பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 4

இது பூவோ பூந்தேரோ..!

- Advertisement -

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

ஒரு மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன? என்று எஸ்.பி.பி யாரிடம் கேட்கிறார் என்ற கேள்விக்கு எஸ்.பி.பியிடம் நான் பதிலைக் கேட்டுவிட்டு வரும்வரை காத்திருந்த அன்புள்ளங்களே…! கேள்விக்குப் பதிலை இறுதியில் சொல்கிறேன். அதற்குள் வேறுசில சுவையான செய்திகளைச் சொல்லிவிடுகிறேன்.

கங்கை நீரில் சந்தனத்தை அரைத்தாலே கமகமவென்று மணக்கும்… கங்கையே வந்து சந்தனத்தை அரைத்தால் எப்படியிருக்கும்! அதுவும் அந்தச் சந்தனத்தை ஒரு தேவதை பூசிக்கொண்டால் எப்படியிருக்கும்! ஏழு உலகங்களும் அந்தத் தேவதையைக் காண வரிசையில் வந்துவிடும்.. அப்படியொரு குட்டி தேவதை பூப்பெய்திய நன்னாளில் அவளுக்கு ஊரே மெச்சும்வகையில் சீராட்டு நடத்துகின்றனர் அவளின் அண்ணன்மார். சீராட்டும் பாராட்டும் பாட்டின்றி முழுமை பெறாது நம் தமிழ்மரபில்..

பாட்டே உலகமென்று வாழும் ஓர் அப்பாவி இளைஞன். பாட்டறிவு வளர்ந்த அளவுக்கு பட்டறிவோ, படிப்பறிவோ இல்லாத ஒரு நல்மனம் கொண்ட வெகுளி அவன். அவனைப்பாடச் சொல்கின்றனர். பாட்டு மட்டுமே அறிந்த ஒரு நாயகனுக்குப் பாட எஸ்.பி.பியைவிட வேறு யார் மிகச்சரியாகப் பொருந்திவிட முடியும்?

தொகையறாவில் பெண்கள் பாடியதும், சந்தனத்தை அரைத்து எடுத்துக்கொண்டு பல்லவியில் நுழைகிறார் எஸ்.பி.பி. சந்தனம் ஒரு குளிரூட்டி. உடலின் சூட்டைத் தணிப்பதில் பெரும்பங்குண்டு. அதன் மணத்திற்கோ மனத்தைக் குளிர்விக்கும் குணமுண்டு. நற்செயல்கள், விழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் நுழைவாயிலில் சந்தனக்கிண்ணம் வைத்திருப்பது இதனால்தான்.. சந்தன மணத்தோடு அதை நெற்றியில் பூசிக்கொள்கையில் மனம் குளிர்ந்து விடுகிறது. விழாவினில் ஏதும் குற்றம்குறைகள் இருந்தாலும் அதைப்பொறுத்துக்கொள்ளும் மனப்பாங்கினை அந்தக் குளிர்ச்சி செய்துவிடும். மேலும் சந்தனத்தைப் பூசிக்குளித்து வந்தால் உடலானது மெருகேறும்.. தோலானது பட்டுத்துணிபோல வழுவழுப்பாக மாறும்.

எனக்கென்னவோ எஸ்.பி.பி நாள்தோறும் கொஞ்சம் சந்தனத்தைப் பன்னீரில் அரைத்துத் தனது குரல்வளையின் உள்பக்கச் சுவரில் பூசியிருப்பார் என்றே தோன்றுகிறது. அதனால்தான் அவர் குரலில் அத்தனை மெருகு .. அத்தனை மென்மை.. அத்தனை குழைவு.. அத்தனை குளிர்வு..!

அப்படியொரு குரலில் ஒரு தேவதையை வாழ்த்தி எஸ்.பி.பி பாடினால் எத்துணைச் சுவையாக இருக்கும்! கங்கை அமரனின் பாட்டுவரிகள் ஒவ்வொன்றும் எஸ்.பி.பியின் குரல்வளை நுழைந்து வெளிவரும்போது பட்டுவரிகளாகவே மாறியிருக்கும்.

“ பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி “

என்று அவர் பாடும்போது நாமெல்லோரும் எஸ்.பி.பியைத் தேடிப்போகும் தேனீக்களாக மாறுவதை உணரலாம்…

“ ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு”
என்ற வரிகளைப் பாடும்போது கவனமாய்க் கேட்டுப்பாருங்கள்.. வியப்புக்குறியும் கேள்விக்குறியும் இரு பாம்புகள் மகிழ்ந்து பிணைந்திருப்பதைப்போல ஒருங்கே வெளிப்படும் அவர் குரலில்… அந்த வரிகளையும் இசையானது எஸ்.பி.பியைப் பார்த்துச் சொல்வதுபோலவே எனக்குத் தோன்றுகிறது… அன்றும் இன்றும் என்றும் அவர் குரலுக்கு வயது இனிக்கும் பதினெட்டுதானே !

ஏலப் பூவு கோலம்போடும் நாசிதான் – என்ற வரியைக் கேட்கும்போதெல்லாம் அதென்ன ஏலப்பூவு? அதை நாசிக்கு உவமைப்படுத்த என்ன காரணமாயிருக்கும்? என்ற எண்ணம் வரும்.. ஆனால் அதை மறக்கடித்து விடும் நமது எஸ்.பி.பியின் குரல்.. ஆற்றோடு செல்லும் இலைபோல அவர் கூடவே பாடலோடு நாமும் சென்றுவிடுவோம். அத்திப்பூத்தாற்போல என்றைக்காவது மனம் பாட்டை விட்டுவிட்டு வெறும் வரிகளை மட்டும் கொண்டாடும்போது இம்மாதிரியான ஆய்வுகளையெல்லாம் செய்துமுடித்திட வேண்டும்.

“ கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு“ – இவ்வரி எஸ்.பி.பியை மனத்தில் வைத்துத்தான் கங்கைஅமரன் எழுதியிருப்பார்போல. அவர் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நம் மனத்திற்கு கைகள் முளைத்து அவை தட்டிக்கொண்டுதானே இருக்கின்றன..! சந்தனத்தின் மணமும், குங்குமத்தின் மணமும், புத்தம்புது புத்தகத்தின் மணமும் ஒன்றாய்க்கலந்து மனம் மயக்கும் ஒரு புதுவித மணம் பரப்புகிறார் எஸ்.பி.பி தன் மணக்கும் குரலால்.

சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவை வாழ்த்தி பிரபு பாடுவதுபோல அமைந்த

” அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே “

என்ற பாடலைப் பற்றித்தான் இவ்வளவுநேரமும் நாம் பார்த்தோம்… இந்தப்பதிவைப் படித்த கையோடு உடனே போய் ஏலப்பூவினைத் தேடிப்பார்த்து விடுங்கள். அப்புறமென்ன, ஏலக்காயைப் பார்க்கும்போதெல்லாம் எஸ்.பி.பியின் மயக்கும் குரலும் கங்கைஅமரனின் மணக்கும் வரிகளும்தான் உங்கள் எண்ணத்தில் ஏரோட்டும்.. !

தனக்கு முறைப்பெண்ணாக , தோழியாக , காதலியாக, இன்னும் சொல்லப்போனால் எந்த உறவுமில்லாத ஒரு பெண்ணை வாழ்த்திப் பாடுவதுதான் இந்தப்பாடல். தான் வியந்து பார்க்கிற ஒரு தேவதை என்றொரு கண்ணோட்டத்தில் மட்டுமே நாயகன் இப்பாடலைப் பாடுகிறான்.. ஆதலால் வரிகளில் எங்குமே ஓர் உறவுக்கான உரிமையோ, ஏக்கமோ, ஆசையோ இருக்கவே இருக்காது. முழுக்க முழுக்க வியப்பினைப் பொதிந்த வாழ்த்துச் சொற்கள்தாம். இதற்கே கங்கைஅமரனைத் தனியே பாராட்ட வேண்டும்.

கங்கைஅமரன் எந்த நோக்கத்தில் எழுதியிருக்கிறாரோ அதை அப்படியே பாடும்போது குரலிலும் கொடுக்கவேண்டும். நம் எஸ்.பி.பிதான் புள்ளி வைத்தால் புதுப்புதுக் கோலங்களை மிகச்சுளுவாகப் போட்டுவிடுவாரே.. அவரின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் வியப்பு நிறைந்த வாழ்த்தினைக் கூர்ந்து கவனமாய்க் கேட்டுப்பாருங்கள். உங்கள் உறவிலும் நட்பிலும் இருக்கின்ற தங்கை/மகள்/மருமகள் என எந்தப்பெண்ணையும் மனதார வாழ்த்த வேண்டுமென்றால் எஸ்.பி.பியின் தேமதுரக் குரலில் இப்பாடலை ஒலிக்கவிடுங்கள் போதும். வாழ்த்து வாழ்வுக்கும் நிறையும்.

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ” என்று பாடிமுடித்துவிட்டு நம் எஸ்.பி.பி கொஞ்சம் ஓய்வெடுப்பார் என்று நினைத்தால் அந்தச் சந்தனக் கிண்ணத்தைக் கீழே வைக்காமல் அதைத் தனக்குத்தான் பூசவேண்டும் என்று அடம் பிடிக்கிறார். என்னவாயிற்று அவர்க்கு? ஏன் அடம் பிடிக்கிறார் என்று மூளையைச் சுருக்கி விடையைத் தேடுங்கள். எம் செவ்வாயில் அதற்கான விடையோடு நானும் விரைந்தோடி வருகிறேன்.

கங்கையில் கரைத்த சந்தனம் நிலவில் மணக்கும் இன்னும்..!

பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 5

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

12 COMMENTS

 1. பாட்டு மட்டுமே அறிந்த ஒரு நாயகனுக்குப் பாட எஸ்.பி.பியைவிட வேறு யார் மிகச்சரியாகப் பொருந்திவிட முடியும்?சிறப்புங்க அக்கா.. ?

  தங்கள் எழுத்திலும் சந்தனம் மணக்கிறது அருமை தொடர்ந்து எழுத்தாற்றை ஓடவிடுங்கள் மூழ்கித் திளைக்கிறோம்..

  ஆனால் சின்னத்தம்பி படத்தில் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியதாகத்தானே நினைவிருக்கிறது..

 2. மகிழ்வும் நன்றியும் மோகன்.? தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி.

  அரச்ச சந்தனம், போவோமா ஊர்கோலம், நீ எங்கே என்னன்பே – மூன்று பாடல்களை மட்டும் கங்கைஅமரன் எழுதியிருக்கிறார். மற்றவையாவும் வாலி எழுதியவை.

 3. சிறப்பு அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் எங்கள் கைகளில்..

  ஒரு பாடலை இத்தனை சுவையாக ஒவ்வொரு வரியையும் ரசித்து ரசித்து அதை படிப்பவருக்கும் மணக்கச் செய்த உங்கள் எழுத்து கட்டுமானத்தில் எல்லா திசைகளிலும் சந்தனக் கிண்ணம் அதில் நாங்கள் குளிர்ந்து போகிறோம்…

  • மகிழ்வும் நன்றியும் அண்ணா.. தொடர்ந்து தரும் ஊக்கத்தில் மகிழ்கிறேன்

 4. அடடா அருமயான இயல்பான எழுத்து நடை. இந்த பாடல் கவிஞர் வாலியுனடையது என்று நினைத்தருந்தேன். உங்கள்
  பதிவைப் படித்த பிறகு தான் கங்கை அமரன் அவர்கள் எழுதியது என்று தெரிய வந்தது. நன்று பிரபா. தொடருங்கள்!

  • மிக்க நன்றிங்க பிரியா… இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் கங்கைஅமரனுக்கு. மற்றவை வாலிக்கு.

 5. அருமை பிரபா… ??????? சாதாணமாக கேட்டுவிட்டுச் சென்ற ஒரு பாடலுக்குள் இத்தனை நுணுக்கங்களா என வியக்க வைக்கிறது உங்களின் கட்டுரை.

 6. எஸ்.பி.பி , கங்கைஅமரன் , இளையராஜா என்னும் முப்பெருந்தேவர்கள் கொடுத்த அமிழ்தம் இந்தப்பாடல். இப்பாடல் காட்சியை மேலும் அழகாக்கியிருப்பார் பிரபு. பிரபுவைத்தவிர வேறொருவரை அங்கே நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அதைப்பற்றி தனிப்பதிவே எழுதலாம். பாடலில் எனக்கு என்னென்ன தோன்றியதோ அதை எழுதிவிட்டேன். தங்களின் பாராட்டு இன்னும் என்னை ஊக்கப்படுத்துகிறது.

 7. சந்தனத்தில் குளித்த குளிர்ச்சி தங்கள் எழுத்தில்…

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -