பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 26

மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்…!!!!!!

- Advertisement -

மயில் துயில் என்று எதுகைமோனையுடன் சொல்லிக்கொண்டிருந்த பாடும் நிலாவைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தேன்.. அங்கே என்ன நடந்ததென்று நான் அறிந்துகொண்டதை உங்களுக்கும் சொல்லவேண்டுமல்லவா? இல்லையென்றால் என் மனம் தாங்குமா? தாங்காது தாங்காது..! சரி வாங்க நடந்தது என்னவென்று சொல்கிறேன்.

கனவுகள் எப்போதுமே அழகானவைதானே..! கனவுகளைப் பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். முதலாவது இதுமாதிரியெல்லாம் நடந்தால் நன்றாகயிருக்கும் என்றெண்ணி நாம் காணும் கனவு. அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். இரண்டாவது உறுதியாக நடக்கப்போவதை எண்ணி முன்கூட்டியே கற்பனைச் சிறகுகளை அகல விரித்து வானம்பாடியாய் காணும் வண்ணக்கனவு. மூன்றாவது நடக்காது என்று தெரிந்தும் ஏதோவொரு திடீர் ஆகூழ் நடந்து நாம் எண்ணியது நடந்துவிடாதா? என்ற நப்பாசையில் காணும் கனவு.

இங்கே இன்று நம் பாடும்நிலா பாடப்போவதும் கனவுப்பாடல்தான்.. இரண்டாவதுவகைக் கனவு இது. வழக்கம்போல நம் எஸ்.பி.பியுடன் இணைந்து தூள் கிளப்பியிருப்பவர் நம் தேன்குரலாள் ஜானகியம்மா. இணைப்பாடல் இது. இணையாய்ச் சேர்ந்து கனவு காண்கின்றனர் என்றால் பெரும்பாலும் அது திருமணக்கனவாகத்தானே இருக்க முடியும்! மணநாள் முடிவு செய்யப்பட்டுவிட்டால் மனம் முழுக்க வண்ண வண்ணக் கனவுகள் வழிந்து அவர்களுக்கென்று ஒரு தனியுலகையே உருவாக்கிவிடும்.. அப்படியொரு உலகில் நின்று நம் எஸ்.பி.யும் ஜானகியம்மாவும் பாடுகின்றனர்.

மட்டைப்பந்தாட்டம் ஆடும்போது இந்தியா முதலில் அடித்துஆடுவதைத் தேர்ந்தெடுத்துவிட்டால் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிடும், முதலில் பந்து போடுவதைத் தேர்ந்தெடுத்தாலோ அல்லது எதிரணியினர் அடித்துஆடுவதைத் தேர்ந்தெடுத்துவிட்டாலோ இந்தியாவுக்கு வெற்றி என்பது கேள்விக்குறிதான் என்று ஒரு நம்பிக்கை எனக்கும் எனக்குத் தெரிந்த பலர்க்கும் இருந்தது.. நாங்கள் அப்படித்தான் பலமுறை பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.. எங்களின் நம்பிக்கை பெரும்பாலும் பொய்த்ததேயில்லை. இந்தியஅணி முதலில் மட்டையைக் கையிலெடுத்துவிட்டால் வெற்றியின் பிடி நம் பக்கம்தான் இருக்கும். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள்? பொதுவாக இணைப்பாடல்களில் பல்லவியை யார் தொடங்குகிறார்களோ அவர்கள் பிடிக்குள் பாடல் இனிதாய் மாட்டிக்கொள்ளும். பல்லவியைத் தொடங்கியவர்தான் பெரும்பாலும் முதல் சரணத்தைத் தொடங்குவார். இப்பாடலின் பல்லவியை நம் பாடும்நிலா தொடங்குகிறார். அதனால் பாடல் ஜானகியம்மாவையும் மீறி நம் எஸ்.பி.பியின் பக்கமே தூக்கலாய் நிற்கிறது. பல்லவியைத் தொடங்கிய எஸ்.பி.பியே முதல் சரணத்தையும் தொடங்குகிறார்.

விழி வாசல் தேடி நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

விழி வாசல் தேடி நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

என்று சரணத்தில் பாடத் தொடங்குகிறார். ஒரே வரியினை இருமுறை பாடும்படி அமைத்திருக்கின்றனர். முதல்முறை ஏக்கமும் ஆசையும் சரியாய்க்கலந்து பாடுகிறார். அதேவரியை இரண்டாம்முறை பாடுகையில் ஏக்கத்திற்கே ஆசை வந்ததுபோலவும், ஆசைக்கே ஏக்கம் வந்தது போலவும் பாடுகிறார்.

விழிவாசல் தேஎஎஎஎடி நீ கோலம்போட

வாழ்வெல்லாம் கூஉஉஉஉடி நாம் இராகம் பாட .. என்று இடையில் உள்ள தேடி கூடி என்ற சொற்களில் அளபெடுத்துப் பாடுவதைக் கேட்கையில் நாம் அந்தப்பாடலாக இருக்கக்கூடாதா? என்று தோன்றும். தேடி என்று இழுக்கையில் கேட்பவர் மனம் கட்டாயம் அவர் இணையைத் தேடும்.. கூடி என்று அவர் இழுக்கையில் மனம் கற்பனையில் விண்ணைத்தொட்டுப்  பகலும்இரவும் இணையும் அந்தியாய் இணையுடன் காதலில்கூடும். அட,  அவருடைய பாட்டுலகில் தேடியும் கூடியும் அவருடன் வாழ்ந்த பாடல்கள்தான் எத்தனை எத்தனை!!!! 

அடுத்த வரியில் அவர் எப்படி உருகித் தேய்கிறார் என்று கேளுங்கள்.

மயில் உன்னைத்  தழுவ விரும்புகிறேன்

துயில்தனை இழந்து புலம்புகிறேன்…. 

புலம்பல் என்றாலே கொடுமை என்று பொத்தாம்பொதுவாக ஒரு முடிவு கட்டிவிட முடியாது.. ஏனென்றால் இனிமையான புலம்பலும் இவ்வுலகில் உண்டு. அதில் என்றுமே அசைக்க முடியாத முத்லிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது காதல் புலம்பல்தான். பாமரன் காதலில் புலம்பினாலே சுவையாகத்தான் இருக்கும் எனும்போது நம் பாட்டுத்தலைவன் பாடும் நிலா காதலில் புலம்பினால் எப்படியிருக்கும் எண்ணிப்பாருங்கள்..! தேனூறிய தீஞ்சுவைப் பலாச்சுளையாக அல்லவா தித்திக்கும்! ஏக்கத்தின் உச்சாணிக்கொம்பில் நின்று மேற்சொன்ன இரண்டுவரிகளைப் பாடுகிறார் .. பாடி நம்மையும் ஏக்கத்தின் உச்சியில் இழுத்து நிறுத்திவிடுகிறார்.

இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காதா?

தாகமும் தணியாதா  எந்தன் மோகமும் தீராதா?

என்று சரணத்தைக் கேள்விகளுடனேயே முடிக்கிறார் எஸ்.பி.பி. இதற்கு முந்தைய வரிகளில் இருந்த ஏக்கம் இவ்வரிகளில் இல்லையென்றாலும் அந்த ஏக்கத்தைக் கட்டுப்படுத்துவதைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லையே என்ன செய்வது? என்று தன்னைத்தானே பெருமூச்சுடன் ஆற்றுப்படுத்திக்கொள்ளும் தொனியில் இவ்வரிகளைப் பாடுகிறார்.

இப்பாடல் இணைப்பாடல் என்றாலும் அடுத்தடுத்து பாடுவதைப்போல அமைக்காமல் முதல் சரணம் எஸ்.பி.பிக்கும் அதைத்தொடர்ந்து பல்லவியை ஜானகியம்மாவுக்கும், அவ்வாறே இரண்டாம் சரணம் ஜானகியம்மாவுக்கும் அதைத்தொடர்ந்து பல்லவியை எஸ்.பி.பிக்கும் என அமைத்திருக்கின்றார் இசையமைப்பாளர். 

இரண்டாம் சரணம் முடிந்ததும்

மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

என்று பல்லவியைப் பாடுகிறார்.

நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ என்று கேட்டுவிட்டு மீண்டும் மாலை நம்மை வாஅஅஅட்டுது என்று பாடுகையில் ஏக்கத்தோடு சிணுங்கலையும் கலந்து அள்ளித்தெளித்துவிடுகிறார். 

மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது

மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

இதுதான் இப்பாடலின் பல்லவி. மகிழ்வினையும் ஏக்கத்தினையும் கலந்து காதலியிடம் சொல்லும் காதலனின் உருகுதலை அப்படியே தன் குரலில் கொண்டுவந்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகிறார்.

பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற படத்தில் நடிகர் சுரேஷும் நடிகை நதியாவும் இணைந்து பாடும் பாடல்தான் இது. இப்பாடலைப் பார்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருமுறை பார்க்கும்போது மனம் நதியாவின் பின்னேதான் செல்லும். எஸ்.பி.பியின் குரலில் மேலோட்டமாகத்தத்தான் செல்லும். வேறொருமுறை பார்க்கையிலோ மனம் எஸ்.பி.பியின் பின்னே நாய்க்குட்டிபோல வாலையாட்டிக்கொண்டே சென்றுவிடும், நதியாவைப் பார்த்துக் கண்கள்வழி இதயத்தில் நிரப்பிக்கொள்ள முடியாது. எஸ்.பி.பியின் குரலில் மயங்கிக்கொண்டே நதியாவையும் கண்ணாரச் சுவைக்கலாம் என்று எண்ணினால் எப்போதும் தோல்வியே மிஞ்சுகிறது. என்ன செய்ய? எஸ்.பி.பியையும் நதியாவையும் ஒருங்கே விரும்பும் சுவைஞர்களுக்கு வரும் சோதனையைப் பார்த்தீரா? வழக்கம்போல இசையும் பாடல்வரிகளும் நம் டி.ஆர் தான். மனம் மயக்கும் வரிகளும் அதை அப்படியே தாங்குகின்ற இசையும்…!

மணநாளைப்பற்றிய கனவினில் உருகி உருகி நம்மையும் உருக்கி ஏக்கத்தைப் பெருக்கிய பாடும்நிலா அடுத்து என்ன செய்யப்போகிறார்?

போதை விளைகிறது என்று சொல்கிறார்… எங்கே விளைகிறது என்றும் சொல்லப்போகிறாராம்.. போதை விளைந்தால்/ விளைவித்தால் சட்டப்படி குற்றமல்லவா! சட்டத்திற்குப் புறம்பான அப்படியொரு செயலை நம் பாடும் நிலா செய்ய நினைக்கக்கூட மாட்டார். அப்படியெனில் வேறென்னவாக இருக்கும்? அட  ஆறு மனமே ஆறு என்று கொஞ்சம் பொறுமையாக ஆறு நாள்கள் இருந்தால் ஏழாம்நாள் ஓடோடிவந்து உங்களை ஏமாற்றாமல் சொல்லிவிடப்போகிறேன்… காத்திருங்கள் மக்களே…!

தேசிங்குராசாவின் இசையாட்சியில் வைகையில் வசந்தமாய்ப் பாடும் நிலா…!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

4 COMMENTS

 1. மாலை வாட்ட வண்ண வண்ண ஆடையோடு ஒரு நதியா..
  தலைவனை தேடுகிறாள்..

  இசை நதியாய் டி ஆர்

  குரல் நதியாய் எஸ்பிபி ஜானகி

  தமிழ் நதியாய்.. கவிதாயினி பிரபாதேவி அவர்கள்..

  மனமார்ந்த வாழ்த்துகள் ??

  • நதியில் நனைவதே இன்பம்… நதியாவினைப் பார்த்து மகிழ்வில் நனைவது பேரின்பம் ????

  • இருசொல் பின்னூட்டங்கள் ஏற்கப்படமாட்டா…! இருவரிகளாவது எழுதவேண்டுமென்று நதியா சார்பில் கோரிக்கை வந்திருக்கிறது. ஆவன செய்க நண்ப..!

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -