப் படுவதை அழகாக தனக்கேயுரித்தான நடுநிலைத் தன்மையோடு எழுதியிருக்கிறீர்கள். உங்களின் எழுத்தும் , இந்தப் பாடலும் கல்லூரிக் காலங்களுக்கு வாசிப்பவரை இழுத்துச் செல்லும். காதலில்லாமல் யாரும் இல்லையென்று சொன்னது சிலருக்கு வரி!. சிலருக்கு வலி.
  வாய்த்தவர்கள் வாழ்த்தட்டும், வாழட்டும். வாய்க்காதவர்கள் வலிமறந்து காதல் செய்து வாழட்டும்.

  டிஆருக்கு இணையேது….. !?

  மயிலாடுதுரை கூடமங்களம் கோயிலில் சிம்பு , டிஆர் இருவரையும் சந்தித்த நினவுகளை மீட்டெடுத்துவிட்டீர். தினந்தோறும் டிஆரின் வீடுவழியே சென்று பெரிய குளத்தில் குளித்ததை நினைவுபடுத்திவிட்டீர். டி ஆரின்அந்தக்கால சீமை ஓட்டு வீட்டை நினைவுபடுத்தி விட்டீர்.

  மீண்டும் வாழ்த்துகள் பிரபா.

 2. மீண்டும் டி ஆர் ,எஸ் பி பி, எஸ் ஜானகி அவர்களின் கூட்டணியில் பட்டிதொட்டியெங்கும் இடைவிடாது ஒலித்த பாடலை இன்று தேர்வு செய்து, கிராமத்தின் சொல்லாடலை கூட பாடல் வரிகளால் எப்படி நம்மிடம் கொடுத்து இருக்கிறார்கள் என்றும், பாடகர்கள் இருவரும் தனக்கான இடத்தில் எப்படியெல்லாம் தனித்துவம் பெறுகிறார்கள் என்றும் வெகு சிறப்பாக தனது எழுத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொண்ட கவிஞர் பிரபாதேவி அவர்கள்…

  “என்தங்கை கவிதாயினி” ??❣️??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -